Friday, June 20, 2014

தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா! - இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் நிலத்தில் 

தேன்மழை பொழிந்த 

சுரதா!
- இலக்குவனார் திருவள்ளுவன்தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால்,
உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள் பிறந்த  ஊர் தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘’அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன். என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலே மறைந்து விட்டார்.

சிறுகதை எழுத்தாளர் செகசிற்பியன் உவமைக்கவிஞர் பட்டத்தை இவருக்கு
வழங்கியவர். சிலருக்கே பட்டங்கள் பொருந்தி வரும். உவமைக் கவிஞர்என்பது சுரதாவிற்குப் பொருந்துவதுபோல் வேறு யாருக்கும் பொருந்தாது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல், அவரது முதல் கவிதையிலேயே அவரது உவமை வளம் புலப்பட்டது.

நடுவிரல் போல் தலைதூக்கு - நம்
நாட்டாரின் இன்னலைப் போக்கு
என்பதே அவரது முதல் கவிதையின் தொடக்கவரிகளாகும்.
இதன் மூலம் நாட்டுநலன்பற்றிய தன் ஆர்வத்தையும்
வெளிப்படுத்திவிட்டார் அவர்.

மரபுக் கவிஞரான இவர், எளிய ஆனால் புதுப்புது உவமைகளை
உருவாக்கிக் கையாண்டு  புகழ் பெற்றார். மாநிறத்தைக் கருப்பின் இளமைஎன்றும் பல்லியைப் போலி உடும்புஎன்றும் அழுகையைக் கண்மீனின் பிரசவம்என்றும்  நீர்க்குமிழிகளை நரைத்த நுரையின் முட்டைஎன்றும் வெண்ணிலவைச் சலவை நிலாஎன்றும் விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம் என்றும், வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்  என்றும் பதினொன்று என்பதைப் பத்துக்கு மேலாடை என்றும்  பாடல்கள் அனைத்திலும் உவமையை வாரி வழங்கிய உவமைக் கடல் இவர்.

முதன்முதலில்என்னும் பட்டியலில் பல முதன்முதலில் என்பதற்குச்
சொந்தக்காரர் உவமைக் கவிஞர் சுரதா. 1944 இல் மங்கையர்க்கரசிஎன்னும் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதினார்.  இதன் மூலம், குறைந்த அகவையில் முதலில் திரைப்பட உரையாடலை எழுதியவர் என்னும் பெருமை பெற்றார்.
 
பி.யூ.சின்னப்பாவைக் கதைநாயகனாக் கொண்டு வெளிவந்த இப்படத்தின்
உரையாடல்கள் மிகவும் புகழ்பெற்றன. எனவே, இத் திரைப்பட உரையாடலை நூலாக வெளியிட்டார். திரைப்படத்தின் உரையாடல் நூல்வடிவில் வெளிவந்தது அதுவே முதன்முறையாகும்.

தமிழக அரசு  ஏற்படுத்திய பாவேந்தர் விருது முதன்முதலில் (1987இல்)
இவருக்கே வழங்கப்பட்டது.

வீட்டுக்குவீடு கவியரங்கம்’,  முழுநிலாக் கவியரங்கம்’, ‘படகுக் கவியரங்கம்’,
ஆற்றுக் கவியரங்கம்எனப் புதுமையான முறைகளில் கவியரங்கம் நடத்துவதில் இவரே முதலாமவர்.

கவிதைகளில் திரைப்படச் செய்திகளைத் தந்து இதழ் நடத்தியதிலும்
இவரே முதலாமவர்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்  படைப்பிலக்கியப் பெரும்பரிசான இராசராசன்
விருது (1897 இல் பிறந்த)சுத்தானந்த பாரதியாருக்கு  முதலில் (1984 இல்) வழங்கப் பெற்றது. எனினும் இருபதாம்  நூற்றாண்டுக் கவிஞர்களில் முதலில் (1995) இவ்விருது  பெற்றவர் இவரே.   சுரதாவின் தேன்மழை நூலுக்காக இவ்விருது வழங்கப்பெற்றது.

தமிழ்நாடு அரசு கலைமாமணி  விருதும் வழங்கியது. கேரள அரசும் இவரது  
கவிப்புலமையை மதித்து, இவருக்கு மகாகவி குமரன் ஆசான் விருது வழங்கியது.

மூவாயிரம் கவியரங்கங்களில் பங்கேற்று  மிகுதியான கவியரங்கங்களில்
பங்கேற்ற கவிஞர் என்பதில் முதலிடத்தைப் பிடித்தார். இப்படி இவரது சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


திருவேங்கடம்-செண்பகம் இணையருக்கு 23.11.1921இல் பிறந்த இவருக்குப்
பெற்றோர் சூட்டிய பெயர் இராசகோபால் என்பதுதான். பாரதியின் தாசனாக மாறிக் கவிஞர் சுப்புரத்தினம் தம் பெயரைப் பாரதிதாசன் எனச்  சூட்டிக் கொண்டார். இவரின் தாசனாக விளங்கி - சுப்புரத்தினம் தாசன் என்பதன் சுருக்கமாக - சுரதா எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.

  பாவேந்தர் பாரதிதாசன் என்ற கவிஞர் பரம்பரை உருவானதுபோல்,அப் பரம்பரை வரிசையில், சுரதா பரம்பரை என்று சொல்வதுபோல் - நீலமணி, பொன்னிவளவன், பனப்பாக்கம் சிதா, நன்னியூர் நாவரசன், முருகுசுந்தரம்  என - ஓர் அணி உருவானது. இந்த அணியில் சுரதாவின் மகன்  கல்லாடனுக்கும் மருமகள் இராசேசுவரி கல்லாடனுக்கும் இடம் உண்டு.

  சாவின் முத்தம், சுவரும் சுண்ணாம்பும், துறைமுகம், சிரிப்பின் நிழல்
(பாடல் தொகுப்பு), அமுதும் தேனும் , தேன்மழை (கவிதைத் தொகுப்பு), பாரதிதாசன் பரம்பரை, வினாக்களும் சுரதாவின் விடைகளும், உதட்டில் உதடு, எச்சில் இரவு, எப்போதும் இருப்பவர்கள், கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர், சிறந்த சொற்பொழிவுகள், சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு), சொன்னார்கள், தமிழ்ச் சொல்லாக்கம், தொடாத வாலிபம், நெஞ்சில் நிறுத்துங்கள், பட்டத்தரசி, பாவேந்தரின் காளமேகம், புகழ்மாலை, மங்கையர்க்கரசி, முன்னும் பின்னும், வார்த்தை வாசல், வெட்ட வெளிச்சம் ஆகியவை உவமைக் கவிஞர் சுரதாவின் படைப்புகளாகும்.

சுரதாவின் சொல்லடாஎன்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப்
புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னிஎன்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. கவிஞர் திருலோகசீதாராமின் சிவாசிஇதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. 1954 முதல் முரசொலிஇதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.  இவ்வாறு இதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதி வந்த சுரதா, இதழ்ப்பணியில் நேரடியாக  ஈடுபட்டார். நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன்இதழின் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். 1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம்(1958), ஊர்வலம்(1963), விண்மீன்(1964), சுரதா(1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

ஏறத்தாழ 100 திரைப்படப்பாடல்கள் எழுதியுள்ளார். அவற்றுள்
அமுதும் தேனும் எதற்கு?’,  அமுதைப் பொழியும் நிலவே’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘மண்ணுக்கு மரம் பாரமா?’, முதலானவை இன்றைக்கும் யாராலும் மறக்கமுடியாதவை.


 இப்படித் தமிழ்நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதாவின் நினைவுநாள்
இன்று(மறைவு:20//2006). . . அவரையும் தமிழையும் போற்றுவோம்!

- தினஇதழ், ஆனி 7, 2045 / சூன் 20, 2014, சிறப்புப்பகுதி

No comments:

Post a Comment

Followers

Blog Archive