இரசினிகாந்து தன் ஒப்பனைத் தோற்றத்தை
நம்பாமல் தன் நடிப்பு முறையை நம்பும் தன்னம்பிக்கை உள்ளவர். ஆனால்,
இப்பொழுது அவருக்குத் தன்னம்பிக்கை குறைந்துவிட்டது போலும்!
திரைக்கு வெளியேயும் தன் குழுவினருடன் சேர்ந்து நடித்து வருகிறார்.
இரசினி நடிக்கும் (இ)லிங்கா என்னும்
திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் கருநாடகா மாநிலத்தில்
நடைபெற்றது. கத்தூரி கருநாடக சனபர வேதிகே என்னும் அமைப்பின் சார்பில்
இராம்நகரில் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரது உருவப் பொம்மையை
எதிர்த்தனர். ஏனெனில் அவர் காவிரியாற்றுச்சிக்கலில் தமிழர் பக்கம்
உள்ளாராம்.

இதுபோல், ஆந்திராவில் அனாசுபூர் பகுதியில்
படப்பிடிப்பிற்காக அமைத்த கோட்டையால் சுற்றுச்சுறச் சூழல்பாதிக்கும் எனப்
போராடி உள்ளனர். இருப்பினும் அவர்களே சலிப்படைந்து விரைவில் சென்று
விட்டனர்.
இப்படி எல்லாம் நாடகம் நடத்தி,
இரசினியைத் தமிழ்நலக் காவலராகக் காட்ட முயல்கிறார்கள் என்பது புரிகின்றது.
ஆனால், இப்படி நடிப்பதற்கு மாற்றாக உண்மையிலேயே தமிழர்களுக்காகக் குரல்
கொடுக்கலாமே!
படங்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டல்,
பாத்திரங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டல், தமிழ்ப்பண்பாட்டை எதிரொலிக்கும்
காட்சிகளை அமைத்தல், பாடல்களிலும் உரையாடல்களிலும் அயற்சொல்கலப்பின்றி
இருத்தல் போன்றவற்றில் அவர் கருத்து செலுத்தலாம். ஆனால், இவற்றுக்கு அவர்
படம் எடுப்பவர், இயக்குநர் முதலான பிறரையும் சார்ந்து இருப்பதால் எளிதாக
அமையாது.
ஆனால், இரசினி உடனே
தன்னை
வீடுதேடிவந்து பார்த்த நண்பர் நரேந்திரர்(மோடி) தலைமையாளராக இருப்பதால்,
இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்ய
வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தி வெற்றி காணலாம்.
காலங்கடந்தும் சிறையில் அல்லலுறும் தண்டனைவாசிகளின் விடுதலைக்குக் குரல் கொடுக்கலாம்.

இதுவரை
உயிர் பறிக்கப்பட்ட தமிழக மீனவர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் உரூபாய்
5.00 கோடியும் உறுப்பிழந்து, படகிழந்து துன்புறும் மீனவர் ஒவ்வொருவருக்கும்
உரூபாய் 1.00 கோடியும் சிங்கள அரசிடமிருந்து பெற்றுத் தருமாறு நண்பரான
நரேந்திரரிடம் வேண்டலாம்.
இனி தமிழக
மீனவர்கள் கைது செய்யப்பட்டாலோ, துப்பாக்கிக் குண்டுகளுக்கு ஆளானாலோ
அவர்களின் படகுகள் மீன்கள் பறிக்கப்பட்டாலோ சிதைக்க்பட்டாலோ இந்தியப்படை
உடனே சிங்களநாட்டுடன் போர் தொடுக்கும் என அறிவிக்கச் செய்யலாம்.

தமிழ்ஈழமக்கள் படுகொலைக்குக் காரணமான இந்திய அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தண்டிக்குமாறு வேண்டலாம்.
சிங்கள
அரசுடனான உறவை முறித்துக் கொண்டு, ஐ.நா.வில் கண்டனத் தீர்மானம் கொண்டு
வரவும் பன்னாட்டு நீதி மன்றத்தில் இராசபக்சேவின் கும்பலைக் கூண்டிலேற்றி
மரணத் தண்டனை வாங்கித்தரவும் நரேந்திரரிடம் வற்புறுத்தலாம்.
தமிழ் ஈழத்திற்கு ஏற்பிசைவு தருமாறு அறிக்கை விட்டுப் பிற கலைஞர்களையும் இவ்வறிவிப்பில் இணைத்து, தமிழீழம் மலரத் துணை நிற்கலாம்.
அரசியல் நிலைப்பாடு என்னவாக இருப்பினும் தமிழ் ஈழம் தொடர்பான தமிழ்நாட்டரசின் தீர்மானங்களுக்கு ஏற்பச் செயல்படுமாறு முறையிடலாம்.
இவ்வாறாகத் தமிழர் நலன்
தொடர்பானவற்றில் வாயை ஒட்டி வைத்துக் கொண்டு தனக்குப் பிற மாநிலங்களில்
எதிர்ப்பு என்பதுபோல் நாடகமாடுவது தொடர்ந்தால் அவருக்கு இருக்கும்
செல்வாக்கு சரியும் என்பதை இரசினி உணர வேண்டும்.
எனவே, இரசினிகாந்து அவர்களே!
தமிழர்களுக்கு ஆதரவாளர்போல் உங்களைக் காட்ட முயலும் உங்கள் குழுவினரின்
நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
இனியேனும் தமிழர் நலன்களுக்காகக் குரல் கொடுங்கள்!

தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காத
பொழுதே உங்களைத் தலைமேல் வைத்துக் கொண்டாடும் தமிழக மக்கள், நீ்ங்கள்
தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தால் உலகத் தமிழர்களுடன் இணைந்து உங்களை மிக
உயர்ந்த நிலையில் நிலையாக வைத்துக் கொண்டாடுவார்கள் என்பதை மறவாதீர்கள்!
செய்வீர்களா?
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment