va.u.chithambaranar01
  செப்தம்பர் 5 ஆம் நாளன்று இந்தியா முழுவதும் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த விழா யாருக்காகக் கொண்டாடப்படவேண்டுமோ அவருக்காகக் கொண்டாடப்படவில்லை.
  வள்ளியப்பன்உலகநாதன் – பரமாயி இணையரின் மூத்த மகனான அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை) அவர்களின் பிறந்த நாள் ஆவணி 22, 1903 / 5.09.1872 ஆகும். இந்தியாவில் இருந்த குறிப்பிடத்தகுந்த வழக்குரைஞர்களில் இவரின் தந்தையும் ஒருவர். தந்தையின் வழியில் சட்டம் பயின்று சிறந்த வழக்குரைஞராகத் திகழ்ந்தார். வழக்குரைஞராகப் பணியாற்றிப் பெரும் பணம் சம்பாதித்திருக்க முடியும். குடும்பச் செல்வத்தையே நாட்டிற்காகத் தந்தவர் இதைப்பற்றியா கவலைப்பட்டிருப்பார். எனவே, விடுதலைப் போராட்ட வீரர்களுக்காகவும் எளியோருக்காகவும் பணம் பெறாமலேயே வாதிட்டு உதவினார். இந்தியத் தொழிற்சங்கத்தலைவர்களில் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவர் “சுதேசி பிரச்சாரச் சபை”, “தர்ம சங்க நெசவு சாலை”, “தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்”, “சுதேசிய பண்டகச் சாலை”, “வேளாண் சங்கம்” போன்றவற்றைச் செம்மல் வ.உ.சி ஏற்படுத்தினார்.
  ஆங்கில ஆட்சிக்கு எதிரான இச்சிந்தனை ஓட்டத்தினால்தான் ஆங்கிலேயக் கப்பல் நிறுவனத்திற்கு எதிராகத் தாயகக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.   புரட்டாசி 31, 1937 / அக்டோபர் 16, 1906 அன்று”சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய வள்ளல் பாண்டித்துரை(த் தேவர்) அவர்கள்தாம் இதன் தலைவர். வாடகைக்குக் கப்பல் வாங்கி விடுவதற்காக ஒப்பந்தங்கள்போட்டும் ஆங்கிலேய அரசின் அச்சுறுத்தலால் ஒப்பந்தக்காரர்கள் கப்பல் தர மறுத்து விட்டனர். எனவே, அரிதின் முயன்று நல்லோர் உதவியால், சொந்தமாகவே ஒரு கப்பலும் இரு படகுகளும் இந்நிறுவனத்தின் பெயரில் வாங்கிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார். கடற்பயணத்திலும் கப்பல்கட்டுவதிலும் வல்லவரான தமிழர் பரம்பரையைச் சேர்ந்த வ.உ.சி.அவர்களின் இச்செயல் அனைவராலும் பாராட்டப்பெற்றது. இத்தகைய சிறப்பு மிக்க விடுதலை வீரரை – இந்திய அரசு மறந்து விட்டது. இரு ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையில் செக்கிழுத்த செம்மலின் தண்டனைகள் – மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டாகவும் மன்னர் அவையில் 6 ஆண்டாகவும் குறைக்கப்பட்டன; இதனால் விடுதலை அடைந்தாலும் அவரது விடுதலைக்கான போராட்டப்பயணம் வாழ்க்கைப் போராட்டத்துடன் இணைந்தே நடந்தது.
  நூலாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் எனப் பலவகைகளில் தமிழ்ப்புலமையையும் ஆங்கிலப் புலமையையும் வெளிப்படுத்திய சிறந்த அறிஞரான வ.உ.சிதம்பரனார் அவர்களைத் தமிழுலகமும் சிறப்பாகப் போற்றாதது வருத்தத்திற்குரியதே. தமிழக அரசு அவரது படிமத்திற்கு மாலை அணிவிப்பதுடன் அவர் நினைவைப் போற்றுவது முடிந்து விட்டது என எண்ணக்கூடாது. அவர் மரபினருக்குச் சிறப்பு செய்தும் அவர் பெயரை நிறுவனங்களுக்குச் சூட்டியும், அவர் பெயரில் விருதுகள் அறிவித்தும் பிற வகைகளிலும் போற்ற வேண்டும்.மத்திய அரசின் திட்டங்கள், விருதுகள், கட்டடப்பெயர்கள் முதலானவற்றில் ஆயிரக்கணக்கான பெயர்கள் ஒரு குடும்பத்திற்கு உரியனவாக உள்ளன. இவற்றை மாற்றி நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டுத் துன்புற்ற சிறந்த தலைவரான செம்மல் வ.உ.சிதம்பரனார் முதலானவர்பெயர்களைச் சூட்டுமாறு செய்ய வேண்டும். சாதித்தலைவர் போல் கருதும் வகையில் சில சாதிச்சங்கங்கள் மட்டும் அவரை நினைவுகூரும்போக்கை மாற்றி உலகமே அவரைப் போற்றும் வகையில் அவர் புகழ் பரப்ப வேண்டும்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZj9tG-kt1iLYIT1yEi63MSk6-qoL234n0JmbiNI_TAEeyZRea0PMt1NFwTip1gr1qsxGiZdxOi_nkyPxaixeqU9hjcoqveumnFjURstZOh_4KtSx3pBVCY2gGdUASoGpSq9PO-Zwr2ks/s640/40-NinaivuNaal.png
  செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரை உரியவாறு போற்றாததுபோல் தக்கவாறு போற்றப்படாத அறிஞர் செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார். செப்டம்பர் 3 அவரது நினைவுநாள் ஆதலின் அவரையும் இங்கே நினைவுகூர்கிறோம். உலகப் புலவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் பெரும்பாலோர் சிற்றூரில் இருந்தவர்களாகவும் தங்கள் பகுதி சார்ந்த இலக்கியம் படைத்தவர்களாகவும்தான் உள்ளனர். தமிழில்தான் உலகளாவிய பொது நோக்குடனான, உலகம் களிக்கும் இயற்கை சார்ந்த படைப்புகளைப் பார்க்க முடியும். அத்தகைய உலகப்புலவர்களில் ஒருவர்தாம் பேராசிரியர் சி.இலக்குவனார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒல்காப்புகழ் தொல்காப்பியரின் தொல்காப்பியம் என்னும் இலக்கியஅறிவியல் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஒன்றிற்கே அவர் உலகளவில் போற்றப்பட வேண்டும். உலகத்தில் மொழிக்காகப் போராடிப் பதவி இழந்து சிறை சென்ற ஒரே ஒரு பேராசிரியராக அவர்தாம் உள்ளார். அரசியல் தலைவர்களைப் புகழும் உலகம் அவரை மறந்து விடுகிறது. களத்தில் இருந்து போராடிய கல்வியாளரான பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரிலும் விருதுகள், பரிசுகள் வழங்கவும் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டவும் தமிழக அரசு முன்வரவேண்டும்.
  ஆங்காங்கே தமிழன்பர்களால் நினைவுகூர்ந்து போற்றப்படும் விடுதலைப் போராளி வ.உ.சிதம்பரனார் அவர்களையும் தமிழ்ப்போராளிபேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களையும் போற்றி அவர்கள் பாதையில் செயல்பட்டுத் தமிழும் தமிழரும் உரிமையும் ஏற்றமும்காண உழைப்போம்!
செந்தமிழ்ச்செம்மல்கள் வ.உ.சிதம்பரனார்,
சி.இலக்குவனார் புகழ் ஓங்குக!
தமிழும் தமிழரும் தலைமை எய்துக!
இதழுரை
ஆவணி 22, 2045 / செப். 7, 2014  http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png