Friday, October 31, 2014

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! - இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

tower03-nallurkandasaamykoil_murukan

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது!

  தமிழை இறைமொழி என்கின்றனர். ஆனால் இறைமொழியில் இறைவனைத் தமிழில்வணங்க வகையில்லை. இறைவனின் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் சிதைக்கப்பட்டும் ஆரியப் பெயர்களாகத் திகழ்கின்றன. இறைவனின் திருப்பெயர்களைத் தமிழில் குறிப்பிடாமல் தமிழில் வழிபடாமல் இருப்பவர்க்கு இறையருள் எங்ஙனம் கிட்டும்?
  கோவில் தொடர்பான துண்டறிக்கை கிடைத்தால் கோவிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதும் அதற்கு நம்மிடம் பணம் கேட்கிறார்கள் என்றும்தான் நமக்குப் புரியும். கிரந்த எழுத்துகளில் ஆரியமே அங்கே கோலோச்சும்! கோயிலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நம் செல்வம்தான் தேவை! இறைவன் விரும்பும் நம் மொழியல்ல! தமிழ்வழிபாட்டை வலியுறுத்தியும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியும் பலர் போராடிவந்தும் பயனில்லை!
tower04_thillainatarasarkoil
திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் இறுதியில் தன்னைத் ‘தமிழ்ஞான சம்பந்தன்‘ என்றே பாடியிருக்கிறார்.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” (திருமந்திரம் 81)
எனத் திருமூலர் இறைவனின் விருப்பம் நம்தாய்த்தமிழ்தான் என்று அன்றே சொல்லியுள்ளார்.
“சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்”
எனத் திருநாவுக்கரசரும் தமிழ்ப்பாடலால்தான் இறைவனைப் பாடிப் போற்றி வாழ்த்த வேண்டும் என்று சொல்லிவிட்டார். இருப்பினும் நாம் தமிழை இறை வழிபாட்டில் தள்ளி வைக்கும் கொடுமையை அஞ்சாது செய்து வருகிறோம்! எனவேதான் நமக்கு இறையருள் கிட்டவில்லை! தன் மொழியில் தன்னைப் பாடாத தமிழனுக்கு இறைவன் எங்ஙனம் அருள்புரிவான்? இதைவிடக் கொடுமைதான் தமிழ்க்கடவுள் திருமுருகன பெயரைப் பாலசுப்பிரமணியம் என்பதும் தென்எல்லையில்இருந்து காக்கும் குமரி அம்மனைப் பகவதி என்பதும் இவைபோல் இறைவன், இறைவிப் பெயர்களை கோயில்களின் பெயர்களையும் ஆரியமாக்கிப் பின்பற்றுவதும்!
tower01_thiruvarangam
தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுத்துத் தமிழ்ப்பெயர்கள் மட்டுமே பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தமிழ் மொழியில் இறைவனைத் தடையின்றி வணங்க ஆவன செய்ய வேண்டும். ஒவ்வோர் ஊரிலும் உள்ள மக்கள் தத்தம் பகுதியில் உள்ள கோயில்கள் பெயர்களும் கடவுளர்கள் பெயர்களும் தமிழிலேயே இருக்கும் வண்ணம் பயன்படுத்தவும் உரியவர்களைப் பயன்படுத்தச் செய்யவும் வேண்டும்!
 tower02_ariyaalai_vinayakarkoil
இறைவா! இறைவா! நீயே சொல்வாய்!
முறைதானா இதுவும்! அறம்தானா இதுவும்!
உனை வாழ்த்த உன் தமிழுக்குத் தடையா?
உனைப் போற்ற தாய்த் தமிழுக்குத் தடையா?
சொல்வாய் நீ சொல்வாய்! இறைவா நீ சொல்வாய்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png
இதழுரை
ஐப்பசி 9, 2045 /அக். 26, 2014
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive