தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

07

கல்வியைத் தேடு!


  உடல்நலத்துடன் கூடிய வலிமை எதற்குத் தேவை? அயலவரை அழிக்கவா? அல்ல அல்ல! நம்மைக் காத்துப் பயன்பாட்டுடன் திகழ! இதற்கு அடிப்படை கல்வி கற்றலும் கற்றபடி நிற்றலும். கல்வித்தேவையையும் கல்விக்கண்களை அனைவரும் பெறவேண்டும் என்பதையும் பாரதியார் பல பாடல்களில் வலியுறுத்தியுள்ளார்.
திறமை கொண்ட தீமையற்ற
தொழில்புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே
(பக்கம் 56 / விடுதலை)
தேடுகல்வியிலாத தொரூரைத்
தீயினுக்கிரை யாக மடுத்தல் (பக்கம் 158 / வெள்ளைத்தாமரை)
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்த றிவித்தல் (பக்கம் 159 / வெள்ளதை்தாமரை)
பயிற்றிப் பலகல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் (பக்கம் 207 / முரசு)
வானை அளப்போம்! கடல்மீனை அளப்போம்!
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்! (பக்கம் 23 / பாரததேசம்)
எனப் பலவாறாகக் கல்வியை வலியுறுத்தியும் பாரதியார் அவற்றின் அடிப்படையில் தம் கட்டளைகளைப் புதிய ஆத்திசூடியில் வழங்கவும் தவறவில்லை.
 “கற்றபின்நிற்க அதற்குத் தக” எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியவாறு கற்றதொழுகு (ஆ.சூ. 13) என்கிறார். நூலினைப் பகுத்துணர் (59) என எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் பகுத்தறிவுக் கல்வியை வலியுறுத்துகிறார்.
சரித்திரத் தேர்ச்சி கொள் (25)
நீதிநூல் பயில் (53)
இராசசம் பயில் (90)
உலோகநூல் கற்றுணர்எ(101)
இரத்திலே தேர்ச்சி கொள் (89)
வானநூல் பயிற்சி கொள் (104)
இரேகையில் கனிகொள்(94)
சைகையில்பொருளணர் (33)
என வரலாறு, இயற்பியல்,வேதியியல், வானியல்போன்ற அறிவியல், அரசியல், முதலான அனைத்துத்துறைகளையும் பயின்று கல்வியில் தேர்ச்சி மிக்கவராகத் திகழவேண்டும் என்கிறார்.
  வானியல் கல்வி என்ற பெயரில் சோதிடம் பக்கம் சார்ந்து மூடனாக இருக்கக்கூடாது என்பதற்காக அவர், சோதிடம் தனையிகழ் (35) எனச் சோதிடத்தை வெறுத்தொதுக்குமாறு எச்சரிக்கவும் தவறவில்லை.
  கல்வியில் வேதக்கல்விபற்றிய பாரதியார் கருத்து என்ன?
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதுமில்லை
தோத்திரங்கள் இல்லை உளந்தொட்டு நின்றால் போதுமடா (பக்கம் 187 / பரசிவ வெள்ளம்)
என்கிறார். எதிலும் புதுமை விரும்புவரல்லவா பாரதியார்! எனவே, பிணத்தினைப் போற்றேல் (67) எனப் பழைய மூடநம்பிக்கைகளபை் போற்ற வேண்டா என்கிறார்.
புதியன விரும்பு (69)
பெரிதினும் பெரிது கேள் (71)
சொல்வது தெளிந்து சொல் (34)
எனக் கல்விகேள்விகளில் புதுமையை விரும்புபவர் பாரதியார்.
வேதங்கள் என்று புவியோர் – சொல்லும்
வெறும்கதைத்திரளில் வேதமில்லை (பக்கம் 250 / கண்ணன் என் தந்தை)
என்னும்பாரதியார் புதிய ஆத்திசூடியில் வேதம் புதுமை செய் (108) என்கிறார்.
காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு (பக்கம் 202 / பாப்பா பாட்டு)
பாட்டுத் திறத்தாலேஇவ்வையத்தைப்பாலித்திட வேணும் (பக்கம் 112 / காணிநிலம்)
பண்டைச் சிறுமைகள் போக்கி என்நாவிற் பழுத்த சுவைத்
தண்டமிழ்ப்பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே! (பக்கம் 100 / விநாயகர் நான்மணிமாலை)

என்றெல்லாம் பாடலின்பால் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தியுள்ளவர் பாரதியார். எனவே, பாட்டினில் அன்பு செய்(66) என்கிறார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08)