Saturday, February 20, 2016

உலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்




உலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்

thalaippu_thaaymozhinaalum_mathiyaarasin_samaskiruthaveriyum_thiru

சமற்கிருத எதிர்ப்பு நாளைக் கொண்டாடுவோம்!
உலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும்!
  உலகத்தாய்மொழி நாள் என்பது எந்த ஒரு மொழியையும் உலகத் தாய்மொழியாகக் குறிப்பது அன்று. மாறாக, அனைவரும் அவரவர் தாய்மொழியைக் கொண்டாட வேண்டும் என்பதே நோக்கம்.
 1952இல் மேற்குப் பாக்கித்தான், கிழக்குப்பாக்கித்தான் மீது உருமொழியைத் திணித்தது. வங்காளமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கிழக்குப் பாகித்தானியர் அதை எதிர்த்துப் போராடினர். வங்க மொழிகாக்கும் போராட்டத்தில் வங்காளியர் பதினொருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மொழிப்போரில் ஈடுபட்ட கிழக்குப்பாக்கித்தானின் வங்காளியர் இதை இனப்போராட்டமாகவும் விடுதலைப் போராட்டமாகவும் வளர்த்தெடுத்தனர். இதன் தொடர்ச்சியான போராட்டங்களால், மார்ச்சு 26, 1971 அன்று வங்காளதேசம் பாக்கித்தானிலிருந்து பிரிவதாக அறிவிக்கப்பெற்றது. பின்திசம்பர் 16, 1971 இல் வங்காளத்தேசம் விடுதலை நாடாக அறிவிக்கப்பெற்றது.
  17.09.1974 இல் ஐ.நா.வின் 136 ஆவது நாடாக வங்காளத்தேசம் இணைந்தது. இதன் பயனாக, நாட்டு விடுதலைக்குக் காரணமான வங்கமொழிப் போராட்டத்தில் பதினொருவர் உயிரிழந்த நாளான பிப்.21 ஆம் நாளைத் தாய்மொழிநாளாக அறிவிக்கும்படி வேண்டியது. தொடர் வலியுறுத்தலால் இதனை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் 1999 இல் பிப்.21 ஐ உலகத்தாய்மொழிநாளாக அறிவித்தது. எல்லா நாடுகளும் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மையைப்பேணுதவற்காகத் தாய்மொழிநாளைக் கொண்டாடுமாறு தெரிவித்தது.
  இந்தியா என்பது ஒரு நாடல்ல. பல தேசிய இனங்கள் உள்ள, ஆனால், ஆட்சியமைப்பால் இணைக்கப்பட்ட நிலப்பரப்பு. இந்திய அரசு மக்கள் நலம் நாடும் அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்க வேண்டும். குறைந்தது முதலில், அரசமைப்புச்சட்டத்தில் ஏற்கப்பட்ட பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளுக்குமான தாய்மொழி நாளைக் கொண்டாட வழி வகை செய்திருக்க வேண்டும். ஆனால், என்ன செய்தது?
  1999-2000 ஆம் ஆண்டைச் சமற்கிருத (சமசுகிருத / சமக்கிருத) ஆண்டு எனப் பா.ச.க.ஆட்சி அறிவித்தது. மனிதவளமேம்பாட்டுத்துறையின் சார்பில் 1999, மார்ச்சு 18 அன்று தொடக்கிவிழாவும் நடத்தியது. ஆண்டுமுழுமையும் கொண்டாடுவதற்கேற்ற பல்வேறு திட்டங்களையும் உரிய குழுக்களையும் அறிவித்தது. மாநில அரசுகளும் பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் சமற்கிருத ஆண்டு கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
  அது மட்டுமல்ல, ஆண்டுதோறும் ஆகத்து முதல் வாரத்தைச் சமற்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டும் என்று அப்போதைய மனிதவளமேம்பாட்டு அமைச்சர் முரளிமனோகர் சோசிஅறிவித்தார்.
  ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பு வரும்பொழுது மட்டும் அறிக்கையால் கண்டிக்கும் வாயினால் வடை சுடும் தலைவர்கள், நிலையான எதிர்ப்பைக் காட்டுவதில்லை. மத்திய அரசு என்று கூறுகிறோமே தவிர, பல ஆண்டுகளாக அந்த அரசில் ஏதோ ஒருவகையில் தமிழகக் கட்சிகளும் இணைந்துள்ளன என்பதை நாம நினைவில் கொள்ள வேண்டும். 1999 – 2000 ஆம்ஆண்டினைச் சமற்கிருத ஆண்டாக அறிவித்த பொழுது, மொழிப்போரால் பதவிக்கு வந்த தி.மு.க.வும் அதில் பங்கு வகித்தது. இருப்பினும் அனைத்து மொழியினரும் தத்தம் தாய் மொழியைக் கொண்டாடவோ, மாநிலங்களில் அம்மாநில மக்களின் தாய்மொழி நாளைக் கொண்டாடவோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர், பிற கட்சித்தலைவர்கள் என அவ்வப்பொழுது எதிர்ப்பு தெரிவித்தாலும் வீர வணக்கக் கொண்டாட்டச் சடங்கு போன்ற ஒரு சடங்காக இந்த எதிர்ப்பும் ஆகிவிட்டது.
  மத்திய அரசு சொல்லாவிட்டால் என்ன? சாதித்தலைவர்களுக்கெல்லாம் அரசு விழா கொண்டாடும் தமிழக அரசு நாடு தழுவிய தாய்மொழி நாளைக் கொண்டாடவும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் தாய்த்தமிழ்நாளைக் கொண்டாடவும் ஏற்பாடு செய்யலாமே!   அனைத்துக்கட்சித்தலைவர்களும் தத்தம் கட்சி அமைப்புகள் மூலம்நாடு முழுமையும் தாய்த்தமிழ்நாளைக்கொண்டாடலாமே! இவற்றில் நாம் ஈடுபாடு காட்டாததால், ஆரவார எதிர்ப்புடன் அடங்கிவிடுவோம் என்பதை நன்குணர்ந்த மத்திய ஆட்சிப் பொறுப்பினர் தொடர்ந்து சமற்கிருதத்திணிப்பில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதிதான், மத்திய அரசு பள்ளிகளில் சமற்கிருதத்தைப் பாடமொழியாகத் திணிக்கும் இப்போதைய ஆணை.
 நாட்டு மொழியும் நாட்டு சமயமும் பேணப்பட வேண்டும் என்ற பா.ச.க. வின்   கொள்கை நல்ல கொள்கை. ஆனால், நாட்டு மொழியை விட்டுவிட்டு இறக்குமதியான ஆரியத்தையும் வந்தேறிகளான ஆரியர்களையும் உயர்த்தும் முயற்சியும் சிறப்பிக்கும் முயற்சியும் தவறு என்பதை உணர வேண்டும். அவ்வாறு பா.ச.க. எளிதில் உணர வாய்ப்பில்லை. எனவே, நாம் இனி மேல்,
மத்திய அரசு அனைத்து மொழிகளுக்குமான சமநிலையை அறிவித்து நடைமுறைப்படுத்தாவிட்டால், சமற்கிருத எதிர்ப்பு நாள், சமற்கிருத எதிர்ப்பு வாரம், சமற்கிருத எதிர்பு மாதம், சமற்கிருத எதிர்ப்பு ஆண்டு எனக் கொண்டாட வேண்டும்.
ஒரு மொழியை எதிர்க்கலாமா எனச்சிலர் கேட்பர். அம் மொழி நம் தலையில் ஏறி ஆட்டுவிக்கும் பொழுது அதனைக் கீழிறக்க நம் எதிர்ப்பைக் காட்டித்தான் ஆக வேண்டும்.
  மத்திய அரசின் முழக்கங்கள், பதவிப்பெயர்கள், திட்டப்பெயர்கள், புதிய ஏவுகணை, கலன்கள் முதலானவை பெயர்கள், கலைச்சொற்கள் என அனைத்திலும் சமற்கிருதம் அல்லது இந்தி மயமாக்கப்பட்ட சமற்கிருதம் என்பதே இந்திய அரசு அமைந்ததிலிருந்து வழக்கமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், நாம் வெளிப்படையாகச் சமற்கிருதத்தை எதிர்த்துத்தான் ஆக வேண்டும்.
  சமற்கிருத வெறி பிடித்த மத்திய ஆளும் பொறுப்பினர் சமற்கிருத நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் சமற்கிருதத் திணிப்பையும் இந்தித்திணிப்பையும் அடியோடு கை விட வேண்டும்.
அது தானாக அந்த முடிவிற்கு வராது. எனவே,
சமற்கிருத எதிர்ப்பு நாளைக் கொண்டாடுவோம்!
அனைத்து மொழிகளின் உரிமைகளையும் பேணுவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 121, மாசி 09, 2047 / பிப்.21, 2016
AkaramuthalaHeader


No comments:

Post a Comment

Followers

Blog Archive