Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Monday, May 27, 2019

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும்

தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பொழுது நான் புறநகர் ஒன்றில் இருந்தேன். என் அலைபேசியில் இணைய இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை. எனவே, முடிவுகளைப் பார்க்க இயலவில்லை. ஆனால், அன்பர்கள் சிலர் அடுத்தடுத்து ஒரே மாதிரி பேசினர். நான் அவர்களுக்கு ஒரே மாதிரிதான் மறுமொழி உரைத்தேன். அவர்கள், “நீங்கள் தேர்தல்பற்றியும் “பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம்வெளுத்து விட்டது!” என்றும் எழுதியவை மிகச் சரி. ஆனால், பா.ச.க. அல்லவா பெரும்பான்மை பெற்று வருகிறது” என்றனர். நான் அதற்குப் “பா.ச.க. கட்சி அளவில் பெரும்பான்மை பெறும். இப்பொழுது சிவசேனா முதலான கூட்டணிக் கட்சிகளின் வெற்றியையும் சேர்த்துப் பா.ச.க. வெற்றி எண்ணிக்கையில் சேர்க்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் பா.ச.க. முழுத் தோல்வியைச் சந்திக்கும். கருநாடகாவில் ஒரு பாதி வெற்றி பெறும். ஒரிசா, மே.வங்கம், வட கிழக்கு மாநிலங்களில் வெற்றி காணாது. சிக்கிம், வடகிழக்கு மாநிலங்களில் பா.ச.க. வெற்றி பெறாதுகுறுக்கு வழியில் ஈடுபட்டிருந்தாலன்றிஆட்சி அமைக்கும் எண்ணிக்கை அதற்குக் கிடைக்காது” என்றேன்.
ஆனால், நேரம் செல்லச் செல்ல பா.ச.க. அறுதிப்பெரும்பான்மையை நோக்கிச் சென்று விட்டது. முடிவுகளை நம்பத்தான் முடியவில்லை. தமிழகக் கண்ணாடிகொண்டு வட இற்தியாவைப் பார்த்ததால் கணிப்பு தவறாகிவிட்டது என நண்பர்களிடம் சொன்னேன். ஆனால், அதற்கு அவர்கள், அப்படியில்லை.வாக்கு மையங்களில் பா.ச.க மிரட்டுவதையும்  “மையிட்டது வாக்காளர்கள் விரல்களில்!உள்ளே விசையை; அழுத்தியது பணியாளர் விரல்கள்!” என்னும் காட்சிகளையும் காணொளிகளில் கண்டோம். எனவே, பா...வின் இவ்வெற்றிஇயல்பானதல்லபறிக்கப்பட்ட வெற்றி” என்றனர்.
எனினும் பிற நம் கருத்துகள் சரியாக அமைந்தனவா எனப் பார்க்கலாம்.
.தி.மு.ஆட்சியைக் கலைக்க வேண்டா! (16 ஏப்பிரல் 2019 )  எனஎழுதியவாறே இடைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
“தி.மு.க.வின் எதிர்பார்ப்பு பொய்த்து அ.தி.மு.க. இடைத்தேர்தல்களில் வேண்டிய எண்ணிக்கையிலான தொகுதிகளில்  வெற்றி பெறலாம்.”
“சிறப்பான பின்புலம் இல்லாமல் முதல்வர் பதவியில் அமர்ந்து காட்சிக்கு எளியராக விளங்கித் திறமையாகச் செயல்படும் வல்லவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அரசியல்வாதிகளுக்குரிய ஊழல் இலக்கணத்தைப் புறந்தள்ளிப் பார்த்தால் அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து முறையற்ற முறையில் தள்ள வேண்டிய தேவை இல்லை.”
“தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவிக்காலம் வரையும் ஆட்சி செய்வதே நல்லது. செயலலிதாவை மட்டும்  மக்கள் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுத்ததாகக் கருதுவது தவறு. அவர் தலைமையிலான அதிமுகவையும்தான் ஆள்வதற்கு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.”
இவை யெல்லாம் நம் கருத்துகள். இவற்றின்படித்தான் இப்பொழுது தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
 “பா.. மத்திய ஆட்சியைக் கைப்பற்றி இங்கே தி.மு..விற்குப்பெரும்பான்மை கிடைக்கலாம்” எனக் குறிப்பிட்டிருந்தோம். அதுபோல் மத்தியில் பா.ச.க. ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிதான் ஒன்று நீங்கலான முழு வெற்றி கண்டுள்ளது.
இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்!(17 மார்ச்சு 2019) என வேண்டுகோள் விடுத்திருந்தோம். உண்மையில் யார் பக்கம் இருக்க வேண்டுமோ அவர்கள் பக்கம் நீதித்துறை இல்லை. இடைத்தேர்தல்களில் மக்கள் வேறு கண்ணோட்டங்களில் வாக்களிக்காமல் இவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி இடமுடியும் என்பதை எண்ணிப்பார்த்து இவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், இது நிகழவில்லை. அதே நேரம்,
“சட்டமன்றத் தொகுதிகளில் பதவி பறிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்களித்தாலும் அத்தொகுதி அடங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கட்டும்.”
எனக் குறிப்பிட்டிருந்தோம். இதன்படி 9 தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு வாக்களித்த மக்கள் நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
 தினகரனின் அ.ம.மு.க., பல்வேறு முறையற்ற தாக்குதல்களுக்கு உள்ளாவதால் முதன்மைப் பங்கைப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறும் என முதலில் கருதியவாறு நடைபெறவில்லை. தேர்தல் கணிப்புகளைப் பார்த்துச் சில ஊடக நண்பர்களிடம் பேசியபொழுது தினகரன் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்றனர். அப்படியானால், கட்சி அமைப்பிற்கு எதிராக வாக்களிக்க விரும்பாதவர்களாலும் தற்சார்பரகளாக(சுயேச்சைகளாக)ப் போட்டியிடுவதாலும் அவருக்குச் சரிவுதான் என்றேன். அஃதாவது, வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என்ற கணிப்பு பொய்யாகும். ஒன்று அவர் வெற்றி பெறும் வகையில் வாக்குகள் அமையும் இல்லையேல் புறக்கணிக்கப்படுவார் என்ற கருத்தைத் தெரிவித்தேன். அவ்வாறுதான நடந்துள்ளது. என்றாலும் அ.ம.மு.க.வினர் தளரத் தேவையில்லை.
     பேராயக்(காங்.)கட்சி  மாநிலக்கட்சி என்ற முறையில் உ.பி.யில் வெற்றி பெற்று மாநிலக் கட்சிகள் அமைக்கும் கூட்டாட்சியில் இடம் பெறட்டும். பிற மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் தமிழ் நாட்டில் பேராயக்(காங்.)கட்சி தோற்றால்தான் தமிழக மக்களின் ஆறா மனவலியை அக்கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள். பேராயக்(காங்.)கட்சி உ.பி.யில் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட  இடங்களில் ஒன்று தவிர பிற இடங்களில் வெற்றி பெற்றள்ளது. கூட்டணி அறம் கருதியும் பா...வுடன் கூட்டணி வைத்துள்ளதமிழக ஆளுங்கட்சிக் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவும்பேராயக்(காங்.)கட்சியை வெற்றி பெற வைத்துள்ளனர். எனினும் நாம் விழைந்தவாறு இந்திய அளவில் மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சி அமையவில்லை.
இராகுல்பிற மாநிலம் எதிலும் போட்டியிட்டு வெற்றி பெற வாழ்த்தினோம்கேரளாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இளங்கோவன் என்னும் தமிழினப்பகையாளி தோற்கடிக்கப்படவேண்டும் எனக் கருதினோம். அதற்கேற்ப தி.மு.க. கூடடணியில் தமிழினப் பகையாளியான அவர் மட்டுமே தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
தாலின் தமிழக அரசியலோடு நின்றுவிடாமல் இந்திய அரசியலிலும் கால்பதித்துத் தமிழ்நாட்டின் உயர்விற்குப் பாடுபடவேண்டும். (26 பிப்பிரவரி 2017) எனவும்
பொதுத் தேர்தல்களில் திமுக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின்  முனைப்புடன் ஈடுபட வேண்டும். 15.10.2018) எனவும் குறிப்பிட்டிருந்தோம். நினைத்தன நிறைவேறும வண்ணம் தேர்தல் முடிவுகள்அமைந்துள்ளன.
சீமானின் நா..எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்குவளர்ச்சியேநாளைக்கு இந்த வளர்ச்சி அக்கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள உதவும் (15 ஏப்பிரல் 2019). நா.த.க. சில இடங்களில் 3ஆவது இடத்திலும் சில இடங்களில் நான்காவது இடத்திலும் வந்து தன் வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
 கமலின் ம.நீ.மையத்திற்குக் கிடைக்கும் வாக்குகள் அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு உதவும். இவர் யாருடைய ஆதரவு வாக்குகளை அல்லது எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வரலாம். எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகையை மீளப் பெற முடியாத அளவு குறைவான வாக்குகள் பெற்றால் கட்சியை மேம்படுத்துவதற்கான சிந்தனை உருவாகி அடுத்தத் தேர்தலுக்கு உதவும். எனக் குறிப்பிட்டிருந்தோம். தன்னம்பிக்கையுள்ள கமல் என எழுதியதற்கு எதிராகப் பேசிய நண்பர்களிடம், சென்னையில் புதிய வாக்காளர்களிலும் படித்த வாக்களாரகளிலும் பலர் கமலை ஆதரிக்கின்றனர். எனவே, அவர் கட்சிக்கு 10 இற்குக் குறையாமல் வாக்குகள் கிடைக்கும். வேட்பாளர் எவர் எனத் தெரியாமல் கமலின் கை விளக்குச் சின்னத்திற்குப் பல தொகுதிகளில் வாக்களிப்பர் என்றேன். இதுதான் நிறைவேறியுள்ளது.
நாம் கருதியன பெரும்பாலும் நிகழ்ந்துள்ளன. ஆனால்,  தமிழ்நாட்டிற்கு நன்மைகள் ஏற்படும்வகையில் முடிவுகள் இல்லை. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாதாடியும் போராடியும் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் இடையூறுகள் வராமலும் தமிழகத்திற்கு நன்மைகள் கிடைக்கும் வகையிலும் செயல்பட வேண்டுகிறோம்.
மக்கள் சார்பில் வினையாற்ற வேண்டியவர்களை நாம் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுத்துள்ளோம். இனி அவர்கள் உண்மையான சார்பாளர்களாகத் திகழும் வகையில் செயலாற்றச் செய்வோம்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.(திருவள்ளுவர், திருக்குறள் 518)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல


Tuesday, April 30, 2019

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக!

 வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன்?
வேலூரில்  தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர். குற்றச்சாட்டிற்கு உள்ளானவரைத் தகுதி நீக்கம் செய்யாமல் ஒட்டு மொத்தத் தேர்தலை நிறுத்தியது தவறு என ஆளும் கட்சிக் கூட்டணியினர் சார்பாகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு வெற்றியைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் சூழ்ச்சி செய்வதாக எதிர்க்கூட்டணியினரும் தெரிவிக்கின்றனர். எனினும் தேர்தல் நடைபெறும். எப்பொழுது? பொதுத் தேர்தல் முடிவுகள் வந்த பின்பாகக் கூட இருக்கலாம்.
தேர்தலை விரைவில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். ஆனால், இனிமேல் தனித்தனிக் கட்சி மேடைகளில் பரப்பவும் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கவும் தடை விதிக்க வேண்டும். கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் வகையிலும் வாக்குகள் வாங்கப்படுகின்றன. வீடு வீடாகச் செல்வதன் மூலமும் வாக்குகள் வாங்கப்படுகின்றன. இவற்றை நிறுத்த வேண்டும் என்றால் இவ்விரண்டிற்கும் தடை விதிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையமே குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து வேட்பாளர்களின் பரப்புரைகளுக்கு வாய்ப்பு தந்து, அவற்றைத் தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதனால் வேட்பாளர்கள் தத்தம் கருத்துகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பு தந்ததாக அமையும். வாக்கு வணிகத்திற்கான வாய்ப்புகளுக்குக் கதவு மூடப்பட்டதாகவும் அமையும்.
வேட்பாளர்களிடம் விண்ணப்பங்கள் பெறுதல்  என முதலில் இருந்து தேர்தல் நடைமுறைளைத் தொடங்கக் கூடாது. முன்னரே பதிந்து இறுதி வடிவம் எடுக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடத்தான் வாய்ப்பு தரவேண்டும். இதனால் வீண் செலவுகள் தவிர்க்கப்படும்.
அரசியல்வாதிகள் பேச்சில் வாய்மை இல்லை. எனவே, செய்யாததைச் செய்ததாகக் கூறுவர்.  செய்யமாட்டோம் என அறிந்தே செய்யப்போவதாகக் கூறுவர். அடுத்தவரை ஏசிப்பேசி இன்பம் காணும் அரசியல் சொற்பொழிவாளர்களும் உள்ளனர்.
இன்றைய அரசியல் சொற்பொழிவாளர்கள் எப்படி உள்ளனர்? பேதை நாக்கு குறித்து நாலடியார் விளக்குவதுபோல் இருக்கின்றனர்.
“பேதை நாக்கு  பிறரைத் திட்டுவதால் பயன் இல்லை என அறிந்தாலும் திட்டித் தின்னும்; திட்டுவதனால் ஏதோ பெற்றவன் போலத் திட்டும்; வஞ்சம் கொண்டு திட்டும்; காரணம் எதுவும் இல்லாமலே திட்டும்; எதிர்த்துப் பேச வாய்ப்பு இல்லாதவரையும் திட்டும்; சினம் பொங்கத் திட்டும்; இல்லாததும் பொல்லாததும் கோத்துக் கூறித் திட்டும்; நல்ல நாளிலும் திட்டும்; ஏதும் திட்டாவிட்டால் நாக்கு அவனையே தின்பது போன்று இருக்கும் எனத் திட்டும்” என்கிறது நாலடியார்.
பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் – கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்காக்காக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து. (நாலடியார்  335)
இவற்றை எல்லாம் தடுப்பதற்கு உதவுவது தனிப் பரப்புரைகளுக்கான தடையாகும். தனித்தனிப் பரப்புரைகளுக்குத் தடை விதிப்பதால் ஒலி மாசும் கட்டுப்படுத்தப்படும்;  மனமாசும் கட்டுப்படுத்தப்படும். எனவே, பரப்புரைகளுக்கான இடங்கள், நேரங்கள் ஆகியவற்றை வரையறுத்துக் கொண்டு அறிவித்த ஐந்து நாளில் தேர்தல் நடைபெறும் வண்ணம் தேர்தல் நாளை அறிவிக்க வேண்டும்.
நேர்மையான தேர்தல் என்பது வாக்காளர்களைப் பொறுத்தே அமையும். நன்மை கிடைத்தாலும் ஆதாயம் அடைந்தாலும் நடுவுநிலைமை தவறிப் பெறும் பணம் அல்லது பொருள் பெறும் நிலைக்கு வாக்காளர்கள் ஆளாகக் கூடாது. வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால் வேட்பாளர்களும் நேர்மையாக இருப்பர். கொடுப்பதால்தான் வாங்குகிறோம்” என்னும் நிலை மாறி “வாங்காததால் கொடுக்கவில்லை” என்னும் நிலை வர வேண்டும்.
எனவே, வாக்காளர்கள் நேர்மையாக நடந்து கொள்வதற்கான சூழலை உருவாக்கியும் வாக்கு வணிகத்தில் ஈடுபடும் விற்போர், வாங்குவோர் என இரு தரப்பாருக்கும் தண்டனை என்னும் நிலையை நிலைநாட்டியும் விரைவான நேர்மையான  தேர்தல் நடைபெறத் தேர்தல் ஆணையம் நடுவுநிலைமையுடன் செயல்பட வேண்டும். தொலைந்து போகக் கூடிய மத்திய  ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்து அதற்கு முட்டுக் கொடுக்கும் வகையில் கட்சிக்கொரு நீதி என்ற தவறான செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே, நடுவுநிலைமையுடன் செயல்பட்டு உடனடியாக வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை வேண்டுகிறோம்!
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.  (திருவள்ளுவர், திருக்குறள்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Wednesday, April 24, 2019

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்


திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேண்டா!

தமிழகத்தில் காலி யாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு  நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 19 அன்று  இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உரிய தேர்தல் பணிகளும் தொடங்கி விட்டன. இவற்றுள் திருப்பரங்குன்றம் தொகுதிக்குத் தேர்தல் தேவையில்லை. முந்தைய இடைத்தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற மரு.சரவணனையே வென்றவராக அறிவிக்க வேண்டும்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத்  தொகுதியில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எசு. எம். சீனிவேல் தேர்தல் பரப்புரையின் பொழுதே நலக்குறைவுடன்தான் மருத்துவமனையில் இருந்தார். இருப்பினும் அதிமுகவின் செல்வாக்கான தொகுதி என்பதால் எளிதில் வெற்றி பெற்றார். ஆனால் பதவி ஏற்கும் முன்பு மே 25 அன்று மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் 2016 நவம்பர் 19 அன்று நடந்தது. இப்பொழுதும் அதிமுக வேட்பாளர் ஏ. கே. போசு நலக்குறைவுடன்தான் இருந்தார். இருப்பினும் 55.65% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
இரண்டாம் இடம் பெற்றிருந்த திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், இரட்டை இலை சின்னத்திற்கான ஏற்பினை மருத்துவமனையில் நினைவின்றி இருந்த செயலலிதாவிடம் ‘அ’, ‘ஆ’, படிவங்களில் கை விரல் பதிவு பெற்று வாங்கி வந்ததாகக் கூறுவதால் செல்லாது என்று வழக்கு தொடுத்தார்.
 ஏ.கே.போசின் வெற்றி செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் மார்ச்சு 22 அன்று  தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம், ஏ.கே.போசு வெற்றி செல்லாது என்பதால் இரண்டாவதாக வந்த தன்னைச் சட்ட மன்ற உறுப்பினராக  அறிவிக்க வேண்டும் என்கிற சரவணனின் கோரிக்கையை மறுத்தார் நீதிபதி.
நாம் இதனை இரு கோணங்களில் பார்க்க வேண்டும்.
 தி.ப.கு. தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த ஒருவர் அல்லது பலர் இது குறித்துக் கட்சியில் முறையிடுவதே பொருத்தமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வர இருந்த வாய்ப்பு மோசடியாகஏ.கே.போசிற்கு வழங்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கப்பட்டதாக அவர்கள் கோரலாம். ஆனால், அவ்வாறு யாரும் முறையிடவில்லை. தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளித்துள்ளனர். அச்சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.கே. போசு வெற்றி பெற்றுள்ளார். கட்சியின் உரிய ஏற்பு மடல் ‘அ’, ‘ஆ’, படிவங்களில் அளிக்கப்பட்டு ஏற்கப் பெற்ற பின், வேட்பாளரின் சின்னம் இரட்டை  இலை என்பதில் மாற்றமில்லை. எனவே, வெற்றி குறித்து ஆராயத் தேவையில்லை.
அதே நேரம், இவ்வாறு முறைகேடாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதாக மடல் கொடுத்ததில் யார் யாருக்கெல்லாம் பங்கு உள்ளதோ அத்தனை பேர் மீதும் குற்ற வழக்கு தொடுத்து உசாவி தண்டிப்பதுதான் முறை.  ஆனால், இது குறித்து உயர்நீதி மன்றமும் தக்க கட்டளை பிறப்பித்ததாகத் தெரியவில்லை. காவல் துறையோ,தேர்தல் ஆணையமோ நடவடிக்கை எடுதததாகவும் தெரியவில்லை.
தீர்ப்பு வரும் முன்னரே வெற்றி பெற்ற ஏ.கே.போசு மரணமடைந்தது தனிச் செய்தி.
உணர்வற்றவரிடம் ஒப்பம் பெற்றதாகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் செல்லாது என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.பொதுவாகத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் தேர்வு முடிவு தவறு என்றால் அடுத்த நிலையில் உள்ளவர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.  இந்த நடைமுறைக்கு மாற்றாக அவ்வாறு தீர்ப்பு உரைப்பதை அல்லது அறிவிப்பதை உயர்நீதிமன்றம் ஏற்காதது தவறாகப் படுகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
தி.மு.க. தரப்பில் உரிய மறு ஆய்வு முறையீட்டை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டாலும் தானாக முன்வந்து வழக்குக் கேட்பிற்கு எடுக்கும் உயர் நீதி மன்றம், தேர்தலில் வெற்றி பெற்றவராகத் தேர்தல்  ஆணையத்தால் அறிவிக்கப் பெற்ற ஏ.கே.போசின் தேர்வு செல்லாது என்பதால் அடுத்த இடத்தில் உள்ள தி.மு.க. வேட்பாளர் மரு.சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
மேலும், இதனைத் தி.மு.க.வின் சிக்கல் எனப் பார்க்கக் கூடாது. மக்களாட்சியில் நம்பிக்கை உள்ள அனைவருமே, வழக்கமான நடைமுறைகளை ஆள்வோர்க்கு ஏற்ப மாற்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி இரண்டாம் நிலை வாக்கு பெற்ற மரு.சரவணனை வெற்றி பெற்றதாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும்.
தீர்ப்பினை விருப்பம்போல் மாற்றி அமைக்கும் போக்கு இருப்பதாக மக்கள் கவலைப்படுவதைப் போக்க வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் வெற்றி பெற்றவரின் தேர்தல் செல்லாது என்னும் பொழுது அடுத்த நிலையில் உள்ளவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பதுமே நீதி உயிரோட்டத்துடன் இருப்பதற்கு அடையாளமாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Sunday, July 16, 2017

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு

அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு!

 

  ஆடி 01, 2048 /சூலை 17, 2017  அன்று இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின்போக்கை மாற்றச் செய்வதற்குத் தன்மான உணர்வு உள்ள அதிமுக மக்கள்சார்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!
 இந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களத்தில் இரு்பபவர்கள், பா.ச.க. அணியின், இராம்நாத்து கோவிந்து(Ramnath Kovind) எதிர்க்கட்சிகள் அணியின்  மீரா குமார்(Meira Kumar) ஆகிய இருவர் மட்டுமே! கட்சி வாக்குகள் அடிப்படையில் பா.ச.க.வின் வெற்றி வாய்ப்பு என்பது எழுதப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டிலும்  பீகாரிலும் மனச்சான்றுக்கு வேலை கொடுத்தால், முடிவு மாறலாம்.
  மண்டியிட்டுத் தாள்பணிந்து அணித்தலைவர்கள் பா.ச.க.வின் காலில் வீழ்ந்து கிடப்பதை விரும்பாதச் சில நா.உ. அல்லது ச.உ. இருக்கலாம். வேறுவழியின்றி அவர்கள் பாசகவை ஆதரித்தாலும்  தன்மானத்தைப் பறிகொடுத்த ஆதரவு என்பதால் உள்ளத்தில் குமைந்து கிடப்போர் சிலர் உள்ளனர். இத்தேர்தலில் வாக்கு அளித்த விவரத்தைக் காண முடியாது என்பதாலும், கட்சிக் கொறடாக்களுக்கு வேலை இல்லை என்பதாலும், தத்தம் தலைவர் கருத்துகளுக்கு மாறாக மனச்சான்றுடன் செயல்பட நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.
  இதனால் முடிவு மாறினாலும் நன்று. அல்லது சில  வாக்குகளேனும் அணி மாறி வீழ்ந்திருந்தாலும் பாசகவின் இறுமாப்பிற்குச் சாவு மணி அடிக்கத் தொடங்குவதாய் அஃது அமையும்.
  மீராகுமாரின் வெற்றி என்பது பா.ச.க.வினருக்குக் கடிவாளம் இடுவதாக அமையும். வெற்றி வாய்ப்பு பெறாவிட்டாலும் கூடுதல் வாக்குகள் மீராகுமாருக்குக் கிடைப்பது, தலைவர்களை மண்டியிடச் செய்வதால் கட்சியைக் கைப்பற்ற இயலாது; குறுக்குவழியில் ஆட்சியில் அமர முடியாது என உணர்த்துவனவாகவும் அமையும்.
 தங்கள் உரிமைகள் மிதிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும் அதிமுகவினர் உணர்ந் திருப்பர். வாக்களிப்பைப் புறக்கணிப்பது என்பது வெளிப்படையாக உள்ளக்கிடக்கையைக்காட்டிக் கொடுக்கும் என்பதால் அச்சம் வரலாம். ஆனால், பா.ச.க.விற்கு எதிராக அளிக்கும் வாக்கு ஆணவ உச்சியில் இருந்துகொண்டு ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி என்பனபோல் நாட்டை இடுகாட்டிற்கு அழைத்துச் செல்லும் போக்கிற்குத் தமிழக மக்கள் முடிவோலை எழுதுவதாக அமையும் என்பதை உணர வேண்டுகிறோம்.
 மோசமானவர்களில் குறைந்த மோசமானவர் என்பதைத் தெரிவு செய்வதுதான் இந்தியத் தேர்தல். ஆளுங்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதால்,  நாட்டை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்குத்தான் அது துணை புரியும். எனவே, அதிகாரம் கைகளில் உள்ளமையால்,  அசைக்கமுடியாது என இறுமாந்நு கொண்டுள்ள பா.ச.க.வை அசைக்கும் ஆற்றல் அதிமுகவின்  சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அழிவுப்பாதை நோக்கிச் செலுத்தப்படும் இந்தியாவைக் காப்பாற்ற அதிமுகவின் மக்கள் சார்பாளர்கள் முன்வருவார்களாக!
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.(திருவள்ளுவர்,திருக்குறள் 676)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை ;  அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017

Followers

Blog Archive