சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4)

வடிவச் சுருக்கத்திற்கு வழிகாட்டி
  பல நேர்வுகளில் கலைச் சொற்கள் சுருக்கமாகவும் செறிவாகவும்  இல்லாமல் தொடராக அமைந்து உள்ளன. எனவே, எளிமை கருதிப் பலரும் அயற்சொல் பயன்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சொல் விளக்கம் என்பது வேறு; கலைச் சொல் என்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டு கலைச்சொல் காணுநர் சுருங்கிய கலைச் சொல் வடிவங்களைக்காண்பதில் நாட்டம் செலுத்த  இவ்வாய்வு உதவும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் நடைக்கு உந்துதல்
  தமிழ்ப்பயன்பாட்டில் ஆர்வம் உள்ளதாக வெளிப்படுத்திக் கொள்ளும் பலர், எளிமை கருதிப் பிற சொற்களைப் பயன்படுத்துவதே சரி எனத் தங்களையும் குழப்பிக்கொண்டு பிறரையும் குழப்புகின்றனர். இத்தகையோர் போக்குதான் தமிழ்ப்பகைவர்கள் போக்கைவிடக் கொடுமையாக உள்ளது. தமிழ் மக்கள் தாங்கள் கண்டுபிடிக்காத  பொருள்களுக்கெல்லாம் தமிழில் பெயர் சூட்டுவது வீண் வேலை என்று பரப்புகின்ற இவர்களால் தமிழ்ச் சொல் பயன்பாடு குறைகின்றது. அத்தகையோரும் தமிழ்ச் சொல்வளத்தை உணருவதன் மூலம் தமிழ்ப் பயன்பாட்டில் நடைபோட உந்துதலாய்  இவ்வாய்வு அமையும் என எதிர் நோக்குகின்றேன்.
தமிழால் சொல்ல  இயலும்! தமிழில் சொல்ல இயலும்!
  இன்னும் சிலர் பெயர்ச்சொற்கள் அயல் மொழியில்  இருந்தால் என்ன? சுருக்கக்  குறியீடுகள் ஆங்கிலத்தில் இருந்தால் என்ன? அனைவருக்கும் அப்பொழுதுதானே புரியும் என்ற தவறான எண்ணத்தில் அயற்சொற்கள் பயன்பாட்டைப் பெருக்குகின்றனர். சீன நாட்டில் சுருக்கக்  குறியீடுகளும் சீன மொழியில்தான் குறிக்கப்பெற வேண்டும் எனச் சட்டம் இயற்றித் தங்கள் மொழியைக் காக்கின்றனர். நம் நாட்டிலும் அத்தகைய நிலை வரவேண்டும். ஆனால், இது போன்ற கருத்துகளை ஆராயும் தளமாக  இவ்வாய்வு  வரம்பு அமையவில்லை. எனினும்,  விலை மதிப்பில்லாத் தமிழ்ச் சொற்செல்வங்கள் நம்மிடையே  இருக்கையில் நம்மைவிட வறியவரிடம் ஏன் கடன் வாங்க வேண்டும் என்ற உணர்வை இவ்வாய்வு ஏற்படுத்தும்; எல்லாம் தமிழால் சொல்ல  இயலும்! தமிழில் சொல்ல இயலும்! என்ற நம்பிக்கையை  இவ்வாய்வு ஏற்படுத்தும்.
கலைச் சொல் வள விரிவிற்குத் துணைநிற்கும்
  முழுமையான கலைச் சொற்களாக அமையும் சங்கச் சொற்களை  எடுத்துரைப்பதுடன் இவ்வாய்வு முற்றுப்பெறவில்லை; அதற்கும் மேலாகச் சங்கச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு  கலைச் சொல் வளத்தை விரிவு படுத்த இயலும் என்பதை உணர்த்தும் வகையில் அவற்றை முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ ஒரு பகுதியாகவோ கொண்டு அமையும் கலைச்சொற்களையும்  கண்டறிந்து பழஞ்சொல் மீட்டுருவாக்கம் பல வகைகளிலும் கலைச் சொல் வள விரிவிற்குத் துணைநிற்கும் என்பதை உணர்த்துகிறது. எனவே, இவ்வாய்வு மிகுதியான சொற்கள் நம்மிடையே பயணம் செய்ய வழிவகுத்துள்ளதாகக் கருத வேண்டும்.
இலக்கியச் சொற்கள் கலைச்சொற்களாக மலரும் வாய்ப்பு
  இவ்வாய்வு மூலம் புதிய கலைச்சொற்களைமட்டுமே கண்டறிய வேண்டும் என்று எண்ணவில்லை.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சொற்களும் நடைமுறையில் உள்ள கலைச்சொற்களும் சங்கக்காலத்திலிருந்தே பயன்பாட்டில் உள்ளவைதாம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அவையும் குறிக்கப்பெற்றுள்ளன.  பல்வேறு துறைகளிலும் உள்ள கலைச்சொற்கள் அடிப்படையில் இலக்கியச் சொற்கள் இன்றைய கலைச்சொற்களாக மலரும் வாய்ப்பை இவ்வாய்வு வெளிப்படுத்தி உள்ளது. எனினும் நமது கலைச்சொற்களின் அகராதிகளில் அடங்காத பல கலைச்சொற்களும் உள்ளன; அவற்றையும் தமிழில் கொணர வேண்டும் என்ற எண்ணம் இருப்போருக்கு மேலும் பல கலைச்சொற்களைச் சங்கச் சொற்களிலிருந்து கண்டறிய இயலும். எனவே, அத்தகைய எண்ணம் கொண்டோர் இவ்வாய்வின் தொடர்ச்சியாகச் சங்கச் சொற்களில் இருந்து மேலும் பல புதிய கலைச் சொற்களை அறிமுகப்படுத்த முன்வரவேண்டும்.
சொற்கருவூலத்திற்குத் துணை சங்கச்சொற்களே!
  தமிழ்ச் சொல்வள வங்கிக்குப் பெரிதும் துணை நிற்பன சங்க இலக்கியச் சொற்களாகும். நாம் புதுச் சொல் புனையும் பொழுது நடைமுறைச் சொற்கள் கை கொடுக்காத பொழுது சங்க இலக்கியச் சொற்கள் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்வதே எளிய சொல்லாக்கப் பணியாக அமையும்.
அடையாளம் காட்டுதல்
  இதுவரை சங்கக் கடலில் மூழ்கிப் பல்வகை முத்துகள் எடுக்கப்பட்டுள்ளன. அள்ள அள்ளக் குறையாத வற்றாக் கருவூலம்தான் சங்க இலக்கியம். எனினும் சங்கக் கடலில் மூழ்கி கலைச் சொல் முத்துகளைக் கண்டெடுத்தோர் யாருமிலர். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சங்க இலக்கியச் சொற்களை அடிப்படையாகக் கொண்ட புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளனவே தவிர, முழுமையாய்ப் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கினார் யாருமிலர். சங்க இலக்கியத்திலிருந்து வேளாணியல் சொற்கள், வானியல் சொற்கள், ஆட்சியியல் சொற்கள், மருத்துவ இயல் சொற்கள், கணக்கியல் சொற்கள், பிற அறிவியல் சொற்கள் எனப் பல்வகைக் கலைச் சொற்களை அடையாளம் காணுவதே இவ்வாய்வுத் திட்டத்தின் நோக்கமாகும். இம் முயற்சியில் நூறு சொற்கள் கலைச் சொற்களாகக் கண்டறியப்பட்டாலும் அல்லது கலைச் சொல் வடிவாக்கத்திற்கு உரிய அடிப்படைச் சொற்களாகக் கண்டறியப்பட்டாலும் இதன் மூலம் பல நூறு சொற்களை உருவாக்க இயலும். எனவே, பணியின் அளவைப் பார்க்காமல் அருமையை நோக்கும் பொழுது சங்க இலக்கியச் சொற்களிலிருந்து கலைச் சொற்களை அடையாளம் காட்டும் பணி என்பது மிகவும் இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாகின்றது. அந்த வகையில் இன்றைய தமிழ்க்கலைச்சொல் கருவூலத்தில் சங்கச்சொற்கருவூலத்திலிருந்து நன்முத்துகள் சில,  அனைவரும்  ஏற்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. உரைத்துப் பார்ப்பின் தமிழின் உயர்வு புரியும். மேலும் இப்பணியில் ஈடுபடுவதற்கான இன்றியமையாமை புரியும். அத்தகைய அரும்பணியில் சிறுபணியைத் தொடங்கி வைக்கும் நல்வாய்ப்பு கிட்டிய மகிழ்ச்சியில் நன்றி கலந்த மகிழ்ச்சியுடன் ஆய்வுத்தளத்திற்கு அழைக்கின்றேன்.
இலக்குவனார் திருவள்ளுவன்