Tuesday, April 3, 2018

மக்கள் மனங்களை எடப்பாடியார் புரிந்து கொள்ள வேண்டும்! - இலக்குவனார் திருவள்ளுவன்

மக்கள் மனங்களை எடப்பாடியார் புரிந்து  கொள்ள  வேண்டும்!
-       இலக்குவனார் திருவள்ளுவன்


  இன்று கலையும், நாளை கலையும் என்னும் வாதங்களைத் தவிடு பொடியாக்கி ஓராண்டினைக் கடந்து ஆட்சி புரிகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரே நம்புவது போல் இஃது ஓர் அருவினைதான்; ஐயமில்லை, ஆனால், பா.ச.க.வின் அரவணைப்பால்தான் இது முடிகின்றது என்பதும் அவர் அறியாததல்ல. ஆனால், அவர் மறந்த ஒன்று உள்ளது, அவரைச் சசிகலாவின் சார்பாளர் என்ற  முறையில் முதலில் ஏற்றதால்தான் அவரால்  நிலைக்க முடிந்துள்ளது.

  எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி  கூவத்தூர் முகாம் தந்த பரிசு. பரிசிற்கான விலையைக்  கொடுத்தவர்கள் சசிகலா அணியினர். இதனை அவர் மறக்கக்கூடாது என எண்ணினாலும் வழக்கு மிரட்டல்கள் அதனை ஒதுக்கி வைத்திருக்கும் என நம்புகிறோம்.

  நாளைய பலாக்காயைவிட இன்றைய கலாக்காய் மேல் என்பதே ஆட்சியாளர்கள் நம்பிக்கை; இருக்கும் வரை பதவி நலன்களையும் வளங்களையும் துய்த்து விட்டால் போதும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதே அவர்கள் எண்ணம். ஆனால், இன்றைய சிறு பயனுக்காக நாளைய பெருங்கேட்டிற்குள் விழுந்து விடக்கூடாது.

  தொடக்கத்தில் ஊடகத்தினரின் தவறான கணிப்புச் செய்திகளாலும் சில எதிர்க்கட்சிகளின் தவறான பரப்புரைகளாலும் - எந்தச் சசிகலாவின் காலில் விழுந்து மன்றாடி ஆட்சியையும் கட்சியையும் ஒப்படைத்தார்களோ அந்தச் - சசிகலாவிற்கு எதிராகத் திரும்பினர். அப்பொழுதே கட்சியே  பெரிது என எண்ணியிருந்தார்கள் என்றால் அ.தி.மு.க. சிக்கல்களைச் சந்தித்திருக்காது. 

  சசிகலா குடும்பத்தினரால் கட்சிப் பொறுப்பாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும்  நன்மையுற்றனர். அதுபோல் அதிகாரிகளில் ஒரு பகுதியினரும் ஆதாயம்  அடைந்தனர், அவர்களில்  பெரும்பகுதியினர் இன்று அவர் பக்கம் உள்ளனர். சசிகலா குடும்பத்தினர் இலவசக் கல்வி, இலவசமருத்துவம் எனப் பல நல்ல திட்டங்களைச்   செயலாற்றியிருக்க முடியும். அப்படிப்பட்ட அறவாணர்களாக விளங்க வில்லை. எனினும்,  தங்கள் தலைவி செயலலிதாவின் பின்னால் சசிகலா இருந்தைமயால், அதனால் தன் குடும்ப வாழ்வைத் தொலைத்தமையால், மக்கள் அவரின் நிழலாகக் கருதி இவர்பக்கம் நிற்கின்றனர்.

  தினகரனின் இடைத்தேர்தல் வெற்றியும் அவர் கூடும் கூட்டத்திற்கு வரும் மக்கள் திரளும் இதை மெய்ப்பிக்கின்றன. காவிரிக்கான உண்ணாநோன்புப் போராட்டத்திலும்  பழனிச்சாமி-பன்னீர் அணியில் நூற்றுக்கணக்கில்தான் பங்கேற்றுள்ளனர். ஆனால், தினகரனின் அ.ம.மு.க.  இணைந்து நடத்திய வானூர்தி மறியல் போராட்டத்தில் பத்தாயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். எனவே மக்கள் யார் பக்கம் என்பதைப் பழனிச்சாமி உணர வேண்டும். இனியும் பாசகவின் நிழல் ஆட்சியை நடத்திப் பெருமைகாணக்கூடாது. மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஆட்சி நடத்துவதே சிறந்தது.

  மக்கள் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் திட்டங்கைளச் செயற்படுத்தல், சமற்கிருத இந்தித் திணிப்புகள், மத வெறிச் செயல்பாடுகள் போன்ற பலவற்றால் பாசகவின் மீது  வெறுப்பு கூடி வருவதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள், ஆனால், அந்த  வெறுப்பு ஆட்சியாளர்கள் மீது திரும்பி வருவதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

  நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுக்கப்படக்கூடாது என்பதற்காக நடத்திய காவிரி எதிர்ப்பு நாடகம், பாசகவின் இசைவு  பெற்றபின்னர் உண்ணா  நோன்பில் கலநது  கொண்டமை  போன்ற செய்திகள்,  பா.ச.க.வின் மீதான மக்கள் வெறுப்பைப் பெருக்கி வருகின்றன என்பதை அவர்கள் உணர வேண்டும்.செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் (திருக்குறள் 569)


  துன்பம் வரும் பொழுது அதிலிருந்து காத்துக் கொள்ளாத ஆட்சியாளன் அத் துன்பத்தால் அழிந்து போவான் என்கிறார் திருவள்ளுவர். எனவே,  இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழினப் பகைக்கட்சியான பா...வின் அடிவருடியாக இருந்து தன்னையும் சார்ந்தவர்களையும் கட்சியையும் நாட்டையும் அழிவுப் பாதைக்கு இட்டுச்  செல்வதை நிறுத்த  வேண்டும். நிலைத்த நற்பெயர் கிடைக்கும் வண்ணம் பா...வின் கேடு தரும் திட்டங்களுக்கு எதிராக நின்று நாட்டைக் காப்பாற்ற வேண்டும். ஆளுங்கட்சியா எதிர்க்கட்சியா என்பது குறித்துக் கவலைப்படாமல் ஒற்றை .தி.மு.. குறித்து மட்டுமே செயல்பட வேண்டும்.

மக்களின் மனங்களைப் புரிந்து கொண்டு, தம் நிலைப்பாட்டை மாற்றிக்  கொண்டு மக்கள் உள்ளத்தில் நிலையான இடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும்,

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இதழுரை :  அகரமுதலNo comments:

Post a Comment

Followers

Blog Archive