எழுவர் விடுதலை:  முன்விடுதலை என்பதுசட்டப்படியானதே!

எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்!

  இராசீவு கொலை வழக்கில் சிக்கிய எழுவரை விடுதலை செய்வது அநீதியானது;  உலகெங்கும் நடைமுறையில் இல்லாதது என்பனபோல் சிலர் கூக்குரலிடுகின்றனர். நீதி மன்றத்திற்குத் தண்டிக்கும் அதிகாரம்மட்டும்தான் உள்ளது. ஒரு நீதிமன்றம் தண்டித்த பின்னர் அதற்கு வேலையில்லை. மேல் முறையீட்டு நீதி மன்றம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். ஆனால், தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது.
  இறுதிநிலையில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் வழக்குடனோவாழ்க்கையுடனோ நீதிமன்றத்தின் தொடர்பு அற்று விடுகிறதுஅதன் பின்னர் தண்டனைவாசி குறித்த கருத்து கூற நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.
உலகெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனைக் குறைப்புப் பிரிவு(remission section)என ஒன்று இயங்குகிறதுஎனவேதண்டனைக் குறைப்புஎன்பது உலக நடைமுறை.
  குற்ற வழக்குமுறைச் சட்டம் 432. 433 ஆகியவற்றின் கீழ் இந்தியாவில் இவை செயல்படுகின்றன. தண்டனைவாசிகளின் தண்டனைக்காலத்தைக் கழித்துக் குறைப்பதும் மாற்றிக் குறைப்பதும் (Section 432 Cr.PC for remission and Section 433 Cr.PC for commutation) இப்பிரிவுகளின்வேலை. எனவே, தண்டனைக் குறைப்புஎன்பது சிறைத்துறையின் வேலைஇதில் நீதிமன்றங்கள் தலையிடவேலையில்லை. சிறைத்துறையின் பரிந்துரைகளுக்கிணங்க மாநில அரசுகள்  ஆணையிடுகின்றன.
  அதே நேரம் மத்தியஅரசு சட்டங்களின் தண்டனை பெற்றவர்களின் தண்டனைக் குறைப்பு மத்திய அரசிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். இதற்கிணங்கவே மேனாள் முதல்வர் செயலலிதா 2015 இல் நடந்து கொண்டார். ஆனால், அப்பொழுதும் மத்திய அரசிற்கு மறுக்கும் உரிமை யில்லை. தன்கருத்தினத் தெரிவிக்கலாம் அவ்வளவுதான். இதை ஏற்பதும் மறுப்பதும் மாநில அரசிற்குரியது.
எனவேதான், மேனாள் முதல்வர் செயலலிதா
“மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
என அறிவித்தார்.
  இவ்வாறான தண்டைனக் குறைப்பு என்பது உலகெங்கும் நடைமுறையாகஇருக்கும்பொழுது இந்தியாவில் அதற்கு எதிராகக் குரல்  –அதுவும் குறிப்பிட்டவழக்கு தொடர்பில் மட்டும் எதிர்க்குரல்-எழுப்பப்படுவது முறையல்ல.தண்டனை முறைகளின் நோக்கம் குற்றங்களை ஒழிப்பதே தவிர குற்றவாளிகளை ஒழிப்பதல்ல. எனவேதான், ‘பல்லுக்குப்பல்’ என்பதுபோன்ற பழிக்குப்பழி எண்ண அடிப்படையில் நம் சட்டங்கள் இயற்றப்படவில்லை.
  ஆனால் எழுவர் விடுதலையை எதிர்ப்போர் இராசீவுகாந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் உணர்வுகளுக்கு மாறானது இவ்விடுதலை என்று எழுதுகிறார்கள் அல்லது பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் இக்குடும்பத்தினரின் மறுவாழ்விற்கு ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்கள்.
  கொல்லப்பட்ட இராசீவின் குடும்பத்தினர் விடுதலையை மறுக்கிறார்களாஏற்கிறார்களா என்பது பொருட்டே அல்ல. குற்றம் செய்ததாகக் கருதி அளவிற்கு மீறிய தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. பின்னர் அவர்களின் கருத்திற்குச் சட்டபடியான தேவையே இல்லை.
  நான் சிறைத்துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளேன். முன்விடுதலைக்காக உசாவல்-விசாரணை மேற்கொள்ளும்பொழுது கொலையுண்டவரின் குடும்பத்தினரையும் உசாவுவேன். பெரும்பாலோர் எதிர்ப்பே தெரிவிப்பர். குறிப்பாகப் பெண்கள், “என் தாலியறுத்தவன் வருகின்றான் என்றால் அவன் பெஞ்சாதியும் தாலி அறுக்க வேண்டும். விடமாட்டோம்” என்பார்கள். நான், “உங்கள் எதிர்ப்பை எழுதிக் கொடுங்கள்” என்று எழுதி வாங்கிக் கொள்வேன். பின்னர் அவர்களிடம், “தண்டனையில் உள்ளவரை விடுதலை செய்யும் காலம் வந்து விட்டது. இனியும் அரசு அவர்களுக்குச் சிறையில் செலவு செய்யத் தேவையில்லை. ஆனால், விடுதலையில் வந்த பின்னர் அவருக்கு ஏதும் இயல்பாகவே தீங்கு நேர்ந்தது என்றால், நீங்கள்தான் பொறுப்பு. ஏதும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டா என்றால் அவர்களை விட்டு விலகியிருங்கள்” என்பேன். அவர்களும் எழுதிக் கொடுத்து மாட்டிக்கொண்டோமே என அமைதியாக இருப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதும் அரசு உதவி தேவை எனில் ஆவன செய்வேன். அவர்களும் அமைதியாக இருந்து விடுவார்கள்.
  இவ்வாறு, தண்டனைக்குறைப்பு முறையில் பல்லாயிரவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்; விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறிருக்க இவ்வெழுவருக்கு மட்டும் மறுக்கப்படுவது அநீதியல்லவா? சட்டத்தின் முன் யாவரும் சமம் என்று கூறிக்கொண்டு கொல்லப்பட்டவர் முன்னாள் தலைமையமைச்சர் எனக் கூறிப் பாகுபாடு காட்டுவதும் அநீதியல்லவா?
  அடுத்து ஆளுநர் கருத்துபற்றிப் பலரும் கூறுகின்றனர். குடியரசுத் தலைவர் மத்தியஅரசின் கருத்தையும் ஆளுநர் மாநில அரசின் கருத்தையும்தான் ஏற்கின்றனர். நடைமுறையில் அவர்களுக்கென்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஒரு வேளை அவர்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் விளக்கம் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளலாம். அல்லது கலந்துபேசி நிபந்தனைகளை விதிக்கலாம். ஒரு முறை மறுத்தாலும் மீண்டும் அமைச்சரவை அனுப்பும் பொழுது மீண்டும் மறுக்காமல் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.  தமிழக ஆளுநர் தன்இயல்பில்செயல்படுவதால்  மாற்றிச் சிந்திக்கலாம்ஆனால் அது மக்களாட்சிக்குஏற்றதாக அமையாது என்பதை உணரவேண்டும்.
  எனவே, சட்டப்படியான, வாலயமான விடுதலையைக் காலங்கடத்தியதேதவறு. மேலும் காலங்கடத்தாமல் ஆளுநர் விரைந்து ஒப்புதல் தெரிவித்து எழுவரையும் விடுதலை செய்ய வழி விட வேண்டும். ஒருவேளை மத்திய அரசின் மறைமுகக் குறுக்கீடுகளால் காலத்தாழ்ச்சி நேரும் எனில், நாம் முன்னேர குறிப்பிட்டாற்போல் உடனடியாக எழுவரையும் காப்பு விடுப்பில் விடுதலை செய்து முறையான விடுதலைக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  எழுவரையும் விடுவித்து அறநெறி போற்றுக!
  எழுவரும் நன்னெறியில் நூறாண்டு அமைதியாகவும்இன்பமாகவும்வாழ்க!
-இலக்குவனார் திருவள்ளுவன்
தினசரி மின்னிதழ்
(படம்: அ.மு.)