திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்!
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
என்கிறார் பாரதியார்.
“வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே”
என்கிறார் பாரதிதாசன்.
ஆனால், இன்றைக்கு வையகப் புகழுக்குக் காரணமான வள்ளுவரை இழிவுபடுத்திச் சிலர் தமிழ்நாட்டை நாணிக் குனிய வைக்கின்றனர். திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசுவதாலோ சாதி, சமய அடையாளங்களை அவர் மீது திணிப்பதாலோ களங்கம் திருவள்ளுவருக்கு இல்லை. ஈனச் செயல் புரிவோருக்குத்தான் இழிபிறவியர் என்ற களங்கம். ஆதலின் அத்தகையோர் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் திருந்தாவிட்டால் இத்தகையோரை அரசு தண்டிக்க வேண்டும்.
திருவள்ளுவரை நாயனார் என்று குறிப்பிடுவதாலும் திருவள்ளுவர் ‘எண்குணத்தான்’ என்றும் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்றும் குறிப்பிடுவதாலும் அவரைச் சைவர் என்பர் அச்சமயத்தார். ‘தாமரைக்கண்ணான் உலகு’ எனத் திருவள்ளுவர் குறிப்பிடுவதால் அ்வரை வைணவர் என்பர் அச்சமயத்தார். ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று திருக்குறளில் இடம் பெறுவதால் திருவள்ளுவரைப் பெளத்தர் என்றும் சமணர் என்றும் அவ்விரு சமயத்தார் குறிப்பிடுவர். திருவள்ளுவர் ‘இன்னா செய்யாமை’ பற்றிக் கூறுவதால் அவரைக் கிறித்துவர் என்பர் அச்சமயத்தார். ஆனால் உண்மையில் திருவள்ளுவர் எச்சமயத்தையும் சேர்ந்தவர் அல்லர்.
சமயத்தலைவர்கள் ஒரு சமயத்தார் கூறிய கருத்தை மற்றவர் மறுப்பர். அவர்கள் அனைவரும் ஏற்கும்படியான பொதுநெறிகளை வழங்கியவர் திருவள்ளுவர். எனவேதான்,
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி
என்கிறார் கல்லாடர்.
சமயத்தலைவர்கள் வழியில் சமயக் கருத்துகளைக் கூறாமல் உலகிலுள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையில் பொதுவான மெய்ப்பொருள் வழங்கியவர் திருவள்ளுவர். இதைத்தான்,
சமயக் கணக்கர் மதி வழி கூறாது
 உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன்
எனக் கல்லாடம் கூறுகிறது.
திருவள்ளுவர் காலத்தில் இந்து மதம் என ஒன்று இல்லை. என்றாலும் அப்பொழுதிருந்த பல்வேறு சமயக் கருத்துகளையும் சாராமல் மக்களுக்கான பொதுவான உயர் நெறியை வழங்கியவர் திருவள்ளுவர்.
திருவள்ளுவர் காலத்தில் இல்லாத இந்து மதத்தைச் சேர்ந்தவராகத் திருவள்ளுவரைக் கூறுவது வரலாற்றுப்பிழை மட்டுமல்ல; மக்களை ஏமாற்றுவதும் ஆகும்.
இந்து மதம் என்ற ஒன்றை உருவாக்கியதும் அதுவரை இருந்த மதத்தை எல்லாம் இந்துமதத்தின் பிரிவுகளாகக் காட்டி விட்டனர். சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்), காளியம் (சாத்தம்), கதிரவம் (செளரம்), ஆனைமுகவம் (காணபத்தியம்), குமரம் (கெளமாரம்) என்னும் ஆறுவகையாக இந்து சமயக் கொள்கையைக் கூறுகின்றனர்.
 அடைப்பிலுள்ள மூலப்பெயர்களே இந்து மதம் தமிழர்க்குரியது அல்ல என்பதை உணர்த்துகிறதுஇடைக்காலத்தில் வந்த ஆனைமுகவம் எங்ஙனம் திருவள்ளுவர் காலத்தில் இருந்திருக்க முடியும்?
ஆசீவகம் என்பது முதலில் இருந்த தொன்மையான மதம் என்பர். இதனையும் இந்து மதத்தின் உட்பிரிவாகக் காட்டுகின்றனர். அதுபோல் ஆரிய மதத்திற்கு எதிரான புத்தத்தையும் சமணத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளாகச் சேர்த்துள்ளனர். ஆகவே, இந்து மதம் என்ற உருவாக்கத்திலேயே பித்தலாட்டம் உள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.
இந்து மதம் என்பது ஆரிய வேதங்களையும் பகவத்து கீதையையும் அடிப்படையாகக் கொண்டது என்கின்றனர். தமிழர் நெறிக்கு மாறான இவற்றை எப்படித் தமிழர் சமயம் என்று சொல்ல முடியும்ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவர் எங்ஙனம் இச்சமயத்தவராக இருக்க முடியும்?
திருக்குறளில் இந்து மதக் கடவுளர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன எனவே, அது இந்து மதநூல் என்றும் தவறாக விளக்குகின்றனர் சிலர்.
இறை மறுப்பர்களும் சிலவற்றை விளக்கும் பொழுது தங்களுக்கு உடன்படாத ஆனால், மக்களிடையே நிலவுகின்ற சில கருத்துகளை எடுத்துக்காட்டாகக் கூறுவர். சான்றாகப் பேரறிஞர் அண்ணா இறை மறுப்புக் கொள்கையர். ஆனால், பலப் புராணக் கதைகளை எடுத்துக்காட்டாகப் பேசியுள்ளார். அதுபோல் திருவள்ளுவரும் கையாண்டுள்ளார்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
(திருக்குறள், நீத்தார் பெருமை, 25)
என்கிறார் திருவள்ளுவர்.
இக்குறளில் இந்துக்கடவுள் இந்திரனைப்பற்றித் திருவள்ளுவர் கூறியுள்ளார். எனவே, அவர் இந்து எனச் சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
மணக்குடவரின் உரை அடிப்படையில் திருவள்ளுவர் குறிப்பிடும் இந்திரன் புலனடக்கம் உள்ளவன் என்பதால், சமண இந்திரன் என்கின்றனர் சமணர்கள். முற்றும் துறந்தவர்களுக்குரிய ஆற்றலை இழந்த இந்து மத இந்திரன் அல்லன் என்கின்றனர் இவர்கள்.
இதில் குறிப்பிடப்படும் இந்திரன் புத்த இந்திரன் என்கின்றனர் புத்த சமயத்தினர். புத்த சமயத்தார் நம்பும் இந்திரன் கதை ஒன்றும் உண்டு. சட்ட அறிஞர் திருக்குறள் ஆய்வாளர் கு.ச. ஆனந்தன், “இந்து புராண இந்திரன் காமவெறி கொண்டவன். புலனடக்கம் அற்றவன். ஐந்தவித்தான் ஆற்றலுக்குச் சான்றாவதற்கு, எவ்வகையாலேனும் பொருந்தாதவன். ஐம்பொறிப் புலன்களை அடக்கிப் பக்குவப்படுத்திய ஞானியின் ஆற்றலுக்கு வானத்தில் உள்ளவர்களின் நாயகனான, (புத்த) இந்திரனே சான்று.” எனக் கூறியுள்ளார். அப்படிப் பார்த்தால் இந்துக்கடவுளைத் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை என்றாகிறது. இந்துக் கடவுளைக் குறிப்பிட்டதாகக் கருதினாலும் பெருமைப்படுத்தும் வகையில் கூறவில்லை.
இந்திரன், இந்திரப் பதவிக்காகத் தவம் இருந்தவர்களின் தவத்தைக் கலைக்க, திலோத்தமை முதலான அழகிய வானவர் பெண்களை அனுப்பி வைத்தவன். இதனால் கெளசிக முனிவன், திலோத்தமையிடம் மயங்கித் தவத்தைக் கலைத்து அவளுடன் இன்பத்தில் ஈடுபட்டான். பிற முனிவர்களையும் இவ்வாறே தவத்திலிருந்து விலகச் செய்தான் இந்திரன். இக்கதை உரையாசிரியர் காளிங்கர் கூறும் எடுத்துக்காட்டு. இந்திரனின் பதவியைக் காக்கும் வல்லமையாக அவர் கூறுகிறார். இங்கே ஐம்புலன் அடக்கமில்லாத இந்திரனின் ஒழுக்கக்கேடுதான் எதிர்மறை உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
பரிமேலழகர் கூறும் இந்திரன், கெளதமரின் மனைவி அகலிகையின் அழகில் மயங்கி அவளுடன் கூடினவன். இதனால், வெகுண்டெழுந்த கெளதமர், “எந்தப் பெண் குறியில் நீ ஆசைப்பட்டு இங்கு வந்தாயோ, அந்த உறுப்பு உன் உடலெங்கும் ஆயிரக்கணக்கில் உருவாகட்டும்” எனச் சாவித்தவர்(சபித்தவர்). அவ்வாறே ஆனான் இந்திரன்; இதனால்தான் ஆயிரங்கண்ணனாகப் பெயர் பெற்றான். இக்கதையைப் பரிமேலழகர் கூறியிருந்தாலும் இந்திரனாக அவர் முனிவரைக் கூறவில்லை. இந்திரனின் ஒழுக்கக் கேட்டை மறைப்பதற்காக இந்து மதத்தினர் கெளதம முனிவரின் புலனடக்க ஆற்றலை எடுத்துக்காட்டாகக் கூறினார் என விளக்குகின்றனர்.
மூன்றாவதான இந்திரனாக மகாபாரதத்தில் வருபவனைக் கூறுகின்றனர். நகுடன் என்பவன் நூறு குதிரை வேள்வி செய்து இந்திரப்பதவி பெற்றான். உடனே இந்திராணியை நாடிச் சென்றான். ஏழு முனிவர்கள் சுமந்து கொண்டுவரும் பல்லக்கில் ஏறி நகுடன் அவளிடம் வரவேண்டும் என நகுடனிடம் இந்திராணி கட்டுத்தளை- நிபந்தனை விதித்தாள்.
அவனும், அகத்தியர் முதலான ஏழு முனிவர்களைத் தூக்க வைத்து அப்பல்லக்கில் வந்தான். இந்திராணியை விரைவில் அடைய வேண்டும் என்னும் காமவெறியில், பல்லக்கு தூக்கி வந்த அகத்தியரின்  தலையை உதைத்தான். “ஓடு! ஓடு!” என்று விரைவாகச் செல்லக் கட்டளையிட்டான். இதனால்  அகத்தியர் வெகுண்டு நகுடன் பாம்பாக மாறுமாறு சாவுரை – சாபம் -இட்டார். நகுடன் பாம்பாய் மாறியதால் இந்திரப் பதவியை இழந்தான்.
நாம் அறிவுரை கூறும் பொழுது இன்னாரைப்போல் கெட்டழியாதே எனக் கூறுவதுண்டு. அதுபோல் திருவள்ளுவர், ஐம்புலனை அடக்காத இந்திரனைப்போல் கெட்டழியாதே என்கிறார். எனவே, இந்து மதத்தை அவர் போற்றவில்லை.
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
(திருக்குறள், புணர்ச்சி மகிழ்தல், 1103)
எனத் திருவள்ளுவர் திருமால் உலகைக் கூறுவதால் அவரை வைணவர் என்கின்றனர்.
குறள்நெறி அறிஞர் பேரா.சி.இலக்குவனார் இதனைப் பின்வரும் வகையில் மறுக்கிறார்.
“தாமரைக் கண்ணான் உலகு என்று இங்குக் கூறப்பட்டுள்ளமையால், திருவள்ளுவர் வைணவச் சமயத்தைச் சார்ந்தவர் என்று சிலர் கூறுவர். அக்கூற்று பொருந்தாது. உவமைக்காக எடுத்தாளப்பட்டுள்ள ஒன்று என்பதனை அங்ஙனம் கூறுவோர் மறந்து விட்டனர். வைணவர்க்காக மட்டும் இது கூறப்படவில்லை. அன்றியும் திருமால் உலக இன்பம், பெண்ணின்பத்தைவிடச் சிறந்தது இல்லை என்று கூறுவது திருமாலைப் பழித்ததாகக் கருதப்படுமேயன்றிப் புகழ்ந்ததாகக் கருதுதல் கூடாது. ஆகவே, அவர் சமயக்கோட்பாட்டை மறுத்துள்ளதாகவே கருதுதல் வேண்டும். திருவள்ளுவர் சமயச் சார்பற்றவர் என்பதற்கு இதுவே சான்றாகும்.” என விளக்கியுள்ளதே ஏற்கும்படியாக உள்ளது.
 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.
(திருக்குறள், மடியின்மை,  610)
என்று திருவள்ளுவர் திருமாலின் வாமனத் தோற்றத்தைக் கூறுவதால் வைணவர் என்பர் சிலர்.
ஆனால் பேரா.சி.இலக்குவனார் இதனையும் மறுக்கிறார். “எல்லாம் வல்லவர் எனக் கூறப்படும் கடவுள்இவ்வுலகத்தைப் பெறமாற்றுருக் கொண்டு மன்னனிடம் சென்று வஞ்சனை புரிய வேண்டி இருந்தது. ஆனால், சோம்பலற்ற மன்னன், வஞ்சகச் செயலின்றி மாநில முழுவதையும் ஆளும் நிலையை எய்தலாம்.”  எனவே, “இக்குறட்பா மூலம் சோம்பலுற்ற தேவரின் சிறுமையைக் கூறுவதால் வைணவச்சிறப்பைக் கூறுவதாகக் கொள்ள இயலாது.” என்கிறார்.
இவ்வாறாக இந்துமதங்களில் இடம் பெறும் கடவுளர்களையும் நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டிற்காகத் திருவள்ளுவர் கூறுவதால் அவரை இந்து மதத்தவர் எனக் கூறல் இயலாது. எனவே, திருவள்ளுவர் படம், படிமம்(சிலை) முதலியவற்றில் காவி ஆடையும் பிற இந்து மத அடையாளங்களையும் அணிவிப்போர் செயல் குற்றச் செயலாகக் கருதப்பட வேண்டும். உலகிற்கே பொதுவான திருவள்ளுவரை இந்து மதச்சிறையில் அடைப்பவர்களைக் கொடுஞ்சிறையில் தள்ள வேண்டும்இல்லையேல் ஒவ்வொரு மதத்தவரும் இதுபோல் தத்தம் மத அடையாளங்களைத் திருவள்ளுவருக்கு வழங்குவர்.
மத வெறியை ஒடுக்குவீர்!
குறள் நெறியைப் போற்றுவீர்!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 10.11.2019