Showing posts with label தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம். Show all posts
Showing posts with label தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம். Show all posts

Wednesday, July 19, 2023

இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள்

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.தாலின், “தமிழ்நாடு சொல் அல்ல! தமிழரின் உயிர்!” என அருமையாகக் கூறியுள்ளார். பாராட்டுகள்! ஆனால் அந்த உயிர் குற்றுயிரும் குறையுயிருமாக உள்ள வேதனையை யாரும் உணரவில்லை.

தமிழரின் வாழ்க்கை மொழியாகத் தமிழில்லை. கல்வி மொழியாகவோ வழிபாட்டு மொழியாகவோ சடங்கு மொழியாகவோ வேலை வாய்ப்பு மொழியாகவோ ஆராய்ச்சி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ அன்றாடப் பயன்பாட்டு மொழியாகவோ இல்லாத போது, தமிழைத் தமிழரின் உயிராகத் தமிழரோ அரசோ கருதிச் செயற்படவில்லை என்பது மறுக்கவியலாத உண்மை.

ஒன்றிய அரசால் இந்தி, சமற்கிருதத் திணிப்புகளும் தமிழ்நாட்டு அரசால் ஆங்கிலத் திணிப்பும் நாளும் அரங்கேறிக் கொண்டுள்ளன. இப்பொழுது நாம் இந்தித்திணிப்பு குறித்துப் பார்க்கப் போகிறோம்.  

அவ்வப்பொழுது ஆளுங்கட்சித் தலைவர்களும் பிற கட்சித் தலைவர்களும் இயக்கங்களின் தலைவர்களும் “இந்தியை உள்ளே விட மாட்டோம்!”,  “இந்தியை இறுதி வரை எதிர்ப்போம்!”, “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!”,”இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது”,”இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!”,”எந்த எல்லைக்கும் சென்று இந்தித் திணிப்பை எதிர்ப்போம்!”, “தமிழைக் காக்க இந்தியை எதிர்த்து உயிரையும் கொடுப்போம்!”, “1000 பேர் உயிரைக் கொடுத்தாவது இந்தியை எதிர்ப்போம்!”, “கல்வி முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசு இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியைத் திணிப்பது நியாயமற்றது!”, “இந்தித் திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்போம்”, “ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தியை ஏற்றாலும் தமிழர்கள் எதிர்த்து நிற்போம்””இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தினால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும்”,”இந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழி என்பதை எல்லாத் தமிழரும் எதிர்ப்போம்”,”நாம் வாழ, நம் இனம் நிலைக்க, இந்தியை எதிர்ப்போம்!” என்று பலவாக அவ்வப்பொழுது இந்தி எதிர்ப்பு வீர உரைகளை உதிர்ப்பது  நம் தலைவர்களின் பொழுதுபோக்கு.

ஆனால் இந்தித் திணிப்பு என்பது எல்லா வகையிலும் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றது. இது குறித்துக் கவலைப்பட்டதாகவோ அறிந்ததாகவோ தெரியவில்லை. அறிந்திருந்தால் அல்லது உணர்ந்திருந்தால், வாழும் தமிழ் மாளும் நிலைக்குத் தள்ளப்படுவதை எதிர்க்காமல் இருப்பார்களா?

பல்வேறு நிலைகளில் இந்தித் திணிக்கப்பட்டாலும்   மழலைக் கல்வியிலேயே இந்தித் திணிக்கப்படுவது குறித்தே நாம் பெருங்கவலைப்பட வேண்டியுள்ளது. பதின்நிலைப்பள்ளிகளிலும் மத்தியக் கல்வி வாரியப் பள்ளிகளிலும் இள மழலை (L.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி கற்பிக்கப்படுகிறது. பள்ளிகளில் பாடமாக இந்தியைத் திணித்து விட்டு, அதனைக் கட்டாயமாகப் படிப்போர் பயில வேண்டும் என்று செய்துவிட்டு, உளவியல் அறிஞர்கள் கூறுவதற்கு எதிராகக் குழந்தைகளிடம் இந்தியைத் திணிப்பது எவ்வளவு கொடுமை! இத்தகைய இந்திக் கல்வியைக் கட்டாயத் திணிப்பாகத் தலைவர்கள் கருதவில்லையா? அல்லது அவர்கள் நடத்தும் பள்ளிகளிலேயே இந்தித் திணிக்கப்படுவதால் அமைதி காக்கிறார்களா? பத்து அகவை வரை தாய்மொழி மட்டுமே – தமிழ் மட்டுமே குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் ஆங்கிலத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள். இந்தியைத் திணிக்கவில்லை என்போர் கண்களில் இவை படவில்லையா? இந்தியைத் திணிக்க விட மாட்டோம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் ஆட்சியதிகாரததைப் பயன்படுத்தி இந்திக் கல்வியை நிறுத்த இயலாதா? ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்தியைத் திணிக்கவிடமாட்டோம் என்பது நாடகமல்லவா?

 “எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்! மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும். தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். உண்ணும் உணவினும் உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும்.” என்றார் தமிழ்ப்போராளி முனைவர் சி. இலக்குவனார் [குறள்நெறி (மலர்1, இதழ்15): ஆடி 31, 1995:15.8.1964] என்றைக்கு நாம் இதை உணர்ந்து இந்தியை எந்த வடிவத்திலும் நுழைய விடாமல் தடுப்போம் என்று தெரியவில்லை.

“வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம். தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும். தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” என்றும் முதல்வர் மு.க.தாலின் உறுதியேற்கக் கூறி வாழ்த்தியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான தமிழ் குறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகையில் இஃது எங்ஙனம் நிறைவேறும்? தமிழ்நாடு என்பதைச் சொல்லாகக் கருதாமல் உயிராக எண்ணுவதற்கு நாம் தமிழை எல்லா இடங்களிலும் பேண வேண்டும். அதற்கு இந்தித் திணிப்பை அடியோடு நிறுத்த வேண்டும். ஆதலின் பின்வருமாறு வேண்டுகிறோம்:

இந்தி எதிர்ப்புப் போலி நாடகங்களை அடியோடு நிறுத்துங்கள். கல்விக்கூடம் வழியாகவோ இந்திப் பரப்புரை அவை வாயிலாகவோ அஞ்சல் வழியாகவோ இணைய வழியாகவோ வேறு வழியாகவோ இந்தித் திணிக்கப்படுவதை அடியோடு நிறுத்துங்கள்.

எனவே, “வளர்ந்து வரும் இந்தி முதன்மை வளரும் நம் செந்தமிழை அழித்தே தீரும்விழிமின்! எழுமின்! வேற்றுமையை மறந்து விழியினும் மேலான மொழியைக் காக்கப் புறப்படுமின்.[இந்தி எதிர்ப்புக்காவலர் முனைவர் சி.இலக்குவனார், குறள்நெறி (மலர்1, இதழ்15): ஆடி 31, 1995:15.8.1964] என்னும் எச்சரிக்கைக்கட்டளையைப் பின்பற்றுவோம்! ஆருயிரைனய அருந்தமிழைக் காப்போம்!

இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துவோம்!

தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடுவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, March 14, 2023

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 23. ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தொடர்ச்சி)

ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்!

தலைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள இந்தி மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும் என்று கருதக்கூடாது. அவர்களுக்கு இந்தியைச் செயற்படுத்துவதில் உள்ள உணர்வும் செயலும்போல் தமிழ்நாட்டு அதிகாரிகளுக்குத் தமிழ் மீது உணர்வும் செயற்பாங்கும் வேண்டும். இது குறித்துப் பின்னர்தான் வேறுவகையில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஆனால் கடந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர்  “அரசு ஏன் பெயர்ப்பலகைகளை வைக்க வேண்டும். அவரவரை வைத்துக்கொள்ளச்சொன்னால் தமிழில் வைத்துக்கொள்ள மாட்டார்களா” என்று கேட்டார். “அப்படிச் சொன்னால்  ஏறக்குறைய எல்லாமும் ஆங்கிலத்தில்தான் இருக்கும்” என்றேன். இதற்கு முன்னர்ச்  செயலர் சிலர்  அறைகளில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளேன். அப்பொழுது அவர்கள், “நான் இங்கு பொறுப்பேற்க வரும் முன்னரே இவ்வாறு வைத்து விட்டார்கள்”, “பழைய பெயர்ப்பலகையைக் கழட்டி இங்கே கொண்டு வந்து மாட்டி விட்டார்கள்”, “என் மீது அன்பு கொண்ட ஒருவர்  அவராக ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை வைத்துவிட்டார்” என்பனே போல் சொல்லி உடன் ஆங்கிலப் பெயர்ப்பலகையைக் கழற்றச் செய்தனர்.

1990களில் ஒருநாள் புதியதாகப் பொறுப்பேற்ற தமிழ்வளர்ச்சி இயக்குநர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். இயக்குநர்,  “ஏன் வாசலிலேயே நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்” என்றார். அப்பொழுதும் நான் வாசலில் நின்று கொண்டு கதவைப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் “உள்ளே வாருங்கள்” என மீண்டும் சொல்லிக்கொண்டே வெளியே வந்து கதவைப்பார்த்தார்.

பெயர்ப்பலகை ஆங்கிலத்தில் உள்ளதைப் பார்க்கிறீர்களா? இப்பொழுதுதானே இயக்குநர் பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் தமிழில் பெயர்ப்பலகை வைத்து விடுகிறேன்” என்றார். “இதுவரை தமிழ்வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநராகவும் துணை இயக்குநராகவும் இருந்தீர்களே! அப்பொழுது தமிழ்ப்பெயர்ப்பலகை வைக்காதவர்கள் இப்பொழுது மட்டும் எப்படி வைப்பீர்கள்? எனவே இதனைக் கழற்றி விடுங்கள்.” என்றேன். “இல்லையில்லை! தமிழில் பெயர்ப்பலகை வைத்து விடுவேன். இது அரசாங்கப்பணத்தில் வைத்த பெயர்ப்பலகை யன்று. என் சொந்தப் பணத்தில் வைத்தது”  என்றார். “அஃதாவது, அரசாங்கப்பணம் என்றால் விதிப்படித் தமிழ்ப்பெயர்ப்பலகை வைத்திருப்பீர்கள். சொந்தப்பணம் என்பதால் அப்படி வைக்கவில்லை என்கிறீர்களா?” என்றேன். “இல்லையில்லை. நான் பெயர்ப்பலகையைக் கழற்றி விடுகிறேன். போதுமா” என்று உடனே கழற்றிவிட்டார்.

பொதுமக்களின் வீடுகளில் பாருங்கள். அங்கொன்றம் இங்கொன்றுமாக எங்கேயாவது தமிழ்ப்பலகையைக் காணலாம். ஆங்கிலப்பலகைதான் எங்கும் இருக்கும். வீடுகளில் முகப்பில் இல்லத்தின் பெயரையும் உரிமையாளரின் பெயரையும் பதித்து வைத்திருக்கிறார்களே! அதுவும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு? தமிழ் உணர்வில்லா மக்களின் சிறு பகுதியினரான அரசு ஊழியர்களுக்கு மட்டும் எங்ஙனம் தமிழ் மொழி உணர்வு வரும்? கட்சித்தலைவர்களும் ஆட்சியாளர்களும் தமிழ், தமிழ் எனக் கூவிக் கொண்டிருந்தாலும் இவர்களின் உள்ளங்களில் ஆங்கிலம்தான் வீற்றிருக்கும். இந்த அடிமை நிலை போக வேண்டும். எனவேதான் ஒன்றிய அரசு ஊழியர்களைப்போல் இங்குள்ளவர்களுக்கும்  ஆட்சித் தமிழ் உணர்வு வேண்டும் என்கிறேன்.

ஒருவர், “தமிழ் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டுப் பாராட்டக் கூடாதா? எதற்கு எங்கள் குறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறீர்கள்” என்று கேட்டார். சம்பளம் பெற்றுச் செய்யும் பணிகளைப் பாராட்டுவது நம் வேலையல்ல. ஆனால், சம்பளம் பெற்றுக் கடமை தவறும் பொழுது சுட்டிக்காட்ட வேண்டுமல்லவா? நாம் பாராட்டிக் கொண்டிருந்தால் பாராட்டு மழையில் நனைந்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருப்பதாக ஆள்வோரும் மக்களும் எண்ண மாட்டார்களா? சுட்டிக்காட்டினால்தானே குறைகள் களையப்படும். நாம் கடந்த கட்டுரையில் தலைமைச்செயலகத்திலிருந்து தமிழ் பரவ ஆட்சித்தமிழ் செயலாக்கக் கண்காணிப்பு குழுவினை அமைக்க வேண்டினோம். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், “ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் விரைந்து முனைப்போடு செயலாற்றுவதை உறுதி செய்யும் நோக்கில் ஆட்சித்தமிழ் செயலாக்கக் கண்காணிப்பு குழுவினை உடன் அமைத்திட வேண்டும் எனும் கோரிக்கையினை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் ஆவன செய்கிறோம்” என மறுமொழி அளித்திருந்தார். அவருக்கு நம் நன்றி. 

இதற்கு முன்னரும் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், “தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் குறித்த கட்டுரைகளை ஒரு கோப்பில் இட்டு, எதை எவ்வாறு நிறைவேற்றுவது எனத் திட்டமிட்டு வருகிறேன்” என்றார். அவருக்கும் நன்றி.

தமிழ் வளர்ச்சிச் செயலர் மரு.செல்வராசு ... அவர்களிடம் தமிழ் நல முறையீட்டை அளித்ததும் உடன் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்.

இத்தகைய ஆக்கச் செயல்களுக்காகக் குறைகளைச் சுட்டிக்காட்டுவது சரிதானே!

ஆட்சிமொழிச் செயலாக்கதில் யார், யார் தமிழில் வரைவுகள் மடல்கள் எழுதுகிறார்கள் என்று பார்ப்பதை விட, மக்களுக்குக் கண்களில் படும்அறிவிப்புகள்விளம்பரங்கள்செய்திகள்பெயர்ப்பலகைகள்தகவல் பலகைகள்பதாகைகள்அழைப்பிதழ்கள்  முதலிய யாவும் தமிழில் இருக்க வேண்டும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். மக்களுக்கு அனுப்பக்கூடிய மடல்கள், மடலுறைகளில் குறிப்பிடும் முகவரிகள் என யாவும் தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்பதை இலக்காக அவர்கள் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மணத்தை மக்கள் நுகர முடியும்.

ஒன்றிய அரசின், தகவல் பலகைகள், பெயர்ப்பலகைள், அறிவிப்புகள், விளம்பரங்கள், சுற்றறிக்கைகள், ஒப்பந்த அறிவிப்புகள், பணியாணைகள், அழைப்பிதழ்கள், தகவல் கல்வெட்டுகள் என யாவும் இந்தியில் அல்லது இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் உள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகளில்கூட இந்தியும் ஆங்கிலமும்தான் உள்ளன. அஃதாவது இந்தியில்லாத எதையும் பார்க்க முடியாது. யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலைதான். அதுபோன்ற உறுதிப்பாடு நம்மவர்களுக்கும் வேண்டுமல்லவா? இங்கே இவற்றுள் சில தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். அல்லது பெரும்பான்மை ஆங்கிலத்தில்மட்டும் இருக்கும்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு தமிழை இல்லாமல் ஆக்குகிறோமே என்ற கவலையோ வருத்தமோ இவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. இத்தகையவர்களுக்குத் தண்டனை கொடுத்தாலதானே திருந்தித் தமிழை வாழ வைப்பார்கள். எனவேதான், ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் தவறுசெய்வோருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்கிறோம்.

அரசு ஊழியர்கள் நல்ல வழிகாட்டுதல் இருப்பின் தமிழைப் பயன்படுத்துவதில் ஆர்வமாகத்தான் உள்ளார்கள். ஆனால், சில நேர்வுகளில் மேலதிகாரி  போதிய தமிழ் அறியாதவராக இருக்கும் பொழுது அவர் கேட்கிறார் என்பதற்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்தி விடுகிறார்கள். தமிழாணை மட்டுமே செல்லத்தக்கது என அரசு அறிவித்தால் உயர்அதிகாரிகள் ஆங்கிலத்தில் கேட்க மாட்டார்கள் அல்லவா? இவை குறித்துப் பின்னர்த் தனியாகப் பார்ப்போம். இப்போது நாம் வேண்டுவது மக்களுடன் நேரடித்தொடர்பில் உள்ளவற்றில் தமிழையே பயன்படுத்துங்கள். ஒன்றிய அரசில் பணி யாற்றுவோா்போல் தமிழ் உணர்வுடன் செயற்பட்டுத் தமிழை வாழ வையுங்கள் என்றுதான்.

தமிழ் உணர்வு கொள்வார்களா? தமிழை முழுமையாகப் பயன்படுத்துவார்களா?

தமிழ் நலத்தை வலியுறுத்தும் முதல்வரும் தமிழ் அமைச்சரும் பிற அமைச்சர் பெருமக்களும் தலைமைச் செயலரும் தமிழ் வளர்ச்சிச் செயலரும் தமிழ் வளர்ச்சி இயக்குநரும் இருக்கும்பொழுது கூடத் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றால் எப்போதுதான் தமிழ் வாழும்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, March 10, 2023

தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க!

(தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 தொடர்ச்சி)

தமிழ் ஆட்சிமொழிச்செயலாக்கம் குறித்து ஆட்சியாளர்களும் அதிகாரிகள் மட்டத்தினரும் ஆர்வமுடன் பேசுவதை நாம் அறிவோம். அதே நேரம் ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது வெற்றுரையாகத்தான் இன்றும் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். இந்நிலை தொடரத் தொடரத் தமிழ் வளர்ச்சி என்பது தேய்பிறையாகத்தான் நலிகிறது.

தலைமைச் செயலகத்திலிருந்து துறைத்தலைமைக்கும் சில நேர்வுகளில் பிற சார்நிலையினருக்கும் ஆங்கிலத்தில் அனுப்பி விட்டு அங்கிருந்து அடி நிலை வரை ஒவ்வொரு நிலையிலும் “தமிழில் எழுது, தமிழில் எழுது” என்று சொல்வது முரணாகப் படவில்லையா? தோற்றுவாய் தமிழாக இருந்தால், எல்லா நிலையிலும் இயல்பாகவே தமிழ்தானே தொடரும்! நிலைக்கும்! எனவே, நாம் முதலில் செய்ய வேண்டியது தலைமைச்செயலகத்தில் முழுமையான தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்க ஆய்வை மேற்கொள்வதுதான்.

ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் தமிழைத் தவணை முறையில் பயன்படுத்தி மறந்து விடுவதையும் ஆங்கிலமாயின் எவ்வகை ஆணையுமின்றியும் ஆணைக்கு மாறாகவும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையும் பார்க்கலாம். இதன் தொடர்பில் சில முன்நினைவுகளையும் குறிப்பிடின் தமிழ்ச்செயலாக்க நிலையைப் புரிந்து கொள்ள உதவும்.

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் தமிழ் ஆட்சிமொழி அமைச்சராக இருந்த பொழுது, தலைமைச் செயலர் அறை முகப்பில் பொன்னெழுத்துகளில் ஆங்கிலம் வீற்றிருக்கிறது. தலைமைச் செயலர்கள் பெயர்ப்பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டு மடல் அனுப்பினேன்.  மூன்று நாளில் மதுரை வந்த அமைச்சர், “இப்பொழுது போய்ப்பாருங்கள் பொன்னெழுத்துகளில் தமிழைக் காணலாம்” என்றார்.

தலைமைச் செயலகம் வந்து பார்த்த நான், தலைமைச் செயலர் என்னும் பதவிப்பெயரை மட்டும் தமிழில் குறிக்கப்பட்டதைக் கண்டேன். ஆனால், பெயர் நிரல் ஆங்கிலத்தில்தான் இருந்தது. அதை அமைச்சரிடம் தெரிவித்தேன். பின் நடவடிக்கை எடுத்த பின், அப்போதைய தலைமைச் செயலர் பெயரை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர்.  பின் வலியுறுத்தியதும் இறுதிப்பலகையில் தமிழில் பெயர்களைக் குறித்தனர். அடுத்தும் தமிழில் பெயர்கள் எழுதப்பட்டன. பின்னர் எப்போதோ ஆங்கிலத்திற்கு மாறிவிட்டனர். நேற்று நான் தலைமைச் செயலர்கள் நிரல் பலகை ஆங்கிலத்தில் இருந்ததைக் கண்டு வருத்தமுற்றேன்.

அதேபோல் பத்துத் தளம் கொண்ட நாமக்கல் மாளிகைக் கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் உள்ள துறைகளின் பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளதைச் செயலர் திரு வை.பழனிச்சாமி இ்.ஆ.ப. அவர்களிடம் தெரிவித்தேன். அதனால் உரியவர்கள் த.வ.துறைபெயரை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர். இஃதென்ன கூத்து? என்று கண்டித்த பின், த.வ.துறை இருந்த ஆறாவது தளத்தில் உள்ள தகவல் பலகையை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர். பிறகு செயலரிடம் தெரிவித்து அவரே நேரடியாகக் கண்டித்து அறிவுறுத்திய பின்னர், அக்கட்டடத்தின் எல்லாத் துறைத்தகவல் பலகைகளையும் தமிழில் குறித்தனர்.

இப்பொழுது அதில் மாற்றமில்லை. ஆனால், அங்கும் பழைய கட்டடத்திலும் செய்தித்துறை காட்சிக்கு வைத்துள்ள தகவல் பலகைகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஒன்றிய அரசு கூட்டும் கூட்டத்தில் பங்கேற்கையில் வைக்கும் துறைப்பெயர்களை ஆங்கிலத்தில்தான் வைத்துள்ளனர். இதனை இரு மொழிகளில் வைக்கலாமே!

அறைகளிலுள்ள பெயர்ப்பலகைககளில் தமிழ் முதலெழுத்துகள் இல்லாமல் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல குறைகளைக் காணலாம்.

திரு கிறித்துதாசு காந்தி இ.ஆ.ப. தமிழ் வளர்ச்சிச் செயலராக இருக்கும்போது, நான் வேண்டியதற்கிணங்க அவர் தலைமைச்செயலகத்தில் தமிழ் ஆய்வுப்பணியை மேற்கொள்ளச் செய்தார். அதற்கு ஓரளவு பலன் இருந்தது. இது தொடர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பின்னரும் இத்தகைய ஆய்வுகள் மேற்கொண்டதாகவும் ஆனால் புள்ளிவிவரம் கோரிய அத்தகைய ஆய்வுகளால் எதிர்பார்த்த பயனில்லை என்றனர்.

தமிழ் ஆட்சிமொழித்தேர் இயங்கவேண்டுமெனில், தார்க்குச்சி தேவை. ஆனால், தார்க்குச்சியைப் பயன்படுத்த அதிகாரத்தில் உள்ளவர்கள் முன்வரமாட்டார்கள்; ஆட்சித் தேரும் இயங்குவதில்லை. விரைந்தும் முழுமையாகவும் தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்பதே நம் இலக்காக இருக்க வேண்டும். எனவே, தலைமைச்செயலர், தமிழ்வளர்ச்சித்துறைச் செயலர் தலைமையில் தமிழ் ஆய்வு- கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். தமிழார்வம் மிக்க செயலர்களை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

செயலர் நிலையில் இல்லாத தமிழார்வம் மிக்க  பிற அதிகாரிகளையும் இக்குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். த.வ.செயலர் மரு.செல்வராசு இ.ஆ.ப. தமிழார்வம் மிக்கவராகவும் எதுவும் முறையிட்டால் உடன் நிறைவேற்றுநராகவும் உள்ளார். புகழ்மிகு எழுத்தாளர் தமிழார்வம் மிக்க தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு அவர்களுக்குத் தமிழார்வம் மிக்க அதிகாரிகளைத்  தெரிந்தே  இருக்கும். எனவே, குழுவை அமைப்பதில் சிக்கல் இராது.  தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள், தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தை முழுமையாகச் செயலாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் உள்ளார். எனவே, அவர் தலைமையிலான தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்களைக் களத்தில் இறக்க வேண்டும். தமிழ் ஆணைகள் எண்ணிக்கை, ஆங்கில எண்ணிக்கை, தமிழ்ப்பதிவேடுகள் எண்ணிக்களை, ஆங்கிலப் பதிவேடுகள் எண்ணிக்கை, தமிழ்க்கையொப்பமிடுவோர் எண்ணிக்கை, ஆங்கிலக் கையொப்பமிடுவோர் எண்ணிக்கை என்ற முறையில் வெறும் புள்ளி விவரம் திரட்டுவதாக ஆய்வு அமையக் கூடாது. அரசுப்பணியாளர் நடத்தை விதிகளின் கீழ், ஆட்சித்தமிழ்ச்செயலாக்கத்தை நிறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே ஆணை உள்ளது. எனவே, பணி நீக்கம் வரை தண்டனை வழங்க வழி உள்ளது. இதனை உணர்ந்து  ஒழுங்கு நடவடிக்கை, தண்டனை வழங்கும் அதிகாரம் ஆகியவற்றை ஆட்சிமொழிச்செயலாக்க நேர்வில் மட்டும் துறைத் தலைவர்களிடமிருந்து மாற்றி ஆட்சிமொழி ஆய்வுக் கண்காணிப்புக் குழுவிற்கு வழங்க வேண்டும். இந்த ஆய்வின் மூலம் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கினால்தான் மேற்கொண்டு ஆங்கிலப் பயன்பாடு நிலைக்காது.

வழிகாட்டுதலின்றியே பலர் தமிழில் எழுதுவதில்லை. எனவே, செயலக அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் தமிழில் எழுதுவதற்குத் தக்கவர்களைக் கொண்டு தக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும். 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

(திருவள்ளுவர், திருக்குறள் 648)

அத்தகைய வல்லாரைக் கொண்டு ஆட்சித்தமிழ்ச்செயலாக்க ஆய்வு-கண்காணிப்புப் குழுவை அமர்த்தி, என்றும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்வதை நனவாக்க வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, February 28, 2023

தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21

(திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20 -இன் தொடர்ச்சி)

மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் பிறந்த நாளில் அவர் எல்லா நாளும் நலமும் வளமும் மகிழ்ச்சியும் நிறைந்து மக்கள் மகிழ நல்லாட்சி வழங்கி நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம். இந்தியத் துணைக்கண்டத்திற்கு வழிகாட்டியாகவும் அதன் தலைமையை நோக்கியும் பீடு நடை போடுவது மகிழ்ச்சி யளிக்கிறது. உலகத் தமிழர்களும் தலைவர்களும் வாழ்த்துவதுபோல் தமிழன்னையும் மனங்குளிர்ந்து வாழ்த்த வேண்டுமல்லவா? அதற்கான வாய்ப்பை நல்க வேண்டுமல்லவா? ஆனால், தமிழ்த்தாய்க்கு நாளும் கொடுமை இழைக்கப்படும் பொழுது அதற்கான வாய்ப்பு எங்ஙனம் கிட்டும்?

இன்றைக்கு ஆவின் செய்யும் கொடுமையை அறிந்தபொழுது உள்ளம் பதைக்கிறது. நற்பெருமகனார் ஒருவர் ‘ஆவின் பால்’ எனத் தமிழில் பெயர் சூட்டியிருந்தார். ஆனால், பால் பொதிவுகளுக்கு ‘நைசு, மேசிக்கு, பிரிமியம், டயட்டு’ என்பன போன்ற ஆங்கிலப் பெயர்கள்தான். விலைப்பட்டியல்கள், பொருள் விவரங்கள், பால் பொள்கள் தொட்பான அறிவிப்புகள், செய்திகள் என எல்லாம் ஆங்கிலம்தான். இது குறித்து எழுத எண்ணிக் கொண்டிருந்த பொழுது இப்பொழுதே எழுத வேண்டிய தேவை வந்து விட்டது. ஆவின் நிறுவனம் புதிய பாலை அறிமுகப்படுத்துகிறார்களாம்; செய்தி வருகின்றது. “பால் தட்டுப்பாட்டைப்  போக்க மார்ச்சு 1 ஆம் நாள் முதல் Cow Milk என்ற பெயரில் புதிய பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது” என்பதே அச்செய்தி. பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ‘கவ் மில்க்’ என வழங்க உள்ளார்களாம். பால் தட்டுப்பாடுதானே! தமிழுக்குத் தட்டுப்பாடு இல்லையே!  ஏனிந்தக் கொடுமை?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!

செயலினை மூச்சினை உனக்களித் தேனே!

நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு!

நன்மை உனக்கெனில் எனக்குந் தானே?

எனப் பாவேந்தர் பாரதிதாசன் உள்ளம் நைந்தாரே! தமிழை மறந்து நாம் வாழ்ந்து என்ன பயன்? தமிழ் அழிந்து நாம் இருந்து என்ன பயன்?  அந்த உணர்வு நம் எல்லார்க்கும் வர வேண்டுமல்லவா?குறிப்பாக ஆள்வோர்க்கு வரவேண்டுமல்லவா? நாட்டில் அடிநிலையில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் முடிநிலையில் உள்ள ஆட்சியாளரைத்தான் வையகம் ஏசும் என்பதே தமிழ்நாட்டு அரசியல் நெறி. எனவே, தமிழுக்குக் கொடுமை எங்கு இழைக்கப்பட்டாலும் அவப்பெயர் அரசிற்குத்தான். அரசிற்கு அவப்பெயா் எனில், அஃது ஆள்வோருக்குத்தானே! ஆள்வோர் என்றால் அதன் தலைமையில் உள்ள முதல்வரைத்தானே அவப்பெயர் சாரும்!. முதல்வர் விழிப்பாக இருக்க வேண்டாவா? அவரன்றி ஓரணுவும் அசையாது என்ற நிலை வேண்டாவோ?

எனவே, இப்பிறந்த நாளில் முதல்வர் மு.க.தாலின் உறுதியாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒரு மொழிக்கொள்கையே தமிழ் நாட்டின் கொள்கை. ஆட்சிமொழி, கல்வி மொழி, கலை மொழி, வழிபாட்டு மொழி என எதுவாக இருப்பினும் அங்கெல்லாம் தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு வெளியே தொடர்பு கொள்ள மட்டுமே ஆங்கிலம். ஆனால், அதனைத் தமிழ் நாட்டுக்குள் பயன்படுத்தினால் தண்டனைதான் வழங்க வேண்டும். இரு மொழிக் கொள்கை என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்குள் ஆங்கிலத்தைத் திணிப்பவர்கள் யாராய் இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். முன்னரே கூறியபடி எச்சரிக்கை, சுற்றறிக்கை, ஆணை என்பன போன்று போலிச் சமாளிப்புகளை நிறுத்த வேண்டும். மாறாக உடனடியாக ஆங்கிலத் திணிப்பாளர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் ஆங்கிலத் திணிப்புகள் நிறுத்தப்படும்.

ஆவின் பால் மூலம் ஆங்கிலப்பால் ஊட்டுவதை உடன் நிறுத்த வேண்டும். தமிழ்ப்பால் ஊட்டுவதையே கடமையாகக் கொள்ளச் செய்ய வேண்டும்.

தமிழ் எழுதத் தெரியாதவனே! தமிழ் நாட்டை விட்டு ஓடு!

அயல்மொழியைத் திணிப்பவனே! அயல்நாட்டுக்கு ஓடு!

தமிழைப் பயன்படுத்துபவனே! தமிழ் நாட்டை ஆளு!

என்னும் நிலை வர வேண்டும்.

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!” என முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநதியின் அருந்தவப்புதல்வர் அதை நினைவில் கொள்ள வேண்டுமல்லவா? முதல்வர் மு.க.தாலின் தமிழ்ப்பகை வென்று தமிழுடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

Followers

Blog Archive