(சட்டச்சொற்கள் விளக்கம் 26 -30 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 31-40

31. A whileசிறிது நேரம்  

while-குறிப்பிட்ட ஒரு செயல் நிகழ்வின்போது; அச்சமயத்தில்; அப்பொழுது; உடன் நிகழ்வாக; அதே வேளையிலேயே. காலம்; நேரம்; எனப் பொருள்கள். ஆனால், A while என்னும் பொழுது சிறிது நேரம் அல்லது கொஞ்ச நேரம் என்றே குறிக்கிறது.
32. A, Anஒரு, ஓர்  

ஒற்றை எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரு என்னும் சொல் உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னர் ஓர் என வரும்.
33. A.M.முற்பகல்/மு.ப.  

Ante meridian என்பதன் சுருக்கம்.
34. Abandonment of a childகுழந்தையைக் கைவிடுதல்

  12 அகவைக்குட்டபட்ட ஒரு குழந்தையை, குழந்தையின் தாயோ, தந்தையோ, பேணுநரோ, முழுமையாகக் கைவிடும் நோக்கில் பாதுகாப்பின்றி எங்காவது விட்டு விடுதல்.

இ.த.ச.317இன் கீழ் இது குற்றமாகும்.  

12 அகவைக்கு மேற்பட்ட குழந்தையைக் கைவிடுதலும் குற்றமே.

காண்க: Abandoned child – கைவிடப்பட்ட குழந்தை
35. ab extraவெளியிலிருந்து  

வழக்காளர்களைப் பொறுத்தவரை வெளியிலிருந்து பெறப்படும் நிதி என்னும் பொருளில் குறிக்கப் பெறுகின்றன.  

ஒருவர் மூன்றாம் தரப்பிடமிருந்து நிதி பெற்றிருக்கலாம். இந்நிதி வெளியிலிருந்து பெறும் கூடுதல் தொகையாகக் கருதப்படுகிறது.  

ab = இருந்து, extra = வெளி இலத்தீன் தொடர்
36. ab initioதொடக்கத்திலிருந்து  

தொடக்கத்தில் இருந்து தொடக்கத்திலிருந்தே அடி முதலாக அடிமுதலே ஆதிதொட்டு; எனவும் சொல்லப்படுகின்றன.  

தொடக்கதிலிருந்தே உள்ள நிலைப்பாட்டைக் குறிக்கின்றன.  

Ab initio என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தொடக்கத்திலிருந்து.
ab = இருந்து, initio = தொடக்கம் எ.கா.: தொடக்கத்திலிருந்தே திருமணம் செல்லுபடியாகாது (the marriage was void ab initio).

செயல் ஆணை, தலைவரின் அதிகாரத்தைத் தாண்டுவதால், வரம்பை மீறுவதாகிறது. எனவே, தொடக்கத்திலிருந்தே இஃது ஒழிவாகிறது(The Executive Order exceeds the President’s authority and is therefore ultra vires and void ab initio.)  

ஓர் ஒப்பந்தம் எந்த நேரத்திலும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகாத நேர்வில் அது “வெறும் தொடக்கம்” (“void ab initio”) என்று கருதப்படுகிறது.

தொடக்கத்திலிருந்து என்னும் தொடர் வெவ்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சட்டத்தில் இத் தொடரின் விளக்கம் : ஒரு சட்டம், ஒப்பந்தம், விற்பனை அல்லது செல்லுபடியாகாத பிற செயலுக்குச் சட்டப்பூர்வ விளைவு இல்லை. வெற்றிடமான செயலை அங்கீகரிக்கவோ சரிபார்க்கவோ முடியாது. தொடக்கத்தில் இல்லாத ஒரு செயலுக்கு எந்த ச் சட்டப்பூர்வ விளைவும் இல்லை.

இலத்தீன் தொடர்
37. Ab intestato    விருப்பாவணமின்றி  

ஒருவர் தான் இறக்கும் நேரத்தில் அல்லது அதற்கு முன்னர் தன் சொத்துகளைத் தனக்குப்பின் யார் யாருக்கு உரிமையாக்குகிறார் என்னும் தன் விருப்ப முடிவைத் தெரிவிக்கும் இறுதி முறியின்றி/ இறுதியாவணமின்றி/ விருப்பாவணமின்றி/ விருப்பாவணம் அற்ற வழி/ விருப்புறுதி அற்ற நிலையில் இறந்து போவதைக் குறிக்கின்றன.   எ.கா. முறையீட்டாளரின் தந்தை இறுதி முறி எழுதாமல் இறந்துள்ளதால், நேரடியாகச் சொத்துரிமை கோர இயலாது.  

சொத்துவகையில், சட்டப்படியான விருப்பாவணம் அல்லது இறுதி ஆவணமின்றி  ஒருவர் இறந்த பிறகு அவரது சொத்துகளைக் கையாளும் சட்டங்களை/முறையை இத் தொடர் குறிக்கிறது.   வேறுவகையில் சொல்வதனால், இறப்பதற்கு முன் சட்டபூர்வமாக   இறுதி ஆவணத்தை உருவாக்காமல் இருப்பதைக் குறிக்கிறது எனலாம்.  
இலத்தீன் தொடர்
 38. Abackதிகைப்புற்று

வியப்புற்று  

எதிர்பாராத வகையில் அல்லது அடுத்தடுத்த நிகழ்வில் அல்லது தெரியாமல் ஏற்படும் அதிர்ச்சியில் அல்லது குழப்பத்தில் திடுக்கிடல் அல்லது திகைத்தல்
39. Abactorஆநிரை கவர்வோன்

கால்நடைக் கள்வன்  

abactor  என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து குறிக்கப் பெறுகிறது.

abacter  என்றும் சொல்லப் பெறுகிறது.
40. Abandonகைவிடு  

சட்ட உரிமையை அல்லது கோரலைக் கை விடுதல்.  

பெற்றோர் உரிமைகளைப் பேணல், காத்தல் , முடிவுறுத்தல் வழக்குகளில், எந்த ஆதரவிற்கான வாய்ப்பு இன்றியும் குழந்தையைப் பேணுதல், பாதுகாத்தல், கட்டுப்படுத்தல் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்காமலும் குழந்தையை விட்டுவிடுதல்.  

எந்த ஒருவரையும் அல்லது நோக்கத்தையும் குறிப்பிடாமல் முழுமையாக விட்டு விடுவது.   சொத்தையோ மனைஇடங்களையோ வழிஉரிமையையோ, கப்பலையோ, ஒப்பந்த உரிமைகளேயா வாழ்க்கைத் துணையையோ குழந்தைகளையோ இரு தரப்பாரையுமோ வேண்டு மென்றேயும் நிலையாகவும் விட்டுவிடுதல்,

ஒப்படைத்தல், அல்லது கைவிடுதல். வாழ்க்கைத் துணையைக் கைவிடுதல் என்பது நிலையான பிரிவை நோக்கமாகக் கொண்டதும் குழந்தைகளுடன் நெடுங்காலம் தொடர்போ ஆதரவு தராமலோ இருத்தலும்.  

குறிப்பிட்ட நிறுவனம் அல்லது துறை திட்டம் ஒன்றை (அல்லது பலவற்றை) நிறுத்துதல். செயலை அல்லது செய்கையை அல்லது சட்ட பூர்வ நடவடிக்கையை நிறுத்துதல். எனவே, விண்ணப்பம் அல்லது வழக்கு கைவிடப்பட்டது என்றால் விண்ணப்பம் அல்லது வழக்கு இனி நிலுவையில் இல்லை எனப் பொருள்.   (நிலுவையில் இருந்தால் வழக்கு என்றேனும் கேட்பிற்கு வரும். நிலுவையில் இல்லை எனில் வழக்கு முடிவுற்றதாகிறது.)

அம்போ என விடல், நட்டாற்றில் விடல், கை கழுவுதல் இவையும் மக்கள் வழக்கில் கைவிடலைக் குறிக்கும்.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும் (குறள் 799) என்கிறார் திருவள்ளுவர்.
இன்னா, கெடும் இடம் கைவிடுவார் நட்பு (இன்னா நாற்பது 36) என்கிறார் கபில தேவர்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்