(சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 : தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 771-780
| 771. Adjourn Sine Die | கால வரையறையின்றி ஒத்திவைப்பு வேறு நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு இலத்தீனில் sine என்னும் சொல்லிற்கு இன்றி என்றும் diē என்னும் சொல்லிற்கு நாள் என்றும் பொருள். சேர்த்து வரும் பொழுது நாளின்றி எனப் பொருள் தருகிறது. எனவே, நாளில்லாமல் – நாளைக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பது எனப் பொருளாகிறது. நீதிமன்றம், வழக்கினை மறு/வேறு நாள் குறிப்பிடாமல் – கால வரையறையின்றி மறு அறிவிப்பு வரும் வரை – ஒத்திவைக்கலாம். நாடாளு மன்றம் அல்லது சட்டமன்றமும் மன்றத்தை மறு/வேறு நாள் குறிப்பிடாமல் – கால வரையறையின்றி மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கலாம். இலத்தீன் தொடர் |
| 772. Adjourning Sitting | ஒத்திவைப்பமர்வு நாடாளுமன்ற/சட்டமன்ற அமர்வுகள் முற்பகல் ஒன்றும் பிற்பகல் ஒன்றுமாக உள்ளன. இவ்வமர்வுகளில் ஏதேனும் காரணத்தால் அமர்வு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடுவதற்கு ஆணை பிறப்பிக்கப்படும். அவ்வாறு மீண்டும் கூடுவது ஒத்திவைப்பு அமர்வு எனப்படுகிறது. |
| 773. Adjournment | ஒத்திவைப்பு வழக்குக் கேட்பு நாளை வேறொரு நாளுக்கு மாற்றுதல், நாடாளுமன்ற /பேரவைக்கூட்டத்தை மற்றொரு நாளுக்கு ஒத்தி வைத்தல். நாடாளுமன்ற /பேரவைக்கூட்டத்தை வேறொரு நேரத்திற்கு ஒத்தி வைத்தல். திருமணம், திருமண உறுதிப்பாடு, விழா போன்ற குறித்த நிகழ்வு ஒன்றை வேறு நாளுக்கு மாற்றுதல் போன்ற தள்ளிவைத்தல்களையும் (postpone)ஒத்தி வைத்தல் என்கிறோம். ஆனால் இரண்டையும் வேறுபடுத்தியே நம் முன்னோர் பயன்படுத்தி யுள்ளனர். Ajornement என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் ஒத்திவைப்பு. Postpōnō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பின்னர் வை. Post=பின்னர், pōnō=வை. காண்க: Adjourn |
| 774. Adjournment Motion | ஒத்திவைப்புத் தீர்மானம் பாராளுமன்ற நடைமுறையில், ஒத்திவைப்பு என்பது ஒரு கூட்டத்தை முடித்து வைக்கிறது. ஒத்திவைக்கப்பட வேண்டிய நேரத்தை வரையறுத்து மற்றொரு கூட்டத்திற்கான நேரத்தை அமைக்கலாம். குறிப்பிட்ட நேரம் அல்லது குறிப்பிட்ட பொழுது அல்லது குறிப்பிட்ட நாள் வரை கூட்டத்தை ஒத்தி வைக்கலாம். அவசரப் பொது முதன்மை வாய்ந்த ஒன்றினை விவாதிப்பதற்காக, அவையின் வழக்கமான பணிகளை ஒத்தி வைத்து நாடாளுமன்ற அல்லது சட்டமன்றக் கவனத்தை ஈர்ப்பதற்காக மக்கள்மன்றில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. Motio என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நகர்த்து. ஒத்திவைப்பு தொடர்பான வேறு இரு சொற்கள் முடிவுறுத்தம் (Prorogation), கலைப்பு (Dissolution). முன்னது (நாடாளுமன்ற /சட்டமன்றக்) கூட்டத்தொடரை முடித்து வைப்பதைக் குறிக்கிறது. பின்னது அவற்றின் காலத்தை முடித்துவைத்துக் குலைப்பதைக், குறிக்கிறது. ஒத்திவைப்பு என்பது ஒரே நாளில் கூட வேறு நேரத்திற்குத் தள்ளி வைக்கலாம். கூட்டத் தொடர் முடித்து வைப்பின் அடுத்த கூட்டத் தொடரின்பொழுது அவை கூடும். ஆனால் கலைக்கப்பட்டால், புதிய தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் புதிய அவை உருவானால்தான் மீண்டும் கூட இயலும். அதுவும் அவையின் முதல் கூட்டமாக அஃது இருக்கும். |
| 775. Adjournment Of Case | வழக்கு ஒத்திவைப்பு கேட்பிற்கு வரும் வழக்கை உசாவலை முடித்தோ முடிக்காமலோ மற்றொரு நாள் கேட்பிற்கு மாற்றுவது ஒத்திவைப்பாகும். |
| 776. Adjudge | தீர்மானி தீர்ப்பளி சான்றாகக் குற்றமற்றவரா இல்லையா எனத் தீர்மானித்து முடிவெடுத்துத் தீர்ப்புக் கூறுதல். அறுதியிடுதல், ஊன்றுதல், எண்ணுதல், ஒற்றுதல், கையோலை செய்தல் முதலியன தீர்மானித்தலைக் குறிக்கப் பயன்படுகின்றன. அறுதியிட்டுரைக்கிறேன் என்றால், நன்கு தீர்மானித்து முடிவெடுத்துச் சொல்லுகிறேன் எனப் பொருள். ஊன்றி உரைக்கிறேன் என்றால் ஆழ்ந்து சிந்தித்து கருத்தூன்றி முடிவெடுத்துரைக்கிறேன் எனப் பொருள். எண்ணித் துணிக கருமம் என்றால் நன்கு சிந்தித்துத் தீர்மானித்துச் செயலில் இறங்கு எனப் பொருள். ஒற்றுதல் என்றால் தீர்மானித்து முடிவிற்கு வந்து தெரிவித்தல் எனப் பொருள். கையோலை செய்தல் என்றால் தீர்மானத்தைச் செயல் வடிவில் கொணரத் தெரிவித்தல் எனப் பொருள். இருப்பினும் வழக்கின் முடிவு குறித்துத் தீர்மானித்துத் தீர்ப்பளிப்பது என்னும் பொருளில் எளிமையாகத் தீர்மானி அல்லது தீர்ப்பளி என இடத்திற்கேற்பச் சொல்லலாம். |
| 777. Adjudged | தீர்மானிக்கப்பட்ட காண்க: adjudge |
| 778. Adjudicate Process | நீதி வழங்கும் பாங்கு தாவா, பிணக்கு, தகராறு, வழக்கு என ஒன்றைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் சட்டமுறையான செயற்பாட்டைக் குறிக்கிறது. |
| 779. Adjudicated Insolvent | தீர்ப்பின்படி நொடித்தவர் முறைமன்றத்தால்/ தீர்ப்பால் நொடித்தவர் என அறிவிக்கப்பட்டவர். மாகாண நொடிப்புச் சட்டம்(The Provincial Insolvency Act), 1920 பிரிவு 6 இல் நொடிப்பு நிலை குறித்து விளக்கம் உள்ளது. . திவால் என்பது உருதுச் சொல். இதனுடன் தமிழையும் கலந்து, திவாலவானவர் என்று சொல்கிறோம். இதனைத் தவிர்த்துத் தமிழிலேயே நொடித்தவர் எனக் குறிக்கலாம். |
| 780. Adjudication | தீர்ப்பளித்தல், தீர்ப்பளிப்பு, தீர்ப்பீடு, தீர்ப்பு, நீதிமுறைத் தீர்ப்பளிப்பு குற்றவியல் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் நீதித்துறை முடிவு. ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பை உச்சரிக்கும் செயலைக் குறிக்கிறது. இதுவே, தீர்ப்பைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. துறைக்குள்ளேயே பகுதி நீதித்துறைபோல் செயல்பட்டு உசாவல் மேற்கொண்டு அளிக்கப்படும் தீர்ப்பு. வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை முதலான பல துறைகளில் துறையுடன் பிணக்கு உள்ள பொதுமக்களுக்கும் பொதுவாகத் துறைகளில் துறைப்பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளில் அந்தந்தத் துறைத்தலைமையும் உசாவித் தீர்ப்பளிக்கின்றன. பல்வேறு மாநிலங்களும் ஒன்றிய அரசும் பணியாட்சித் தீர்ப்பிற்கென் தீர்ப்பாயங்கள் வைத்துள்ளன. இந்திய அரசு, பணியாளர்கள் பொதுக் குறைகள் ஓய்வூதிய அமைச்சகம், பணியாளர் – பயிற்சித் துறை, பணியாட்சித் தீர்ப்பாயங்கள் சட்டம் 1985 (மத்திய சட்டம் 13/1985) கீழ் 12.12.1988 முதல் தமிழ்நாடு மாநிலத் தீர்ப்பாயம் செயல்பட்டது. சில ஆண்டுகளில் தமிழ்நாட்டரசின் பரிந்துரைக்கிணங்கக் கலைக்கப்பட்டது. ஒன்றிய, மாநில அரசுகளின் தீர்ப்பாயங்களுடன்தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், ஆயுதப்படைகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், கடன் மீட்புத் தீர்ப்பாயம் முதலிய தீர்ப்பாயங்களும் உள்ளன. adiudicatio, adiudicationem ஆகிய இலத்தீன் சொற்களிலிருந்து adjudication உருவானது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment