அகரமுதல
சட்டச் சொற்கள் விளக்கம் 881-885-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் 886 – 890
886.Assessment | மதிப்பீடு தீர்வை விதிப்பு ஏதாவதொன்றின் விகிதத்தினை அல்லது தொகையினைத் தீர்மானித்தல். எடுத்துக் காட்டாக இழப்பீடு அல்லது விதிக்கப்பட்ட ஒறுப்புத் தொகை. குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டவரின் உள நிலைமை குறித்துத் தகுதி வாய்ந்த வல்லுநர் ஒருவர் தீர்மானித்தல். குடும்பநல வழக்குகளில் தகுதியான வல்லுநர் ஒருவர் சிறாரின் தேவையையும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான தரப்பினரின் ஆற்றலையும் ஆராய்ந்து மதிப்பிட்டு அறிவிக்கும் பகுப்பாய்வு அறிக்கை. குடியியல் வழக்குகளில் சொத்தினைப் பேணவும் தனிப்பட்ட நலன் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ளவும் வழக்குரைஞரின் அறிவுரைகளை முறையாக கைக்கொள்ளவும் அறிவுறுத்துவதற்குமான ஒருவரின் ஆற்றலைத் தீர்மானித்தல். மதிப்பீடு(S. 6 W(PCOPA), 1977) மதிப்பீடு(Sch. PI(CI)A, 1963) வரிவிதிப்பு(S. 2(2) ITA,1974) |
887. assessment order | மதிப்பீட்டுக் கட்டளை இங்கே மதிப்பீடு என்பது உளநிலை மதிப்பீடாகும். குற்றவழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்டவரின் உளநிலையைக் கண்டறியக் கேட்கும் நீதிமன்றம் இடும் உத்தரவு. குடியியல் சட்டத்தின்படி ஒருவரின் உடல் அல்லது உளநிலை தொடர்பான ஐயங்கள் எழும் போது அத்தகையவர் உடல்நல, உளநல ஆய்விற்கு உட்பட வேண்டும் என நீதிமன்றம் இடும் கட்டளை. குடும்ப நல வழக்குகளில் தொழில்முறை வல்லுநர் ஒருவரிடம் வழக்கிற்குரிய குழந்தையின் தேவைகள், அவற்றை நிறைவேற்றுவதற்குரிய தரப்பாரின் ஆற்றல்கள், வாய்ப்பு நலன்கள் முதலியவற்றை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் இடும் கட்டளை. |
888. Assessment year | வரிவிதிப்பு ஆண்டு ஒரு நிதியாண்டில் வரிவிதிப்பைக் கணக்கிடுவதற்கான காலம்(ஏப்பிரல் 1 முதல் மார்ச்சு 31 முடிய), நிதியறிக்கை, வரவு செலவுத் திட்ட நோக்கங்களுக்காக அரசாங்கங்கள், வணி.க நிறுவனங்கள், தனியார் அமைப்புகளால் பயன்படுத்தப்படும் கால அளவு நிதியாண்டு. நிதியாண்டிற்கு அடுத்த ஆண்டு மதிப்பீட்டு ஆணடு. மதிப்பிடுவது வரிவிதிப்பைக் கணக்கிடுவதறக்காகத்தானே. எனவே வரி விதிப்பாண்டு. அஃதாவது இவ்வாண்டு 2023-24 நிதியாண்டு எனில் 2024-25 வரிவிதிப்பாண்டு, |
889. Assessor | கணிப்பாளர், கணிப்பீட்டாளர் வரி விதிப்பு நோக்கங்களுக்காகச் சொத்துகளை மதிப்பிடும் அதிகாரி. பல நேர்வுகளில் சட்ட அறிவுரைக்காகவும் சட்ட உதவிக்காகவும் ஒருவருக்குச் சட்டப்படியாகப் பெயராளாகச் செயற்படுபவர். |
890. Assets | சொத்துகள் சொத்திருப்புகள் ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்குச் சொந்தமான மதிப்பார்ந்த உடைமை. (இதனைப் பன்மையிலும் குறிப்பிடலாம்.) சொத்து(கள்) பொருள் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்றில்லை. முதலீடுகள், காப்புரிமைகள், பண மதிப்புடைய பிற பணச் செயற்பாடுகள் முதலியனவும் சொத்துகளாகும். சொத்துகள் பொதுவாகப் பணமாக மாற்றக்கூடிய உடைமைகளாகப் பார்க்கப்படுகின்றன. இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டம், 1959, பிரிவு 9,(1)(ஆ) [(S. 9(1)(b) ISIA, 1959)] |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்