எழுத்தைக் காப்போம்!
மொழியைக் காப்போம்!
இனத்தைக் காப்போம்!
அன்புமிகு சான்றோர் பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியினை நேரடியாக கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இப்பதிவொலி வழியாக கேட்க இருப்பவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அறிமுக உரையாற்றி இந்நிகழ்ச்சியினை எனக்கு அளித்த அரவிந்தன் அவர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும்.
தலைப்பைக் கேட்டுச் சிலருக்கு ஆனா உரூனா ஐயாவுடைய தமிழ்ச் சான்றோர் பேரவை இந்த தலைப்பிலா நிகழ்ச்சி நடத்துகிறது என்று எண்ணலாம். “சமற்கிருதத்திற்கு மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பிற மொழிகளுக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடும்” என்றுதான் பேசச் சொன்னார்கள். இரண்டு்ம் ஒன்றுதான். என்று இந்த பேச்சைக் கேட்ட பின்பு உங்களுக்குப் புரியும்.
நிகழ்ச்சிக்கு ஏன் இந்த தலைப்பு என்பதை முதலில் பார்ப்போம்.
2014முதல் 2025 வரையில் ஒன்றிய அரசு சமற்கிருதத்திற்கு ரூ.2532.59 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழ் மொழிக்கு ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது .தெலுங்கு ,மலையாளம், கன்னடம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு சேர்த்து உரூ 34 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஐந்து மொழிகளுக்கு ஒதுக்கி உள்ள தொகையைக் காட்டிலும், மிகக் குறைந்த அளவே பேசப்படும் சமற்கிருத மொழி மேம்பாட்டிற்கு 17 மடங்கு அதிகம் ஒதுக்கி ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது என்றும் , சமற்கிருதத்திற்கு அதிக நிதி மற்ற மொழிகளுக்கு அநீதி என்றும், போலி பாசம் தமிழ் மீது பணமெல்லாம் சமற்கிருதத்திற்கு என்றும் ,சமற்கிருதத்திற்கு கோடிக்கணக்கில், தமிழ் முதலான தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டும் என்றும், யாருமே பேசாத சமற்கிருதத்திற்கு ஏன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றும் நாடெங்கும் எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சமற்கிருதம் எந்த மாநிலத்திலும் பேசப்படுவது இல்லை. கோவிலில் அர்ச்சனை செய்பவர்கள் தான் அதை பயன்படுத்துகிறார்கள் .அதற்காக இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை என்ன என்றும், இந்திய மொழிகளுக்குக் குறைந்த அளவிலே ஒதுக்கப்படுகிற நிலையிலேயே, 61℅ சமற்கிருதத்திற்கா எனத் தமிழ்நாட்டில் கண்டன குரல் எழுந்துள்ளன .வழக்கம் போல் எழுந்ததும் அடங்கிவிட்டன. இவ்வாறு பேசுபவர்கள் அறிந்தே மக்களை ஏமாற்றும் வகையில் பேசுகிறார்களா அல்லது அறியாமல் பேசுகிறார்களா எனத் தெரியவில்லை. ஏனெனில். சமற்கிருதத்திற்கு நிதி ஒதுக்கீடு ஏதோ செப்பு வைத்து விளையாடுவதற்காகக் கொடுக்கப்படவில்லை.
இந்தியாவில் சமற்கிருதத்திற்கு 18 பல்கலைக்கழகங்கள் உள்ளன நூற்றுக்கணக்கிலான சமற்கிருதக் கல்வி நிறுவனங்கள் உள்ளன சமற்கிருத இயக்கங்கள் பல்வேறு உள்ளன.
அகில பாரத வித்தியா பரிசத்து
வித்தியா பாரதி
சிட்சா சமற்கிருதி
அகில பாரத இதிகாச சங்கலன் யோசனா
சமற்கிருத பாரதி
விஞ்ஞான பாரதி
அகில பாரதிய சாகித்திய பரீட்சத்து
சிக்குசத பச்சாவோ அந்தோலன்
அகில பாரதிய இராசுட்ரிய சமற்கிருத மகா சங்கம்
சன்சுகார் பாரதி
பாரதிய சிக்குசன் மண்டல்
எனப் பல்வேறு கல்வியகங்கள் உள்ளன. இவற்றின் நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன?
பொதுவாகவே சமற்கிருதத்திற்குப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்போது அறிவித்த அமைப்புகளும் இன்னும் சில அமைப்புகளும் உள்ளன. இதன் அடிப்படை நோக்கம் என்ன? மரபு வழியிலான சமற்கிருதப் பாடசாலைகள், சமற்கிருத மகா வித்தியாலயங்கள் சமற்கிருத ஆசிரியர்களுக்கான நிதி உதவி அளித்தல், பரம்பரையான சமற்கிருதப் பாடசாலைகள் மகா வித்தியாலங்களில் நவீன பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான நிதி உதவி அளித்தல், மாநில அரசு பள்ளிகளைச் சேர்ந்த இடைநிலை உயர்நிலைப் பள்ளிகளில் சமற்கிருத ஆசிரியர்களுக்கான நிதி உதவி அளித்தல், குரு சீடர் பரம்பரை நிறுவனங்களில் சமற்கிருத ஆசிரியர்களுக்கான நிதி உதவி, குடியிருப்புகள் பேணுகை, மாணவர்கள் தங்கும் விடுதி, மாணவர்களுக்கு நண்பகல் உணவு இரவு உணவு வழங்குதல், வறிய சூழலில் சிறந்த சமற்கிருத பண்டிதர்களுக்கும் உணவு வழங்கி, சம்மான் இராட்சிகா நிதியுதவி, சமற்கிருதத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்துதல், அரிதான சமற்கிருதப் புத்தகங்கள் வெளியிடுதல், மொத்தமாக வாங்குதல், மறு பதிப்பு செய்வதற்கான நிதி உதவி, சமற்கிருத இலக்கிய இதழ்கள் வெளியிடுதல், சமற்கிருதப் புத்தகங்கள் மொத்தமாக வாங்குதல், அரிய சமற்கிருத புத்தகங்களை மறு பதிப்பு செய்தல், சிறந்த அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவையைப் பயன்படுத்த நிதியுதவி அளித்தல், பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள் பரம்பரை சமற்கிருத பாடசாலைகள் அல்லது நிறுவனங்களில் தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்த நிதி உதவி சமற்கிருத, பாலி, பிராகிருத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என மேலும் பலவகையாகச் சமற்கிருதப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பெறுகிறது..
அகில இந்திய சமற்கிருதச் சொற்பொழிவுகளும் போட்டிகளும் சமற்கிருதத்தின் வளர்ச்சியை நிலை நிறுத்துகின்றன. 18 திட்டங்கள், குடியரசுத் தலைவர் விருதுகள் மகரிசி பாதராயன் வியாக சம்மான் விருதுகள், ஆதர்ச சமற்கிருத மகா வித்தியாலயங்கள், ஆதர்ச சோத சத்சங்கு நிதியுதவி, சமற்கிருத அகராதித் திட்டம் இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி ஒன்றிய அரசு அளித்துக்கொண்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இத்தகைய விதிகளை நிறுவி இந்த அமைப்புகளை நடத்துவதற்கான வாடகை. செலவுகள், பணியாளர் செலவுகள், நூல் வெளியிட சமற்கிருத திரைப்படங்கள் எடுக்க நிதி உதவி என்று அடுக்கிக் கொண்டே போகிற பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இத்தனைத் திட்டங்களுக்குப் பணம் தேவைப்படும்போது அரசு நிதி ஒதுக்கத் தானே செய்யும்! அதை விடுத்து ஒதுக்கி விட்டார்கள் ஒதுக்கி விட்டார்கள் என கூக்குரலிட்டு என்ன பயன்?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன் இணைய வழி உரையின் எழுத்தாக்கம்
13.07.2025
No comments:
Post a Comment