Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

Saturday, June 9, 2018

வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்


வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்

அண்மையில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 11 சட்டமன்ற்த தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றன. இவற்றுள் மகாராட்டிர மாநிலம் பாலுசு கடேகான் தொகுதியில் பேராயக்கட்சியின்(காங்.) வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கே போட்டியிடுவதற்குக் கூடத் துணிவற்ற நிலையில்தான்  தன்னை வலிமைவாய்ந்த கட்சியாகக் கதையளக்கும் பாசக உள்ளது. இதுவே பாசகவின் வீழ்ச்சியைத்தான் காட்டுகின்றது.
உத்தரபிரதேச மாநிலம், கைரானா தொகுதியில்  பாசக  நாடாளுமன்ற உறுப்பினர்  உக்கும் (சிங்கு)  காலமானதால் இடைத்தேர்தல் நடை பெற்றது. அந்தத் தொகுதியில் உக்கும்(சிங்கின்) மகள் மிரிகங்கா(சிங்கு) பாசக சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கெளவினார். (உ)லோக்தள் சார்பில் போட்டியிட்ட தபசம் அசன் அவரைவிட 55,000 வாக்குகள்  கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தான் வெற்றி பெற்ற  தொகுதியில் கூட மீண்டும் வெற்றி பெற முடியாத நிலையில்தான் பாசக இருக்கிறது. பாசக ஆளும் மாநிலத்திலேயே பாசக படு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதைவிட வெட்கக்கேடு அக்கட்சிக்கு வேறு இல்லை. முதல்வர்  (இ)யோகி ஆதித்யநாத்து பற்றிய பிம்பத்தைப் பாசகப் பெரிதாகக்காட்டி வருகிறது. இங்கே தோற்றதற்கு அவர் விலகியிருக்க வேண்டும். இருப்பினும் முதல்வர் பதவியில் நாணமின்றி ஒட்டிக் கொண்டுள்ளார்.
மகாராட்டிராவில்  தன்னிடமிருந்த பால்கர் மக்களவைத் தொகுதியில் மட்டும் பாசக  வெற்றி பெற்றுள்ளது. மேலும் இங்கே 17,31,077 வாக்காளர்கள் இருப்பினும் 8,69,985 வாக்காளர்கள்தாம் வாக்களித்துள்ளனர்.  ஏறத்தாழ பாதிபேர் வாக்களிக்கவில்லை. இதுவும்கூடப் பாசகவின்மீதான எதிர்ப்பலை யைக் காட்டுவதுதான்.
மேலும் பாசக வேட்பாளர் காவிது இராசேந்திர தேதியா பெற்ற வாக்குகள் 2,72,782 மட்டுமே. 7 கட்சிகள் போட்டியிட்டதில், சிவசேனா 2,43,210; பகுசன் விகாசு அகாதி 2,22,838 வாக்குகள் பெற்றுள்ளன. இங்கே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டிருந்தால் பாசக காணாமல்  போயிருந்திருக்கும்.
இந்தத் தேர்தலின்பொழுது இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றும் போக்கிரி(இரெளடி) பாணியில் தானும் அவர்களை(சிவசேனாவை) எதிர் கொள்வேன் என்றும்  முதல்வர் பட்னாவிசுபேசியுள்ளார். எனவே இஃது உண்மையான வெற்றியாக இருக்காது என்றே மக்கள் கருதுகின்றனர்.
நாகாலாந்தின் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள்நாயக முன்னேற்றக் கட்சியின்(Nationalist Democratic Progressive Party) தலைவர் நிபியோ (இ)ரியோ இருந்தார்.  இவர், பாசக ஆதரவுடன் அம்மாநில முதல்வராகி விட்டதால் இடைத்தேர்தல் நடைபெற்றது.  பாசக ஆதரவுடன் போட்டியிட்ட இக்கட்சி வேட்பாளர் தோகியோ (Tokheho)  வெற்றி பெற்றுள்ளார்.  இதனை மாநிலக்கட்சியின் வெற்றியாகக் கருதலாமே தவிரப்  பாசகவின் வெற்றியாகக் கருத முடியாது.
உத்தரகண்டு மாநிலம் தாரலி தொகுதியில் ஆளும் பாசக  வெறும் 1981 வாக்குகள்  வேறுபாட்டில்தான் வெற்றி பெற்றுள்ளது.
கருநாடகாவில் மறுதேர்தல் நடத்திக் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரலாம் எனக் கனவு கண்டது பாசக. 2014 இடைத் தேர்தலிலேயே  தனது கோட்டை என்று சொல்லிக் கொண்ட பெல்லாரி தொகுதியில் தோல்விகண்டது பாசக. இப்பொழுது  நடைபெற்ற இராசராசேசுவரி நகர் இடைத் தேர்தலில் பாசக தோல்வியுற்றது. வெற்றி பெற்ற பேராயக்(காங்.)கட்சி வேட்பாளரும் மசத  வேட்பாளரும் பெற்ற வாக்குகளில் (1,08,064+60,360)பாதிக்கும் குறைவாகத்தான் பாசக (82,572) பெற்றுள்ளது. இதன் மூலம் பாசகவின் குறுக்குவழி ஆட்சிக் கனவைக் கலைத்த கருநாடக மக்களைப் பாராட்ட  வேண்டும். அதேபோல் ஆட்சி யமைக்க வாய்ப்பு தந்த  பேராயக்கட்சிக்கு எதிராகப் போட்டியிடாமல் மசத  கட்சி,  தேர்தலில் இருந்து விலகி இருந்திருக்க வேண்டும்.  இக்கட்சி இங்கே வெற்றி பெற்றிருந்தால்  குமாரசாமி ஆணவக் குன்றின் மேல் ஏறி யிருப்பார்;  பேராயக் கட்சியை மிரட்டி ஆட்டிப் படைத்திருப்பார்; பேராயக்(காங்.)கட்சி பணியாவிடில் பாசகவுடன் கூட்டணிக்கு மாறவும் முயன்றிருப்பார். ஆனால், அதற்கு வாய்ப்பளிக்காத கருநாடக மக்கள்பாராட்டிற்குரியவர்களே
பாசக. தான் வெற்றி பெற்றிருந்த மாகராட்டிர மாநிலத்தின் பண்டாரா – கோண்டியா மக்களவைத் தொகுதியில் தேசியவாதக் காங்கிரசிடம் தன் வெற்றியைப் பறிகொடுத்தது.
பாசக, தனது கோட்டையாகக் கூறிககொள்ளும்  பாசக ஆளும் உத்தரபிரதேசத்தில் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில்  மக்கள் தோல்வியையே பரிசாக அளித்துள்ளனர்.
சட்டமன்றத் தொகுதிகளான, பீகார் மாநிலம் இயோகிஃகட்டு (Jokihat), மேகாலயா மாநிலம் அம்பட்டி, கேரள மாநிலம் செங்கனூர், மேற்குவங்க மாநிலம் மகேசுதலா (Maheshtala), உத்தரகண்டு  மாநிலம் தாரலி, பஞ்சாப்பு மாநிலம்  சாக்கோட்டு (Shahkot),  இயார்க்கண்டு மாநிலம் கோமியா, சில்லி, ஆகிய இடைத்தேர்தல் நடைபெற்ற பிற அனைத்து இடங்களிலும் பாசக மாபெரும் தோல்வியையே சந்தித்துள்ளது.
நடைபெற்ற  இடைத்தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு வெற்றி பெற்றிருந்தால் கூடப் பாசக மாபெரும் வெற்றி என்று ஓலமிட்டிருக்கும். இப்பொழுது இடைத்தேர்தல் தோல்விகள் வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம் இல்லை என்றும் மத்திய அ்ரசின் மீதான மக்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தவில்லை என்றும் கதறும் அமீதுசா முதலான பாசகவினர் நரேந்திர(மோடி)க்கு மக்கள் மாபெரும் வரவேற்பு  தெரிவித்துள்ளதாகக் கூறியிருப்பர்; இனி என்றும் பாசகவே ஆளவேண்டும் என்பதே மக்களின் பெரு விருப்பம் என்று  தெரிவித்திருப்பர்.   வெட்கங்கெட்ட கட்சிக்காரர்கள் அப்படித்தான் கூறுவர். ஆனால் மக்களாட்சியில் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள் உண்மையை உரைக்க வேண்டுமல்லவா?
 வாக்கு எண்ணிக்கையில் பாசகவிற்குப் பின்னடைவு எனக் கூறிய இதழ்கள், பாசகவின்படு வீழ்ச்சிக்குப்பிறகு அதனைப் பற்றிக் கூற அஞ்சுகின்றன. பாசக வெற்றி பெற்றிருந்தால்  நரேந்திர(மோடி)யின் பணமதிப்பிழப்பு, மக்கள் கருத்திற்கு மாறான பொது நிறுவனங்கள் அமைத்தல், பொது நுழைவுத் தேர்வு, சமற்கிருத இந்தித்திணிப்பு ஆகியவற்றை மக்கள் ஆதரிப்பதாகப் பக்கம் பக்கமாக எழுதியிருப்பர். சில இதழ்களில் தேர்தல் முடிந்தபிறகு தொடர்பான செய்திகளைத் தேடிப்பார்த்தால் எங்கோ ஒரு மூலையில்  சிறிய அளவில் வெளியிட்டுள்ளன. ஏனிந்த அச்சம்? மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டியது ஊடகங்கள் கடமையல்லவா? அக்கடமையிலிருந்து தவறலாமா?
பாசகவின் மக்கள் நலன்களுக்கு எதிரான கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் மக்கள் தந்த பரிசே இடைத்தேர்தல் முடிவு என உணர்த்தியிருக்க வேண்டுமல்லவா? இந்தத் தோல்விப்பரிசே பொதுத்தேர்தலிலும் வழங்கப்படவேண்டும், வழங்கப்படும் என்பதை எடுத்துரைத்திருக்க  வேண்டுமல்லவா? ஏன் வாய்மூடி அமைதி காக்கின்றன?  ஆதாயத்திற்காக உண்மையைக் கூறாமல் பாசகவிற்கு வால்பிடிப்பது ஊடக அறத்திற்கு எதிரானது அல்லவா?
 காணாக்கடி இயக்கம் (sting operation) மூலம் அண்மையில் மேற்கொண்ட கையுங்களவுமாகப் பிடிக்கும் நிகழ்ச்சியில் 19 ஊடகங்கள் பாசகவிற்கு விலைபோன உண்மையும்  விலை போவதற்கு மடிதற்று முந்துறும் ஆர்வமும் வெளிப்பட்டதைக்கண்டோம்,(மடிதற்று முந்துறும் = உடையை வரிந்து கட்டிக்கொண்டு முன் நிற்றல்)
இத்தகைய ஊடகங்கள் தததம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை ஆள்வோருக்கு உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் கூடங்குளம், நெடுவாசல், தூத்துக்குடி முதலான நகர்களில் மக்களுக்கு  ஏற்பட்டுவரும் துயரங்கள் நிற்கவும் பிற இடங்களில் இவை போல்  ஏற்படாமல் இருக்கவும் ஆள்வோர் நடவடிக்கை எடுப்பர். எனவே,  இனியேனும் மக்கள் நலன்நாடும் வகையில் ஊடகங்களில் செய்தி  வெளியிட வேண்டுகிறோம்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 448)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல வைகாசி 20-26, 2049 / சூன் 3 – சூன் 09, 2018

Thursday, December 8, 2016

இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு- இணையவழி இந்தித்திணிப்பு-தமிழகக்கட்சிகள்உறக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், இதழுரை : thalaippu_hindhi-vilambarangal_ithzahurai_ilakkuvanar-thiruvalluvan

இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு!

தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்?

  இந்திய விடுதலைக்கு முன்னரே இந்தித்திணிப்பிற்குக் கால் கோளிடப்பட்டது. அதன் ஒரு பகுதிதான் இந்திப்பரப்புரை அவை(இந்திப்பிரச்சாரசபா). இந்தியா விடுதலை பெற்ற பின்னர்  இந்தித்திணிப்பு என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப்  பேராயக்கட்சியால்(காங்கிரசால்) செயல்படுத்தப்பட்டது. இன்றைய நரேந்திரர்(மோடி) ஆட்சியில் வெகு விரைவாக இந்தித்திணிக்கப்பட்டு வருகிறது.
  வாடிக்கையாளர்   நல மையங்கள் அல்லது ஊழியப் பகுதியில் பொதுவாக இந்தி அல்லது ஆங்கிலம் உள்ளது; குசராத்தி மொழி மிக விரைவாக எல்லா மத்திய அரசு, அரசு சார் நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க தமிழை(யும் பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளையும்) அறிமுகப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?
  பொதுவாகப் ‘பிறமொழிகள்’ என்னும் தலைப்பில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் எண் கொடுக்கபட்டிருக்கும். பெரும்பாலும் அப்பிரிவு செயல்படாது. அவை செயல்படவில்லை என நாம்ஆங்கிலத்தைத் தெரிவு செய்தாலும்  இந்திதான் கேட்கும்; இந்தி பேசுநர்தான்  தொடர்பு கொள்வர் அல்லது தொடர்பு அலுவலருக்குப்பேசுவதற்காக எண் 9  ஐ அழுத்தினாலும்  வரும் தொடர்பாளர் இந்தி அல்லது ஆங்கிலம் என இந்தியிலேயே தெரிவிப்பார்.  இதுபோன்ற இந்தித்திணிப்புக் கொடுமைகள் கண்டு தமிழ், தமிழ் எனக் கூக்குரலிடுவோர் அமைதி காப்பதேன்?
இங்கே நாம் கூற வந்தது இணைய ஊடகங்களிலான இந்தித்திணிப்புபற்றி.
 அச்சுவடிவில் வரும் இதழ்கள் இணையப்பக்கங்களிலும் வெளிவருகின்றன. தனி இணைய இதழ்களும் வருகின்றன. இணையப்பக்கங்களில் காணுரைகள்(videos) இடம் பெறுகின்றன. இதற்கு முன்பு தொடக்கத்தில் விளம்பரம் இடம் பெறும்; அந்தப்  பகுதி தேவையில்லை என்றால் நாம் அதனை விட்டுவிட்டுத் தாவிச் செல்ல வாய்ப்பு இருக்கும். இப்பொழுது அவ்வாறல்ல. விளம்பரத்தைக் கண்டிப்பாகப் பார்த்துத்தான் ஆக வேண்டும். ஏனிப்படி  என்றால், இப்பொழுது வருவன  இந்தி விளம்பரங்கள்.
  தொலைக்காட்சி விளம்பரங்களில் இந்தித்திணிப்பு தொடங்கப் பெற்றதும் தமிழகக் கட்சிகள் எதிர்க்குரல் எழுப்பியிருந்தால், இந்த நிலை வந்திருக்காது. அவ்வாறில்லாமல் அமைதி காத்ததால், இன்னும் அமைதி காப்பதால், இந்தி விளம்பரங்களுக்கான பச்சசைக் கொடியாக நரேந்திர(மோடி)யின் ஃகிந்திய அரசு(Govt. of Hindia)  ஏற்றுக் கொண்டது. எனவே, இணைய விளம்பரங்களை  ஃகிந்தி மயமாக்கி வருகிறது.
  இந்தியா குடியரசான பொழுது வஞ்சக வாக்கால் இந்தித்திணிப்பு அரங்கேறியது. அப்பொழுது 15 ஆண்டுகளில் – 1965இல்- இந்தி முழுமையாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொலைநோக்கு கொண்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், அவ்வப்பொழுது நடைபெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் போதா எனக் கருதினார். எனவே, 1960 இல் இந்தித்திணிப்பை எதிர்க்கக் ‘குறள்நெறி’ இதழும் தமிழ்க்காப்புக்கழகமும் தொடங்கினார். இதன் மூலம் நாடெங்கும் இந்தி எதிர்ப்புக்கனல் மூட்டப்பட்டது. அத்துடன்  பேரறிஞர் அண்ணாவை அழைத்துத் தி.மு.க. விலைவாசிப் போராட்டங்களை விட்டுவிட்டு முழுமையாக இந்தித் திணிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.
  பேரறிஞர் அண்ணாவும் அதனை ஏற்றுக் கொண்டு முறைப்படிக் கட்சிப்  பொதுக்குழுவைக்கூட்டி இந்திஎதிர்ப்புப் போரில் முழுமையாகத் தி.மு.க.வை ஈடுபடுத்தினார். எனவே,  பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன், கலைஞர் கருணாநிதி என மேல்மட்டத்தலைவர்கள் முதற்கொண்டு அடிமட்டத் தொண்டர் வரை இந்தித்திணிப்பின் கொடுமையை மக்களிடம் உணர்த்தினர். இந்திஎதிர்ப்புப்படைத்தளபதி என அழைக்கப்பெறும் பேரா.சி.இலக்குவனார் தலைமையில் மாணவர்கள் அணி அணியாக  இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் 1965 இல் ஈடுபட்டனர்.  இதன் விளைவாக இந்தித்திணிப்பு தடுக்கப்பட்டது பேராயக்கட்சி – காங்கிரசுக் கட்சி – ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்றப்பட்டது அதனால் இதுவரை  மீ்ண்டும் கோட்டைக்குச் செல்ல இயலா நிலையை மக்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
   ஆனால் இன்றைக்கு அவ்வாறு விழிப்பூட்டும் தமிழ்ப்பேராசிரியர்களைக் காணவில்லை! இந்தி எதிர்ப்புப் போரில் பல களங்களைக் கண்ட தி.மு.க.வும் உறங்குகிறது. அக்கட்சியிலிருந்து கிளைத்து எழுந்த கட்சிகளும் காணா முகமாக உள்ளன. தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கு  ‘வந்தேறிகள்’ என வைவதற்கு நேரமிருக்கிறதே  தவிர, இது குறித்துச் சிந்திக்க நேரமில்லை.
  செல்லும் பணத்தைச் செல்லாதாக்கியதை எதிர்க்க எதிரும் புதிருமாக இருக்கும் பல கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன.  இந்த ஒற்றுமையை அவர்கள் இந்தித்திணிப்பிற்கு எதிராகவும் காட்ட வேண்டும். கலைஞர் கருணாநிதியை நெறியாளராகக் கொண்டு இக்கட்சிகள் ஒன்றுபடலாம். இவ்வாறு சொல்வதால் தமிழ்ஈழத்தில் அவர் தடம் புரண்டதை  ஏற்பதாகப் பொருளல்ல! வேறு காரணங்களுக்காக அவரை எதிர்ப்போர்  அவற்றை மறந்துவிட்டு இந்திஎதிர்ப்புப்போரில் அவர் ஆற்றிய தொண்டுகளையும் பட்ட தண்டனைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவது சரியானதே! பிற மாநிலங்களையும் இணைத்து ஓங்கிக் குரல் கொடுத்து இந்தித்திணிப்பை அடியோடுஅகற்ற வேண்டும்.
  தமிழகக்கட்சிகள்,  இந்திப்பரப்புரை அவை தமிழ்நாட்டில்  இருந்து அகற்றப்படவும் விருப்பப்பாடம் என்ற பெயரில் இந்தி திணிக்கப்படுவதையும்  தமிழ்நாட்டிலும், புதுச்சரேியிலும் மத்திய அரசு பள்ளிகளில் இந்திவழிக்கல்வி இருப்பதையும் நிறுத்தவும் விரைந்து செயலாற்ற வேண்டும்.
  தமிழ்த்தேசிய இயக்கத்தினர் அல்லது அமைப்பினர் கற்பனையான இந்தி()த்தேசியம் புகுத்தப்படுவதால் தமிழ்த்தேசியம் காணாமல் போகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தி இந்தித்திணிப்பை அகற்ற இணைந்து போராட வேண்டும்.
  ஒன்றுபட்ட அமைதியான அறவழிப்போராட்டங்களால் இந்தி அகற்றப்படவும் தமிழ் முதன்மை இடத்தில்  வீற்றிருக்கவும் தமிழ்மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். (திருவள்ளுவர், திருக்குறள் 674)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 163, கார்த்திகை 19, 2047 /  திசம்பர் 04, 2016
AkaramuthalaHeader

Followers

Blog Archive