Showing posts with label சங்கப்புலவர்கள் பொன்னுரை. Show all posts
Showing posts with label சங்கப்புலவர்கள் பொன்னுரை. Show all posts

Friday, April 25, 2025

சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- இலக்குவனார் திருவள்ளுவன்

 


(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9-தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 10

பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!

 “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக”

                  ஐங்குறுநூறு 5. 2

பதவுரை :

பிணி – நோய்; சேண் நீங்குக – தொலைவிற்குச் செல்லுக; அஃதாவது இல்லாமல் போகுக.

ஐங்குறுநூற்றுப் பாடலில் புலவர் ஓரம்போகியார் “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” என வாழ்த்துகிறார்.

பசி இல்லாமல் ஆவதும் நோய் தொலைவில் நீங்குவதும் இயல்பாக நடைபெறுமா? நாம் முயன்றால்தானே இயலும். நாம் உழைத்தால்தானே நடைபெறும்.

எனவே, இதன்மூலம் பசியும் நோயும் இல்லாத நிலைக்கு நாம் பாடுபட வேண்டும் என உணர வேண்டும்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர்,

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
.
(திருக்குறள், ௭௱௩௰௪ – 734)

என்கிறார்.

மிக்க பசியும் ஓயாத நோயும் பகையும் இல்லாத நாட்டையே நல்ல நாடு என இலக்கணம் தருகிறார். இத்தகைய நிலைக்கு நேர்மையாக அற வழியில் செயற்பட்டுப் பாடுபட வேண்டும்.

இந்த நல்ல நாட்டிற்குரிய இலக்கணத்தை எடுத்தியம்பித் தாய் வாழ்த்துவதாகப் புலவர் குறிப்பிடுகிறார்

உலகெங்கும் 820 பேராயிரம் (மில்லியன்) மக்கள் பசியால் துன்புறுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது. ஐ.நா.வின் புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கிலும் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகம்.

குறிப்பாகப் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2021 இல் 14.6 பேராயிரமாகவும் ஏப்பு (எய்ட்சு) நோயால் இறப்போரின் எண்ணிக்கை 6.5 பேராயிரமாகவும் (மில்லியன்) இருந்தது. 1981 முதல் 2007 வரை ஏப்பு (எய்ட்சு) நோயால் 250 நூறாயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

2007 வரை 332 நூறாயிரம் (மில்லியன்) பேர் இந்நோயுடன் வாழ்ந்துள்ளனர். உலகளவில் ஏறத்தாழ 300 பேராயிரம் மக்கள் 7000 அரிய நோய்களுடன் வாழ்கின்றனர்.

இந்தியாவில் 90 பேராயிரத்திற்கும் அதிகமானோர் (8%) எந்த மருத்துவமும் இல்லாமல் துன்புறுகின்றனர்.

இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. சூன் 2024 இறுதியில் உலகளவில் 122.6 பேராயிரம் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவருமே வறுமையில் வாடுபவர்களாகவும் நோயால் அல்லலுறுபவர்களாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறு உலகெங்கும் நோய் தாண்டவமாடுகிறது. ஐ.நா.வும் உலக நாடுகளும் தடுப்பூசி, தடுப்பு மருந்துகள், ஊட்ட உணவுகள் மூலமும் தக்க மருத்துவம் மூலமும் நோயை விரட்டப் பாடுபடுகின்றன.

இத்தகைய நிலையினைக் குறித்துத்தான் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே தமிழ்ப் புலவர் ஓரம்போகியார் நோய் இல்லா நிலையை வலியுறுத்துகிறார்.

ஒவ்வொருவரும் அரசுகளுடன் இணைந்து பசியும்நோயும் இல்லா நிலைக்குப் பாடுபட்டால் நாடும் நலமாக வளமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

எனவே, நாம் பசியில்லாமலும் நோய் இல்லாமலும் வாழ வகை செய்து நீடூழி வாழ்வோமாக!

Saturday, March 29, 2025

பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்! : சங்கப்புலவர்கள் பொன்னுரை– 6 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5 : தொடர்ச்சி)

               நல்லந்துவனார், கலித்தொகை 139, 1-3

நோ என்றால் துன்பம் எனப் பொருள். நோ என்பதிலிருந்து பிறந்ததே நோய். பிணியாளர்களுக்குத் துன்பம் தருவதால் பிணியும் நோய் எனப்படுகிறது. இங்கே நோய் என்பது துன்பத்தையே குறிக்கிறது.

பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல் கருதும் அறத்தைச் செய்தல் சான்றோர் கடமை என்கிறார் புலவர் நல்லந்துவனார்.

பிற உயிரினத் துன்பத்தையும் தம் துன்பம்போல் ஒருநாள் கருதினால் போதாது. என்றும் கருத வேண்டும் என்கிறார் புலவர். இதுவே தமிழ் நெறி.

                (திருக்குறள் ௩௱௰௫ – 315)

என்கிறார் திருவள்ளுவரும்.

பிற உயிர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதாவிட்டால் அறிவினால் என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர்.

மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்ல. பறவையினம், விலங்கினம், ஊர்வன இனம், நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.

அடுத்தவர்க்கு வரும் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதுதல் சான்றோர்க்கே கடமை எனில் இந்த உயர்ந்த பண்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமல்லவா?

“தன்னைப்போல் பிறரை நினை” என்னும் விழுமிய ஒழுக்க நெறியை இப்பாடலில் புலவர் வலியுறுத்துகிறார். நாமும் இப்பொன்னுரையை என்றும் பின்பற்றுவோம்.

Friday, March 21, 2025

சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5: உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 4: தொடர்ச்சி)

                  கபிலர், கலித்தொகை 62: 7, 8

– வெண்கலிப்பா

– கலித்தொகை – 62,  குறிஞ்சிக் கலி – 26

– தலைவன் கூற்று

– பாடியவர்: கபிலர்

– திணை: குறிஞ்சி

கி.மு. காலத்துப் பாடல்

தமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிந்து செய்வது நன்றாகுமோ?

தமக்கு ஒன்று இன்பம் பயக்கிறது என்பதால் பிறர்க்கு வலியச் சென்று துன்பம் தருவது நல்லதுதானா? என்று கேட்கிறார் கபிலர்.

ஆனால், இப்படியெல்லாம் கேட்டால் பெரும்பாலோருக்குப் புரிவதில்லை என்று, பின்னாளில் திருவள்ளுவரும்,

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
 பிற்பகல் தாமே வரும்”

                    (திருக்குறள், ௩௱௰௯ – 319) என்றார் போலும்.

ஆயினும் எத்தனை எழுதிவைத்தும் பயன் ஒன்றுமில்லையே! இதனை ஏற்போர் சிலராகத்தானே உள்ளனர்.

தனி மனித வாழ்வாக இருந்தாலும் குமுகாய வாழ்வாக இருந்தாலும் தம் நன்மை ஒன்றையே கருதி வாழ்வோரே பலராவர்.

போர்களும் பயங்கரவாதச் செயல்களும் தமக்கு இன்பம் தருகிறது என்பதற்காகப் பிறருக்குத் தீங்கிழைக்கவும் அழிக்கவும் தயங்காதவர்களால்தான் நிகழ்கின்றன.

இவ்வாறு தன்னலம் கருதிப் பிறர் நலன் அழிக்கும் இழிசெயல்கள் சரிதானா? முறைதானா? நன்றுதானா? என்றே புலவர் கபிலர் கேட்கிறார்.

எனவே, உனக்கு இன்பம் வருகிறது என்பதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே என்னும் சங்கப் பொன்னுரையை நாம் பின்பற்றி அனைவருக்கும் இன்பம் விளைவிப்போம்!

தாய் 21.03.2025




Followers

Blog Archive