Showing posts with label செம்மொழிச் செயலாக்கம். Show all posts
Showing posts with label செம்மொழிச் செயலாக்கம். Show all posts

Friday, November 21, 2025

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 




(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010):தொடர்ச்சி)

  1. 20. பண்பாட்டுத் துறை / மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் மட்டும் அல்லாமல், கல்வித்துறை மூலம் மிகுதியான நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு வேண்டியதை இந்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இதன் மூலம் வீண் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு ஏமாற்றம் அடைய வேண்டா என இந்திய அரசு உணர்த்துகிறது போலும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். செம்மொழி ஏற்பளிப்பால் விளையும் நன்மைகள் யாவை என நான் உட்படப் பலரும் எழுதிய கட்டுரைகளைப் படித்தாலே அவை யாவும் காற்றில் கட்டிய கோட்டைகளோ என்று எண்ணத் தோன்றும். எனினும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டாவது இவற்றை நிறைவேற்றும் முயற்சிகளில் அரசுகள்  இறங்கும் என நம்பிக்கை வைப்போம்.

? இளம் தமிழறிஞர்களுக்கு விருதுகள் கொடுத் துள்ளார்களே. அது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே?

#  நாம் மேம்போக்காக எண்ணுவதால் நமது உரிமைக்கு ஊறு நேர்வதை உணராமல், உலகின் மூத்த மொழியான செந்தமிழுக்கு உரிய சமநிலை மறுக்கப்படுவதை உணராமல் பெருமையாக எண்ணுகிறோம். 2005-06 முதல் மூன்றாண்டுகளுக்கு ஆண்டிற்கு ஐவர் என்ற அளவில் பதினைந்து இளம்அறிஞர்களுக்கு விருதுத்தொகை நூறாயிரம் உரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதைப் பிற மொழிஅறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் அவர்கள்தாம் வழங்குகின்றார்.  குடியரசு நாளன்று வழங்க முடியாமல் போனாலும் பிறகு பல்வகை விருதுகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றது போல் இளம்தமிழறிஞர் விருது வழங்குவதை நிகழ்த்தியிருக்கலாம். மாண்புமிகு முதல்வர் தில்லி சென்ற பொழுதுகூட இந்நிகழ்ச்சியை வைத்து இருந்திருக்கலாம். அவ்வாறு தராமல் காலந் தாழ்த்தியதால் தமிழக அளவில் விருதுத் தொகைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன; ஆனால் விருதுச் சான்றிதழ்  இதுவரை வழங்கப்படவில்லை. 2004-05 ஆம் ஆண்டிற்கான விருதுகளும் சேர்க்கப்படவில்லை. 2005-06 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருதும் 2006-07 ஆம் ஆண்டிற்கான குறள்பீட விருதும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஆண்டு வழங்கப்பட வேண்டிய விருதுகள் தரப்படவில்லை. இவ்வாறு விடுபட்டமைக்கு ஏதும் நடைமுறைக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அதைவிட முதன்மையான ஒன்றாகும். ஆண்டிற்கு 15 சமற்கிருத அறிஞர்களுக்கு  வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் தொடர் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பாலி அல்லது பிராகிருத அறிஞர் ஒருவருக்கும் அரபு அறிஞர் மூவருக்கும் பெருசியன் அறிஞர் மூவருக்கும் வாழ்நாள் முழுமைக்கும் ஆண்டுதோறும் மதிப்பூதியம்  50,000 உரூபாய் வழங்கப்படுகிறது. 2002 இலிருந்து, 8 சமற்கிருத இளம் அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருமுறை விருதுத்தொகையாக உரூ1.00 நூறாயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சமற்கிருதத்திற்கு ஒருமுறை மதிப்பூதியமும் ஆண்டுதோறும் மதிப்பூதியமும் என 23 பேருக்கு வழங்குகையில்  தமிழுக்கு ஒருமுறை மதிப்பூதியம் மட்டும் ஐவருக்கு மட்டுமே வழங்கப்படுவது அநீதியல்லவா? எனவே, ஒரு வேளை தமிழுக்குச் செம்மொழி ஏற்பால் நிதியுதவி வழங்கப்படுகின்றது என்றால் அவ்வுதவி தமிழைத் தாழ்த்தும் வகையிலும் நம் உரிமையைப் பறிக்கும் வகையிலும்தான் இருக்கிறது  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

? வேறு ஏதும் சமற்கிருத மொழி வளர்ச்சிக்கென உதவிகள் வழங்கப்படுகின்றனவா?

#  தமிழுக்கு இளம்அறிஞர் விருதுகள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன. ஆனால், சமற்கிருதத்திற்கு எண்ணற்ற வகையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. மற்றொரு சமசுகிருத அமைப்பின் மூலம்  ஏழு பிரிவுகளில் எண்மருக்கு ஆண்டுதோறும் உரூபாய் 21,000 முதல் உரூபாய் 51,000 வரை பொற்கிழியும் வெள்ளிக் கலசமும் பொன்னாடையும் மேலாடையும் பாராட்டுரையும் வழங்கப்படுகின்றன. அகில பாரதிய சமசுகிருதச் சேவை சன்மானம், அகில பாரதிய ஆயுர்வேதச் சன்மானம், அகில பாரதிய சோதிட சன்மானம் எனப் பலவகைகளில் சமற்கிருதம் படிப்பவர்கள், அறிந்தவர்கள், படிப்பிப்பவர்கள், எழுதுபவர்கள், பதிப்பவர்கள், மொழிபெயர்ப்பவர்கள்  என அனைத்துத் தரப்பாருக்கும்  நிதி யுதவிகள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சமசுகிருத் சன்மானம் மூலம் நிதியளிக்கப்படுகின்றது. 100 விழுக்காட்டுத்  தேர்ச்சியைத் தரும் சமசுகிருத ஆசிரியர்களுக்கு  ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. இந்தியா முழுமையும் 30 நிறுவனங்களுக்குச் சமசுகிருதப் பயிற்சிக்கும் பரப்புதலுக்கும் என ஆண்டுதோறும் பத்துக்கோடி உரூபாய்க்கும் மேலாக நிதியுதவி வழங்கப்படுகிறது. பகுதிநேரம் சமசுகிருதம்  கற்பிப்போருக்கான ஊதியத்தை மத்திய அரசே தருகின்றது. நூல்கள், குறுந்தகடுகள், ஒளிப்பேழைகள், அட்டவணைப் படங்கள், விளம்பர ஒட்டிகள் முதலான பல்வகை வெளியீடுகளுக்கென கோடிக்கணக்கில் நிதியுதவி செய்துவருகின்றது. சாத்திர சூடாமணித் திட்டம் என்ற பெயரில்  ஓய்வு பெற்ற சமசுகிருத ஆசிரியர்களுக்குப் பணிநீட்டிப்பு வழங்கி சமசுகிருதம் கற்றுத் தரச் செய்வதற்கு எனத் திட்டச் செலவில் 17.00 கோடியும் திட்டம் சாரா செலவில் 16.50 கோடியும் ஒதுக்கப்படுகின்றன.

இவை தவிர சமற்கிருத வளர்ச்சித் திட்டத்திற்கென  நடைமுறையில் உள்ள திட்டங்களுக்காக 11 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 32,985 நூறாயிரம் உரூபாய் ஒதுக்குவதற்குத் திட்டம் தீட்டியுள்ளார்கள்.  புதிய திட்டங்கள் தலைப்பில், சமசுகிருதம், பாலி, பிராகிருதம், பெருசியன், அரபி, திபேத்தியன் மொழிகளுக்கான கல்விக்கென ஒதுக்கீடு கோரியுள்ளனர். இதில் தமிழுக்கு ஒதுக்கீடு இல்லை. இவ்வாறாகச் செவ்வியல் மொழி என்ற போர்வையில் சமசுகிருத வளர்ச்சிக்குச் செலவிடும் ஒட்டு மொத்தத் தொகையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுகூடத் தமிழுக்கு ஒதுக்கப்படவில்லை.

Tuesday, September 30, 2025

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 




(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): தொடர்ச்சி)

#  தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தமிழின் சிறப்புகளைக் குறைத்தும் தமிழைப் பழித்தும் பேசியும் எழுதியும் வருபவர்கள்தாம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாநாட்டின் மூலம் தவறான முடிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக மொழியியல் அமர்வில் எழுத்துச் சிதைவு பற்றிய  உரை நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலர் இருக்கப் பொறியில் படித்து விட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் முதலான தமிழ் வளர்ச்சி அமைப்புகளில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் செல்வாக்கு பெற்ற பொறியாளர் ஒருவர், இம்மாநாட்டின் மூலம் எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்னும் பெயரில் எழுத்துச் சிதைவிற்கு வழிவகுக்கத் திட்டமிட்டுள்ளார். எனவே, தமிழன்பர்கள் புறக்கணித்தால், அனைவரின் முடிவு எனக் கூறித் தமிழ் எழுத்துச் சிதைவிற்கு  ஆணை பிறப்பிக்கச் செய்ய அல்லது முதற்கட்டமாக அதற்கான குழு அமைக்க முடியும். தமிழன்பர்கள் பங்கேற்று ஒன்று திரண்டு எதிர்த்தால்தான் அதனைத் தடுக்க இயலும். எனவேதான் நானும் இவ்வமர்வில் ‘வரிவடிவச் சிதைவு வாழ்விற்கு அழிவு’ என்னும் தலைப்பில் கட்டுரை அளிக்கின்றேன். மாநாட்டிற்கு முன்பே உலகளாவிய எதிர்ப்பைத் தமிழன்பர்கள் காட்டிவருவதால்தான் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் கருத்தமர்வுத் தலைப்பை மாற்றி மொழியியல் தலைப்பின் கீழ் அவற்றைக் கொண்டு வந்துள்ளனர். இம்மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறுவதால்  இணைய வழி இணையற்ற தமிழை நாம் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இவை தவிர தமிழ் அழிப்பாளர்களைக் காலம் வரலாற்றில் இருந்து அகற்றும் என்ற நம்பிக்கை இருந்தால் நாம் இம்மாநாட்டில் பங்கேற்பது குறித்துத் தவறாக எண்ண மாட்டோம்.

# அவ்வாறல்ல. உலகின் மூத்தமொழியான உயர்தனிச் செந்தமிழுக்கு அறிந்தேற்பு கிடைத்தது என்றால் என்னென்ன நன்மைகள் விளையும் என எதிர்பார்த்தோமோ அவற்றில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேறவில்லை; இனியாவது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் நாம் செயல்படுவோம்.

#

  1. இந்திய அரசு செந்தமிழின் அறிந்தேற்பிற்கான ஒத்திசைவைப் பிற நாடுகளிலும் ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெசுகோ முதலான பன்னாட்டு அவைகளிலும் பெற்றுச் செம்மொழியாம் தமிழைப் பரப்ப முழு நிதியுதவி பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு  ஈடேறும் நாள் என்று எனத் தெரியவில்லை.
  • அனைத்துநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் தமிழியல் துறை தொடங்க  இந்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏட்டளவில்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் மிகச் சிலவாக உள்ள பிற நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள் மூடும் நிலையில்தான் உள்ளன என்னும் நிலைமை என்று மாறும் என்பது தெரியவில்லை.
  • இந்தியாவில் உள்ள பிற மாநிலப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் துறை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காற்றோடு கலந்து விட்டதோ எனக் கவலை அளிக்கிறது.
  • அஞ்சல்வழியாக இந்தியைப் பரப்புவது போல் மத்திய அரசு அஞ்சல்வழிகளில் தமிழைப் பரப்பும்; ஒவ்வொரு பல்கலைக்கழகம் ஒவ்வொரு மொழியின் மூலம் தமிழைக் கற்பிக்கும் என்ற திட்டத்தில் அனைத்து மொழிகளின் வாயிலாகத் தமிழ் கற்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் வெறுங்கனவாய்ப்போய்விடுமோ என்று வருந்த வேண்டியுள்ளது.
  • பிற நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும் தமிழியல் துறைகள் மூலம், அந்தந்த நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றைப் பிறநாட்டுப் புலவர்கள் வணங்கும் நாள் வெகு தொலைவில்கூடத் தெரியவில்லை.
  • தமிழ்க்கலைகளின் பயிற்சி, வளர்ச்சி, பரப்புதல், பேணுதல், ஆவணமாக்கல் முதலான முயற்சிகளுக்கு நிதியுதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில்தான் முடியுமோ என்று தெரியவில்லை.
  • தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் 1. தமிழ் இலக்கியப் பீடம், 2. தமிழ் இலக்கணப் பீடம், 3. தமிழ்க் கலைச் சொல்லாக்க ஆய்வுப் பீடம்,  4. தமிழ் மொழி பெயர்ப்புப் பீடம், 5. தமிழ் ஒப்பிலக்கியப் பீடம், 6. தமிழ்க் கலைப் பீடம் எனப் பல்வேறு தமிழ்ப்பீடங்கள் நிறுவப்படும் என்ற எதிர்பார்ப்பு எண்ணமுடியாத தொலைவிற்குச் சென்றுவிட்டதோ எனத் தெரியவில்லை.
  • செம்மொழித் திட்டத்தின் கீழ்ச், சமசுகிருத வளர்ச்சிக்காக என ஆயுர்வேத மருத்துவத்திற்குப் பல கோடி உரூபாய்கள் நிதி ஒதுக்கப்படுவதுபோல் தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கெனத்  தமிழ் மருத்துவம் படிக்கவும், தமிழ் மருத்துவ நூல்கள் வெளியிடவும், தமிழ் மருத்துவக் கட்டுரைகளை வெளியிடவும், உலகத் தமிழ் மருத்துவக் கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தவும், தமிழ் மருத்துவ இதழ்கள் வெளியிடவும்  தனி நிதியம் ஏற்படுத்தி இதற்காகும் மூல வைப்புத் தொகையை இந்திய அரசு வழங்கும் என  எதிர்பார்த்த நிதி ஒதுக்கீட்டைப்பற்றிய எண்ணமே அரசுகளுக்கு இல்லை என்பது வருத்தமாக உள்ளது.
  • மத்திய இடைநிலைக் கல்விக் கழகம் சார்பில் இந்தியா உட்பட 19 நாடுகளில் 9275 பள்ளிகள் உள்ளன. இங்கு சமற்கிருதம் முதல்மொழியாகவும் விருப்ப மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றது. செம்மொழித் தமிழுக்கும் இவ்வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது பற்றிய எண்ணமே அரசுகளுக்கு இல்லை என்பது வேதனை அளிக்கின்றது.
  1. ஏறத்தாழ 800 சமசுகிருதப் பயிலகங்களுக்கு 75 விழுக்காடு நிதியுதவி வழங்கி வருவதுபோல், தமிழ்ப் பயிலகங்களுக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று அடைந்த மகிழ்ச்சி  இருந்த இடம் தெரியாமல் போகும் அளவிற்கு இவை புறக்கணிக்கப்படுகின்றன.

(தொடரும்)

Tuesday, September 23, 2025

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 




(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): தொடர்ச்சி)

# 1918 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய சைவ சித்தாந்த மாநாட்டில்தான் தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேண்டுதல் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சார்பில் 1919 ஆம் ஆண்டிலும் 1920 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற ஆண்டு விழாக்களின் பொழுது இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  வலியுறுத்தப்பட்டது. இவற்றிற்குப் பின்னர் பல்வேறு அமைப்புகளும் அறிஞர்களும் செவ்வியல் மொழி அல்லது செம்மொழி என்னும் தகுதியேற்பைத் தமிழ் மொழிக்கு வழங்க வேண்டும் என வேண்டினர்.

# மொழியியலாளர்கள் ஒரு மொழியைச் செம் மொழியாக அறிவிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என வரையறுத்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் அறிஞர் மணவை முசுதபா, செம்மொழித் தகுதிகளாகத்  1) தொன்மை 2) தனிச்சீர்மை 3) பொதுமைப்பண்பு 4) நடுவுநிலைமை 5) தாய்மைத்தன்மை 6) பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு 7) பிற மொழிச் சார்பின்றித் தனித்து இயங்கும் தனமை 8) இலக்கிய வளம் 9) உயர் சிந்தனை 10) கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடும் பங்களிப்பும் 11) மொழிக்கோட்பாடு எனத் தொகுத்தளித்துள்ளார். இவற்றுள் 7 தகுதிகள் மட்டும் உள்ள சமற்கிருதத்திற்குச் செம்மொழிக்கான அறிந்தேற்பு வழங்கிவிட்டு 11 தகுதிகளும் உள்ள தமிழ் புறக்கணிக்கப்பட்டமையாலேயே போர்க்கொடி உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால், தமிழுக்கு அறிந்தேற்பு வழங்கும் பொழுதுதான் அத்தகைய அறிந்தேற்பு எதுவும் வழங்காமலேயே வழங்கியதாகப் பொய்யான கருத்துப் பரவலை ஏற்படுத்தி அம்மொழிக்குப் பல கோடி உரூபாய் உதவி வருவது தெரிய வந்தது.

# தமிழுக்குச் செம்மொழிக்கான அறிந்தேற்பு வழங்கப் பட்டமையால் இதனை வளர்க்கவும் பரப்பவும் பேணவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டுத் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அவ்வமைப்பு இயங்கிச் செயல்பட்டு வருவது அறிந்தேற்பின் முதல் நன்மை எனலாம். இம்மையத்தின் சார்பாகச் செம்மொழி என்னும் இருமொழி இதழ் வெளிவருவதுடன், தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் நல்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடத்த நிதியுதவி நல்கி வருகின்றனர்; எனவே, பல்வேறு கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது காரைக்குடியில் திசம்பர் 2009இல்  கோவிலூர் மடத்துடன் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கம் ஆகும். இக் கருத்தரங்கம் மூலம் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என வரையறுத்துள்ளனர். மேலும் ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கு ஆய்வுநிதிஉதவி செய்து வருகின்றனர். அறிஞர்களுக்கும் இவ்வாறு ஆராய்ச்சி நிதியுதவி அளித்து வருகின்றனர்.  தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதலியவற்றை எளிதில் பயில்வதற்கு அல்லது மனனம் செய்வதற்கு வசதியாக முற்றோதல் ஒலிப்பேழைகளாக வெளியிட்டு வருகின்றனர். இவற்றால் தமிழ் மாணாக்கர்கள் மட்டும் அல்லாமல் பிறரும் இவற்றை அறியவும் படிக்கவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மொழி பெயர்ப்புப் பணியிலும் வெளியீட்டுப் பணியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனவே, இவ்வாறான தமிழ் வளர்ச்சிப் பணிகளும் பரப்புப் பணிகளும் செம்மொழி அறிந்தேற்பால் நமக்குக் கிடைத்த நன்மைகள் என்று சொல்லலாம்.

# உலக அளவிலான மாநாடு நடைபெறுவதும் தமிழ்க்கூடல் நடைபெறுவதும் அறிந்தேற்பால் விளைந்த பயன்தானே.

தமிழ்ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைகளினால் இத்தகைய விழா நடைபெறவேண்டா என எண்ணுவோர் உணர்வில் தவறில்லை. குடும்பத்தில் துயர நிகழ்ச்சி நடைபெற்றால் ஓராண்டு கழித்துத்  துயரத்தை மறந்து வழக்கமான நிகழ்வுகளில் பங்கேற்பது இயற்கைதானே! குளத்தில் தன் தேவைக்காகப் புழுக்களை மீன் தின்றாலும் குளம் தூய்மையாக உதவுவதாகக் கலைஞர் குறிப்பிடுவது  அதன் தன்னலம் பொதுநலத்திற்கு உதவுவது இதற்கும் பொருந்தும் அல்லவா? மாநாட்டின் நோக்கம் என்னவாக இருந்தாலும் உலக அறிஞர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கிடைக்கிறது; மேடைகளில் இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறைச் சந்திப்புகளில் தத்தம் உணர்வைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. ஆய்வரங்கங்களும் பிற அரங்கங்களும் ஆய்வாளர்களும் நோக்காளர்களும் தங்களை வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவும்; தமிழ் மேம்பாட்டிற்கு இவை வழிவகுக்கும். மாநாட்டை முன்னிட்டுப் பெயர்ப்பலகைகளில் தமிழ், சான்றிதழ்களில் தமிழ் எனச் சென்னை மாநகராட்சித் தலைவர் திரு மா.சுப்பிரமணியம் நடவடிக்கை எடுப்பதும் பிற மாவட்டங்களில் அதிகாரிகள் இவை போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதும் இம்மாநாட்டின் விளைவுதான் எனில் அதற்கு மூலக்காரணம் செம்மொழி அறிந்தேற்புதானே! செம்மொழிப்பாடல், செம்மொழிச் சுடர் ஓட்டம் முதலானவற்றின் மூலம் குறிப்பிட்ட தரப்பாருக்காவது எழுச்சி ஏற்படுவதும் நன்மைதானே! அத்துடன் மாநாடு நடத்துவது என முடிவான பின்னர் தமிழன்பர்கள் புறக்கணித்தால், தமிழ்ப்பகைவர்கள் தங்களுக்கு வாய்ப்பாக மாநாட்டைப் பயன்படுத்தித் தமிழுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவார்கள் அல்லவா? அதைத் தடுக்க வேண்டாவா?

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் (திருக்குறள் 487)

என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அதை நினைவில் கொள்ள வேண்டும்.

#  திருக்குறளில் 49 ஆம் அதிகாரமான காலம் அறிதலில் 7 ஆவது குறள் இது. அறிவு மிகுதியுடையார் பிறருடைய தீமையைக் கண்டு உடனே வெளிப்படையாகச் சினம் கொள்ள மாட்டார்; அவரை வெல்லுவதற்குரிய காலத்தினை எதிர்நோக்கி அது வருந்துணையும் உள்ளத்தின் உள்ளே வெகுண்டு கொண்டு இருப்பர் என இக்குறளுக்குச் செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கம் அளித்துள்ளார். நாம் என்னதான் புற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டாலும் நம் உள்ளம் இழைக்கப்பட்ட அநீதிபற்றிய வேதனையில்தானே இருக்கும். எனவே, வெல்வதற்கு வாய்ப்பு இல்லாத பொழுது வீணாகச் சினத்தை வெளிப்படுத்தி நம் உணர்வையும் உள்ள உறுதியையும் பாழ்படுத்துவதைவிட உள்ளத்திற்குள் கறுவிக் கொண்டு இருந்து உரிய சமயத்தில்  பழி வாங்க வேண்டும் என்னும் அருமையான இத்திருக்குறள் பொன்மொழியை நாம் மனத்தில் எண்ணினால் மாநாட்டில் பங்கேற்பது குறித்துத் தவறான எண்ணம் வராது.

(தொடரும்)

Wednesday, September 17, 2025

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 




? ஐயா, வணக்கம். உங்களிடம்  தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது தொடர்பாகச் சில வினாக்களைத் தொடுத்து விடை கண்டறிந்து வாசகர்களுக்கு அளிக்கலாம் எனக் கருதுகிறோம்.

# வணக்கம். உங்கள் வாசகர்களுடன் செவ்வி வழித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி. பலரும் செம்மொழித் தகுதி தமிழுக்கு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது போல் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய முதல் மொழியான தமிழ் அறிவியல் முறையில் அமைந்து செம்மையான மொழியாகவே தோன்றியுள்ளது. செம்மொழித் தன்மை மிக்க தமிழுக்கு அதற்கான அறிந்தேற்பு அல்லது தகுதியேற்பு அல்லது  அங்கீகாரம் என்பதுதான் இப்பொழுது இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

?  அப்படியானால்  செம்மொழி என்று தமிழ் எப்பொழுது குறிக்கப்பட்டது.

# செம்மையான மொழி என்னும் பொருளில் செம்மைத் தமிழ்  செந்தமிழ்  என அழைக்கப்பட்டுள்ளது. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள தொன்மையான நூல் தொல்காப்பியம். உலக மொழிகளிலும் கிடைத்துள்ள நூல்களில் இதுவே  தொன்மையான நூல் ஆகும். தொல்காப்பிய நூற்பா 881 இல் செந்தமிழ் நிலத்து என்றும் நூற்பா 882 இல் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் என்றும் தொல்காப்பியர் செந்தமிழ் மொழி வழங்கிய நிலம் என நம் நாட்டைக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்திற்கு முன்னுரை போல் பாயிரம் எழுதிய பனம்பாரனார் “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்” என்கிறார். தொல்காப்பியர் கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.மு. 7 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச சேர்ந்தவர் என அறிஞர்கள் கூறுகின்றனர். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்தின் சார்பில் கூடிய தமிழறிஞர்கள் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என வரையறுத்துள்ளனர். எனவே, அப்பொழுதே செந்தமிழாக விளங்கிய தமிழின் நிலை குறிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பல ஆயிரம் இலக்கியங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவதே இலக்கணம் என்பதால் தொல்காப்பியருக்குப்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழாக நம் அருமைத் தமிழ் மொழி விளங்கியதைப் புரிந்து கொள்ளலாம். தொல்காப்பியருக்குப் பின்னரும், குற்றமில் செந்தமிழ், சீரின்மலி செந்தமிழ், பண்பட்ட செந்தமிழ், பழுத்த செந்தமிழ், என்றெல்லாம் காலம் தோறும் தமிழின் செம்மொழித் தன்மை குறிக்கப்பட்டுள்ளமையால்  அன்னைத் தமிழின் செம் மொழித் தன்மை காலம் தோறும் உணரப்பட்டுப் போற்றப்பட்டதை உணரலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் செம்மொழியாக உள்ளதெனில் ஏன் அது குறித்து இப்பொழுது வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்தது?

#  நல்ல கேள்வி.  ஆரியத்தின் தவறான செல்வாக்கால் தமிழின் தாய்மை, தொன்மை, முதன்மை, தூய்மை, முதலான பல சிறப்புகளும் மறைக்கப்பட்டன. சமற்கிருதம் தமிழுக்கு மிகவும் பிந்தைய கால மொழியாய் இருப்பினும் தமிழ்ச் சொற்கள் பலவற்றை அம்மொழி உள்வாங்கியிருப்பினும் தமிழ் எழுத்து அமைப்பைப் பார்த்தே அம் மொழி தனக்குரிய எழுத்து வடிவத்தை அமைத்திருப்பினும் அதைத் தேவ மொழி என்றும் பிற மொழிகளுக்குக் கடன் கொடுக்குமே அன்றிக் கடன் வாங்காது என்றும் தவறாகப் பரப்புரை மேற்கொண்டனர். எனவே, காலந்தோறும் தமிழ் அறிஞர்களும் நடுவுநிலைமையுடன் தமிழின் சிறப்பை வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

அண்மைக்காலங்களில் தமிழின் செம்மொழித் தன்மையை வலியுறுத்தவர்கள் என யார், யாரைக் கூறலாம்?

#  சீகன்பால்கு என்னும் ஐரோப்பிய அறிஞர் செருமானிய மன்னரிடம் தமிழ்தான் உலகில் மிக உயர்ந்த நிலையிலுள்ள மொழி என்றும் செம்மொழி என்றும் விளக்கித் தமிழின் அருமையை மன்னர் அவையில் விளக்கியுள்ளார். வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர் காலத்தில் இருந்த சங்கராச்சாரியாரிடம் தமிழின் செம்மொழித் தன்மையை விளக்கி  இந்திய நிலப்பகுதியில் உள்ள மொழிகளுக் கெல்லாம் தந்தையாகத் தமிழ் விளங்கியது என விளக்கியுள்ளார். தமிழ் மொழி தனித்து இயங்கக் கூடிய உயர்தனிச் செம்மொழி என அறிஞர் காலுடுவெல் அவர்கள் தம்முடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (Comparative Studies of Dravidian Languages) என்னும் நூலில் (1856) நன்கு ஆய்ந்து விளக்கியுள்ளார்.  சூரிய நாராயண சாத்திரியார் என்னும் தம் பெயரை மாற்றி வைத்துக் கொண்ட அறிஞர் பரிதிமாற்கலைஞர்  அவர்கள், தமிழ் வியாசங்கள் என்னும் தம் நூலில் (1897) எவ்வகையாக ஆராய்ச்சி செய்தாலும் தமிழே உயர்தனிச் செம்மொழி என உறுதிபட ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார். சங்கப் பாடல்கள் செம்மொழி இலக்கியங்கள் என அறிஞர் (இ)ரெனால், அறிஞர் மெட்டில் ஆகியோர் உலகிற்கு உணர்த்தியுள்ளனர். தமிழ் மிக மிக முற்பட்ட காலத்திலேயே  இத்தகைய வளர்ச்சியைப் பெற்றதாக அறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் விளக்கியுள்ளார்.  இவர்கள் போன்ற அறிஞர்களை நாம் என்றென்றும் போற்றிச் சிறப்பிக்க வேண்டும்.

? தமிழ் மட்டும்தான் செம்மொழியா?

#  உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருப்பினும் இலக்கிய இலக்கணச் சிறப்பு மிக்கவை 600 மொழிகள் மட்டும்தான். இவற்றுள்ளும் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வரலாறு உடையன தமிழ், சீனம், இலத்தீன், ஈபுரு, கிரேக்கம், அராமிக்கு ஆகிய 6 மொழிகள்தாம். இவையும் இவற்றிற்கு அடுத்த நிலையில் உள்ள சமற்கிருதம்,  பெருசியன், அரபி ஆகிய 3 மொழிகளும் செம்மொழிகள் எனப்படுகின்றன.

செம்மொழிக்கான அறிந்தேற்பு அல்லது அங்கீகாரம் என்பது ஏன் தேவைப்பட்டது?

# இந்த நிலப்பரப்பின் மண்ணின் மொழியாகத் திகழும் தமிழ் மொழிச் செம்மொழியாகத் திகழ்ந்தாலும் வந்தேறி மொழிகளான சமற்கிருதம், அரபி, பெருசியன் ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி என்னும் தகுதியின் அடிப்படையில் நிதியுதவிகள் வழங்கப்பட்டமையால், மக்கள் மொழியாகிய தமிழுக்கும் அத்தகுதிக்கான அறிந்தேற்பு வேண்டும் எனத் தமிழறிஞர்களும் தமிழ் அமைப்புகளும் வேண்டின. தமிழ் ஈழம் தனிக் குடியரசாகத் திகழ்ந்த போதும் பிற நாடுகளின் அறிந்தேற்பு அதற்குக் கிடைக்காமையால்தானே இனப்படுகொலை நடந்த பொழுது தட்டிக் கேட்க யாரும் வரவில்லை. தமிழ் மொழிக்குச் செம்மொழிக்கான அறிந்தேற்பு இல்லாமல் போனால் தாழ்த்தப்பட்டு அழிக்கப்படலாம் அல்லவா? அவ்வாறில்லாமல் அறிந்தேற்பு கிடைப்பின் உலகெங்கும் பரப்ப வாய்ப்பு கிட்டும் அல்லவா?

(தொடரும்)


Followers

Blog Archive