Showing posts with label தீர்ப்பு. Show all posts
Showing posts with label தீர்ப்பு. Show all posts

Friday, October 26, 2018

ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

..பதினெண்மர் வழக்கு:

மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்!

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.(திருவள்ளுவர், திருக்குறள் 578)
 தீர்ப்பு என்பது வழக்கின் தன்மையைமட்டும் கருதி வழங்கப்படுவதில்லை. நேர்வுகளுக்கேற்ப, வழக்காளிகளின் செல்வாக்கு, வழக்கின் பரபரப்புத் தன்மை, நீதிபதியின் பார்வை, வழக்குரைஞர்களின் வாதத்திறமை, வழக்கு நீட்டித்து ஆனால் சட்டென்று உடனே தீர்ப்பு சொல்ல வேண்டிய காலச்சூழல், அரசியல் மேலாதிக்கம் முதலியவற்றின் அடிப்படையிலேயே பல தீர்ப்புகள் அமைகின்றன. பணிச்சுமைகளில், வழக்குரைஞர் அல்லது வேறு யாராலோ தெரிவித்துத் தட்டச்சிடப்படுவதே தீர்ப்பாக வந்துள்ளதாகவும் சில சமயங்களில் கூறியுள்ளனர். சில நல்ல தீர்ப்புகளுக்கு மோசமான எதிர்க் கருத்துகள் வந்துள்ளன. சில மோசமான தீர்ப்புகள் நேர்மையானவையாகக் காட்டப்பட்டும் உள்ளன. எவ்வாறிருப்பினும் கீழமைவு நீதி மன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை தீர்ப்புகள் மாற்றப்பட்டுள்ளன என்பதே தீர்ப்பின் நிலையற்ற தன்மையை விளக்கும்.
  தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது குறித்த கருத்தைச் சொல்ல யாருக்கும் உரிமையுண்டு. இதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கூற இயலாது. நீதிமன்றத்தீர்ப்பைச் செயல்படுத்தும் நிலையில் உள்ளவர், மேல்முறையீடு செய்துள்ளமை போன்ற காரணம் இன்றிச் செயல்படுத்தாதிருந்தால் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதலாம்.
 நீதிபதி, தான் உய்த்துணர்ந்ததன் அடிப்படையில் தீர்ப்பு சொல்லி யுள்ளதை, அவர் பயன் அடைந்தோ பயன் எதிர்நோக்கியோ தீர்ப்பு சொன்னதாகப் பொய்க்குற்றம் சாட்டுவதும் நீதிமன்ற நடவடிக்கைக்குரியதே!
 எனவே, நாடே எதிர்நோக்கிய – உலகின் பல பகுதிகளில் எதிர்பார்த்திருந்த – தீர்ப்பு வெளியானபின்னர் அது குறித்து மக்களிடம் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை ஊடகத்திற்கு உண்டு என்ற அளவில் நாமும் சிலவற்றைத் தெரிவிக்க விருமபுகிறோம்.
 தகுதிநீக்க வழக்கினை விரைவாக முடிப்பதாகக் கூறி 12 நாள் கேட்பில் ஆகத்து 31 இல் இறுதிக் கேட்பு நிகழ்ந்தது. ஆனால், கிட்டத்தட்ட அட்டோபர் இறுதியில் அஃதாவது அட்டோபர் 25(2018) ஆகிய நேற்றுதான் தீர்ப்பு சொல்லப்பட்டது.
 18 சட்ட மன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்த வழக்கில் மூன்றாம் நீதிபதியின் தீர்ப்பு காலந்தாழத் தாழ இவர்களுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் எனப் பலரும் கருதினர். அதற்கேற்பவே தீர்ப்பும் வந்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டமன்றத்தலைவரின் தீர்ப்பு தவறெனக் குறிப்பிட்டு இரண்டாம் நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பை ஏற்று இதனை அறிவிப்பதாகச் சொல்லியிருப்பார் என்றுதான் அறத்தை எதிர்பார்த்தவர்கள் நம்பினர். இருப்பினும் அரசியல் சூழல் மாறாகவே தீர்ப்பைத் தரும் என்ற அச்சமே பலருக்கும் இருந்தது.
  இத்தீர்ப்பு படிக்கும்பொழுது ஆராய்ந்து சொல்லப்பட்டதுபோல்  எழுதப்பட்டிருந்தாலும் நாம் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதே  நீதிக்குமாறான பல இடறல்களைக் காண முடிகிறது.
  முதல் இடறல் பன்னீர் அணிக்கு ஒருமாதிரி நடவடிக்கையும் தினகரன் அணிக்கு வேறுமாதிரி நடவடிக்கையும் எடுத்ததாகக் குற்றம்சாட்டியதற்குத் தீர்ப்பு சொல்லும தவறான விளக்கம்.
 கடந்த 2017ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 18ஆம் நாள் தமிழகச் சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திக்கு எதிராக அதிமுக ச.ம.உறுப்பினர்களில் பன்னீர் அணியினர் 11 பேர் வாக்களித்தனர். இது குறித்து பேரவைத்தலைவருக்கு முறையிட்டும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்தான் திமுக கொறடா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். தீர்ப்பு வந்ததன் பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடும் செய்துள்ளார்.
 அரசை எதிர்த்து நம்பிக்கையில்லை என வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தீர்ப்பு கூறுகிறது. எனவே அவர்களுக்குச் சாதகமாகவும் ஒருதலைச்சார்பாகவும் பேரவைத்தலைவர் செயல்பட்டார் என்பதை ஏற்க முடியாது  என்றும் தகுதி நீக்க விதிகளையும் இயற்கை நீதியையும் முழுமையாகப் பின்பற்றியே உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும் தீர்ப்பு கூறுகிறது.
உண்மைப் பூச்சுணைக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றதாக இத்தொடர்கள் அமைந்துள்ளன.
 மக்கள் எழுப்பும் வினா, அரசிற்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த பொழுதும் அதை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டிய பின்பும் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், வேறு கட்சியினருடன் சேராமல் நாட்டுத்தலைவர் என்ற முறையில் ஆளுநரிடம் முதல்வரை மாற்றுமாறு கோரியதற்குச் சட்ட மன்ற உறுப்பினர் பறிப்பு என்றால் ஒருவர் கண்ணில் வெண்ணெயும் மற்றொருவர் கண்ணில் சுண்ணாம்பும் தடவுவதுதானே.  இதைத் தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய தீர்ப்பு இதற்குப் பின்னர் நேர்ந்தமுறையீட்டைக் காரணம் காட்டி வழக்கு நிலுவையால் நடவடிக்கை இல்லைஎன்று சப்பை கட்டுவது ஏன்?
  அரசியல் கடமையை ஆற்றி நடுவுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டியபொறுப்பில் உள்ள ஒருவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் உண்மைக்குமாறாகவும் இரு வேறு நிலைப்பாட்டைப் பின்பற்றுவது இயற்கைமுறைமையை மீறியதாக இல்லாமல் வேறு என்னவாம்?
 அடுத்த இடறல்.
முதல்வருக்கு எதிராக 18 ச.ம.உ.களும் ஆளுநரிடம் முறைப்பாடு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ள தகவலைத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  ச.ம.உ.கள்  தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற உசாவலின் பொழுது தெரிவிக்கவில்லை எனத் தீர்ப்பில் குறிக்கப்பட்டுள்ளது.
இதுவும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. இவ்வாறு தகவல் தெரிவிக்காமையால் தீர்ப்பு உண்மைக்கு எதிராக வழங்கப்பட்டதாக – அஃதாவது இதைக் கவனிக்காமையால் மாறான தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்று – சுட்டிக்காட்டுவதாக இருந்தால் இவ்வாறு கூறலாம். இதனால் எந்த வகையில் முந்தைய தீர்ப்பு மாறியுள்ளது எனக் கருதுகிறார் என்பது புரியவில்லையே! இத்தகவல் பேரவைத்தலைவர் அல்லது முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை யெனில் இதைக் குற்றமாகச் சொல்லி  இதன் அடிப்படையில் தகுதி  நீக்கம் செய்தது சரி என்று சொல்வது எப்படி  முறையாகும்? நியாயமாகும்?  நீதியாகும்? நயன்மையற்ற வாதமாகப் படுகிறது.
 முதன்மையானதும் தலைமையானதுமான இடறல் வழக்கினைக் குறித்தநீதிபதியின்கண்ணோட்டம்.
  தீர்ப்பை வாசிக்கும் முன், ‘மாறுபட்ட உத்தரவுகளின் அடிப்படையில் பார்க்காமல், இந்த வழக்கை தனியாகக் கருதிப்பார்த்து, உத்தரவு பிறப்பிக்கிறேன்’ என, நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வழக்கு கேட்பு தொடங்கியபொழுது இரு தரப்பாரும் முதலில் இருந்து தெரிவிக்கத் தேவையில்லை; தீர்ப்புரைகளின் மாறுபட்ட தன்மையில் சொன்னால்  போதும் என்று தடைவிதித்துள்ளார்.  வழக்குதொடர்பனாவர்களுக்கு ஒரு நீதி! தீர்ப்பாளருக்கு வேறு ஒரு நீதியா தனியாகக் கருதிப் பார்ப்பதாக இருந்தால் வழக்கின் முந்தைய உசாவல்களைப் புறந்தள்ளி, இரு தரப்பாரிடமும் தொடக்கத்திலிருந்து அல்லவா விவரங்களையும் வாதங்களையும் கேட்டிருக்க வேண்டும்.  எனவே, அடிப்படை அறமேமீறப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த தீர்ப்புரையுமே தவறாகப்படுகிறது.
 தலைமை நீதிபதி தீர்ப்பு தொடர்பான மறு உசாவல், அவரது கருத்திற்கு எதிராகச் சொலலக்கூடாது என்ற எண்ணத்தை அவரது சார்நிலையில் உள்ள நீதிபதிக்குத் தோற்றுவிக்கலாம். எனவே, இதுபோன்ற நேர்வுகளில் பிற மாநிலத்தலைமைநீதிபதியின் கருத்திற்கு விடலாமா என்பது குறித்து ஆராய வேண்டும்.
 தினகரன் அணியினர் தேர்தலையும் எதிர்நோக்கி, மேல் முறையீட்டிற்கும் செல்ல வேண்டும்மேல் முறையீடு அவர்களுக்காக அல்ல! தவறான தீர்ப்பு இனி முன் எடுத்துக்காட்டாக அமையக்கூடாது என்பதற்கும் வாளனளாவிய அதிகாரம் என்பது அரசியல் யாப்பின்படித்தானே தவிர பதவியில் உள்ளவர் எண்ணத்திற்கு ஏற்ப அல்ல என நிலை நாட்டப்படுவதற்காகவும்!
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.            (திருவள்ளுவர், திருக்குறள் 118)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Friday, May 18, 2018

எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்


எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர்

பதவி விலக வேண்டும்! 

  கருநாடக முதல்வர் எடியூரப்பா  நாளை (19.05.2018) மாலை 4.00மணிக்கு நம்பிக்கை  வாக்கு கோர வேண்டும் என்ற நலல தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவிததுள்ளனர்.
 உச்ச மன்ற நீதிபதிகள் ஏ,கே.சிருகிரி(AK Sikri  ),  சரத்து அரவிந்து  போபுதே (SA Bobde )  அசோக்கு பூசன்( Ashok Bhushan) ஆளுநர் பதவிக்கு மதிப்பளித்து அதே நேரம் மக்களாட்சி மாண்பு காக்கப்படவேண்டும் எனச் சரியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
  யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத பொழுது தனிப் பெரும்பான்மை உள்ள கட்சிக்கு ஆட்சி அமைக்க முன்னுரிமை வாய்ப்பு அளிப்பதே முறையாகும்,  ஆனால், கோவா, மணிப்பூர், மேகாலயா, பீகார்  முதலான மாநிலங்களில் தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த  பேராயக்(காங்.,)கட்சி, இராசுட்ரிய  சனதா தளம் ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காமல்  பாசக கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்பட்டனர். இங்கெல்லாம் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு அளித்திருந்தால் அக்கட்சிகள்தாம் ஆட்சி அமைத்திருக்கும்.
  இந்தத் தவறு நேரக்கூடாது எனக் கருதிக் கருநாடகாவில் தனிப் பெரும்பான்மை பெற்ற பாசகவிற்கு ஆட்சி அமைக்கும் உரிமை அளித திருந்தால் சரிதான். ஆனால், அங்கே மொத்தம் 3 கட்சிகளும் இரு தனியரும் தான் வெற்றி பெற்றவர்கள். பாசக தவிர மீதி இரு கட்சிகளும் கூட்டணி  அமைத்து ஆட்சியுரிமை கோரியுள்ளனர். இச்சூழலில் பாசகவிற்கு ஆதரவு தரும் கட்சிகள் எதுவும் இல்லை. அஃதாவது வேறு  கட்சிகளே இல்லாத பொழுது ஆதரவு வாய்ப்பு என்பதற்கே இடமில்லாது போய்விட்டது.  எனவே பாசகவின் தனிப்பெரும்பான்மையால் பயனில்லை, எனவே முதலில் 2 நாள்  அடுத்து 7 நாள் என்று கூறிக்கொண்டிரு்நத பாசக எடியூரப்பாவிற்கு சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை மெய்ப்பிக்க 15 நாள் கால வாய்ப்பு தந்துள்ள  செயல் மக்கள் நாயக முறைக்கு எதிரான செயலாகும்.
 அறுதிப்பெரும்பான்மை இல்லாத ஒருவருக்கு எதற்கு 15 நாள் கால வாய்ப்பு தர வேண்டும்?  ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எஞ்சிய 2 கட்சிகளிலிருந்தும் பெரும்பான்மைக்கு வேண்டிய  எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியும் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தும் விலைக்கு வாங்கத்தானே! இஃது அப்பட்டமான முறை கேடல்லவா? அதற்கு ஊக்கம் அளிக்கலாமா? ஆளுநர் கட்சி மேலிடத்திற்கிணங்கக் கட்சிக்காரராகச் செயல்படுவது மிகப் பெருந்தவறல்லவா?
 எதிர்த்துப் போட்டியிட்டுவிட்டு போட்டிக்கட்சியுடன கூட்டணி வைப்பதில் விருப்பமில்லை எனப் பேராயக்(காங்)கட்சி ம.ச.த. உறுப்பினர்கள் கூறி்த் தங்களுக்கு ஆதரவு தருவதாகப் பாசக கூறுகிறது. அப்படி என்றால், இதேபோன்ற நிலைப்பாட்டைப் பாசக உறுப்பினர்களும் எடுத்து அக்கட்சியிலிருந்து விலகலாம் அல்லவா? எனவே சட்டமன்றப் பெரும்பான்மையக் காட்டுவதற்காகப் பாெய்யான தகவல  தரிவிததுக் கால வாய்ப்பு பெறுவதே கட்சித்தாவல தடைச்சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கத்தான்!
  பெரும்பான்மை என்பது சட்ட மன்ற உறுப்பினர்கள்  எண்ணிக்கை அடிப்படையில் இல்லை.  வருகையின் அடிப்படையில்தான். எனவே, நாளைக்குள் கட்சி மாறுவதற்கான பேரம் படியாது என்பதால் பன்னிருவரைச் சட்டமன்றத்திற்கு வாக்கெடுப்பின் பொழுதுவரவிடாமல்  செய்து  பெரும்பான்மையைக் காட்ட எடியூரப்பா முயலக்கூடாது. ச.ம.உறுப்பினர்கள்  தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால், நாளைக்குள் ஏவல் துறைகள் மிரட்ட வாய்ப்பில்லை. குடும்பத்தினர மூலமும் உடனடியாக உரிய பேரங்களை முடிக்கமுடியாது. அவ்வாறு  இயலும்எனில் 15 நாள்வாய்ப்பு கேட்டிருக்கமாட்டார்களே! எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் முன்னதாகவே பதவி விலகுவதே எடியூரப்பாவிற்கும் அவர் கட்சிக்கும் நல்லது.
 29 தொகுதிகளில் காப்புத் தொகையைப் பறிகொடுத்து  மாபெரும் தோல்விகளைச் சந்தித்த பின்பும்  குறுக்குவழிகள் மூலம் ஆட்சிக்கட்டிலில் ஏறிப் பெரும் வெற்றியாகப் பரப்ப பாசக திட்டமிட்டு வருகிறது. எனவே கருநாடகா ஆட்சிதான் வேண்டும் என்றால் கோவா முதலான மாநில ஆட்சிகளைத் தனி்ப்பெரும்பான்மைக் கட்சிகளிடம் பாசக ஒப்படைக்கட்டும் அதுவே முறையாகும்.
 ஆளுநர் குடியரசுத்த்லைவரின் முகவர் என்றாலும் கட்சித்தலைமையின் ஆட்டத்திற்கேற்ப ஆடுபவர். எனவே கருநாடக ஆளுநர் வயூபாய் வாலா(Vajubhai Vala) கட்சி மேலிடத்திற்கேற்பவே  அறமற்ற முடிவை எடுத்துள்ளார். தன்பதவி நிலைக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர் பதவி விலகுவதே முறை.
அவரை இவ்வாறு செய்யத் தூண்டிய தலைமை அமைச்சர் நரேந்திர(மோடி),  பதவி விலக வேண்டும்;  அரசுப்பணிகளில் குறுக்கீடு  செய்த அமீது சா கட்சித்தலைமைப் பொறுப்பில் இருந்து விலக  வேண்டும்.
 கன்னெய், நில நெய் (Petrol, Diesel) ஆகிய எரி நெய்களின் விலை அன்றாடம்  வரையறை செய்ய்ப்படுகிறது. ஆனால், கருநாடகத் தேர்தல்களுக்காக 19 நாள் விலை வரையறை மேற்கொள்ளாமல் விலை உயர்த்தப்படாமல் பாசக அரசு பார்த்துக்கொண்டது. இதனால் 500 கோடி உரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரும் ஒட்டுமொத்த தேர்தல் கையூட்டாகும். எனவே வெளிப்படையாகவே  தெரியும் இவ்வூழலுக்காக வெற்றி பெற்ற பாசக உறுப்பினர்களின் வெற்றி செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசுகளின் தேர்தல் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
மிகப்பெரும் மக்களாட்சி நாடான இந்தியாவில் மக்களாட்சி நெறிகள் தொடர்ந்து குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகின்றன மக்களாடசி மாண்புகள் நிலைக்க மேற்குறித்தவாறு எடியூரப்பா,  வாயூபாய் வாலா, நரேந்திரர்(மோடி) பதவி விலகி மக்களாடசி மாண்பைக் காத்துப் பெருமை யடையட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, August 30, 2016

தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-தகுதியற்றனவற்றை ஏற்கும் நீதி மன்றம்-இலக்குவனார் திருவள்ளுவன் ;thalaippu_semmozhivazhakku_thakuthiyatrana-thiru

தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம்

 – செம்மொழி வழக்கில் தீர்ப்பு

தமிழுக்குக்  குரல் கொடுக்கும் காந்தி

தனித்து விடப்படலாமா?


  உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது.  விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர்.  செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது போல்வதன்று! தகுதியின்அடிப்படையில் வழங்கப்பட வேண்டியது. ஆனால்,  தனித்து இயங்கும் வல்லமை யற்ற கன்னடம், தெலுங்கு, ஒடியா, மலையாள மொழிகளுக்கும் மத்திய அரசுசெம்மொழித் தகுதியேற்பை வழங்கியுள்ளது.
  இந்த முடிவை எதிர்த்து மூத்த வழக்குரைஞர்  ஆர்.காந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இதனை உசாவிய உயர்நீதிமன்றத் தலைமைநீதிபதி எசு.கே.கவுல்,  நீதிபதி மகாதேவன் ஆகியோரைக்கொண்ட முதல் அமர்வு தீர்ப்பு வழங்கி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
மாற்று மொழியின் வளர்ச்சியிலோ வீழ்ச்சியிலோ வேறொரு மொழியின் வளர்ச்சி இருக்காது. கலை, இலக்கியத்துக்கான பங்களிப்பு, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு மொழிக்கான  முதன்மை இருக்கும். அந்தக் குழுவின் முடிவு இந்த நீதிமன்றத்தில்  அளிக்கப்பட்டது. அதைப் பார்க்கும்போது அதில் நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.”  எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 இது ஒருவகையில் சரி என்றாலும் சூழ்நிலைக்கேற்பத்தான் அமையும்.  ஒரு மொழியின் ஆதிக்கம் பிற மொழிமேல் ஏற்படுமேல் பாதிப்பிற்குள்ளாகும் மொழிஅழிவைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். சான்றாக இந்தியத்துணைக்க்ணடம் முழுவதும்  கோலோச்சிய தமிழ்மொழி சமற்கிருதத்தின் ஆதிக்கத்தால் சிதைந்து பல்வேறு மொழிகளாக உருவெடுத்துத் தன் ஆட்சிப்பரப்பில் சுருங்கியுள்ளது. ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால் இந்திய மொழிகள் பலவும்  வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உலகில் நன்கு வளர்ச்சியடைந்த மொழிகளும் இன்றைக்குக் காணாமல் போனதன் காரணமும் இதுதான்.  தீர்ப்பில் குறிப்பிட்டவாறு பயன்பாட்டின் அடிப்படையில்தான் மொழியின் முதன்மை இருக்கும்  ஆனால், ஒரு மொழி ஆதிக்கம் பிற மொழியின் பயன்பாட்டைக் குறைக்கின்றதே! அல்லது இல்லாமல் ஆக்கிவிடுகின்றதே ! தமிழ்நாட்டில்  சமற்கிருதம், தெலுங்கு, ஆங்கில மொழிகளின் பயன்பாடுகள் தமிழின் பயன்பாட்டை நாளும் குறை்து வருகின்றனவே!  எனவே, தனித்து ஆராயாமல் பொதுவாக இவ்வாறு கூறுவது சரியல்ல. என்றபோதும் இப்போது இதுவல்ல  முதன்மையானது.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (திருவள்ளுவர், திருக்குறள் 528)
என்பதே பின்பற்றவேண்டிய அறநெறி. அஃதாவது, அரசு பொதுத்தன்மையில்  ஒரே சீராக நோக்காமல் தகுதிக்கேற்ப சிறப்பிக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
  அப்படியாயின் செம்மொழி அறிந்தேற்பிற்கு ஒத்த தன்மையில் முடிவெடுக்காமல் தகுதியடிப்படையில்தானே நோக்கவேண்டும். அவ்வாறு நோக்கவில்லை என்றுதான் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி தமிழ்உலகின் சார்பில் வழக்கு தொடுத்துள்ளார்.
  அவ்வப்பொழுது பிற மொழிகளுக்குச் செம்மொழித்தகுதியேற்பு வழங்கப்பட்ட ஆணைகளுக்கு எதிராக, நீதிப்பேராணை எண்கள் 28334/2008, 18810 / 2008, 27405/2014, 5813 & 5814 / 2015, ஆகியவற்றின் வழக்குகளும் தொடர்பான  பல்வகை முறையீடுகளும் சேர்த்து உசாவப்பட்டு  ஆடி 24, 2047 / ஆக.08, 2016 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  வழக்கு பிற மொழிகளுக்குச் செம்மொழித்தகுதி  கொடுக்கக்கூடாது என்பதல்ல. அரசு வரையறுத்த விதிகளுக்கு மீறான மொழிகளுக்குச் செம்மொழி அறிந்தேற்பு வழங்கக்கூடாது என்பதுதான். இதன்படிப் பிற மொழிகள் அறிந்தேற்பிற்குத் தகுதியற்றவைதாம். எனினும் நேரடியாக அவ்வாறு வழக்கு தொடுக்கவில்லை.
  மத்திய அரசு, சாகித்திய அகாதமி மட்டுமல்லாமல், கருநாடக அரசு,  ஆந்திர அரசு, தெலங்கானா அரசு, கேரள அரசு, ஒரியா அரசு, எனப் பிற அரசுகளும் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டன. ஒரு மாநில அரசு என்றால், அதன் தலைமைச்செயலர், உள்துறைச்செயலர், கலைபண்பாட்டுத்துறைச் செயலர் எனப்பலர் இணைந்துள்ளனர். தனியர் சிலரும் இணைந்துள்ளனர். எனவே, இவர்கள் சார்பில் பெரும் வழக்குரைஞர் பட்டாளமே வழக்கிற்கு எதிராக அணிவகுத்து நின்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வழக்குரைஞர் காந்தி மட்டும்தனித்து விடப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து யாரும் இவ்வழக்கில்  இணைத்துக்கொள்ளவில்லை. தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் வழக்கில் இணைவது குறித்து வழ.காந்தியுடன் பேசியுள்ளோம். தன்னிடம் விலை பேசுவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும், ஏதேனும் ஓர் அமைப்பு இதில் இணைந்து கொண்டு  பிறகு அச்சத்தால் விலகினால் நான்றாக இருக்காது என்றும் தெரிவித்தார். எனவே,  அதற்கான வாய்ப்பு இல்லாவிட்டாலும், அவர்கருத்திற்கு மதிப்பளித்து இணையவில்லை. எனினும் பிற மாநில அரசுகள் வழக்கில் இணையும்பொழுது தமிழக அரசு ஏன் தூங்கியது?
  செம்மொழி அறிந்தேற்பிற்குத் தி.மு.க.வும்  பேராயக்கட்சியாகிய காங்கிரசும் பாராட்டப்படவேண்டியவையே! அதே நேரம், காலவறையரைக் குளறுபடிகளுக்குக் காரணமும் இவைதான்! எனவேதான் வழக்கில் அமைதி காத்துள்ளன. “எல்லா மாநிலங்களிலும் எங்கள் கட்சி உள்ளது. எனவே குறிப்பிட்ட மொழிக்குச் சார்பாக அல்லது சில மொழிகளுக்கு எதிராக இருக்கமாட்டோம்” எனப் பேராயக்கட்சி கருதுவது தவறு. நடுவுநிலைமை என்பது உண்மையின் பக்கம் இருப்பதுதான். “உனக்குக்  கேட்டது கிடைத்துவிட்டதே! அடுததவனுக்குக் கிடைத்தால் உனக்கு என்ன” என்பது தி.மு.க. எனவே அதுவும் வழக்கில் இணைத்துக் கொள்ளவில்லை. அதனால்தான்,  பிற மொழிகளுக்குச் சார்பாகப் பலர் இருக்கையில் தமிழின் சார்பாக வழ.காந்தி மட்டும் நிற்கும் அவலம் நேர்ந்துள்ளது.
  நீதிபதிகளும்  மொழிகளின் சமநிலையைப் பற்றி எண்ணியுள்ளார்களே தவிர,  மொழிகளின் தகுநிலை குறித்து எண்ண வில்லை. தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம் செல்ல உள்ளார்; இந்த நேரத்தில் மொழிப்பாகுபாடு காட்டியதாகப் பெயர் வரக்கூடாது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறில்லை என நம்புவோம். ஆனால், எல்லா மொழி வளர்ச்சியையும் சமமாகத்தானே கருத வேண்டும் என எண்ணியுள்ளார்கள். போலியான வரலாற்றுச் செய்திகள் அடிப்படையில் அயல் மொழியான சமற்கிருதத்திற்குப் பிற எல்லா மொழிகளுக்கும் செலவழிப்பதைவிடக் கூடுதலாகச் செலவழிப்பதையும் இலக்கிய வளமையும் பண்பட்ட தன்மையும் இல்லா இந்திக்கு  அளவு கடந்து செலவழிப்பதையும்    பிற மொழிகளுக்கு அநீதி விளைவிக்கும் மொழிப்பாகுபாடாக எண்ணவில்லை.  வரையறை அடிப்படையில் உயர்தனிச்செம்மொழியாக விளங்கும் தமிழுக்குச் செய்யும் சிறப்பைப் பிறமொழிகளுக்கும் வழங்கினால் என்ன எனத் தவறாக எண்ணி விட்டனர். .
  உலகாளவிய ஓட்டப்போட்டிகளில்,  முதலிடத்தில் வந்தவரை  விட அடுத்து வந்தவர்,  ஆயிரத்தில் ஒரு  நொடி குறைந்து வந்தாலும் முதலாமவருக்கு இணையாகமாட்டார் என்பதே உண்மை.  பிற போட்டிகளிலும் இதுதான் நடைமுறை. உலக(ஒலிம்பிக்கு)ப் போட்டி நடைபெற்று முடிந்ததே. அதில், வெற்றி வாய்ப்பை இழ்நதவர்கள் வாகையருக்கு இணையாகத் தங்களையும் கருத வேண்டும் எனக் கோரிக்கை வைக்கக்கூடாது. அவ்வாறு இருக்க இப்போட்டிகளில் பங்கேற்கத் தகுதியில்லாதவர்கள், தங்களுக்கும் வாகையருக்கு இணையான சிறப்புவேண்டு மெனக் கோர இயலுமா?  பைத்தியக்காரத்தனம் எனப் பிறர் எள்ளி நகையாடமாட்டார்களா?
 ஆனால், 1.தொன்மை, 2.முன்மை, 3.எண்மை (எளிமை),4.ஒண்மை (ஒளிமை), 5.இளமை,6.வளமை, 7.தாய்மை, 8.தூய்மை, 9.செம்மை, 10.மும்மை, 11.இனிமை, 12.தனிமை, 13.பெருமை, 14.திருமை, 15.இயன்மை, 16.வியன்மை முதலான பாவாணர் வறையறுத்த பண்புகளும் பிற பண்புகளும் கொண்டு உயர்தனிச்செம்மொழியாக விளங்கும் தமிழுக்கு இணையாகஇவற்றில் ஒன்றுமில்லாத அல்லது ஒன்றோ இரண்டோ உள்ள மொழிகளும் செம்மொழித்தகுதி  கோரியதும் மத்திய அரசு அவ்வாறு அறிந்தேற்பு வழங்கியதும் எவ்வகையில் சரியாகும்?
தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற் றானாராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழி யேயாம் என்பது நிச்சயம். இவ்வளவுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோடொருங் கெண்ணுதல் தவிர்க்க வேண்டும் என்று
1903-இல் பரிதிமாற் கலைஞர்தமிழ்மொழியின் வரலாறு’எனும் நூலில்   கூறியது .இன்றைக்கும் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டிய பொன்மொழியாகும்.
  தமிழுக்கான செம்மொழி  அறிந்தேற்பு அறிவிப்பிற்குப்பின் மத்திய அரசின் போக்கை உணர்ந்து, செம்மொழிப்பட்டியல் என எல்லா  மொழிகளையும் சேர்ப்பதுதான் மத்திய  அரசின் நோக்கம்; தமிழுக்குத் தனிச்சிறப்பு அளிக்கக்கூடாது என்பதும் அதன் நோக்கம் எனச் சொல்லி வந்தோம். அதைத்தான் அதன் செயல்பாடுகள் காட்டி வருகின்றன. எந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் நிதியுதவி அளிப்பதற்கு எதிராக நாமில்லை. ஆனால், செம்மொழித்தகுதி என்ற பெயரில் அத்தகுதியற்ற மொழிகளுக்கு வழங்கக்கூடாது என்பதுதான் அறமாகும்.
  அவ்வாறு  அனைத்து மொழிகளையும்செம்மொழி எனஅறிவிக்கும் எனில்,  தமிழை உயர்தனிச்செம்மொழியாக அறிவிக்க   வேண்டும்
  தீர்ப்பில் மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறாமல் உரிய அதிகார மையத்தை அணுகுமாறு தெரிவித்துள்ளனர். என்ற போதும் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடுசெய்ய வேண்டும்.
   தீர்ப்பில் குறிப்பிட்டவாறு மத்திய அரசிடமும் முறையீடு செய்ய வேண்டும்.
  இதற்கான பொறுப்பைப் பொதுநலவழக்குகளில் ஈடுபட்டு வரும் தமிழார்வலர் வழ.கரூர் இராசேந்திரன் தமிழறிஞர்கள், தமிழமைப்புகள் சார்பில் மேல்முறையீட்டில் ஈடுபடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். அவர் தன்னியல்பில் மேல் முறையீடு செய்யாமல்
  1. மூத்த வழ.காந்தி அவர்களிடமும் கலந்து பேச வேண்டும்.
  2. தமிழறிஞர்களிடம் வழக்கிற்குத் தேவையான கருத்துகளைத் திரட்ட வேண்டும்.
  3. தமிழார்வலர்களும் தமிழமைப்புகளும் வழக்குநிதி தருவதற்கு வாய்ப்பாகத் தனிக்கணக்கு தொடங்கித் தெரிவிக்க வேண்டும்.
  4. தீர்ப்பில் குறிப்பிட்டவாறு மத்திய அரசிடமும் முறையீடு செய்ய வேண்டும்.
  .
  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழக்கில் இணைவதில்   நடைமுறைச் சிக்கல் இருக்கும். ஆனால், சாகித்திய அகாதமிக்கும் மத்திய அரசின் உரிய துறைகளுக்கும் செம்மொழித் தகுதி வரையறை குறித்தும் அதற்கிணங்கக் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒரியா (ஒடியா) முதலான மொழிகளுக்கு அறிந்தேற்பு வழங்கியது தவறு என்பது குறித்தும் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
 தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பிற்குப் பெருமை கொண்டாடும் தி.மு.க. அதனை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசிடமும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
  பேராய(காங்கிரசு)க்கட்சியுடன் நீக்கமறப் பிணைப்பு உள்ளதால் அக்கட்சியையும் தனியே மேல்முறையீடு செய்யத் தி.மு.க. ஆற்றுப்படுத்த வேண்டும்.
  செம்மொழி என்றால்  கலைஞரின் சொத்து என எண்ணிப் பாராமுகமாக இராமல் தமிழக அரசும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அனைத்து மொழிகளுக்கும்  உதவுக!
தகுதிகளுக்கேற்பச் சிறப்பித்திடுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை,  அகரமுதல 148, ஆவணி 05, 2047 / ஆக.21, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Followers

Blog Archive