Showing posts with label தேர்தல் சீர்திருத்தம். Show all posts
Showing posts with label தேர்தல் சீர்திருத்தம். Show all posts

Friday, May 6, 2016

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்





தலைப்பு-தேர்தல்சீர்திருத்தம்,திரு : thalaippu_therthalcheerthirutham_ilakkuvanarthiruvalluvan

2/2


தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  2/2


 3.தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை
   ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள் சார்பாளர் சரியாகச் செயல்படாதபொழுது அவரைத் திருப்பியனுப்பும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்கின்றனர்.
  ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதே பதவிக்காலமாகிய ஐந்தாண்டு முழுமையும் அவர் சிறப்பாகச் செயல்படுவாரா என்று ஆராய்ந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தேர்ந்தெடுத்த பின்பு அவர் வேண்டா என்பது சரியல்ல. அவரின் செயல்பாடின்மைக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால், அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடும்பொழுதுதான் வழங்க இயலும்.
  நாம்பொறுப்பின்றித் தகுதியற்றவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, “அவர் சரியல்ல; திருப்பியனுப்புங்கள்” எனப் பொறுப்பின்றிச் சொல்லலாமா?
   பொதுவாக இந்தமுறை, கட்சி சார்பிலான தேர்தல் நடைமுறை உள்ள நாடுகளில் செயல்படுவதைப் பார்த்து ஆராயாமல்,  நம் மக்கள் இதனை வரவேற்கின்றனர். இங்கே நாம் வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கின்றோம். கட்சியடிப்படையில் கருதிப்பார்த்து நாம்  வாக்களித்தாலும் நம் வாக்குகள் கட்சிக்கு அல்ல. அதன்சார்பில் நிற்கும் வேட்பாளருக்குத்தான்.  எனவே,  வேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர், அவருக்கு மாற்றாக மற்றொருவரை அனுப்பும் உரிமை கட்சிக்குக் கிடையாது.
   அப்படியே இருந்தால் என்ன ஆகும்? முதலில் இடைத்தேர்தலில் குறிப்பிட்ட முறைகேடுகள்,  மக்கள்சார்பாளரை அச்சுறுத்தல்  போன்றவையே பெருகும். இவை உண்மையான மக்களாட்சியாக அமையாது.
  எனவே, கட்சிக்கு வாக்களிக்கும் முறையில் உள்ள திருப்பியனுப்பும் உரிமை என்பது நம் நாட்டுமக்களாட்சி முறைக்கு ஏற்றதல்ல என்பதை உணர வேண்டும்.
  வாதத்திற்காக, இத்தகைய முறை இருந்தால்  அதனை எவ்வாறு செயல்படுத்த இயலும்? எனப் பார்ப்போம். ஒரு தொகுதியில் 11பேர் போட்டியிட்டு 11% பெற்ற ஒருவர் வெற்றி பெற்றதாகக் கொள்வோம். அப்படியானால் அவரை எதிர்த்து 89% இனர் வாக்களித்துள்ளனர். இவரைத் திருப்பியனுப்ப  89% இனருக்கும் மேலல்லவா கையொப்பம் இட்டு அளிக்கவேண்டும். அல்லது இதற்கு மறு தேர்தல் நடத்த வேண்டுமா? இது புகுத்தப்படும் இடைத்தேர்தலாக அல்லவா அமையும்? எனவே முறையீட்டின் அடிப்படையிலோ மறு தேர்தல் அடிப்படையிலோ தொகுதி உறுப்பினரை அனுப்புவது என்பது மக்களாட்சித் தேர்தலுக்கு ஏற்றதல்ல. கட்சியாட்சித் தேர்தலுக்கு ஏற்ற இம்முறை மிகப்பெரியமக்களாட்சி நாடான நமக்கு முற்றிலும் பொருந்தாது.
   4.வாக்குகள் அடிப்படையிலான சார்பாண்மை(விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்)
   பேரறிஞர் அண்ணா அவர்கள்  வலியுறுத்திய நடைமுறைதான் இது.  பேரறிஞர் அண்ணா  மாநிலங்களவையில் கன்னிப்பேச்சு என்று கூறப்படும் முதல்உரையிலேயே இதனை வலியுறுதியுள்ளார். என்றாலும் கட்சியாட்சி நடைபெறும் நாட்டில் நிலவும் இம்முறை மக்களாட்சிக்கு ஏற்றதல்ல.
 கட்சித்தலைவர்களைத் தலைக்குமேல் வைத்துக்கொண்டாடியும் கட்சித்தலைவர்களின்  அடிமைகளாக இருப்பதில் பெருமைப்பட்டும் கிடப்பதால்தான் தமிழ்நாட்டில் பல அவலங்கள் அரங்கேறுகின்றன. முறையான முதல்வராகஇருந்தும் பொம்மை முதல்வராகச் செயல்பட்டதும் மக்கள் முதல்வர் என்ற பெயரில் செய்திகள் உலாவந்தமையும் முதல்வர் பெயரில் எந்த ஓர் அறிவிப்போ  செயல்பாடோ இல்லாமலிந்ததும்  தமிழ்நாடு கண்ட காட்சிகளாகும். கட்சி முறைத் தேர்தலுக்கே நாம் மாறிவிட்டால் கட்சித்தலைவரின் முற்றதிகார(சர்வாதிகார)  ஆட்சிக்கு வழிவகுத்து விடும்.
   ஏன், வாக்குகள்அடிப்படையிலான சார்பாண்மை கேட்கின்றனர்.  எடுத்துக்காட்டு மூலம் பார்ப்போம். மொத்தத்தில் 51% பெற்று ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. 49% பெற்ற   பெற்ற மற்றொரு கட்சிக்கு ஒரு தொகுதிியல் கூட  வெற்றி கிடைக்கவில்லை. அப்படியானால், அக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் விருப்பம் வீணாவதா என்கின்றனர். எடுத்துக்காட்டிற்காக இரு கட்சிகளைமட்டும் குறிப்பிட்டாலும், வாக்குகள் அடிப்படையில் கட்சிக்கான சார்பாண்மை இல்லையே என்பதுதான் சுட்டிக்காட்டப்படுகிறது. நம் நாட்டு மக்களாட்சி முறையில் ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை பெற்றவர் வென்றவாகிறார்.  நாடு முழுமையிலுமான வாக்குகள் அடிப்படையில் வெற்றியைக் கணக்கிட இயலாது.  கட்சிகள் ஒட்டு மொத்த வாக்குகள் அடிப்படையில் சார்பாண்மை வேண்டுவதைவிடத் தொகுதி அடிப்படையில் வெற்றிபெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.  மாறாக இதனைக் காரணமாகக் காட்டி நாம் கட்சிமுறைத் தேர்தலுக்கு முதன்மை கொடுத்தோமென்றால் நம்நாட்டு மக்களாட்சி முறை அடியோடு சிதைந்து விடும்.  மாறாக, நிழல் சட்ட மன்றம், நிழல் நாடாளுமன்றம் போன்ற அமைப்புகளை நாம் உருவாக்கலாம்.  ஒவ்வொரு  தொகுதியிலும் இரண்டாமிடம் பெற்றவர்களைக் கொண்டு சட்டம் இயற்றும் அதிகாரமில்லாத, அரசின் நிறைகுறைகளை ஆராய்கிற, மக்களின் குறைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுகின்ற நிழலவைகளை  உருவாக்க வகைசெய்ய வேண்டும். இதனால்,  சட்ட மன்றங்களும் நாடாளுமன்றங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் விழிப்புடன் செயல்படவேண்டிய நிலைக்கு உந்தப்படும். 
  ஆனால், இவ்வாறு நடைமுறைப்படுத்தினாலும் அடுத்த நிலைகளில் வாக்குகள் பெற்ற கட்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற வாதம் நிகழும்.கட்சிகள் மக்களின் உள்ளங்கவர்ந்து வாகை சூடுவதில் கருத்து செலுத்தாமல் எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டுக் கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில்  சார்பாண்மை வேண்டுவது நமது மக்களாட்சி முறைக்கு ஏற்றதல்ல.
  விரிவான கருத்தாய்வுகளை வெளிப்படுத்தவேண்டிய தலைப்பு இது. எனினும் சுருக்கமாக,  நாடு முழுமையிலுமான வாக்குகள் அடிப்படையில் சார்பாண்மை என்பது வேட்பாளர்களைப் புறந்தள்ளி கட்சி முற்றாளுமைக்கு வழி வகுக்கும் என்பதால் விலக்கப்பட வேண்டிய ஒன்று எனலாம்.
  ஆராய்ந்து பார்த்தால், செயல்பாட்டு முறைகளால் பண நாயகமாக மக்கள் நாயகம் மாறுவதைச் செம்மைாயன ஆட்சிமூலமே தடுக்க வேண்டும். மாறாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிறந்த மக்களாட்சி முறையைச் சீரழிக்கக்கூடாது. மக்களுக்கான ஆட்சிதான் மக்களாட்சியே தவிர, கட்சிகளுக்கான ஆட்சி அல்ல. குறைகளற்ற மக்களாட்சியை நிலவச் செய்து மாண்புகள் எய்துவோம்! மனம் மகிழ வாழ்வோம்!
 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
(திருவள்ளுவர், திருக்குறள் 464)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 131, சித்திரை 18, 2047 மே 01, 2016
Akaramuthala-Logo


Thursday, May 5, 2016

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-தேர்தல்சீர்திருத்தம்,திரு : thalaippu_therthalcheerthirutham_ilakkuvanarthiruvalluvan

1/2

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2


   உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய  ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள்  நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற  வேண்டும் என்று எண்ணுவது தவறாகும்.
    சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர் வலியுறுத்துவனவற்றுள் பின்வரும் நான்குதான் முதன்மையாக உள்ளன.
 கல்வித்தகுதி வரையறை
  1. தொகுதிச் சார்பாளர் இறந்தால் இடைத்தேர்தல் தேவையில்லை. அவர் சார்ந்த கட்சியே உரியவரைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.
  2. தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை
  3. வாக்குகள் அடிப்படையிலான சார்பாண்மை( விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்)
 இவை நமக்கு எவ்வவாறு ஏற்றன அல்ல என இனிப் பார்ப்போம்.
 1.கல்வித்தகுதி வரையறை
  சில நாடுகளில் உள்ளது போல் இல்லாமல், ஆண், பெண், அலி என்ற பால் பாகுபாடின்மை, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்மை, படித்தவன் படிக்காதவன் என்ற வகைப்பாடின்மைதான் இந்தியத் தேர்தல் முறையின் மிகப்பெரிய சிறப்பாகும். அவ்வாறிருக்க கல்வித்தகுதி  வரையறுக்க வேண்டும் என்பது அடிபபடையையே ஆட்டம் காணச் செய்யும். கல்வித்தகுதி என்றால் எந்த அளவு கல்வித்தகுதி, ஆணிற்கும் பெண்ணிற்கும்  ஒரே வகைக் கல்வித்தகுதியா என்றெல்லாம் சிக்கல் வரும்.
   2011 ஆண்டுமக்கள்தொகைக்கணக்கெடுப்பின்படி இந்தியாவில் படித்தவர்கள்  எண்ணிக்கை 74 விழுக்காடு (ஆண்கள் 82.14 விழுக்காடு;பெண்கள் 65.46  விழுக்காடு)
தமிழ்நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 80.33% (ஆண்கள் 86. 81%; பெண்கள் 73. 86%) (விக்கிபீடியா)
இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் படித்தவர்களே தேர்தலுக்கு நிற்கின்றனர். அதே நேரம் படிப்பிற்கும் பண்பிற்கும் பணியாற்றுவதற்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது.
 படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்.
என்றார் பாரதியார். (இப்பாடல்வரிகள்  ‘பாவம் செய்தால்‘ என்றும் ‘சூதும் வாதும் செய்தால்‘ என்றும் தவறாகக் குறிக்கப்படுகின்றன.)
 ஆனால் படித்தவர்கள்தாம் எவ்வாறு சூதும் பாவமும் செய்வது எனவும் படித்தவர்களாக இருக்கின்றனர். அதன்விளைவே நம் நாடு ஊழலின் உறைவிடமாக மாறியுள்ளது.
   பழங்குடியினர் வகுப்பிலோ வேறு சில வகுப்பிலோ படித்தவர்கள் இல்லாமல் இருக்கலாம். படிப்பின்மையைக் காரணம் காட்டி அவர்கள் தேர்தலில் நிற்கத் தடை விதிப்பது முறையற்றது அல்லவா?  எனவே, தேர்தல் போட்டிக்குரிய தகுதியாகப் படிப்பைச் சேர்க்காத சிறப்புடைய நம் தேர்தல் முறையை மாற்றிப்படிப்பை அளவுகோலாகக்கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரும் தவறாகும்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் — நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா — அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
 என நாம் பாரதியின்  கட்டளைகளைப் பின்பற்றுவதில்லையே! மாறாக,
  நாம் பாதகம் செய்பரை அடிபணிதலும், முகமன் கூறி வாழ்த்துதலும் நம் இலக்கு என்று இருக்கும் பொழுது எங்ஙனம் நம் சார்பளார்கள் நல்லன ஆற்றுவார்கள்!  அவர்கள் குற்றங்கள் செய்தாலும் புகழப்படும்பொழுது குற்றங்களை நிறுத்தாமல் தொடரத்தானே செய்வார்கள்.
கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்
(பாரதியார்) என மக்கள் சார்பாளர்கள் இருக்க வேண்டும்.
ஆனால்,
கடமையாவன செல்வத்தைப் பெருக்குதல்
குடும்பத்தைஉயர்த்துதல்
பிறர் துயர்களைப் பொருட்படுத்தாமை
பிறர்நலம் மறத்தல்
 என்பனவே இன்றைய அரசியலர்களின் இலக்காக மாறிப்போனபின்பு நாம் தேர்தல் முறையைக்  குறைகூறிப் பயன் என்ன? எனவே, கல்வியை வேட்பாளருக்கோ வாக்காளருக்கோ தகுதியாக வரையறுக்காமல் அனைவருக்குமான கல்வியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
  1. இடைத்தேர்தல் தேவையில்லை என்பது:
  ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளாட்சி உறுப்பினர் போன்ற மக்கள் சார்பாளர்  இயற்கை எய்தினால் அல்லது  பதவி விலகினால் அத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இடைத்தேர்தல் என்பது ஆட்சியில் உள்ளவர்களின் செயல்பாடுகளை மதிப்பிடவும் பிற கட்சியின் முன்னேற்றங்களை அறியவும் உதவுகின்றது. வெறும் செலவு அடிப்படையில் இதனை வேண்டா என்பது தவறாகும். மக்களாட்சியின் மாண்பினை அறிய  உதவும் இடைத்தேர்தலைச் செலவு காட்டி இல்லாமல் ஆக்குவது முறையற்றதாகும்.  சீர்திருத்தம் என்ற பெயரில் அச்சார்பாளர் சார்ந்த கட்சியே மாற்று உறுப்பினரைத்  தெரிவு செய்து அனுப்பலாம் என்பது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். கட்சித்தலைமை தான் விரும்பியவர் தேர்தலைச் சந்திக்கத் தகுதியற்றவராக இருப்பின்,  மக்களிடம் செல்வாக்கு பெற்ற  ஒருவரைத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெறச் செய்யும். அடுத்து அவரை மிரட்டியோ வேறு பேர  அடிப்படையிலோ விலகச் செய்யும் தான் விரும்புபவரை எளிதில் மக்கள்சார்பாளராக ஆக்கி விடும்.
   நடைப்பயிற்சி செல்லும் பொழுது அரசியல் கொலைகள் நிகழும் நம் நாட்டில் மக்கள்சார்பாளரின் உயிர் பறிக்கப்பட்டு, அதற்குக் காரணமானவரே கட்சிச் செல்வாக்கு அல்லது தலைமையின் குடும்பத்தைச் சேர்ந்தவர் போன்ற முறையில் மக்கள் சார்பாளராக ஆக்கப்படுவார். இதனைக் கற்பனை என எண்ணக்கூடாது.  ஒரு கட்சியைச்சேர்ந்தவருக்குப் பிற கட்சியைவிட அவரது கட்சியிலேயே மிகுந்த எதிர்ப்பு இருக்கும் பாழ்செய்யும் உட்பகையே இன்றைய கட்சிகளின் போக்கு. இதுவரை நிகழ்ந்த பல கொலைகளும் அந்தந்தக் கட்சிக்காரர்களாலேயே நிகழ்ந்தன என்னும் உண்மையை நாம் மறக்கக்கூடாது. எனவே, யாரோ ஒருவர் கொல்லைப்புற வழியில் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள்சார்பாளராக ஆவதற்காக அப்பாவி ஒருவர் உயிரிழக்க வேண்டுமா? இதை ஏற்றுக்கொண்டால் அரசியல் கொலைகள் பெருகும் என்பதில் ஐயமில்லை.
  இதில் மற்றொரு குறைபாடும் உள்ளது. கட்சி  சார்பில் அல்லாம் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மறைவு போன்றவற்றால் அத்தொகுதி ஒழிவிடமானால் என்ன செய்வது?
   வெற்றி பெற்றவர்  வேறு கட்சியில் சேர்ந்தபின்னர் இயற்கை எய்தியிருந்தால் எக்கட்சிக்கு மாற்று உறுப்பினரை அனுப்பும் உரிமை உண்டு? மன்ற உறுப்பினர்களையும் வேட்பாளர்களையும் விலைக்குவாங்கும் நம் நாட்டில் இந்த நடைமுறை   எப்படி ஏற்றதாகும்?
   எனவே, இடைத்தேர்தலைச் செலவின் அடிப்படையிலோ,  தேர்தல் ஊழல்களை ஒழிக்காமல் அவற்றின் அடிப்படையிலோ ஆளுங்கட்சி அதிகாரத்தைப்பயன்படுத்துகின்றது என்று சொல்லியோ வேண்டா என்பது மக்களாட்சிக்கு ஏற்றதல்ல.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
 ஊக்கார் அறிவுடை யார்.
(திருவள்ளுவர், திருக்குறள் 463)
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  முற்பகுதி

அகரமுதல 131, சித்திரை 18, 2047 மே 01, 2016
Akaramuthala-Logo

Followers

Blog Archive