Showing posts with label நாம் தமிழர். Show all posts
Showing posts with label நாம் தமிழர். Show all posts

Tuesday, August 11, 2015

இறையாண்மை என்றால் இதுதான் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

iraiyaanmai_endral_thalaippu
  “தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுகின்றனர் சிலர் . . .  இந்திய கூட்டரசின் உறுப்பு நாடான தமிழகத்தைப் பற்றி உலகுக்கு அறிவிப்பதற்கு இந்தியக் கூட்டரசு எள்ளத்தனையும் செய்திலது. வெளிநாடுகளில் இந்தியா, இந்தி என்றுதான் விளம்பரப்படுகின்றது என்றும்இந்திய அரசினர்க்குத் தமிழகம் என ஒன்றுகூடாது; தமிழ் இனம் எனக் கூறல் சாலாது. தமிழர் பண்டைய வரலாற்றை, மறக்கச் செய்து மறைக்கத்தான் வழிகோலுவார்கள் போல உள்ளது. . . நமக்கு உயர்வு தரும் நமது பழைய வரலாற்றை மறைத்து விட்டு, மறந்து விட்டு நாம் எதற்காக வாழ வேண்டுமோ? வரலாறு மறந்த வாழ்வு வரலாற்றில் இடம் பெறாது என்பது உலகம் அறிந்த உண்மை” என்றும் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே தெரிவித்த உண்மையும் கவலையும் எச்சரிக்கையும் இன்றும் மாறாமல் இருக்கும் காரணம் நமக்கென  இறையாண்மையுள்ள அரசு அமையாததுதான். பணக்குறியீட்டில் தேவநாகரி எழுத்து புகுந்துள்ளது. கணிணி வழி கிரந்தம் புகுந்து தமிழ் எழுத்துகளை அழிக்கப் பார்க்கின்றது.  இந்திய இறையாண்மையின் எழுத்தழிப்பு முயற்சிகள் குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
  “எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்பது முற்றிலும் பொருந்தாது. இத்திட்டமும் இந்திமொழி ஒன்றையே நிலைக்கச் செய்யவும் ஏனைய மொழிகளை அழிக்கச் செய்யவும் உதவுவதற்கே கொண்டு வரப்படுகின்றது. . . . ஒரு மொழிக்குரிய ஒலிகளை இன்னொரு மொழிக்குரிய எழுத்தால் எழுத முயல்வது உயிர் கூடுவிட்டுக் கூடு பாய்வதை ஒக்கும். . . . .இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். மொழியின் உடல்போன்றது எழுத்து. எழுத்தாம் உடல் அழிந்தபின்னர், மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்? . . . . கூட்டரசு  என்று கூறிக்கொண்டு அரசு மொழிகள் அனைத்துக்கும் சம உரிமையும் நிலையும் அளியாது ஒரு மொழிக்கு மட்டும் உயர்வு அளித்து ஒருமொழித் தனிஅரசுபோல் செய்வது என்றும் பொருந்தா வல்லாண்மை நெறியாகும்.”
  தமிழக அரசிற்கு இறையாண்மை  இல்லாத வரை இவை மேலும் மோசமாக நம்மைஇட்டுச் செல்லுமே தவிர நமக்கு அறம் வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு தனி இறையாண்மை கோருவது என்பது பிரிவினை ஆகாதா எனச் சிலர் எண்ணலாம்.  தனித்தமிழ் நாடு என்னும் நிலைப்பாடு வேறு. தமிழர்களுக்கென்று இறையாண்மை உள்ள அரசு வேண்டும் என்பது வேறு. கூட்டாட்சி (federation govt.) முறையில் பரதக் கண்டம் தேசிய இன அரசுகளின் கூட்டிணைவாக இருத்தல் வேண்டும். அதன் அடிப்படையில் தேசிய அரசுகளுக்குத் தனித்தனி இறையாண்மை இருக்கும். கூட்டிணைவிற்குத் தனி இறையாண்மை இருக்கும், ஒவ்வொருவருக்கும் தேசிய அரசின் குடியுரிமை, கூட்டிணைவின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை இருக்கும். இதன்படி  நாம் முதலில் தமிழ்க் குடிமக்களாகவும் அடுத்து பரதக் கூட்டரசின் குடிமக்களாகவும் இருப்போம். இந்திய அரசியல் யாப்பு அதற்கு இடம் தருமா என்று ஐயம் வரலாம். நமக்கு எது தேவையோ அதற்கேற்பத்தான் இந்திய அரசியல் யாப்பு இருக்க வேண்டுமே தவிர இந்திய இறையாண்மைக்குள் நம் உரிமைகளைத் திணிக்கக் கூடாது. என்றாலும் தற்போதைய அரசியல் யாப்பின்  அடிப்படையிலேயே நமக்கு இவ்வுரிமை வழங்கப்பட முடியும்.
 1957 இல் சம்மு-காசுமீருக்கெனத் தனி அரசியல்யாப்பு இயற்றப்பட்டு இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநில மக்கள் முதலில் சம்மு-காசுமீர்க் குடிமக்கள்; பின்னர்தான் இந்தியக் குடிமக்கள், எனவேதான் அவர்களது அரசியல் யாப்பு (அரசமைப்புச் சட்டம்) முகவுரை, சம்மு-காசுமீர் குடிமக்களாகிய நாங்கள் என்றே குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்திய இறையாண்மை, வல்லாண்மை மிக்கதாக உள்ளதால் தன்னாட்சி மிகுந்திருந்த சம்மு-காசுமீர் மாநிலத்தின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, தமிழர்க்கு இறையாண்மை நிறைந்த அரசியல் யாப்பு இயற்றப்படும் பொழுது அதற்கேற்ப பரதக் கண்டக் கூட்டரசின்  இறையாண்மையும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒட்டு மொத்தக் கூட்டரசுகளின் பாதுகாப்பு, நாணய வெளியீடு, கூட்டரசுகளின் இடையேயான வான்வழிப் போக்குவரத்து முதலான சில மட்டும் ஒன்றியத்தின் இறையாண்மைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
  இவற்றால் நாட்டுத்தலைமையின் அதிகார வரம்பைத்தான் இறையாண்மை குறிக்கின்றதே தவிர, வேறு சிறப்பு இல்லை என்பதும் அந்த இறையாண்மை மாட்சிமை மிக்கதாக விளங்க வேண்டும் என்பதையும் செயற்கையாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட இந்திய நிலப் பரப்பு தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என்பதையும் உலகில் தோன்றிய முதல் இனமான தமிழ் இனம் தனியுரிமையுடன் தன்னாட்சி செலுத்தும் வகையில் இறையாண்மையும் இறைமாட்சியும் மிக்க அரசினைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதையும் தற்போது தமிழினத்திற்கு ஏற்பட்டு வரும் அழிவுகளுக்கெல்லாம் அதுவே அருமருந்தாய்த் திகழும் என்பதையும் நன்கு புரிந்து கொள்ளலாம்.எனவேதமிழ் நிலத்தில் தமிழ் முதன்மை பெறதமிழர் தலைமை பெறதமிழர்க்கான இறையாண்மை அரசு அமையட்டும்!
,
– இலக்குவனார்  திருவள்ளுவன்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்க்காப்பு அமைப்புகள்
http://naamtamilar.org

 

Monday, August 3, 2015

இறையாண்மை என்றால் இதுதான் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

iraiyaanmai_endral_thalaippu
  நிலப்புற அரசுகளும் (States on exile)  இறையாண்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன. சான்றாக இரண்டாம் உலகப்போரின் பொழுது நார்வே, நெதர்லாந்து, செக்கோசுலோவேகியா முதலான நாடுகள் அயலவர் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் இறையாண்மை மிக்கப் புற அரசுகளாக அல்லது புவிசாரா அரசுகளாகக் கருதப்பட்டன.  அயலாட்சி நீங்கியதும் புவிசார்இறையாண்மை மிக்க அரசுகளாகக் கருதப்பட்டன. 1990-91 இல் ஈராக் போரின்பொழுது குவைத்து அரசிற்குப் புவிசாரா இறையாண்மை உள்ளதாகக் கருதப்பட்டது. இவற்றின் அடிப்படையிலும் தமிழ் ஈழம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்ந்தது. இப்பொழுது நிலப்புறத் தமிழ்ஈழம் (Eezham on exile) அமைக்கப்பட்டுள்ளதும் இறையாண்மை மிக்கதாகக் கருதப்பட வேண்டியுள்ளது. இவற்றின் அடிப்படையில் சிங்கள இறையாண்மைக்கு எதிரான பேச்சுகளை ஆராய வேண்டும்.
  ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டு மக்களுக்கு எதிராகவோ நம் நாட்டிற்கு எதிராகவோ பிற நாடு  அல்லது பிற நாடுகளுக்கு எதிராகவோ அமைந்தது எனில் அது குறித்து யாரும் பேசலாம் அல்லது எதிராகச் செயல்படலாம் என்னும் பொழுது அந்த இறையாண்மை மீறலால் துன்பங்களுக்கு உள்ளாவோர் அந்த அயல்நாட்டு இறையாண்மைக்கு எதிராகப் பேசுவது குற்றமே ஆகாது. மாறாகத்,  தன் நாட்டுமக்களின் உணர்விற்கு எதிராக அந்த நாட்டு அரசின் இறையாண்மையைக் காக்க முற்படும் அரசின் செயல்பாடுதான் குற்றமாகிறது. தமிழர்க்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், தமிழர் படுகொலைகள் நடைபெற்றிருக்காது. தமிழ் மீனவனைத் தாக்கினால் சிங்கள மாணவன் தாக்கப்படுவான் எனப் பேசுவதற்கே தேவையில்லாமல் அரசே உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். இறையாண்மை மிக்க அரசிற்கு எதிராகச் சிங்களம் வாலாட்டாது. இந்தியாவும் இறையாண்மை மிக்க நாடுதானே! அப்பொழுதும் சிங்களம் அஞ்சவில்லையே என எண்ணலாம். இந்திய அரசு என்பது தமிழக நலனுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. எனவே, ஒருவருக்கொருவர் இணைந்து செயலாற்றும் பொழுது இந்திய இறையாண்மை குறித்துச் சிங்கள இறையாண்மைக்குக் கவலை இல்லை. செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், இந்திய அரசு இலங்கையரசின் நட்புக்காகத் தமிழர்களைப் பலி கொடுத்து விடுவார்களோ என்று அஞ்ச வேண்டியுள்ளது என்று 40 ஆண்டுகளுக்கு முன்னரே அச்சத்தைத் தெரிவித்துள்ளார் எனில் இந்தியா எப்பொழுதும் தமிழர் நலனில் கருத்து செலுத்தாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், நமக்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், இத்தகைய அவலங்கள் ஏற்பட்டிருக்காது. போர்க்குற்றங்களும் படுகொலைகளும் நடைபெற்றிருக்காது, சிங்கள அரசின் கொடுங்குற்றச் செயல்களை இறையாண்மை மிக்க தமிழக அரசு, தானே உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வரும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும். அத்தகைய சூழலில் இந்திய இறையாண்மை சிங்கள இறையாண்மைக்கு வால்பிடித்து அலையும் நிலையும் ஏற்பட்டிருக்காது.
  இத்தகைய குற்றச் செயல் நிகழ்வுகளுக்கு இந்திய இறையாண்மை உடன்படுவதன் காரணம் என்ன? இறையாண்மை மிக்க அரசுகளின் கூட்டிணைவாக ஒன்றிய அரசு அமையாமல் தனி வல்லரசாக நடைமுறையில் மாறியுள்ளதே  காரணம் என்பது எளிதில் யாவர்க்கும் புரியும். எனவே நம் நலன் காக்க நாம் இறையாண்மை மிக்க அரசாகத் தமிழக அரசு விளங்க வேண்டும் என வேண்டுவது முற்றிலும் அறவழிப்பட்டதே. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பொழுதே செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1942 இல் சங்க இலக்கியம் இதழ் மூலம் பின்வருமாறு வினாக்கணை தொடுத்தார்.
“தமிழா சிந்தனை செய்!
வீரத்தமிழா வீறிட்டெழு!
முன்னை நிலையை உன்னிப் பார்!
நாடு – பரந்த தமிழகம் குறைந்ததேன்?
மொழி – உலகாண்ட உன் மொழியை ஒடுக்குவதேன்?
வீரம் – இமயம் கொண்ட ஏற்றம் எங்கே?
ஆட்சி – பாவலனைப் போற்றிய காவலனெங்கே?
வாணிகம் – கப்பலோட்டிய கண்ணியம் எங்கே?
கொடை – பெருந்சோறளித்த பெருமைதான் எங்கே?
தாய்மொழி உயரத் தாய்நாடு உயருமே!”
  இவ்வினாக்களுக்கெல்லாம் தீர்வு வேண்டுமெனில் தமிழகம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்தல் வேண்டும்.கோட்டையில் இந்தியத் தேசியக்கொடியேற்றும் உரிமையைத்தான் முதல்வரால் பெற முடிந்ததே தவிர, அவர் வேண்டியவாறு தமிழக அரசிற்குத் தனிக் கொடியைப் பெற இயலவில்லை. காவல் துறை போன்ற பல துறைகளுக்கெனத் தனித் தனிக் கொடிகள் இருப்பினும் மாநில அரசுகளுக்குத் தனிக் கொடி இருப்பதை இந்திய இறையாண்மை விரும்பவில்லை. நாம், இந்திய இறையாண்மையில் சிக்கியுள்ளதால் இந்தி மொழித் திணிப்பிற்கும் சமசுகிருதமயமாக்கத்திற்கும் ஆளாகி அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திய கட்சி ஆட்சிக்கட்டிலில் ஏறியும் கூட அதனைச் செயல்படுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க்கடவுள்களுக்கான கோயில்களில் தங்கள் மொழியாகிய தமிழில் வழிபாடு நடத்த முடியவில்லை. ஓர் அரசு ஒரு நாட்டின்மீது நடைமுறை ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துகிறது; ஆனால் அந்த நாட்டின் அரசுடன் இணைந்து செயல்படவில்லை எனில் அந்த அரசு அயலக இறையாண்மை உடையதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்திய இறையாண்மை என்பது தமிழகத்திற்கு(ம் பிற மாநிலங்களுக்கும்) அயலக இறையாண்மையாக விளங்குகிறது எனலாம்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்


Sunday, June 9, 2013

தமிழ்த்தாயின் அழுகுரல்! - இலக்குவனார் திருவள்ளுவன்




தமிழ்த்தாயின் அழுகுரல்!
இலக்குவனார் திருவள்ளுவன்
  மதுரையில் 100 கோடிஉரூபாய் மதிப்பில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்தது. அமெரிக்காவில் உள்ள விடுதலைத்தேவியைப் போல், உலக மக்களால் போற்றப்படும் சிலை! தமிழ் நாகரிகம், கலைச்சிறப்பு முதலானவற்றை எடுத்துக் காட்டும் சிலை! அருகேயே தமிழ் வளத்தை உலகிற்கு உணர்த்த தமிழ்த்தாய்ப் பூங்கா ! படிக்கப் படிக்க மகிழ்ச்சி! 
அமெரிக்க விடுதலைத் தேவிச்சிலையைப் பார்த்ததால்தான் முதல்வராக இருந்த பொழுது, என்.டி.இராமராவ்  ஐதராபாத்தில்  58 அடி உயரத்தில் ஒற்றைக்  கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலையை நிறுவினார்.  உசேன் தீவில் உள்ள (உ)லும்பினி பூங்காவில் உள்ள புத்தர் சிலையைக் காணப் படகில் செல்வதும் தனி இன்பம்தான். அதைப்பார்த்த பொழுது தமிழ்நாட்டில் தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்கப்புலவர்கள் சூழ தமிழன்னை வீற்றிருக்கும் வண்ணம்  நீர்நிலை நடுவே உயர்மேடையில் தமிழ்த்தாய்க்குப் படிமம் அமைத்துத் தமிழ் நாகரிக, பண்பாட்டு,இலக்கியச் சிறப்புகளைப் பரப்பலாமே என எண்ணியதுண்டு. எனவே  இந்த அறிவிப்பை எண்ணி மகிழ்ந்திருந்த பொழுது வெளியே அழுகுரல் கேட்டது. மெல்ல எட்டிப் பார்த்தேன். வீதியி்ல் ஒரு பெண் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
 செல்வச்செழிப்புள்ள பெண்ணாகத் தோற்றமளித்தார். முகத்தில் காண்போர் வணங்கத்தக்க பொலிவும்  அழகும் பெருமிதமும் இருந்தாலும் வாட்டம் தெரிந்தது.  வாட்டத்திற்கும் அழுகைக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்று அருகில் சென்று,
 “அம்மா தெருவில் ஏன் நிற்கின்றீர்கள்?  வீட்டிற்குள் வாருங்கள்!” என்றேன்.
“நீயாவது என்னை அழைக்கின்றாயே! மகிழ்ச்சி அப்பா” என்றார்.
  ஒருவேளை அவரது பிள்ளைகள் அவரை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்களோ என ஐயப்பட்டேன்.  என் முகத்தைப் பார்த்தே நான் எண்ணியதை அவர் புரிந்து கொண்டார்.
 “பணிப்பெண்ணைப் பட்டாடையால் அழகு செய்து மகிழ்ந்து வீட்டுத் தலைவியை - தாயை விரட்டுவோர் பற்றிக் கேள்விப்பட்ட தில்லையா” என்றார்.
தாயைப் பட்டினிப் போட்டுவிட்டு ஊராருக்கு அன்னதானம் அளிப்பவர் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்.   அன்னை கந்தலாடையுடன் இருக்கும் பொழுது  ஊரில் துணிமணிகளை வாரி வழங்குபவர் குறித்தும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இவரைப் பார்க்க வறுமையில் வாடுவதாகத் தெரியவில்லை. அதையும் புரி்ந்து கொண்டார் போலும்.    
“என் மக்களுள் சிலர் செல்வாக்கும் செல்வமும் இல்லாவிட்டாலும் என் மீது அன்பு காட்டுபவர்களாக உள்ளனர். பிறர்  என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டு வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக நல்ல ஆடைகளுடனும் அணிகலன்களுடனும் அனுப்பி விட்டனர்” என்றார்.
“அம்மா என்னிடம் உண்மையைக் கூறுங்கள். எங்கள் வீட்டிலேயே இருக்கலாம்” என்றேன்.
“நான் வரும் பொழுது என்ன நினைத்துக் கொண்டிருந்தாய்” என்றார். “தமிழ்த்தாய்ச்சிலை, தமிழ்த்தாய் பூங்கா  பற்றி மகிழ்ச்சியுடன் எண்ணிக்கொண்டிருந்த நான் உங்கள் அழுகுரல்கேட்டுக் கவலைப்பட்டேன்” என்றேன்.
“எனக்காகக் கவலைப்படுகிறாய் நீ! தமிழ்த்தாய்க்காக யாரும் கவலைப்படவில்லையே” என்றார். 
 “என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்! உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தவில்லையா? உலகச்செம்மொழி மாநாடு நடத்தவில்லையா?”
  “அவற்றால் சிறு பயன்கள் விளைந்தன. ஆனால் அவற்றிற்கு ஆன செலவில் ஒரு பகுதியைப் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ்வழிப் படிப்புகள் அளிக்கப் பயன்படுத்தி இருக்கலாம் அல்லவா? இடர்ப்பாடுகளுடன் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் நடத்துபவர்களுக்குப் பொருளுதவி வழங்கி இருக்கலாம் அல்லவா?”
“தமிழ்த்தாய் குடியிருக்க வேண்டிய கல்வியகங்களில் இருந்து விரட்டி விட்டு மாநாடுகள் நடத்தி என்ன பயன்? இருக்கும் அரியணையைப் பிடுங்கி விட்டு வெற்றுப் புகழ் பாடுவதால் தமிழன்னைக்கு மகிழ்ச்சியா ஏற்படும்? மாநகராட்சிப்  பள்ளிகளில் தமிழ் வழியில்  பயில யாரும் வரவில்லை என அவற்றை மூடிக் கொண்டே வந்தார்கள். இப்பொழுது தமிழ்வழிப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கி வருகின்றனர். என்ன கொடுமை இது?”
  “மாணாக்கர்கள் விரும்புவதால் அதற்கேற்பத்தானே முடிவெடுக்க முடியும்?  தமிழ் வழியாகப் படித்தால் என்ன வேலை கிடைக்கப் போகிறது? உலக மொழியான ஆங்கிலத்தில் படித்தால்தானே வேலைகிடைக்கும்”.
                 “ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை?  தங்கள் மொழி வழியாகவே படித்துச் சீனா, சப்பான் முதலான அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்றம் காணவில்லையா? கல்லூரிகளில் தமிழில் எழுதி வந்த  அகத்தேர்வாகிய கருத்தளித்தலை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என அறிவித்ததை அறிவாய்அல்லவா?”
  “அதைத்தான் மாற்றித் தமிழிலும் எழுதலாம் என ஆணையிடப் போகிறார் களே!”
                “ஆணை போட்ட பின்பு நடைமுறையில் வாய்வழி ஆணைகளாலும் ஆங்கிலத்தில் எழுதினால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியும் தமிழில் எழுதுவதற்கு மறைமுகமாகத் தடை விதிக்க மாட்டாரகளா? அது சரி! ஏன், ஆங்கில வழியில் பயிலுவோர் தமிழில் கருத்தளிப்பைத் தர விரும்புகின்றனர் தெரியுமா?”
  “இதுகூடத் தெரியாதா? ஆங்கிலத்தில் எழுதும் பொழுது  புரிந்து கொள்வதிலும்  எழுதுவதிலும் சிக்கல்கள் வருகின்றன. தமிழில் என்றால் நன்கு புரிந்து கொண்டு எழுதி மதிப்பெண்கள் பெறலாம். மேலும், பள்ளிக்கூடம் முழுவதும் தமிழில் படித்து விட்டு இங்கே ஆங்கிலத்தில் படிப்பதால் ஏற்படும் இன்னலகளுக்கு ஓரளவு இடர் நீக்கும் மருந்தாக அமைகின்றது.”
            “அஃதாவது மாணாக்கர்கள் தமிழில் எழுத விரும்புகின்றனர் என்றால் ஆங்கிலத்தில் படிக்க விரும்பவில்லை என்றுதானே பொருள்?  தமிழில் படிக்க  மாணவர்கள் விரும்பவில்லை என மூடுவிழா நடத்தும் அரசு, கல்லூரிகளில் ஆங்கிலவழிப்படிப்புகளுக்கு மூடுவிழா நடத்தி இருக்க வேண்டும் அல்லவா?  ஏன் ஓரவஞ்சனை?”
  “சிந்திக்க வேண்டிய கேள்விதான்.”
  “உன்னைப்போன்ற மக்கள் யாவரும் சிந்தித்து எல்லா நிலைகளிலும் தமிழ்வழிக் கல்வியே இருக்கப்பாடுபட்டால்தானே தமிழ்த்தாய் மகிழ்ச்சி அடைவாள்.” என்றவர், “காரைக்குடியில் தமிழ்த்தாய்க் கோயில் இருப்பது உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்.
“தமிழ்த்தாய்க்கு ஏற்கெனவே சிலைகள் உள்ளனவா? “ என வியந்தேன் நான்.
          “1975 ஏப்பிரல் 23 அன்று முதல்வராக இருந்த கலைஞர் தலைமையில் கால்கோள் விழா நடத்தப்பெற்று அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த 1993 ஏப்பிரல் 16 அன்று  தமிழ்த்தாய்க்  கோயில் திறந்து வைக்கப்பெற்றது.  அதனை உலகப்புகழ் பெற்றதாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளையினர்  மலேசியாவிலுள்ள கிள்ளான் தமிழ்ப்பள்ளிக்கும் அந்தமான் தமிழ்ச்சஙக்த்திற்கும் தமிழ்த்தாய் படிமங்களை அளித்துள்ளனர்.
“அதுமட்டுமல்ல! குற்றாலத்திலும் தமிழன்னை சிலை வரப்போகிறது தெரியுமா?”
                “அப்படியா?”
                 “ஆமாம்!  முனைவர் ஆறு.அழகப்பனின் தமிழ்ச்சுரங்கம் சார்பில் தமிழ்க்கோட்டம் அமைக்கிறார்கள். அங்கே சேர, சோழ, பாண்டிய வேந்தர்களின் வில், புலி,கயல் முத்திரைகளுடன் தமிழ்ப்புலவர்கள் சூழ தமிழன்னை வீற்றிருக்கப் போகிறாள். இப்படி ஆங்காங்கே உள்ள உணர்வாளர்களின் அன்பால் தமிழ்த்தாய்க்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் நிலையான மகிழ்ச்சி காண முடியாதே!”
  தமிழ்த்தாய் அடையும் துன்பங்களை அடுக்கிக் கொண்டே போ்கலாமே! இலங்கையிலும் ஈழத்திலும் தமிழ்ப்பிள்ளைகள் அடையும் துயரத்தைக் கண்டும் இனப்படுகொலைகள் தொடர்வதைக் கண்டும் மனம் கலங்காமல் எப்படி இருக்க முடியும்? ஈழம் தொடர்பில் தமிழக அரசின் தீர்மானம் ஆறுதலாக இருந்தாலும் அவர்களை அழைத்து இங்கே மருத்துவ உதவி அளிக்கத் தடைஉள்ளதே! அவர்கள் விரும்பிய நாட்டிற்குச் செல்லத் தடை உள்ளதே! நாட்டைக் காக்கும் இனத்தைக் காக்கும்     அன்புப் பிள்ளைகளின் படங்களுக்குத் தடை!  தமிழ்ப்பகைவர்களுக்குப் பரிசுகள்! பட்டங்கள்! விருதுகள்! பதவிகள்! தமிழுக்குக்  குரல் கொடுத்தால்    சிறை! புறக்கணிப்பு! என்பதுதானே ஆட்சியாளர்களின் கொள்கைகளாக உள்ளன! பிள்ளைகளைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுத தாய்க்குச்சிறப்பு என்றால் வருத்தம் வராதா?  தமிழ்த்தாய்க்கு அளிக்கும் சிறப்பும் உண்மையான சிறப்பன்று!
                 சிலையை எண்ணி மகிழ்வதா?ஒரு கட்சி வைக்கும் சிலையையும் பிறவற்றையும் மறுகட்சி ஆடசிக்கு வந்தால் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதுதானே தமிழக அரசியல்! ஆட்சி மாறும்  பொழுதெல்லாம் பந்தாடப்பட வேண்டுமா? புறக்கணிக்கப்பட வேண்டுமா? வீடுகளிலும்  பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வணிக நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் கோயில்களிலும் இசையரங்கங்களிலும்  திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் இதழ்களிலும் பிற ஊடகங்களிலும்     இடம் தராமல் ஒதுக்கி வைத்து விட்டு வீதியில் நிற்க வைத்தால் வீதிக்கு விரட்டப்பட்டதாக எண்ணி அழாமல் என்ன செய்வது?
“அழாமல் என்ன செய்வதா? உண்மைதானே! அப்படியானால் . . . . ..அப்படியானால். . . . தமிழ்த்தாயே!
எங்களைப் பொறுத்தருளுங்கள் என நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்தேன்.    
 
நன்றி : நாம் தமிழர் சூன் 1-15, 2013 பக்கம் 7






http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-frc3/970194_191791037646178_1309038088_n.jpg

Followers

Blog Archive