Thursday, November 8, 2018

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ்நாட்டில் எல்லாக் கட்சியின் ஆட்சிகளிலும் தமிழ் வளர்ந்தும் உள்ளது; தளர்ந்தும் உள்ளது. எனினும் எந்த ஆட்சியிலும் தமிழ் எல்லா நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக மாற்ற எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசு, இருக்கின்ற பயன்பாட்டு நிலைகளிலும் தமிழைத் தொலைத்து வருகின்றது.
பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி தொலைக்கப்பட்டு வருகிறது. மாணாக்கர் எண்ணிக்கை குறைகிறது என்றால் அதை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் தமிழ்வழிப்பள்ளிகளை அரசு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றுகிறது.  அரசு மழலைப்பள்ளிகள் தொடங்க இருக்கிறது. ஆனால் அங்கு தமிழைத் தொலைத்துத்தான் அப்பள்ளிகளைத் தொடங்குகிறது.
பத்து அகவை வரை குழந்தைகளுக்கு அயல்மொழியறிவே திணிக்கப்படக்கூடாது என்பது கல்வி உளவியல். அதற்கு மாறாகப்பிஞ்சு உள்ளங்களில் ஆங்கிலத்தைத் திணித்துத் தமிழைத் தொலைக்கிறது தமிழக அரசு.
 பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 90 விழுக்காட்டிற்கு மேல் தமிழ் ஆட்சிமொழிச் செயல்பாடு இருந்தது. அத்தகைய துறைகளில்கூட இன்று தமிழ்ச்செயல்பாடு குறைந்துள்ளது. பதிவேடுகள், மடல்போக்குவரத்து, அறிவிப்புகள், மாறுதல் ஆணைகள், எனப் பல இடங்களிலும் தமிழ் இல்லை.
தேர்வாணையப் பாடத்திட்டங்களில் தமிழ் வரலாற்றிற்கு முதன்மை இல்லை. முதன்மை மட்டுமல்ல உரிய பங்கும் இல்லை.
தமிழ் மொழிச்சிறப்பு, தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பு, தமிழ் நாகரிகச் சிறப்பு, தமிழ் வரலாற்றுச் சிறப்பு முதலானவற்றை வெளிப்படுத்தும் வகையில் தேர்வாணையத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் இல்லை.
அதைவிடக் கொடுமை, தேர்வு வினாக்களைத் தமிழில் குறித்துத் தருவதற்குத் தக்கவர் இல்லை என்று கூறிச் சில தாள்களின் வினாத்தாள்களைத் தமிழில் தரப்போவதில்லை என அதன் செயலர் அறிவித்தார். அவரது கருத்துக்குப் பரவலாக எதிர்ப்பு ஏற்பட்ட பின்னர், அவர் தனது கருத்தை மறுத்திருக்கிறார்.
அப்படித்தான் தமிழ்வழிப்பள்ளிகைள மூடப்போவதில்லை என்று முதலில் அறிவித்தார்கள். பின்னர் எந்தெந்தப் பள்ளிகளை மூடப்போவதில்லை என்று அறிவித்தார்களோ அவற்றை எல்லாம் ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றி வருகின்றனர். ஒரு பள்ளியில் ஆங்கிலம் வருகின்றது என்றால் தமிழ் அங்கே தொலைக்கப்படுகிறது என்றுதானே பொருள்.
அரசு கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளை அறிமுகப்படுத்திய பொழுது அரசியலறிவியல், சமூகவியல் துறைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தனர். அந்தப் பாடங்களுக்குத்தான் தமிழில் வினா எடுக்க யாரும் இல்லையாம்!
 தமிழ்நாட்டுப்பாடநூல் கழகமே 50 ஆண்டுகளுக்கு முன்னரே கலையியல் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க அத்தாள்களுக்கான வினாக்களைத தமிழில் எடுக்க யாருமில்லை என்பது முரணில்லையா?.
மேனிலைக் கல்விக்கான பாடத்திட்டத்தில் அரசியல் அறிவியல் இருக்கும் பொழுது அதை நடத்தும்ஆசிரியர்களால் வினாத்தாளா அளிக்க முடியாது? அப்படியானால், ஆளில்லாமல் அல்ல, மனமறிந்தே தமிழைத் தொலைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிதான் இப்படி உள்ளது என்றால் முதன்மை எதிர்க்கட்சியும் அப்படித்தான் உள்ளது. தி,முக. சட்ட மன்ற உறுப்பினர்கள்தான் ஆங்கிலவழிப் பள்ளிகளைத் தொடங்க வலியுறுத்துகின்றனர். எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மழலையர் கல்வி நிலையிலேயே ஆங்கிலம் வேண்டும் என்று வழக்கு  தொடுக்கின்றார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், “தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்துகிறார்.
இவையெல்லாம் அவர்களின் தனிப்பட்டகருத்து என்று இவற்றை ஒதுக்க முடியாது. எதிர்க்கட்சியின் தலைமை அதற்கு உடன்படுவது ஏன்?
அவர்களும் ஆங்கிலவழிப் பள்ளிக்காவலர்களாக விளங்குபவர்கள்தானே! தங்கள் ஆட்சியில் அவர்களும் தமிழைத் தொலைத்தவர்கள்தானே! எனவேதான் இன்றைய ஆட்சியின் தமிழ்த்தொலைப்பிற்கும் அமைதி காத்து அதற்கு உடந்தையாக உள்ளனர்.
பொதுமக்களும் தமிழ் அமைப்புகளும்தான் குழந்தைகளின் எதிர்காலம் கருதிக் குரல் கொடுத்துத் தமிழ்நாட்டில் தமிழ் வாழச் செயலாற்ற வேண்டும் தமிழ்நாட்டில்  தமிழ் நிலைக்குமா அல்லது அரசு தமிழைத் தொலைக்குமாஎன்பது மக்கள் கைகளில்தான் உள்ளது.
இலக்குவனார் திருவள்ளுவன்
தினமணி 09.11.2018

Wednesday, November 7, 2018

தமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழ்நெறிக்காவலர் அறவாணர்

நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்!

தமிழ்ப்பகைவர்களே! வெளியேறுங்கள்!

 

தாய்மொழியில் இறைவனை வணங்குபவர்களுக்குத்தான் இறையருள் முழுமையாகக் கிட்டும்.  தமிழர்கள் பிற மொழியில் தம் சார்பாக யாரோ கடவுளை வாழ்த்த, அதைப்புரியாமல் செவிகொடுத்துக் கேட்டுத் தீவினை புரிந்து வருகின்றனர். எனவேதான், இறையருள் இல்லாமல் இன்னலுற்று வருகின்றனர்.
இறைவனைத் தமிழில் வணங்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைநெறி பரப்பியவர்களுள் ஒருவர் நம்பியாரூரன்; சுந்தரமூர்த்தி நாயனார் என்று அழைக்கப் பெறுகிறார். திருமுனைப்பாடியில் திருநாவலூர் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாரூரன் சிவபெருமானைப்பற்றி 38,000 பாடல்கள் தமிழில் பாடியவர்.
 சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் தமிழ் என்றும் தமிழால், தமிழோடு, தமிழான், தமிழை என்பன போன்றும் ‘தமிழ்’ என ஐம்பது இடங்களுக்கு மேல்  குறித்துப் பாடியுள்ளார். சுந்தரர் தமிழால்தான் பாடினார். அது மட்டுமல்ல
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய்  (தேவா-சுந்:701/4)
எனப் “பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள் செய்வாய்” என்றும் இறைவனை வேண்டுகிறார். பல நலச் சிறப்புகளை உடைய தமிழால் பாடினால் அருள் கிடைக்கும் என்று பாடிய சுந்தரரின் கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்வதே முறை. (அங்கு மட்டுமல்ல. தமிழர்கள் கோயிலகள் எங்கும் தமிழ் வழிபாடும் பிற விழாக்களும் நடைபெறுவதே அறம்.) அதனைப் பின்பற்றி இறையன்பர்கள் தமிழில் குட முழுக்கு செய்வதற்கு வரவேற்புப் பா பாடி வாழ்த்த வேண்டியவர்கள் எதிர்க்கிறார்கள். மானமற்று வழக்கு தொடுக்கின்றார்கள்.
தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம்   நல்கினீர்(தேவாரம்,சுந்தரர், 899/3)
எனச் சுந்தரர் இறைவன் தமிழ்ப்பாடல் பாடுநருக்கு நாளும் பொற்காசு நல்கியதாகக் கூறுகிறார். நாளும் பணம் தந்தால் நாள்தோறும் பாடுவார்கள் அல்லவா? அப்படியானால் இறைவன் விரும்புவது தமிழ்ப்பாடல்தானே. அதனால்தானே சுந்தரர், திருஞானசம்பந்தரைக் குறிப்பிடும் பொழுது,
 நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் (தேவாரம்,சுந்தரர், 642/1)
அதுமட்டுமல்ல!
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே (தேவாரம்,சுந்தரர், 912/4)
என்று தம் தமிழ்ப்பாடல்களைப் பாடும் திறமையாளரைத் தீ வினைகள் வந்து சேரா என்கிறார்.
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினை கட்டு அறுமே(தேவாரம்,சுந்தரர், 177/3,4)
என்று தம் தமிழ்ப்பாடல்களை விரும்பிக் கற்றுக் கேட்பவர் தீவினைகள் நீங்கும் என்கிறார்.
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே (தேவாரம்,சுந்தரர், 434/4)
தம் தமிழ்ப்பாடல் தொகுப்பைப் பாடுவோர், தம் தலைமேல் எப்பொழுதும் இருப்பதற்கு உரியராவர் என்கிறார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாவலூரில் இவர் நினைவில் நம்பி ஆரூரான் கோயில் கட்டியுள்ளனர். அதற்கான குடமுழுக்கு, தமிழ்முறையில் நடைபெற ஏற்பாடு செய்த பொழுது பிராமணியத்தில் ஊறிய சிவாச்சாரியார்கள் சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்தப்பெற வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.
வழக்கை  உசாவிய அறவாணர் நீதிபதி மகாதேவன் நீதிமன்றத்திலேயே,
“பித்தா பிறைசூடி பெருமானே” எனத்தொடங்கும் சுந்தரர் எழுதிய தேவாரப் பாடலைப் பாடிக்காட்டி யுள்ளார். அத்துடன்,  “தமிழில் தேவாரம் பாடிய சுந்தரர் நினைவாக அமைக்கப்படும் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தாமல் வேறு எந்த மொழியில் குடமுழுக்கு நடத்த முடியும்” என்று கேட்டுள்ளார். இறுதியில் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து,  அந்தக் கோயில் குடமுழுக்கு தமிழிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
  வழக்கில் வெற்றி பெற திருநாவலூர் இறைவனைத்தான் வழிபடுவர்.  சமற்கிருத்த்தில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வழக்கு தொடுததவர்கள் வழக்கில் தோற்றுள்ளனர். ஆக திருநாவலூரில் குடி கொண்டுள்ள இறைவனே சமற்கிருத குடமுழுக்கை விரும்பவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
 தமிழ்க் குடமுழுக்காளர்களின் இறைநெறித்தொண்டு போற்றற்குரியது.அவர்கள் பணி சிறக்கட்டும்! அவர்கள் நீடூழி வாழ்க!
நீதிபதி தீர்ப்பாணைக்கிணங்க இன்று காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு அழைப்பிதழுக்கிணங்க அமைச்சர் பெருமக்கள் பங்கேற்க குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
 எனினும் இதற்கிடையில், பிராமணியத்தை நிலைநிறுத்த விரும்பும் பிாமணர்கள் வழக்கு போட்டும் வெற்றி பெற முடியாமல் போனதால் பிராமணியக் காவலர்களான திருவாவடுதுறை, திருப்பனந்தாள்,  தருமபுரம் ஆகிய ஆதினங்கள் தமிழ்க்குடமுழுக்கிற்கு எதிராக அறிக்கை விட்டனர். எப்பொழுது அவர்கள் தமிழ்நெறியை ஏற்றனர். இப்பொழுது ஏற்பதற்கு எப்படி அவர்களால் இயலும்? பிராமணிய  அடிவருடிகள். தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் வழிபாடுகளுக்கே வழி விட மாட்டார்களே! வேறு என்ன கூறுவர்?
ஆரிய அடிமைகளான மூன்று மடாதிபதிகளையும் கண்டிக்க வேண்டும் எனக் கரூர் தமிழ் சங்கத்தின் தலைவர் கரூர் கன்னல், செயலாளர் வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன் அறிக்கை விட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, தமிழ்க் குடமுழுக்கிற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள், அதற்கு உதவியாக இருந்தவர்கள் அனைவருமே கண்டிக்கத்தக்கவர்கள். தாம் சார்ந்த சமூகம், அமைப்பு, இனம் முதலியவற்றிற்கும் அவப்பெயர் உண்டாக்கும் இத்தமிழ்ப்பகைவர்கள்  தமிழ் வேண்டா என்றால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறித் தமிழ்நாட்டில் வஞ்சகர்கள் இல்லா நிலையை உருவாக்கட்டும்!
  இத்தகையோர்களுடன் இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் உடையவர்கள் யாரும் தொடர்பு கொள்ளாமல் அடியோடு புறக்கணிக்க வேண்டும்!
  இத்தகையோரால் ஒற்றுமையாக வாழும் இனத்தவரிடையே கசப்பும் வெறுப்பும் விதைக்கப்பட்டு வளர்க்கப்படுவதால் இவர்கள்மீது அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 அதே நேரம் தமிழ்நெறிக்காவலராகத் திகழ்ந்து உண்மையின் பக்கம் நின்று அறம் வழங்கிய நீதிபதி மகாதேவன் பெரிதும் பாராட்டிற்குரியவர். குற்றங்களைக் குறைக்கத் திருக்குறளைப் படிப்பிக்கச் சொன்ன தீந்தமிழன்பர் அவர். அவரது தீர்ப்புகளாலும் தமிழ்ப்பேச்சுகள், தமிழ்க்கட்டுரைகளாலும் தமிழன்பர்களால் மதிக்கப்படுபவர்.  இப்பொழுது நடுநிலைமையுடன் ஆராய்ந்து தமிழ்க் குடமுழுக்கிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கி இறையன்பர்கள் உள்ளத்திலும் உயர்ந்து விட்டார்.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.         (திருவள்ளுவர், திருக்குறள் 112)
நடுவுநிலமையாளரின் ஆக்கம் அவர் வழிமுறையினருக்கும் நன்மை தரும்.
வாழ்க அறவாணர் நீதிபதி மகாதேவன்/
வெல்க அவர்தம் முயற்சிகள்/
அவரும் சுற்றத்தினரும் நலமும் வளமும் தமிழும் நிறைந்து நீடு வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Tuesday, November 6, 2018

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு

  தமிழ்வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிப்பன இதழ்கள். இன்று அச்சு இதழ்கள் குறைந்து விட்டன. ஆனால், மின்னிதழ்கள் பெருகி விட்டன. அச்சிதழ்கள் அதே வடிவத்திலும் கூடுதல் பக்கங்களுடனும் அச்சிதழ் இன்றி மின்னிதழாக மட்டும் என்றும் மூவகை மின்னிதழ்கள் உள்ளன. இவை உடனுக்குடன் படிப்பவர்களைச் சென்றடைகின்றன.
 செய்திகளையும் படைப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இதழ்களில் பெரும்பான்மையன தமிழைக் கொண்டு சேர்ப்பதில்லை. காட்சி ஊடகங்களால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் இக்காலக்காட்டத்தில் இதழ்களாவது தமிழைக் காக்க வேண்டும். இப் பணிகளால் காட்சி ஊடகங்களையும் தமிழின்பால் திருப்ப வேண்டும்.
  முன்பெல்லாம் இதழ்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்த அறிவுரை கூற முடிந்தது. ஆனால், இப்பொழுது பிழைகள் மலிந்து “இவை தவிர பிற யாவும் பிழைகளே!” என்று சொல்லும் வகையில்தான் பிழை மண்டிய நடைகள் உள்ளன.
  செய்தியை முந்தித் தரும் ஆர்வத்தில் தமிழ்ச்சொல் அறிய முற்படாமல் பிற சொல் பயன்படுத்துவோரும் உள்ளனர். வாழும் மொழி என்னும் அறியாமையில் பிற மொழிச்சொற்களும் பிற மொழி எழுத்துகளும் நிறைந்த போலித் தமிழில் எழுதுநரும் உள்ளனர்.
  சொற்சேர்க்கையின் பொழுது எழுத்துகள் மிகுதல், மிகாமை குறித்த இன்றியமையாமையை உணராமல், அத்தகைய இலக்கணம் தேவையில்லை என்று தவறாக எழுதுவதைப் பெருமையாகக் கருதுவோரும் உள்ளனர்.
  மரபுக்கவிதை எழுதத் தெரிந்தாலும் பிற சொல் கலந்தால்தான் புதுக்கவிதை எனத் தமிழைச் சிதைக்கும் கவிஞர்கள் படைப்புகளும் இதழ்களில் வருகின்றன.
  இயேசு(Jesus), பேதுரு(Peter), யோவான்(Jhon),  என்பன போன்று கிறித்துவர் இங்கே வந்த பொழுது பெயர்களைத் தமிழ் ஒலிப்பிற்கேற்பவே பயன்படுத்தினர். கடந்த நூற்றாண்டு வரை வந்த அயலவர்களும் எல்லீசன் என்பதுபோன்று தமிழ் மரபிற்கேற்பவே தங்கள் பெயர்களைப் பயன்படுத்தினர். இப்பொழுது நாம், நம் மொழிப்பெயர்களைச் சிதைத்துவிட்டுப் பிற மொழிப்பெயர்களை அவ்வாறே எழுத வேண்டும் என்று துடிக்கின்றோம். பெயர்ச்சொற்களைத் அயல் எழுத்துகளை நீக்கித் தமிழ் ஒலிப்பிற்கேற்பவே எழுத வேண்டும்.
தமிழ்ப்போராளி இலக்குவனார், படைப்புகள் தொல்காப்பியர் வழியில்
அயற்சொல் கிளவி அயலெழுத்து ஒரீஇ
(அயற்சொற்கள் அயல் எழுத்து நீக்கப்பட்டு)
இருக்க வேண்டும் என்கிறார்.
  இவ்வாறு இதழ்கள் தமிழ் ஒலிப்பிற்கேற்ப் பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நல்லுணர்வை மக்களிடையே பரப்ப இயலும்.
 எனவே, இதழ்கள் பிற மொழிச்சொற்களுக்கும் அயலெழுத்துகளுக்கும் இடம் தராமல் (நல்ல) தமிழை மட்டுமே பயன்படுத்தி மக்களுக்கு வழி காட்ட வேண்டும். நல்ல தமிழைக் கற்க விரும்பும் அயல் நாட்டவர்களுக்கு இது பெரும் பயன் நல்குவதாக அமையும்.
  இதழ்கள் செய்திகளைத் தருவது மட்டும் தம் பணி எனக் கருதாமல், செய்திகளின் ஊடாக அன்னைத் தமிழையும் அறியச் செய்வதைக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வளரும்! வெல்லும்! வாழும்!
அயல்நாட்டிலிருந்து அருந்தமிழ்ப்பணி ஆற்றும் மின்மினி இதழ் பொன்விழா, நூற்றாண்டு முதலான பிற விழாக்களையும் காண வாழ்த்துகிறேன்.
தமிழ் வாழ்தலில்தான் தன் வாழ்க்கையும் உள்ளது என உணர்ந்து பிற இதழ்களுக்கு எடுத்துக்காட்டாக நல்ல தமிழை மக்களிடம் சேர்த்து நானிலம் புகழ நிலைத்து இயங்க வாழ்த்துகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, October 27, 2018

கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே
கலைஞருக்கு உண்மையான அஞ்சலி!

தமிழுக்குரிய தொன்மையான செம்மொழித் தன்மையை மத்திய அரசை ஏற்கச் செய்ததில் கலைஞர் கருணாநிதிக்கு முதன்மைப் பங்குண்டு. தமிழறிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்கச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைய அவரே காரணமாக இருந்தார். இந்நிறுவனம் வளரவும் தமிழ் மேம்படவும் கனவு கண்டார்.  எனவே தனிப்பட்ட முறையில் சொந்தப்பணம் உரூ 1 கோடி வழங்கிச் செம்மொழித் தமிழ் அறக்கட்டளையை வழங்கினார். இத்தொகை தரும் வட்டியிலிருந்து ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது. விருது என்பது உரூ 10,00,000 தொகையாகும். இத்துடன் தகுதிச்சான்றிதழும் தமிழ்த்தாய்ச்சிலை நினைவளிப்பும் தங்கப்பதக்கமும் பொன்னாடையும் வழங்கப் பெறும். ஆண்டுதோறும் ஏப்பிரலில் விண்ணப்பங்கள் கேட்டு, மேத் திங்கள் முடிவெடுத்து, நன்கொடையாளரான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான சூன் 3 இல் விருது வழங்கப்பெறும் எனவும் அறிவிக்கப்பெற்றது.
செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்பெறும். பண்டைத் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம்பற்றிய புதிய கருத்துகளை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், பண்டை இலக்கணமும் மொழியியலும், இலக்கியத் திறனாய்வு, படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, இசை, நடனம், நாடகம், ஒவியம், சிற்பம் முதலான ஏதேனும் துறையில் மேற்கொண்ட ஆய்வாகவும் பங்களிப்பு அல்லது படைப்பு இருக்கலாம். தமிழ் குறித்துப் பிற மொழியிலும் இருக்கலாம். இவ்விருது உலகளாவியது. அது மட்டுமல்ல நம் நாட்டில் கூடுதல் பரிசுத் தொகை உடைய இலக்கிய விருதாகும்.
2009 இல் கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடைபெற்ற பொழுது முதல் விருது பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அசுகோ பர்ப்போலா(Prof. ASKO PARPOLA) என்னும் அறிஞருக்கு வழங்கப் பெற்றது.  இவர் சிந்துச் சமவெளி, அரப்பா நாகரிகம் குறித்தும் அவற்றின் எழுத்துவகைகள் குறித்தும், திராவிட மொழிக் குடும்பத்தின் நோக்கில்    ஆராய்ச்சி மேற்கொள்பவர். எனவே முதல் விருது தக்கவருக்குக் கிடைத்ததில் அனைவரும் மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் ஆண்டுதோறும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் வந்துபோய்க் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் விருது தரும் வழி கண்ணுக்கு எட்டிய  தொலைவு காணப்படவில்லை.
2010 இற்கு விண்ணப்பங்கள் வரப்பெற்று அவை இயக்குநர்(பொறுப்பு) மேசையில் பசைபோட்டு ஒட்டப்பட்டன. எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர் ஆண்டுகளுக்கும் அறிவிப்பு இல்லை. அதிமுக ஆட்சி இருந்ததாலும் அதன் தலைவர் முதல்வர் செயலலிதா எதிர் உணர்வு கொண்டிருந்ததாலும் விருது அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால், அவர் மறைந்ததும் 2011, 2012, 2013, 2014, 2015, 2016 என 6 ஆண்டுகளுக்கும் கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதிற்கான விண்ணப்பங்கள் கோரப்பெற்றன. இதற்கான நடவடிக்கையை அப்போதைய பதிவாளர் முனைவர் முகிலை இராச பாண்டியன் எடுத்திருந்தார்.
6 ஆண்டு விருதுகளுக்குமாக ஏறத்தாழ 150 விண்ணப்பங்கள் வந்திருந்தும் தெரிவுக் குழு அமைக்கவே நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்பான பதிவாளரின் குறிப்புகள் இயக்குநர் அறையில் உறங்கிக் கொண்டுள்ளன. அதிகாரமற்ற துணைத்தலைவர் ஒன்றும் செய்ய இயலா நிலைதான் உள்ளது. இது குறித்துக்கேட்டால் தங்களுக்குக் கிடைக்க இருக்கும் விருது கிடைக்காமல் போய்விடுமோ என்று தமிழறிஞர்களும் அமைதி காக்கின்றனர்.
பொதுவாகத் தமிழ்ப்பேராசிரியர்களே பதிவாளர்களாக அமைந்தமையால் அவர்கள் செம்மொழி நிறுவனப் பணிகளில் ஆர்வம் காட்டினர். ஆனால் இயக்குநர் பொறுப்பாக இருப்பவர்கள் மத்திய அரசின் அதிகாரிகள். அவர்களும் கூடுதல் பொறுப்பில்தான் செயல்படுவர். சான்றாக இப்போது இயக்குநர் பொறுப்பாக இருக்கும் அ.பழனிவேல், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக்கழகத்தின் (NIT) பதிவாளர். மத்திய அரசின் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் எங்ஙனம் தமிழார்வத்தை எதிர்பார்க்க முடியும்?
மத்திய அரசைப் பொறுத்தவரை இந்நிறுவனம் செயல்படுவதில் நாட்டமில்லை. எனவேதான், பத்தாண்டுகளாக இயக்குநர் பதவியை நிரப்பாமல் உள்ளது. பதிவாளர் பதவியும் அவ்வப்பொழுது இப்பொழுது உள்ளதுபோல் காலியாகத்தான் இருக்கும். பொறுப்பாளர்கள் இருக்கும் பொழுதே செயல்பாடு சிறப்பாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது.
உயர்நிலை அதிகாரிகளே இல்லாத நிலையில் எங்ஙனம் செம்மொழி நிறுவனம் இயங்கும்?
இதனைப் புறக்கணிப்பதன் ஒரு பகுதியாகத்தான் இதனைத் திருவாரூரிலுள்ள மத்தியப்பல்கலைக் கழகத்துடன் இணைக்க முயன்றது. இருப்பினும் நமது எதிர்ப்பால் அதனைக் கைவிட்டது. ஆனால், மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைத்துச் செயல்பாட்டை நிறுத்த முயன்ற மத்திய அரசு, “தனியாக எப்படிச் செயல்படுகிறீர்கள், பார்ப்போம்” எனப் பாராமுகமாக இருப்பதாக நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருணாநிதி எதிர் அரசியலைக் கைவிட்டுக் காட்சிக்கு எளியராக இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். செம்மொழி நிறுவனத்தின் தனித்தன்மையைக் காப்பதற்காக ஆட்சிக்கு வந்த புதிதில் முதன் முறையாகச் செம்மொழி நிறுவன ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். தலைவர் என்ற முறையில் அவர் நடவடிக்கை எடுத்து ஏற்கெனவே அறிவித்த 7 ஆண்டுகளுக்கும் 2017 ஆம் ஆண்டிற்கும் சேர்த்து விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற காலத்தாழ்ச்சி இல்லாமல் இருக்கவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’யைப் பதிவு பெற்ற தனி அமைப்பாக மாற்ற வேண்டும். நன்கொடையாளரான கலைஞர் கருணாநிதி குடும்பத்தினர், தமிழறிஞர்கள், செம்மொழி நிறுவன உயரதிகாரிகள் கொண்ட குழு இதன் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆண்டுதோறும் காலத்தாழ்ச்சியின்றித் தெரிவுக் குழுவை அமைத்தும் விருதாளர்களைத் தேர்ந்தெடுத்தும் செம்மொழி நிறுவனம்சார்பில் சூன் 3 ஆம் நாளில் விருது வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாய் கையில் கிடைத்த தேங்காயாக   அறக்கட்டளை வைப்புத் தொகை பயனற்றுப் போகும்.
பொறுப்பில் உள்ளவர்களின் குடும்பத்தவருக்கோ வேண்டியவருக்கோ விருது வழங்குவதாக இருந்தால் இப்படிப் பாரா முகமாக இருப்பார்களா? நாடாளுமன்றங்கள் ஒத்திவைக்கப்படுதல் தேசியத் துக்கம் கடைப்பிடித்தல் ஆகியவற்றைவிட, உண்மையான அஞ்சலி என்பது அவர் கனவை நனவாக்கும் வகையில் செம்மொழித் தமிழ் விருதுகளை வழங்குவதுதானே! உரிய நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசும் செம்மொழி நிறுவனமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
நக்கீரன், தொகுப்பு 31, இதழ் எண் 57,
நாள் அக்.27-30 பக்கங்கள் 24-26


Friday, October 26, 2018

ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

..பதினெண்மர் வழக்கு:

மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்!

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.(திருவள்ளுவர், திருக்குறள் 578)
 தீர்ப்பு என்பது வழக்கின் தன்மையைமட்டும் கருதி வழங்கப்படுவதில்லை. நேர்வுகளுக்கேற்ப, வழக்காளிகளின் செல்வாக்கு, வழக்கின் பரபரப்புத் தன்மை, நீதிபதியின் பார்வை, வழக்குரைஞர்களின் வாதத்திறமை, வழக்கு நீட்டித்து ஆனால் சட்டென்று உடனே தீர்ப்பு சொல்ல வேண்டிய காலச்சூழல், அரசியல் மேலாதிக்கம் முதலியவற்றின் அடிப்படையிலேயே பல தீர்ப்புகள் அமைகின்றன. பணிச்சுமைகளில், வழக்குரைஞர் அல்லது வேறு யாராலோ தெரிவித்துத் தட்டச்சிடப்படுவதே தீர்ப்பாக வந்துள்ளதாகவும் சில சமயங்களில் கூறியுள்ளனர். சில நல்ல தீர்ப்புகளுக்கு மோசமான எதிர்க் கருத்துகள் வந்துள்ளன. சில மோசமான தீர்ப்புகள் நேர்மையானவையாகக் காட்டப்பட்டும் உள்ளன. எவ்வாறிருப்பினும் கீழமைவு நீதி மன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை தீர்ப்புகள் மாற்றப்பட்டுள்ளன என்பதே தீர்ப்பின் நிலையற்ற தன்மையை விளக்கும்.
  தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது குறித்த கருத்தைச் சொல்ல யாருக்கும் உரிமையுண்டு. இதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கூற இயலாது. நீதிமன்றத்தீர்ப்பைச் செயல்படுத்தும் நிலையில் உள்ளவர், மேல்முறையீடு செய்துள்ளமை போன்ற காரணம் இன்றிச் செயல்படுத்தாதிருந்தால் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதலாம்.
 நீதிபதி, தான் உய்த்துணர்ந்ததன் அடிப்படையில் தீர்ப்பு சொல்லி யுள்ளதை, அவர் பயன் அடைந்தோ பயன் எதிர்நோக்கியோ தீர்ப்பு சொன்னதாகப் பொய்க்குற்றம் சாட்டுவதும் நீதிமன்ற நடவடிக்கைக்குரியதே!
 எனவே, நாடே எதிர்நோக்கிய – உலகின் பல பகுதிகளில் எதிர்பார்த்திருந்த – தீர்ப்பு வெளியானபின்னர் அது குறித்து மக்களிடம் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை ஊடகத்திற்கு உண்டு என்ற அளவில் நாமும் சிலவற்றைத் தெரிவிக்க விருமபுகிறோம்.
 தகுதிநீக்க வழக்கினை விரைவாக முடிப்பதாகக் கூறி 12 நாள் கேட்பில் ஆகத்து 31 இல் இறுதிக் கேட்பு நிகழ்ந்தது. ஆனால், கிட்டத்தட்ட அட்டோபர் இறுதியில் அஃதாவது அட்டோபர் 25(2018) ஆகிய நேற்றுதான் தீர்ப்பு சொல்லப்பட்டது.
 18 சட்ட மன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்த வழக்கில் மூன்றாம் நீதிபதியின் தீர்ப்பு காலந்தாழத் தாழ இவர்களுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் எனப் பலரும் கருதினர். அதற்கேற்பவே தீர்ப்பும் வந்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டமன்றத்தலைவரின் தீர்ப்பு தவறெனக் குறிப்பிட்டு இரண்டாம் நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பை ஏற்று இதனை அறிவிப்பதாகச் சொல்லியிருப்பார் என்றுதான் அறத்தை எதிர்பார்த்தவர்கள் நம்பினர். இருப்பினும் அரசியல் சூழல் மாறாகவே தீர்ப்பைத் தரும் என்ற அச்சமே பலருக்கும் இருந்தது.
  இத்தீர்ப்பு படிக்கும்பொழுது ஆராய்ந்து சொல்லப்பட்டதுபோல்  எழுதப்பட்டிருந்தாலும் நாம் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதே  நீதிக்குமாறான பல இடறல்களைக் காண முடிகிறது.
  முதல் இடறல் பன்னீர் அணிக்கு ஒருமாதிரி நடவடிக்கையும் தினகரன் அணிக்கு வேறுமாதிரி நடவடிக்கையும் எடுத்ததாகக் குற்றம்சாட்டியதற்குத் தீர்ப்பு சொல்லும தவறான விளக்கம்.
 கடந்த 2017ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 18ஆம் நாள் தமிழகச் சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திக்கு எதிராக அதிமுக ச.ம.உறுப்பினர்களில் பன்னீர் அணியினர் 11 பேர் வாக்களித்தனர். இது குறித்து பேரவைத்தலைவருக்கு முறையிட்டும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்தான் திமுக கொறடா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். தீர்ப்பு வந்ததன் பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடும் செய்துள்ளார்.
 அரசை எதிர்த்து நம்பிக்கையில்லை என வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தீர்ப்பு கூறுகிறது. எனவே அவர்களுக்குச் சாதகமாகவும் ஒருதலைச்சார்பாகவும் பேரவைத்தலைவர் செயல்பட்டார் என்பதை ஏற்க முடியாது  என்றும் தகுதி நீக்க விதிகளையும் இயற்கை நீதியையும் முழுமையாகப் பின்பற்றியே உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும் தீர்ப்பு கூறுகிறது.
உண்மைப் பூச்சுணைக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றதாக இத்தொடர்கள் அமைந்துள்ளன.
 மக்கள் எழுப்பும் வினா, அரசிற்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த பொழுதும் அதை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டிய பின்பும் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், வேறு கட்சியினருடன் சேராமல் நாட்டுத்தலைவர் என்ற முறையில் ஆளுநரிடம் முதல்வரை மாற்றுமாறு கோரியதற்குச் சட்ட மன்ற உறுப்பினர் பறிப்பு என்றால் ஒருவர் கண்ணில் வெண்ணெயும் மற்றொருவர் கண்ணில் சுண்ணாம்பும் தடவுவதுதானே.  இதைத் தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய தீர்ப்பு இதற்குப் பின்னர் நேர்ந்தமுறையீட்டைக் காரணம் காட்டி வழக்கு நிலுவையால் நடவடிக்கை இல்லைஎன்று சப்பை கட்டுவது ஏன்?
  அரசியல் கடமையை ஆற்றி நடுவுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டியபொறுப்பில் உள்ள ஒருவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் உண்மைக்குமாறாகவும் இரு வேறு நிலைப்பாட்டைப் பின்பற்றுவது இயற்கைமுறைமையை மீறியதாக இல்லாமல் வேறு என்னவாம்?
 அடுத்த இடறல்.
முதல்வருக்கு எதிராக 18 ச.ம.உ.களும் ஆளுநரிடம் முறைப்பாடு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ள தகவலைத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  ச.ம.உ.கள்  தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற உசாவலின் பொழுது தெரிவிக்கவில்லை எனத் தீர்ப்பில் குறிக்கப்பட்டுள்ளது.
இதுவும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. இவ்வாறு தகவல் தெரிவிக்காமையால் தீர்ப்பு உண்மைக்கு எதிராக வழங்கப்பட்டதாக – அஃதாவது இதைக் கவனிக்காமையால் மாறான தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்று – சுட்டிக்காட்டுவதாக இருந்தால் இவ்வாறு கூறலாம். இதனால் எந்த வகையில் முந்தைய தீர்ப்பு மாறியுள்ளது எனக் கருதுகிறார் என்பது புரியவில்லையே! இத்தகவல் பேரவைத்தலைவர் அல்லது முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை யெனில் இதைக் குற்றமாகச் சொல்லி  இதன் அடிப்படையில் தகுதி  நீக்கம் செய்தது சரி என்று சொல்வது எப்படி  முறையாகும்? நியாயமாகும்?  நீதியாகும்? நயன்மையற்ற வாதமாகப் படுகிறது.
 முதன்மையானதும் தலைமையானதுமான இடறல் வழக்கினைக் குறித்தநீதிபதியின்கண்ணோட்டம்.
  தீர்ப்பை வாசிக்கும் முன், ‘மாறுபட்ட உத்தரவுகளின் அடிப்படையில் பார்க்காமல், இந்த வழக்கை தனியாகக் கருதிப்பார்த்து, உத்தரவு பிறப்பிக்கிறேன்’ என, நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வழக்கு கேட்பு தொடங்கியபொழுது இரு தரப்பாரும் முதலில் இருந்து தெரிவிக்கத் தேவையில்லை; தீர்ப்புரைகளின் மாறுபட்ட தன்மையில் சொன்னால்  போதும் என்று தடைவிதித்துள்ளார்.  வழக்குதொடர்பனாவர்களுக்கு ஒரு நீதி! தீர்ப்பாளருக்கு வேறு ஒரு நீதியா தனியாகக் கருதிப் பார்ப்பதாக இருந்தால் வழக்கின் முந்தைய உசாவல்களைப் புறந்தள்ளி, இரு தரப்பாரிடமும் தொடக்கத்திலிருந்து அல்லவா விவரங்களையும் வாதங்களையும் கேட்டிருக்க வேண்டும்.  எனவே, அடிப்படை அறமேமீறப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த தீர்ப்புரையுமே தவறாகப்படுகிறது.
 தலைமை நீதிபதி தீர்ப்பு தொடர்பான மறு உசாவல், அவரது கருத்திற்கு எதிராகச் சொலலக்கூடாது என்ற எண்ணத்தை அவரது சார்நிலையில் உள்ள நீதிபதிக்குத் தோற்றுவிக்கலாம். எனவே, இதுபோன்ற நேர்வுகளில் பிற மாநிலத்தலைமைநீதிபதியின் கருத்திற்கு விடலாமா என்பது குறித்து ஆராய வேண்டும்.
 தினகரன் அணியினர் தேர்தலையும் எதிர்நோக்கி, மேல் முறையீட்டிற்கும் செல்ல வேண்டும்மேல் முறையீடு அவர்களுக்காக அல்ல! தவறான தீர்ப்பு இனி முன் எடுத்துக்காட்டாக அமையக்கூடாது என்பதற்கும் வாளனளாவிய அதிகாரம் என்பது அரசியல் யாப்பின்படித்தானே தவிர பதவியில் உள்ளவர் எண்ணத்திற்கு ஏற்ப அல்ல என நிலை நாட்டப்படுவதற்காகவும்!
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.            (திருவள்ளுவர், திருக்குறள் 118)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive