Wednesday, December 29, 2010

Is Grantham necessary for science writings? - Ariviyalukku grantham the'vaiyaa?


அறிவியலுக்குக் கிரந்தம் தேவையா?
-இலக்குவனார் திருவள்ளுவன்


 தமிழ், தனித்தியங்க வல்லது என்பது அதன் சொல் வளத்தால் மட்டும் அல்ல; நெடுங்கணக்காலும்தான். எனவே, பிற மொழிச் சொற்களை நீக்கித் (தனித்) தமிழ் இயக்கம்  வெற்றி காண  அயல் எழுத்து வடிவங்களையும் அறவே நீக்க வேண்டும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அயல் எழுத்து வடிவம் என்று பார்க்கும் பொழுது பொதுவாக அயல் எழுத்தொலிகளைக் குறிக்கப்பயன்படும் கிரந்தம் நடைமுறையில் இருப்பதால்தான் பிற மொழிச் சொற்களை நாம் தங்கு தடையின்றிப் பயன்படுத்துகின்றோம்.

உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் தனித்தன்மையை நமக்கு உணர்த்திய அறிஞர் கால்டுவெல்; அதனை வழி மொழிந்து பரப்பிய அறிஞர் பரிதிமாற்கலைஞர்; அவ்வுண்மையை நிலைக்கச் செய்வதற்கெனத் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் தமிழ்க்கடல் மறைமலை யடிகள்; தனித்தமிழ் இயக்கத்தைப் புலவர்களிடையே கொண்டு சென்று தனித்தமிழ் இயக்க அமைப்புகளைத் தோற்றுவித்தவர் தமிழ்ஞாயிறு பாவாணர் அவர்கள்; இதழ்கள் மூலம் தனித்தமிழ் என்பது எளிமையான மக்கள் தமிழ்தான் என நாடெங்கும் பரப்பியவர் செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்; இவ்வியக்கம்  வேரூன்றவும் கிளை பரப்பவும் துணை நின்றவர்கள் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும்.

சமசுகிருதக் கலப்பை எதிர்த்துத் தனித்தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்ட தமிழ்நாட்டில், இந்தித்திணிப்பை எதிர்த்துத் தமிழ் எழுச்சி ஏற்பட்ட தமிழ்நாட்டில், இன்று ஆங்கிலச் சொற்கள் தங்கு தடையின்றித் தமிழுடன் கலந்து பயன்படுத்தப்படுகின்றன. பிறமொழிக்கலப்பால் தமிழ் சிதைந்து உருமாறிப் புதிய மொழி மாறியதும் அதனால் தமிழ் பேசும் நிலப்பரப்பு குறைந்ததும் வரலாறு காட்டும் உண்மையாக இருப்பினும் அதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மேலும் தமிழுக்கு அழிவு ஏற்படுத்தும் வகையில் உரையாடல்களிலும் ஊடகங்களிலும் படைப்புகளிலும் பாடங்களிலும் என எல்லா இடங்களிலும் வேறுபாடின்றி மொழிக்கொலையைக் காண முடிகிறது.  இம்மொழிக் கொலைக்குத் துணை புரிவன கிரந்த எழுத்துகளேயாகும். இவற்றை அடியோடு அகற்றினால்தான் தமிழ் தூய்மையுறும் ; தமிழ் இலக்கியம் செழுமையுறும்.

கிரந்தம் என்றால் என்னவென்றே தெரியாமல் பெரும்பான்மையர் பயன்படுத்துகின்றனர். அதுபோல் மணிப்பிரவாளம் என்றால் என்னவென்றே இக்காலத்தலைமுறையினர் கேட்கின்றனர். தமிழையும் சமசுகிருதத்தையும் கலந்து எழுதும் முறையற்ற நடையை மணியும் பவளமும் கலந்த மாலை போன்றது எனக் கூறி மணிப்பிரவாளம் என்றனர். இம்மணிப்பிரவாளத்தில் சமசுகிருத ஒலிகளை எழுதுவதற்காகப் பயன்படுத்தப்படும் வரிவடிவமே கிரந்தம் என்பதாகும். கிரந்தம் என்பது மொழியல்ல. சமசுகிருததத்திலும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால்  தமிழில் சமசுகிருதச் சொற்களைப் புகுத்துவதற்காக என்றே கிரந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது அறமற்ற செயல் அல்லவோ!

கிரந்தம் தமிழில் எங்கே உள்ளது என அதனை அறியாமல் பலரும் கேட்கின்றனர். ஜ,,,க்ஷ,ஸ்ரீ,ஹ எனத் தமிழில் கலந்து பயன்படுத்துகின்றோம் அல்லவா? இவைதாம் சிரந்த எழுத்துகள். இவை மொத்தம் ஆறுதானா என்றால்  இல்லை; (மேலும், மேலே குறித்த 6 எழுத்துகள் வரிசையுடன் ƒ என்னும் கிரந்த எழுத்தும் தமிழ்எழுத்தாகக் காட்டப்பட்டுள்ளது.) இவை 51 எழுத்துகள். மேலும் ஜ், ஜா, ஜி என்ற முறையில் பார்த்தால் இவற்றின் எண்ணிக்கை மேலும் பெருகும். இந்தியக் கண்டத்திலுள்ள அனைத்து மொழி வரிவடிவங்களும் தமிழ் வரிவடிவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டனவே. கிரந்த எழுத்து வடிவங்களிலும் 20 தமிழ் எழுத்து வடிவங்கள் உள்ளன. பிற ஏதோ ஒரு வகையில் தமிழ் எழுத்துகளை இட வலமாக மாற்றி அல்லது தலைகீழாக அமைத்து உருமாற்றி அல்லது வேறு வகையில் சேர்த்தோ குறைத்தோ உருவாக்கப்பட்டவைதாம் அனைத்து மொழி எழுத்துகளும். திரிந்த பாலைப் பயன்படுத்துவது தீமை விளைவிப்பது போல் இவை தமிழ் எழுத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும் இவற்றை நாம் பயன்படுத்துவது நமக்குத் தீமையே விளைவிக்கும்.  

ஒருசாரார் பிற மொழிச் சொற்களை அந்த மொழிகளுக்குரிய ஒலிப்படியே ஒலிக்க வேண்டும் என்று கூறி அதற்குக் கிரந்தம் தேவை என்கின்றனர். ஆனால், இவர்கள் தமிழ் மொழிச் சொற்களைத் தமிழுக்கேற்ற வகையில் ஒலிக்காமல் பிற மொழியாளர்கள்போல் சிதைத்து ஒலிப்பவர்கள். என்றாலும் இவர்களது கருத்துகளைப் பிறர் நம்பும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதேபோல் மற்றும் சிலர்   அறிவியல் பெயர்களை எழுதுவதற்குக் கிரந்தம் தேவை என்கின்றனர். உலகில் எந்த  மொழியினரும் பிற மொழிச் சொற்களை எழுத வேண்டும் என்பதற்காகத் தம் எழுத்து வடிவினைச் சிதைத்ததில்லை. தத்தம் எழுத்துகளைப் பயன்படுத்தித்தான் பிற மொழிச் சொற்களைத் தங்களால் இயன்ற ஒலிப்பு முறைக்கேற்ப பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டிலோ எப்போதும் தமிழ்ப்பகைவர்களே செல்வாக்கு பெற்றுத் திரிகின்ற காரணத்தால்  பிற மொழிகளுக்கு முதன்மை அளித்துத் தமிழ் மொழியைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர்.

பெயர்ச்சொற்களை நம் மொழி எழுத்துகளைக் கொண்டே எழுத வேண்டும் என்பதற்குச் சான்று ஒன்று பார்ப்போம். தமிழ் என்று நாம்  குறிப்பிடுவதைப் பிற மொழியினர், தமில், டமில், டமிலு, டேமிள், டமிரு, தமிரு, என்றெல்லாம ஒலிக்கின்றனர். தமிழுக்குரிய ழகரத்தைத் தம் மொழியில் இடம் பெறச் செய்யவோ அதற்கு ஏற்ற புதிய எழுத்து வடிவத்தை உருவாக்கவோ முயலவில்லை. இவ்வாறுதான் ஆள் பெயர்கள், இடப்பெயர்கள், பொருள் பெயர்கள் முதலானவை பிற மொழிகளில் தம் மொழிகளின் இயல்பிற்கேற்ப மாற்றப்படுகின்றன. அவ்வாறு நாம் பிற மொழிகளை நம் மொழிக்கு ஏற்பக் குறிப்பிட்டால் எவ்வாறு மூலச் சொற்களைப் புரிந்து கொள்வர் என்று சிலர் கேட்கின்றனர். நாம் சப்பான் அல்லது ஜப்பான் என்று சொல்வதை அந்நாட்டினர் தம் தாய்மொழியில் நிப்பன் என்றுதான் குறிக்கின்றனர். தொடக்கத்தில் நிப்பன் என்பதை அறியாமல் இருப்பதால் ஒன்றும் யாருக்கும் இழப்பு  இல்லை. ஆனால், நாளடைவில் பழக்கத்தில் இருவகைப் பெயர்களையும் நாம் அறியும் வாய்ப்பு கிட்டும். இந்தியாவின் பெயரையே பிறர், இந்த், இந்தொ, இந்தே, இண்டியா, என்றெல்லாம் கூறும் பொழுது இந்தியா பாரத் என்றுதானே குறிப்பிடுகிறது. எனவே, பெயர்ச் சொற்களுக்குக்  கிரந்தம் தேவை என்பது தேயைற்ற  வாதம்.

அறிவியல் பெயர்களைக் குறிக்க கிரந்தம் வேண்டாவா என்பவர்கள், இலங்கையிலும் ஈழத்திலும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமலேயே அறிவியல் பெயர்களைக் குறிப்பதை உணர வேண்டும். சான்றுக்குச் சில வேதியல் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.  இவற்றிற்கெல்லாம் உரிய தமிழ்க் கலைச் சொற்களை அறிந்து அல்லது புதியதாய்ப் புனைந்து நாம் பயன்படுத்த வேண்டும். எனினும்  கிரந்தத்தைப் பயன்படுத்தாத ஒலி பெயர்ப்பு முறைக்காக நாம்  இவற்றை அறிய வேண்டும். சில எழுத்தொலிகளைத் தமிழில் குறிப்பிடும் முறை குறித்து மாறுபட்ட கருத்து இருக்கலாம். எனக்கும் அவ்வாறு மாறுபட்ட கருத்து உண்டு. ஆனால், இலங்கையினர் அவர்களின் ஒலிப்பு முறைக்கேற்ப குறிப்பிட்டுள்ளதால் நாம் முன்னோடியாக உள்ள அந்த முறையைப் பின்பற்றுதல் தவறு ஆகாது. நாம் வேறு முறையைப் பின்பற்றினால்தான் குழப்பம்  ஏற்படும். உலகளாவிய ஒரே முறைக்காக நாம் இவற்றைப் பின்பற்ற வேண்டும்.
கிரந்த எழுத்து  பயன்படுத்தும்  வாய்ப்பு  இல்லாத  ‘te’,‘de’    என்பன போல் வரும்  இடங்களில் எவ்வாறு தமிழில் குறிக்க வேண்டும் என்பதற்கும் சான்றுகள் குறிக்கப் பெற்றுள்ளன. பொதுவாக  ‘t’ என்பது என்னும் ஒலியில் சொல்லின் தொடக்கத்தில் அல்லது இடையில் வழங்கப்பெற்றிருப்பினும் இறுதியில் அல்லது ற்று என்று ஒலிக்கும் வகையில்  ஒலிபெயர்ப்பாக்கங்கள் உள்ளன.‘ட’ மொழி முதலில் வராது; ‘ட்’ மொழி இறுதியில் வராது என்னும் இலக்கணத்திற்கேற்ப இவ்வாறு ‘த’ பயன்படுத்தப்படுகின்றது: 

telluric acid தெல்லூரிக்கமிலம்
telluride  தெல்லூரைட்டு
tellurium தெல்லூரியம்
terbium  தேபியம்
terephthalic acid  தெரத்தலிக்கமிலம்
terpene  தெப்பீன்
toluene   தொலுயீன்
tyndal effect  திண்டல்விளைவு
tyrosine தைரோசீன்


Actinium அத்தினியம்
actinomycin அத்தினோமைசின்
antimony அந்திமனி
acetamide அசற்றமைட்டு
acetyl chloride     அசற்றயில்குளோரைட்டு
agate அகேற்று
antimonite அந்திமனைற்று
azurite  அசுரைற்று

‘C என்பது  ஒலிப்பிற்கேற்ப வரிசையில் அல்லது வரிசையில் உள்ள எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:

cadmium கடமியம்
caesium சீசியம்
caffeine கபேன்
calamine கலமின்
carbonado காபனாடோ
carbonate காபனேற்று
cellophane செல்லோப்பேன்
cellosol செல்லோசோல்
celluloid செலுலோயிட்டு
cellulose செலுலோசு
cement சீமந்து
chloral hydrate குளோரலைதரேற்று
chloral குளோரல்
chrysoberyl கிரிசோபெரில்
chrysoprase கிரிசோபிரேசு
cuprous hydride குப்பிரசைதரைட்டு
cuprous iodide குப்பிரசயடைட்டு

எனினும் ‘c’ ஐத் தொடர்ந்து ‘t’  வருகையில்  ‘bacteria’, பற்றீரியா  என அவ்வொலிக்கேற்ப வருகிறது.


‘d’ என்பதும்  ஒலிப்பிற்கேற்ப வரிசையில்  அல்லது ‘dehy’ என வரும் பொழுது ஐ எழுத்தால் குறிக்கப்பட்டுள்ளன:

daltons law of multiple proportion தாற்றனின்பல்விகிதசமவிதி
daltons law of partial pressure தாற்றனின்பகுதியமுக்கவிதி
daltons law தாற்றனின்விதி
damped mirror galvanometer தணித்த ஆடிக்கல்வானோமானி
daniells cell தானியலின் கலம்
dehydrogenation ஐதரசநீக்கல்
dehydrohalogenation ஐதரோவுப்பாக்கியைநீக்கல்

 ‘f’ என்பது  ஒலிப்பிற்கேற்ப வரிசையில் அல்லது வரிசையில் உள்ள எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:

faraday (unit) பரடேய் (அலகு)
faraday effect பரடேய் விளைவு
faradays laws of electrolysis பரடேயின்மின்பகுப்புவிதிகள்
farnesol பாணெசோல்
schiff base சிவுமூலம்
schiff test சிவுசோதனை

 ‘g’  இடையில் வாகவும்  இறுதியில் கு வாகவும் குறிக்கப் பெறுகின்றன:

Antigen  அந்திசன் 
Aquadag  அக்குவாடாக்கு

h’ என்பது  ஒலிப்பிற்கேற்ப , , , , , , எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:

haber ammonia process ஏபரமோனியாமுறை
hadfields steel அடபீலினுருக்கு
haematite ஏமத்தைற்று
haemoglobin ஏமோகுளோபின்
hafnium அபினியம்
hargreaves bird cell ஆகிரீசு பேடர்க்கலம்
hargreaves process ஆகிரீசின் முறை
hausmannite ஓசுமனைற்று
helium ஈலியம்
hemiacetal அரையசற்றல்
hemin ஏமின்
hempel gas burette எம்பெல்லின்வாயுவளவி
hempels apparatus எம்பெலினாய்கருவி
henrys law என்றியின் விதி
heptane எத்தேன்
hexane எட்சேன்
hexanol எட்சனோல்
holmium ஒலுமியம்
hydrazine hydrate ஐதரசீனைதரேற்று
hydrazine ஐதரசீன்

‘j’ என்பது  ஒலிப்பிற்கேற்ப வரிசையில் உள்ள எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:

joule-kelvin effect சூல்கெல்வினர் விளைவு
joule-thomson effect சூல்தொமிசனர் விளைவு

‘s’ என்பதும் ‘sch’ என்பதும்  ஒலிப்பிற்கேற்ப வரிசையில் உள்ள எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:
 
schonherr process  சோனர்முறை
schorder-grillo process  சோதகிரிலர்முறை
schotten-baumann reaction சொட்டன்போமானர்தாக்கம்
schulze-hardy rule சூல்சாடியர் விதி
schwein-furter green  சுவீன்பேட்டர்பச்சை
schweitzers reagent  சுவீச்சரின்சோதனைப்பொருள்
selenium  செலனியம்
selenium cell செலனியக்கலம்
selenium chloride செலனியங்குளோரைட்டு
selenium dehydrogenation  செலனியமைதரசனீக்கல்
selenium dioxide செலனியமீரொட்சைட்டு
selenium trioxide செலனியமூவொட்சைட்டு
siderite சிதரைற்று
siemens ozoniser  சீமஞ்சினோசோனாக்கி
siemens-martin steel process  சீமஞ்சுமாட்டினர் உருக்குமுறை
smalt சிமோற்று
smaltite  சிமோற்றைற்று
sodium aluminium fluoride  சோடியமலுமினியம்புளோரைட்டு
sodium ammonium hydrogen phosphate  சோடியமமோனியமைதரசன்பொசுபேற்று
sodium argentocyanide  சோடியமாசந்தோசயனைட்டு
sodium ferrite  சோடியம்பெரைற்று

‘s’ இடையில் வரும் பொழுது சு எனக் குறிக்கப்பெறுகின்றது:

asprin  அசுப்பிரின்
acetoacetic ester  அசற்றோவசற்றிக்கெசுத்தர்

‘se’  என  முடிவன சு  எனத் தமிழிலேயே குறிக்கப் பெறுகின்றன:

aminoglucose அமீனோகுளூக்கோசு
amylase அமிலேசு

  ‘x’, ‘z’  ஆகியன   வரிசையில் குறிக்கப் பெறுகின்றன:

xanthophyll  சந்தோபில்
xenon  செனன்
xylene சைலன்
xylidine  சைலிதீன்
zeisel methoxy determination சீசெல்மெதொட்சித்துணிதல்
zeolite செயோலைற்று
zeotropic mixture மாறுகொதிநிலைக்கலவை
zerewitinoff determination செரிவிற்றினோவுதுணிதல்
zeta potential சீற்றாவழுத்தம்
zinc சிங்கு azulene அசுலன்
azulmic acid அசுல்மிக்கமிலம்

‘y’ யிகர ஒலியாக வரும் பொழுது இகர ஒலியிலேயே குறிக்கப்படுகின்றது:

ytterbium இத்தேபியம்
yttrium இத்திரியம்
சொல்லளவில் ஒவ்வொன்றும் விளக்கமாக அமைந்துள்ளதால் நான் விரித்து உரைக்க வில்லை. எனினும் இலங்கையிலும் ஈழத்திலும் கிரந்த எழுத்து எதையும் பயன்படுத்தாமல் அறிவியல்  பெயர்களையும் பிறவற்றையும் குறிப்பிடும் பொழுது நாம் கிரந்தம் இன்றேல் தமிழ் முழுமையடையாது என்ற அறியாமையில் மூழ்கியிருப்பது வெட்கக்கேடானது அல்லவா? எனவே, நம் அகராதிகளில் கிரந்தம் பயன்படுத்திய இடங்களில் அவற்றை நீக்கிப் புதிய பதிப்புகள் வெளியிடப் பெற வேண்டும். கிரந்த எழுத்துகளைப் பாடநூல்களில் சேர்த்துள்ளமையால் - அதுவும் தமிழ் எழுத்துகள் என்ற தலைப்பில் தமிழ்த்தாய்க்கு ஊறுநேரும் வகையில் சேர்த்துள்ளமையால், அதனை உணராமல் - நாம் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகிறோம். ஆகவே, கிரந்த எழுத்துகளை உடனே பாட நூல்களில் இருந்து நீக்க வேண்டும்.
கணிணியில் சீருரு அல்லது ஒருங்குகுறி என்ற போர்வையில் கிரந்தத்தை  நுழைக்க முயல்தையும் தடுக்க வேண்டும்.

அறிவியல் துறையிலும் கிரந்தம் வேண்டா!
அனைத்துத் துறையிலும் கிரந்தம் வேண்டா!
தாய்த்தமிழின்  தூய்மையைப் பேணுவோம்!


- ---- இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive