Thursday, March 10, 2011

andre' sonnaargal 37- shoes:அன்றே சொன்னார்கள் 37 - காலணிகளைக் கவினுற அமைத்தனர்

>>அன்றே சொன்னார்கள்37


காலணிகளைக் கவினுற அமைத்தனர்

                                                                                                                

natpu 
கற்களிலும் முட்களிலும் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுது அதனால் ஏற்படும் துன்பத்தில் இருந்து விடுபட மனிதன் தொடக்கக் காலத்திலேயே கால்களில் எதையோ அணியும் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும். அதுவே மக்கள் கூட்டத்தின் நாகரிகத்திற்கேற்ப வெவ்வேறு காலணிகளாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரேகான்(Oregon) பகுதியில் உள்ள கற்கோட்டைக் குகையில் (Fort Rock Cave) 10,000 ஆண்டுக்காலத் தொன்மையான காலணிகள் 1938இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 2009இல் ஆர்மேனியாவில் குகை ஒன்றில்  3500 ஆண்டுத் தொன்மையான காலணியைக் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தியர்கள் பண்டைக்காலத்தில் பனை ஓலைகளாலும் நாணற் புற்களாலும் ஆனக் காலணிகளை அணிந்துள்ளனர். எகிப்திய குருமார்களின் ஆடைத் தொகுப்பில் இக்காலணிகளும் இடம் பெற்றிருந்திருக்கின்றன. மெசபடோமியாவில் தோலினால் ஆனக் காலணிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உரோம் நாட்டில் ஆடம்பரப் பொருளாக இருந்த காலணிகள் மாவீரர் அலெக்சாண்டருக்குப் பிந்தைய அகசுடசு எழுச்சி வரையிலான 300 ஆண்டுக் காலத்தில் (கி.மு.323-கி.மு.30) ஓரளவு பரவலான பயன்பாட்டிற்கு வந்தன. இருப்பினும் கி.பி.1760இல் முதல் காலணித் தொழிலகம்  அமைக்கப்பட்டது. எனினும் பிற நாடுகளில், 19ஆம் நூற்றாண்டில்தான் பொது மக்கள் காலணிகளைப் பரவலாகவும் பலவகைகளிலும் பயன்படுத்தத் தொடங்கினர்.

natpu கிரேக்கத்தில் கி.மு.முதல் நூற்றாண்டில் தொன்மைக்கதை ஒன்றில் முதன்முறையாகக் காலணி இடம் பெற்றுள்ளது. (இக்கதையைத் தழுவி 1634 இல் கியம்பட்டிசுட்டா பசிலி(Giambattista Basile) என்பவர் கதைகளின் கதை(Lo cunto de li cunti) என்னும் நூலில் காலணி அடிப்படையில் கதையைப் படைத்தார். 1697 இல் சார்லசு பெர்ரால்டு (Charles Perrault) கண்ணாடிக்காலணியாக மாற்றிச் சுவையுடன் சிந்தரெல்லா (Cinderella) கதையைப் படைத்தார். இப்பொழுது, மரத்திலும் தோலிலும் மட்டும் அல்லாமல் வெள்ளி, தங்கம் முதலான மாழைகளிலும் வைரக் கற்கள் பதித்தும் வெவ்வேறு நேரத் தேவைக்கேற்பவும் ஆட்டக்காலணி, தாளணி, காலரணம், வார்மிதி, குதியணி, மிதியணி,  எனப் பல்வகைக் காலணிகள் உருவாக்கம் பெருகி விட்டது.

தமிழ்நாட்டிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே காலணிகள் பயன்படுத்தி இருக்க வேண்டும். முறையான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால் பழந்தமிழ்நாட்டில் காலணிகளின் பயன்பாடு குறித்த பல சான்றுகள் கிடைக்கும்.  தமிழில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களிலேயே மக்கள் பல்வகைக் காலணிகளைப் பயன்படுத்திய உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
காலணிகள் பற்றிய குறிப்பு காணப்படும் இலக்கியங்கள் அவற்றை வழக்கமான அணிகளில் ஒன்றாகத்தான் குறித்துள்ளன. அடையல், அரணம், கழல், குத்திச் செருப்பு, குறட்டுச் செருப்பு, தோற்பரம், நடையன், மிதியடி, பாதுகை, பாவல், அரண், தோற்பரம், பாதக்காப்பு, அடிபுனைதோல் முதலான பல்வேறு வகையிலான காலணி பற்றிய சொற்கள் வெவ்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ளமை அவை காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையை விளக்குகின்றன. இவற்றுள் தொடுதோல், செருப்பு, அடிபுதை அரணம் ஆகியவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
natpu வேடவன் செருப்பு அணிந்து செல்வதைப்  புலவர் மருதன் இளநாகனார் 
        தொடுதோல் கானவன்   (அகநானூறு: 34.3; 368.1)
எனக் குறிப்பிடுகிறார்.

காலணி அணிந்து செல்பவர்களைத்
      தொடுதோல் அடியர்
என மதுரைக் காஞ்சியில்(636) புலவர் மாங்குடி மருதனாரும் பட்டினப்பாலையில் (265)புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் குறித்துள்ளனர்.

காலிற்கும் செருப்பிற்கும் இடையே புகுந்த கல் துன்பம் தருவதுபோல் பகைவர்க்குத் துன்பம் தருபவன் எனத் தலைவன் ஒருவனைப் பற்றிப் புலவர் ஒருவர்
      செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் (புறநானூறு: 257.1)
எனக்  கூறுகிறார்.
natpu புலவர் மாமூலனார்,
        அடிபுதை தொடுதோல் (அகநானூறு 101.9)
பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.  காலடி புதைந்து - மறைந்து- காணப்படும் அடிதோல் என்பதால் இது பாதங்களில் அணியும் மிதியடிபோல் இல்லாமல் காற்பகுதியை மறைக்கும் காலணி (சூ : shoe) ஆக விளங்கி உள்ளது எனலாம்.

காலடியை மறைக்கும் காலணியை அடிபுதை அரணம் எனக் குறிப்பிட்டுள்ளதைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின்
                                                             நோன்தாள்
        அடிபுதை அரணம் எய்தி (பெரும்பாணாற்றுப்படை 69-70)
என்னும் வரிகள்  மூலம் அறிகிறோம். அடிபுதை அரணம் என்பது வீரர்களின் (பாதத்தையும் காலையும் மறைக்கும்) காலணியாக இருந்துள்ளது.

செருப்பை அணிந்த அடியவர்கள் தெளிந்த சுனை  நீரைப் பருகி,  அரிய சுரத்தைக் கடந்து சென்றனர் என்பதைக் குறிப்பிடும்
     செருப்புடைஅடியர், தெண்சுனை மண்டும்
     அருஞ்சுரம் (அகநானூறு: 129.13-14)
என்னும் வரிகள் மூலம் புலவர் குடவாயில் கீரத்தனார், மக்கள் காட்டுப்பாதையைச் செருப்பு அணிந்தே கடந்துள்ளனர் என்பதை விளக்குகிறார்.
 
natpu காலணிகளை ஆடம்பரத்திற்காக அல்லாமல் தொடர்ந்து தேவைக்காகப்பயன்படுத்தி உள்ளனர். எனவே, காலில் வடு ஏற்பட்டுள்ளது. இதனைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
      தொடுதோல் மரீஇய வடுவாழ் நோன்அடி (பெரும்பாணாற்றுப்படை : 169)
எனக் குறிப்பிட்டுள்ளார். (செருப்பினை விடாமல்(மரீஇய) அணிந்தமையால் காலில் வடு ஏற்பட்ட வலிமையான கால்(நோன் அடி))
natpu செருப்பு என்பது மலை ஒன்றிற்கும் பெயர். அதன் தலைவனான இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடும்பொழுது  மிதிப்பதற்கு அல்லாத செருப்பின் தலைவன் என வேறுபடுத்தி,
      மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே (பதிற்றுப்பத்து : 21.23)
எனப் புலவர் பாலைக் கௌதமனார் பாடுகிறார்.

எனவே, காலணிகளைப் பிறநாட்டார் போல் ஆடம்பரமாகக் கருதாமல் அனைவரும் பயன்படுத்தி உள்ளனர் எனப் புரிந்து கொள்ளலாம்.

நடக்கும் பாதையில் ஏற்படும் இடர்களில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள காலணிகளைப் பயன்படுத்திய நாம் வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் இன அழிப்பு இன்னல்களில் இருந்து நம்மைக் காக்கத் தவறிவிடுகிறோமே!

- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


1 comment:

  1. நடக்கும் பாதையில் ஏற்படும் இடர்களில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள காலணிகளைப் பயன்படுத்திய நாம் வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் இன அழிப்பு இன்னல்களில் இருந்து நம்மைக் காக்கத் தவறிவிடுகிறோமே - அருகில் இலங்கைல் நடப்பதை கூட நம்மால் ....

    ReplyDelete

Followers

Blog Archive