Thursday, March 3, 2011

Views about venus-andre' sonnaargal 34 :அன்றே சொன்னார்கள் 34-வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர்

>>அன்றே சொன்னார்கள்34


வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர்

                                                                                                                

natpu  கதிரவனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோள். எனினும் பூமியின் மிக அருகில் உள்ள கோள். வெள்ளிக்கோளின் ஆங்கிலப் பெயர் வீனசு (Venus) என்பதாகும். வீனசு உரோமப் பெண்கடவுள் ஆகும். இலத்தீன் மொழியில் வீனசு என்றால் காதல் என்றும் காமவிருப்பம் என்றும் பெயர். இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் பெயர் அபிரடைடி (Aphrodite). எனவே, வீனசு காதல் கடவுள் ஆகும். உரோமானியர்கள், கிரேக்கர்கள் முதலானோர்போல், பிறப்பு, உடன் பிறப்பு கதைகள் அடிப்படையில் இல்லாமல் அக்கோளின்  ஒளிவிடும் வெள்ளை நிற அடிப்படையில் தமிழர்கள் அதற்கு வெள்ளி எனப் பெயரிட்டனர்.
 பிற கோள்களையும் விண்மீன்களையும் விட வெள்ளி மிகுதியும் ஒளியுடையது என்பதை
வயங்குகதிர் விரிந்து வானகம் சுடர் வர (பதிற்றுப்பத்து :24 : 23)
என்னும் வரியில் புலவர் பாலைக் கௌதமனார் கூறுகிறார். (வயங்கு-விளங்குகின்ற)
முல்லைப் பூவின் நிறத்தை வெள்ளியின் ஒளியுடன் ஒப்பிட்டுப் புலவர் மாங்குடி மருதனார்
வெள்ளி அன்ன ஒள் வீ       (மதுரைக்காஞ்சி 280)
என்கிறார்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் சுண்ணாம்பு வெள்ளியைப் போல் வெள்ளையாக இருக்கும் என்பதை
வெள்ளி அன்ன விளங்கும் சுதை  (நெடுநல்வாடை : 110)
என்கிறார்.

வெள்ளி போன்று விளங்கும் பூங்கொத்து
வெள்ளி அன்ன விளங்கு இணர் (நற்றிணை : 249: 3)
எனப் புலவர் உலோச்சனாரால் சொல்லப்படுகிறது. (இணர்-பூங்கொத்து)
மிகுந்த வெண்நிறமாகிய வெள்ளிக்கோள் ஏறு என்னும் ஓரையைச் (இடபராசி) சேருகிறது என்பதைப் புலவர் நல்லந்துவனார்  
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர (பரிபாடல் : 11: 4)
என்கிறார். இவை யெல்லாம் வெள்ளிக்கோளின் நிறம் பற்றிய விளக்கங்கள் ஆகும்.

இது மாலையில் இரவு அரும்பும் பொழுதும் காலையில் பொழுது விடியும் பொழுதும் தோன்றும். விடியற்காலையில் தோன்றுவதால் விடிவெள்ளி என்று கூறுவர். இதனையும் புலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருள் செறிந்த விடியற்காலையில் விரிந்த கதிர்களுடன் வெள்ளி முளைப்பதைப் புலவர் முடத்தாமக்கண்ணியார்
விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்இருள் விடியல்  (பொருநராற்றுப்படை 70-71)என்கிறார்.

பறவைகள் குரல் எழுப்பிப் பறக்கும் விடியற்காலைப் பொழுதில் வெள்ளி தோன்றுவதைப் புலவர் கல்லாடனார்
natpu வெள்ளி தோன்ற புள்ளுக் குரல் இயம்ப,
புலரி விடியல்        (புறநானூறு : 385: 1-2)
எனக் குறிப்பிடுகிறார். 

விடியலில் வெள்ளி வானத்தில் எழுந்தது என்பதை
வெள்ளியும் இருவிசும்பு ஏர் தரும் (புறநானூறு 397 : 1)
எனப் புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் கூறுகிறார்.
வைகறையில் திங்களின் நிலவொளி மறைந்து வெள்ளி தோன்றியது எனப் புலவர் திருத்தாமனார்,
மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர (புறநானூறு 398 : 1)
என்னும் அடியில் கூறுகிறார்.

வைகுறு மீன் எனப் பெரும்பாணாற்றுப் படையும் (318:17)
அகநானூறும் (17:21)  வைகறையில் தோன்றும் கோள் என்பதைக்
கூறுகின்றன.

வைகறையில் எழுந்து விடிவெள்ளியின் தோற்றம் கண்டு காலத்தை உணர்ந்து குளித்தனர் என்பதை,
விளக்குறு வெள்ளி முளைத்து முன்தோன்ற
. . . .        . . . . .            . . . .
தெளித்தலைத் தண்ணீர் குளித்தனன் ஆடி
எனப் பின்னர் வந்த பெருங்கதை (1:53:81. .86) கூறுகிறது. இதுபோல் வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு பயணம் தொடங்குதல் முதலிய பல நிகழ்வுகள் நடந்தமையைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
வெள்ளி கிழக்கே தோன்றும் என்பதைக்
குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும் (நற்றிணை: 230: 4)
என்கிறார் புலவர் ஆலங்குடி வங்கனார்.
   குணக்குத்தோன்று வெள்ளி  (நற்றிணை 356 : 9)
எனப் புலவர் பரணரும் கூறுகிறார்.

வெள்ளி இடம் மாறித் தோன்றினாலும் வழக்கத்திற்கு மாறாகத் திசை மாறி நகர்ந்தாலும் தீமை விளையும் என்பது எல்லா நாட்டு மக்களின் நம்பிக்கை. அதுபோல், வெள்ளி தென்திசை தோன்றுமாயின் நாட்டில் கொடிய பஞ்சம், வறுமை முதலிய துன்பங்கள் வந்து எய்தும் என நம்பினர். ஆனால், குடி மக்கள் நலம் நாடும் செங்கோல் ஆட்சியில் இதனால் எத்தீமையும் விளையாது எனக் கோள் (கிரகங்கள்) ஆட்சியை விடக் கோல்ஆட்சியைப் பெரிதும் போற்றினர் தமிழ் மக்கள். அதற்கிணங்கப் புலவர்  வெள்ளைக்குடி நாகனார், வெள்ளி தெற்கே தோன்றி இன்னலை விளைவிப்பதாக இருந்தாலும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிச் சிறப்பாகவே இருக்கும் என்பதை
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (புறநானூறு 35.7)
குறை வராமல் நிறைவளம் கொண்ட நாடு எனப் போற்றுகிறார்.

இளங்கோ அடிகளும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (சிலப்பதிகாரம் : 10 : 103)
வறட்சி இன்மையை விளக்குகிறார்.

புலவர் கபிலரும் பாரியின் ஆட்சிச் சிறப்பைப் பாடும் பொழுது
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்   (புறநானூறு 117.2)
பாரிமன்னனின் செங்கோல் ஆட்சியால் சிறப்பு மிக்கதாக உள்ளதாகக் கூறுகிறார்.

வெள்ளி தென்திசையில் தங்குதல் வறட்சியின் அடையாளம் என்பதைப் புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்
பள்ளம் வாடிய பயன்இல் காலை  (புறநானூறு : 388 : 1-2)
என்கிறார்.

வெள்ளி மழைக்கோள் என அழைக்கப் பெறும். எனவே, தெற்கே அது தங்கும் காலம் மழைவளம் இன்றி வறட்சி ஏற்படும் எனக் கண்டறிந்து உள்ளனர்.
(பள்ளம் - நீர்நிலை; வாடிய - /விளையும் வயல்களும் நீர்நிலைகளும்/ வற்றிய; பயனில்காலை- பயனற்ற பஞ்சக்காலம்)
செவ்வாயும் வெள்ளியும் அருகே இருந்தால் மழை பெய்யாது.  அவ்வாறில்லாமல் மழை வேண்டும் வயல்களுக்கு வேண்டியவாறு மழைபெய்து வளம் மிகுந்த நாடு எனப் புலவர் குமட்டூர்க்கண்ணனார், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் நாட்டுச் சிறப்பைக் கூறும் பொழுது

அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப  (பதிற்றுப்பத்து 13 : 25-26)
என்கிறார்.
(அழல் - செவ்வாய்; மருங்கு - அருகே; புலம்-மழை தேவைப்படும் நிலப்பகுதிகள்)

 வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி(பதிற்றுப்பத்து :24.24) என்னும் புலவர்பாலை கௌதமனார், வெள்ளிக் கோளின் நிலையை விளக்குகிறார்.
(வறிது - சிறிது; இறைஞ்சிய - சாய்ந்த; மழைக்கோளாகிய வெள்ளி வடக்கே தாழ்ந்தால் மழை ஏற்படும்; தெற்கே எழுந்தால் மழையின்மை ஏற்படும்.)
மழைக்கோளாகிய வெள்ளி தென்திசையில் தெரிவது தீய நிகழ்வின் முன்னறிவிப்பு; மழையின்மையை உணர்த்தும். எனினும், அவ்வாறு,

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்  (பட்டினப்பாலை : 1-2)

சோழவேந்தன் திருமாவளவன் ஆட்சியில் காவிரி வற்றாது எனப்
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறியுள்ளார்.
(வசைஇல்-குற்றம் இல்லாத; வயங்கு-விளங்குகின்ற)
இயற்கைச் சீற்றத்திலும் மக்கள் நலம்நாடும் செங்கோலாட்சி அப்பொழுது நடைபெற்றுள்ளது. இப்பொழுது .....?

No comments:

Post a Comment

Followers

Blog Archive