1. மீள்பார்வைக் குழு :
த.இ.க.கழகத்தின் தளத்தில் நூற்பதிவு முடிந்த பின்னர் அல்லது இது போன்று ஏதும் பதிவாக்கம் முடிந்த பின்னர் அவை சரியான முறையில் உள்ளனவா எனப் பார்ப்பதில்லை. ஒருவரிடம் அல்லது அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைத்த பின்னர், அவர்கள் பணி முடிவிற்குப் பணம் கொடுத்ததும் அப்பணி நிறைவுற்றது என்ற போக்கே இக்கழகத்தில் உள்ளது. எனவே, தவறுகள் கண்டறியப்படாமல் உள்ளன. எனவே, மீள்பார்வைக் குழுவை அமைத்து, ஒவ்வொரு பணி முடிந்த பின்னர் உரிய நோக்கம் நிறைவேறும் வகையில் உள்ளதா என ஆய்ந்து பார்க்க வேண்டும்.
மீள்பார்வைக்குழுவினர் தேடு பொறிகள் சீரான முறையில் உள்ளனவா என அவ்வப்பொழுது ஆய்வு செய்ய வேண்டும். நூல்களைப் படிக்கும் பொழுது நமக்குப் பெரிதும் உதவியாக அமைவது தேடுபொறியாகும். முழு நூலையும் படிக்காமல் நாம் தேடும் சொற்கள் பற்றிய விவரங்களை எளிதில் அறிய உதவுவது தேடு பொறியேயாகும். தேடுபொறி இணையக் கல்விக் கழகத்தின் நூல்களிலும் உள்ளன. ஆனால், பெரும்பான்மையும் பக்க எண் தேடலே அனைத்து நூல்களிலும் உள்ளன. மேற்கோள் வழி அறியப்படும் செய்தியின் பக்க எண் மூலம் உரிய முழுத்தகவலையும் அறிய பக்க எண் தேடு பொறி உதவும். ஆனால், சொல் தேடுபொறியே நூலாராய்ச்சிக்கு உதவும். இலக்கியங்களின் உரைப்பகுதிகளில் சொல் தேடு பொறிகள் உள்ளன. ஆனால், மூலப்பாடல் பகுதிகளில் சொற்தேடுபொறி அமையாதது இடர்ப்பாடாகவே உள்ளது. இத்தகைய சீர்மையற்ற நிலைக்கு மாறாக அட்டவணை, மூலப்பக்கங்கள், உரைப்பகுதிகள் என அனைத்துப் பக்கங்களிலும் சொற்தேடுபொறியும், பாடல் எண் அல்லது நூற்பா எண் தேடுபொறியும், பக்க எண் தேடுபொறியும் அமைய வேண்டும்.
இலக்கியங்களில் குறிப்பிட்ட சொல் அல்லது தொடருக்குப் பொருள் தேவை எனில் ஒவ்வொரு வரியாக வந்துதான் குறிப்பிட்ட அடியைக் காண இயலும். சான்றாக 1000 அடி உள்ள இலக்கியத்தில் 900 ஆம் அடியில் உள்ள தொடருக்குப் பொருள் தேவை எனில் ஒவ்வொரு வரியாக வந்துதான் காணவேண்டி வரும். இதனால் நேர இழப்பும் சலிப்பும் ஏற்பட்டுப் பயன்படுத்துவோர் இதனைப் புறக்கணிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
ஓர் இலக்கியத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பொருள் எழுதியிருப்பின் ஒவ்வொருவர் பொருளாகத் தனித்தனியாகத்தான் காண இயலும். அவ்வாறு இல்லாமல் ஒரு சொல் அல்லது அடியைச் சொடுக்கினால் உரிய அனைவரின் பொருள்களையும் ஒரே இடத்தில் காணும் வாய்ப்பைத் தர வேண்டும்.

அகராதிகளில் சொல்லைத் தேடும் பொழுது முதல் எழுத்து பெரிய எழுத்தில் இருப்பின் உரிய பொருளை அறிய இயலாது. சொல்லின் முன்னரோ இடையிலோ பின்னரோ இடைவெளி இருப்பினும் பொருளை அறிய இயலாது. ஆனால், இவ்வாறு இருப்பதால் தேடுதல் பொறி இயங்காது எனச் சுட்டிக்காட்டி எவ்வாறு பதிய வேண்டும் என்ற குறிப்பு வராது. இதனால் பலரும் குறிப்பிட்ட சொல் அகராதியில் இல்லை எனத் தவறான முடிவிற்கு வந்து விடுகின்றர். எனவே, கழகம் மேற்கொண்டுள்ள பணி உரிய பயன் அளிக்காமல் வீணாகின்றது.

இது தொடர்பிலான இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் என்னும் தலைப்பிலான என் கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ளேன். திருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற பொருண்மையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரையான இதனை அரசிற்கும் த.இ.க.கழகத்திற்கும் முன்னரே அனுப்பியுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும் மின்னகராதி உருவாக்கி வரும் ஒரு பயன்மட்டுமே ஏற்பட்டுள்ளது. சீரான தேடுபொறியே நூல்களின் முழுமையான பயன்பாட்டிற்கு உதவுவதாக அமையும். எனவே, இதிலும் சிறப்பான கருத்து செலுத்த வேண்டும்.
  1. சொல்லாக்கக் குழு:
பாடநூல் தொடர்பான கலைச்சொல்லாக்கங்களைவிட அன்றாடப் பயன்பாட்டிற்கான சொற்களை அறிமுகப்படுத்துவதும் பயன்பாட்டில் நிலைக்கச் செய்வதுமே நம் அடிப்படைப் பணியாகும். தமிழ் நாட்டில் தமிழர் இல்லங்களில் தமிழ் இல்லா நிலையே உள்ளது. எனவே, அன்றாடப் பயன்பாட்டுத் தமிழ்ச்சொற்களைப் பட்டியலிட்டுத் தளத்தில் தரவேண்டும். அடுத்துக் கலைச்சொல்லாக்கம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். முன்னரே உள்ள சொற்கள் பொருந்தாதனவாக உள்ள நேர்வுகளில் அல்லது கூடுதல் பொருள் தேவைப்படும் நேர்வுகளில், கலைச்சொல்லாகம் உருவாக்கினால் போதுமானது. இருக்கின்ற சொற்களுக்கே புதுப்புதுச் சொற்கள் உருவாக்குவதால் குழப்பம்தான் வரும். அ்தே நேரத்தில் பாட நோக்கில் எண்ணற்ற சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் கண்டறியப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே, புதிய கலைச்சொற்களை உருவாக்கவும் தொகுக்கவும் த.இ.க.கழகம் குழு அமைத்துப் பணியாற்ற வேண்டும். பொதுவான கலைச்சொல்லாக்கக்குழுவின் ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு துறைசார்ந்தும் தனித்தனிக் கலைச்சொல்லாக்கக் குழுக்கள் இருத்தல் வேண்டும்.
  1. நன்னடைக் குழு:
தளத்தில் இடம் பெறும் படைப்புகள் யாவும் கலப்பற்ற தமிழ் நடையில் இருத்தலே தமிழ் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஆனால், பாடத்திட்டங்களுக்கெனப் பல்வேறு தரப்பட்டவர் அளிக்கும் கட்டுரைகளில் ஒருமை உணர்வு இல்லை.
இதன் இணையத் தளம் தமிழ் மாணாக்கர்களுக்கும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், கருத்துப் பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. அயலெழுத்துக் கலப்பும் அயற்சொற்கள் கலப்பும் காணப்படுகின்றன. சில இடங்களில் எழுத்துப்பிழையா கருத்துப் பிழையா என அறியமுடியாத அளவில் பிழைகள் உள்ளன. சான்றாக, இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி என்பதற்குப் பொருளாக இந்தியர்கள் இரட்சித்த கப்பலிலே   எனத் தரப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.
இவற்றைக் கண்டறிந்து நீக்குவதற்கு நன்னடைக் குழு அமைத்தல் வேண்டும்.
(இனியும் போகும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar thiruvalluvan