tha.i.ka.no.po._thalaippu

8

 ஙூ.) தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்:
  இணையம் வழியாகத் தமிழ் வளர்ப்பதற்குக் கணிணியில் தமிழ்ப்பயன்பாடுகள் பெருக வேண்டும். இதற்கெனத் தமிழக அரசே, ‘தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்’ ஒன்றை அமைக்க வேண்டும்.
  ‘தமிழ்நாடு இணையத் தமிழ் மன்றம்’ / ‘தமிழகக் கணித் தமிழ் மன்றம்’ என்ற ஏதேனும் ஒரு பெயரில் இணைய வழியிலான அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கென ஓர் அமைப்பு இன்றியமையாது வேண்டப்படுகின்றது.
  ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ என்னும் அமைப்பு இருக்கும்பொழுது வேறு தேவையா என்ற எண்ணம் எழலாம். அந்த அமைப்பு அரசு சார் நிறுவனம். அதன் அடிப்படை நோக்கம் இணையத்தின் வாயிலாக உலக மக்களிடையே தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் நாகரிகம் முதலானவற்றைப் பரப்புவதுதான். ஆனால், இந்த அமைப்பைத் தோற்றுவித்த பொழுது அப்பொழுது அமர்த்தப்பட இருந்த இயக்குநரின் தகுதி அடிப்படையில் இயக்குநருக்கான தகுதி வரையறுக்கப்பட்டது. ‘இயக்குநருக்குப் போதுமான தமிழறிவு இருந்தால் போதும்’ என்பதுதான் விதி. இதன் காரணமாகத் தமிழார்வம் இருப்பினும் தமிழில் புலமை இல்லாதவர்கள், இயக்குநர்களாக வாய்த்தனர். ஆகவே, இந்நிறுவனத்தின் நோக்கம் கணிணிக்கல்வியைக் கொடுப்பது என்பதுபோல் திருத்திக் கொண்டனர்; என முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்த்த அளவு தமிழும் பரவவில்லை; கணிணித்தமிழும் பரவவில்லை. தமிழ்இணையக்கல்விக்கழகம் என்பது தமிழ்க்கல்விக்கானது. அதற்கான கருவியே கணிணி.
  அதே நேரம் கணியன்கள்(soft-ware) உருவாக்கம் முதலான கணிணி வினைநலன்களில் தமிழை முதன்மைப்படுத்தும் செயற்பாடுகளும் அதற்கான ஊக்கமும் வழிகாட்டுதலும் தேவை.
  கணித்தமிழ்ப்பட்டறைகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்தவும் பிழை திருத்தி, தேடுபொறி, சீர், தளை பிரிப்பி, சீர்மை எழுத்துரு, ஒளி எழுத்துணரி எனப் பலவகைக் கணியன்கள் உருவாக்கம், செம்மையாக்கம், இவற்றிற்குப் பொருளுதவி வழங்கல் முதலான பணிகளுக்கு ஓர் அமைப்பு தேவை.
  எனவே, இணையத்தின் வாயிலாகத் தமிழைப் பரப்பும் தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் இணையம் சார்தேவைகளை அறிந்து உருவாக்கவும் பெருக்கவும் தனிப்பட்ட அமைப்பு தேவை. அவ்வாறு அமைப்பதன்மூலம் தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் பரப்பும் நோக்தக்தில் முழு வீச்சாகச் செயல்பட இயலும்.
  இது தொடர்பில், தமிழக அரசியல் நாள் 04.09.2013 பக்கம் 22-23 இல் இடம் பெற்றுள்ள என் செவ்வியின் கணியச்சுப் படி (இறுதிப் பத்தி) யை இணைத்து, மடல் எண் 16 நாள் 17.08.2044/02.09.2013 இல் முன்னரே அரசிற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நினைவூட்டும் அனுப்பப்பட்டுள்ளது. ஆதலின், த.இ.இ.கழகம், திசைமாறிப்போகாமல் தமிழ் பரப்பும் பணியில் முழுமையாக ஈடுபடவும், அதற்கு உதவும் வகையிலான கணிணி ஏதுக்கள் உருவாகவும் தமிழ்நாடு இணையத் தமிழ் மன்றம் ஒன்றை அமைக்க வேண்டும்.
ஙெ.) நிறைவு:
  மேற்கூறியவற்றால் தமிழ் இ.ணையக் கல்விக்கழகம் சிறப்பாகச் செயல்பட, இஃது உருவாக்கப்பட்டபொழுது தெரிவிக்கப்பட்ட நோக்கம் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; தமிழ் இணையப் கல்கலைக்கழகம் என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பு முழுமையான பல்கலைக்கழகமாகச் செயல்பட வேண்டும்; தமிழ் வளரச்சித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை இணைந்த கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்; இயக்குநர் முதலான தலைமைப் பதவிகளிலும் குழுக்களின் தலைமைப் பொறுப்பிலும் தமிழ்ப்புலமையாளர்களே அமர்த்தப்பட வேண்டும்; எல்லாப் பதவியிடங்களிலும் எல்லாக் குழுக்களிலும் தமிழில் பட்டம் பெற்றோரே பெரும்பான்மையராக இருத்தல் வேண்டும்;இதன் நோக்கம் கணிணிக்கல்வியை வளர்ப்பதல்ல என்பதைத் தொடர்புடையவர்கள் உணரச் செய்ய வேண்டும்; கணிணியறிவியலில் தமிழ் சிறப்பாகத் திகழவும் கணிணிசார் பயன்பாட்டு ஏதுக்களையும் கணியன்களையும் உருவாக்கத் தனியாகத் தமிழ்நாடு இணையத் தமிழ் மன்றம் ஒன்றை அமைக்க வேண்டும்; கருத்திலும் எழுத்திலும் பிழைகளற்ற பாடங்கள் உருவாக்க வேண்டும்; இதன் தளத்தை மொழிக் கொலைக்குப் பயன்படுத்தக்கூடாது; நெறியாளர் குழுவில் பதவி வழி உறுப்பினர்கள் அமர்த்தப்படக்கூடாது; தமிழ் நாட்டிலுள்ள அயலவர் தமிழ் பயிலத் தனியாகக் கல்வித்திட்டம் உருவாக்க வேண்டும்; தமிழ் வளர்சிக்கும் பரப்பலுக்குமான கருவியே கணிநுட்பம் என்பதைப் புரிந்து உரியவாறு செயல்படவேண்டும்; தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவ, த.இ.க.கழகத்தின் செயற்பாடுகள் உலகெங்கும் பரவிக் காலூன்ற வேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar thiruvalluvan+