தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01

   இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே! தலைமை வகிக்கும் பாவலர் காசி வீரசேகரன் அவர்களே! முன்னிலை வகிக்கும் தலைமையாசிரியர் க.முருகேசன் அவர்களே! தமிழ்த்தேனீ மா.செ.பாலசுப்பிரமணியம் அவர்களே! வரவேற்புரையாற்றிய கிடாரங்கொண்டான் மு.செ.பாண்டியன் அவர்களே! நன்றியுரையாற்றும் த.க.தமிழ்ப்பாரதன் அவர்களே! விழாவினைத் தொகுத்து வழங்கிக் கொண்டுள்ள தலைமையாசிரியர் திருவாட்டி செயந்தி அவர்களே! திருவாரூர் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் கவிமாமணி நீதிதாசன் அவர்களே! ஆர்வமுடன் கூடியுள்ள அவையோரே! அனைவருக்கும் என் வணக்கங்கள்.
  எங்கள் தந்தை தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்   புலவர் பட்டம் பெற்ற பிறகு முதலில் பணியாற்றிய ஊர் இத்திருவாரூர். அவரது தமிழ்ப்பணி என்பது படிக்கும் பொழுதே தொடங்கப்பட்டிருப்பினும் முறையான ஆசிரியப்பணி தொடங்கிய ஊர் திருவாரூர். தொடக்கத்திலேயே வீறார்ந்த தமிழ்ப்புலமையுடன் தமிழ்மானத்தையும் பகுத்தறிவையும் தமிழ் மணத்துடன் கலந்து பயிற்றுவித்தவர் என அவரிடம் இங்கு பயின்ற முன்னாள் முதல்வர் கலைஞர் முதலான பலரும் தெரிவித்துள்ளனர்.
 அவர் பேச்சும் மூச்சும் கலந்திருந்த காற்று தவழும் திருவாரூரில் நானும் மேடையேற வாய்ப்பு தந்த நல்லுள்ளங்களுக்கு என் நன்றி.
 என்னைப் பேச அழைத்த பொழுது நான், “தமிழன் என்பதில் என்ன பெருமை இருக்கின்றது?” என்னும் பொருளில் பேசுவதாகத் தெரிவித்தேன். உடனே நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்கள், “இலக்கிய-இலக்கணத் தொடராக நிகழ்த்தி வருகிறோம். எனினும் இத்தலைப்பிலேயே பேசுங்கள்” என்றார். பொதுவான உணர்வுடன் பேசுவது இலக்கிய இலக்கணத் தொடரைத் தொடர்ந்து கேட்பதற்கு ஊக்கமாக இருக்கும் என்றார். எனினும் நான் பேச விரும்பிய பொருண்மையில் மாற்றம் செய்து இலக்கித்துடன்தொடர்பு படுத்தி என் எண்ணங்களை வெளிப்படுத்த முயல்கிறேன். எனவே, இவ்வாறு பேச இசைவளித்த எண்கண்ணாருக்கு என் நன்றி. இங்கு ஆற்றுப்படுத்திய மனிதநேயர் கவிமாமணி நீதிதாசனுக்கும் நன்றி!
“வைய கத்தில் இணையி லாத
             வாழ்வு கண்ட தமிழ் மொழி
       வான கத்தை நானி லத்தில்
             வரவ ழைக்கும் தமிழ்மொழி”
என்கின்றார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார். தமிழின் சிறப்பைக் கூறும் அவரே, தமிழரின் சிறப்பை,
“தமிழன் என்றோர் இனமுண்டு;
       தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடை வழியாகும்;
       அன்பே அவனுடை மொழியாகும்.
மானம் பெரிதென உயிர்விடுவான்;
       மற்றவர்க் காகத் துயர்படுவான்”
என்கின்றார்.
  ‘தமிழர் என்பதில் என்ன பெருமை இருக்கிறது’ எனக் கேட்டால், இவ்வாறு தமிழின் பெருமையையும் தமிழரின் பெருமையையும் எண்ணிலடங்கா வண்ணம் நாம் கூறிக்கொண்டே போகலாம். ஆனால், நம் பெருமையை உணராமல் உணர்ந்தவர்களும் வாயளவில் வெற்றுரையுடன் நிறுத்திக் கொண்டு சிறுமைப்பட்டு வாழும் ‘நமக்குத் தமிழர் எனப் பெருமைப்பட என்ன தகுதி இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன் : Ilakkuvanar thiruvalluvan