ஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல!  உண்மைக்கு!
  சசிகலா, தினகரன் தொடர்பான கட்டுரைகளப் படிக்கும்  நண்பர்களில் பெரும்பான்மையர், “உங்கள் கட்டுரைத் தலைப்புகளைப் பார்த்து நாங்கள், சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக எழுதுகிறாரே! என எண்ணுவோம். ஆனால் படித்து முடித்ததும் வழக்கம் போல் நடுநிலையாகவும் துணிவாகவும் எழுதுவதைப்  புரிந்து கொள்வோம். மாறுபட்ட  கோணத்தில் அமையும்  உங்கள் கட்டுரைகள் தொடரட்டும்!” என்கின்றனர். சிலர் “அதிமுகவினரே சசிகலா குடும்பத்தைப்  புறக்கணிக்கும் பொழுது அவர்கள் சார்பாக எழுதுகிறீரகளே!” என்று  கேட்கின்றனர்.  மூவர் ஊழல்பேர்வழிகளை ஆதரித்துத் திருவள்ளுவர்  பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக முகநூலில் பதிந்துள்ளனர். மேலும் சிலரும் இதுபோன்ற எண்ணத்தில் இருக்கலாம்.
  என்னைப் புரிந்து கொண்டுள்ள பெரும்பான்மை  நண்பர்களுக்கு நன்றி.
 நம் விருப்பம் ஒன்றாகவும் நாட்டு நடப்பு வேறாகவும் இருக்கும்பொழுது நாட்டுநடப்பின் எதிரொலியாக எழுத  வேண்டியது கடமையாகும். எடுத்துக்காட்டிற்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நடந்து முடிந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரான தொலைக்காட்சி உரையாடல்ஒன்றில், |சென்னை, கடலூர் வெள்ளப் பாதிப்புகளால் அதிமுக தோல்வியுறும் என அனைவரும் தெரிவிக்கும் பொழுது நீங்கள் அதிமுக வெற்றி பெறும் என்று எப்;படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. “அதிமுக வரக்கூடாது என்பதுதான் என் விருப்பம். ஆனால், அதிமுக  வெற்றி பெறும் என்பது நாட்டு நிலை.  சென்னையும் கடலூரும் மட்டும் தமிழ்நாடு அல்ல!  இவற்றை மாற்றும் வல்லமை அதிமுகவிற்கு உண்டு. எனவே, இவையும் கடந்து போகும். அதிமுகதான் வெற்றி பெறும்” என்றேன். அவ்வாறுதான் நடந்தது. எனவே, நம் விருப்பத்தைத் தெரிவிப்பதுடன் நாட்டு மக்களின்  போக்கையும் தெரிவிப்பது நம் கடமையாகிறது.
 தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் தரக்கூடிய தமிழ்த்தேசியர்களே ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். ஆனால் தமிழ்த்தேசியர்களில் ஒரு பகுதியினர் தேர்தலைப் புறக்கணிக்கின்றனர். பெரும்பான்மையர் திராவிடத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆரியத்திற்குப் பாய் விரிக்கின்றனர்.  எனவே, ஒப்பீட்டளவில் குறைந்த தீமையுடையவரையே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
 தமிழ்தமிழர் நலனை அடித்தளமாகக் கொண்டு திமுக எழுப்பப்பட்டிருந்தாலும் அண்மைய போக்கு அதற்கு மாறாகவே உள்ளது. ஈழத்தில்  பெருமளவிலான இனப்படுகொலை நடைபெற்றபொழுதும் அமைதி காத்து உடன்பட்டது,  இலங்கைத்தமிழரையும் ஈழத்தமிழரையும் சிங்களத் தமிழர் என்று சொல்லி  இன வரலாற்றை அழிப்பது முதலான தலைமையின்  போக்கை அடிமைத்தனத்தில் ஊறி  மனச்சான்றிற்கு எதிராகக் கட்சியினர் ஆதரிக்கின்றனர்.  ஓழிக்கப்படவேண்டிய  பேராயக்(காங்.) கட்சியைக் காப்பதற்குத் திமுக துணை நிற்கிறது. தோல்விகளைச் சந்தித்த பின்பும் மனத்தை மாற்றிக்கொள்ளாமல் வால்பிடிக்கும் திமுக  இன்றைக்கு ஆதரிக்கப்படவேண்டிய நிலையில்  இல்லை.
   அதிமுகவிற்குத் தரும் ஆதரவு திமுகவைத் திருத்த உதவும் என்பதன் அடிப்படையிலும் தொடர்ந்து திமுக காங். நிலைப்பாட்டில் இருப்பதைத் தடுக்கவும் அதிமுக பக்கம் தமிழ்உணர்வாளர்கள் சாயும் நிலை ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது மாற்றுஅணித் தலைமையைவீழத்துவதற்காகப் பாசக காலடியில் வீழ்வதையே  நோக்கமாகக் கொண்டு பதவியில் உள்ள தலைவர்கள்  செயல்படுகின்றனர்.
  தமிழ்ஈழ ஆதரவு தீர்மானத்திற்காக அதிமுகவை ஆதரித்தாலும் ஈழத்தமிழர் முகாம்கள் வதைக்கூடங்கள்  போல் உள்ளதாகக் கூறப்படுவதும் அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவதும்  இதனைப்  பாராட்டுவதற்குரிய தகுதியிழப்பாகவே உள்ளன.
  எனினும் இன்;றைய சூழலில் மதவெறியும் இனவெறியும் மொழி வெறியும் கொண்ட ஆட்சியின் தலைமையால்  இந்தியா இன்னல்களைச் சந்தித்துக்  கொண்டுள்ளது. வலிமையான அரசு  இருந்தால்தான் தமிழகம் காப்பாற்றப்படும். எதிர்க்கட்சியான திமுக  தேர்தலின்றி ஆளுங்கட்சியாக மாறும் சூழல் இல்லை.  எனினும் ஆட்சிக்கலைப்பு அச்சம் ஆள்வோரிடம் உள்ளது.
 நேற்றுவரை சசிகலா குடும்பத்தினரிடம் வீழ்ந்து கிடந்தவர்கள்  இன்று எழுந்து நிற்கிறார்கள் என்றால் சொந்தக்கால்களில் அல்ல! பாசக இல்லையேல் இன்றைய ஆட்சி இல்லை என்பதை அமைச்சர் பெருமக்களே பொதுக்கூட்டங்களிலேயே தெரிவிக்கின்றனர். எனவே பதவிகளில் இருந்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற எண்ணுவோரால் ஆட்சிக்கும் கட்சிக்கும் அழிவே தவிர நன்மை விளையாது. முதல்வர், துணை முதல்வர், பிற அமைச்சர்களுக்குப் பதவி  இல்லையேல்  செல்வாக்கு செல்லாக்காசாக மாறும்.
 சசிகலா சிறையில் இருக்கும் சூழலிலும் தினகரன் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் முதலான எப்பொறுப்பில் இல்லாத பொழுதும் கட்சித் தொண்டர்களைப் பிடிப்பில் வைத்துள்ளார். தமிழகக்கட்சிகள் யாவுமே மையத்தின் அடிமையாகத்தான் உள்ளன.  என்றாலும் சசிகலா அல்லது தினகரன், பாசக எண்ணும் அளவிலான அடிமைத்தனத்தில் இல்லை என்பது தெரிகிறது. பாசகவிற்கு ஆட்சியில் உள்ளோர் அடிமையாக இருப்பதன் மூலம்  கால்ஊன்ற முயல்கிறது. செல்வாக்கில்லாத  இருவரை நம்பி ஏமாந்ததுபோதும் என்று இவர்களை அடிமைப்படுத்தினால்  எண்ணம் எளிதில் அமையும். ஆனால் அவ்வாறு அடிமைப்படுத்துவது எளிதாக இல்லை என்பதை அரசியல் போக்கு காட்டுகிறது.
 செயலலிதாவின் மருத்துவமனைக் காலம்அவசரக்கதியில் அமைச்சரவை பங்கேற்றமை முதலான யாவுமே பாசகவின்றி ஓர் அணுவும் அசையவில்லை என்பதைக்  காட்டுகிறது. தமிழிசை முதலான பாசகவினர் முன்கூட்டி மணிஓசையை எழுப்பியதற் கிணங்கவே ஆட்சியிலும் கட்சியிலும் ஆட்டங்கள் நிகழ்கின்றன. எனவே, “எங்கள் அப்பன் குதிருக்குள்  இல்லை” எனச் சொல்லும்; பாசகவின் உண்மை முகம் உலகிற்குத் தெரிகிறது.
 இச்சூழலில் நடைமுறையில் இருகட்சி ஆட்சியில் உள்ள தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி வலிமைiயாக  இல்லாவிடில் நாட்டிற்கும்  கேடுதான். இந்திய அரசியல் கட்சிகளின் அடையாளமாக ஊழல் மாறிப்போயுள்ள காலக்கட்டத்தில் ஊழலை அடிப்படையாகக் கொண்டு யாரையும் அளவிட இயலாது. சசிகலா குடும்பத்தினர் பதவிப்பொறுப்புகளில்  இல்லாத பொழுது ஊழல் புரிந்தனர் என்றால் அதற்குத் துணை நின்ற பதவியாளர்கள்தாம் முதன்மைக் குற்றவாளிகள். அவர்களை உத்தமர்களாகக் கூறிக்கொண்டு இவர்களை மட்டும் குற்றம் சுமத்திப் பயனில்லை.
  சசிகலா குடும்பத்தினரை அகற்றுவதற்குப் பாசக என்ன சொல்கிறது?
  தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள குடும்பத்தினரிடம்  ஆட்சி அதிகாரம் இருப்பது நல்லதல்ல என்பதால்தான் சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டுவதாக, மிகமிகச் சிறுபான்மை வகுப்பினராக இருந்து  கொண்டு நாட்டை ஆட்டுவிக்கும் பாசக தலைவர் ஒருவர்  கூறியுள்ளார்.
 தமிழரல்லாதவர் ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் அல்லது தமிழரல்லாதவர்க்கு அடிமையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாசக நோக்கம்.
  தனி ஒரு செயலாகப் பார்க்கும் பொழுது சசிகலாமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், பொதுவாகப் பார்க்கப்பட்டால் குற்றப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவர்கள் மிகுதி எனப் புரிந்து கொள்ளலாம்.
  சிறைஅறையிலிருந்து நேர்முக அறைக்குச் சசிகலா சென்று வருவதைச் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதுபோல் காட்டுதல்போன்ற பல செய்திகளும் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு,  இரட்டை இலை முடக்கம், அடக்குமுறை வழக்குகள் யாவும் அதிகார வலிமையால் அடக்குவதற்கான முயற்சிகளே! இவர்கள் அடிபணிந்தால்அடுத்த நொடியே காட்சிகள் மாறும். இவர்கள் உத்தமர்கள் ஆவார்கள்! கட்சியையும்ஆட்சியையும் காக்க வந்த தெய்வங்கள் ஆவார்கள்.எனவே, புனையப்படும் வழக்குகள்,  விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் அடிப்படையில் நாம் எதையும் எடைபோடக்கூடாது.
 தேர்தல் வந்தால் தி.மு.க. வெற்றி அடையும் என்ற எண்ணத்தில்  ஆட்சிக்கலைப்பும் கூடாது; பாசகவை எதிர்க்கும் அதிமுக தலைவர்களும் ஆட்சிக்கு வரக்கூடாது என்னும் இலக்கில் பாசக செயல்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 செயலலிதா மருத்துவமனையிலிருந்த பொழுதே அவர் எதிர்த்த திட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதால், செயலலிதாவின் உடல்நிலை பற்றிய முழு விவரமும் மத்திய அரசிற்குத் தெரியாமல் இருக்காது. எனவே, சசிகலாவை மட்டும் குற்றவாளியாகக் கூறுவது பொருந்தாது.
  பொதுவாக,  தேசிய உணவுப்பாதுகாப்புச்சட்டம், உதய் மின்திட்டம், பொதுநுழைவுத்தேர்வு(NEET) திட்டம்,   பொருள்-சேவை வரித்திட்டம் (G.S.T.) என மேனாள் முதல்வர் செயலலிதாவால் ஏற்கப்பெறாத திட்டங்களை,  அவரைத் தொடர்ந்து அமைந்துள்ள அதிமுக அரசுகள் அவசரக்கதியில் ஏற்றுள்ளன.
 இவ்வாறு செயலலிதா தமிழக நலன் கருதி எதிர்த்த பல கொள்கைகள் தமிழர்நலனுக்கு ஊறுநேர்விக்கும் வகையில் கைவிடப் படுகின்றன.
 தமிழ்நாடு சமற்கிருத நாடாகவும் இந்தி வீடாகவும் மாற்றப்படுவதற்கான பாதையில் பாசக சென்று கொண்டுள்ளது.
 கதிராமங்கலம், நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டங்கள் முதலான பலவும், அரசிற்கு எதிராக முழங்குவோர் கதை செய்யப்படுவதும் பாசக ஆட்சியின் விருப்பத்திற்கேற்பவே நிகழ்கின்றன.
  ஆளுங்கட்சி வலிமையாக இருப்பதன் மூலமே இவற்றைத் தடுக்க முடியும்.
 தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு இல்லையேல் இராதாகிருட்டிணன்  தொகுதிச் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். செல்வாக்கு உள்ளவர்களை ஒடுக்கப் பாசக முயன்றுவருவதால் அதற்கு எதிராக எழுத வேண்டியுள்ளது.  இதனால், சசிகலா, தினகரன் தரப்பு உண்மைகளையும் எழுத வேண்டியுள்ளது. இயல்பான போக்கில் விட்டிருந்தால் காணாமல் போயிருக்க வாய்ப்பு இருந்ததை அரசுகள், அதிகார வலிமையால் குறுக்குவழிகளில் செயல்பட்டு வளரவிட்டுள்ளன. அத்தகைய சூழல்களில் ஒன்றுதான்  பாசகவின் ஆளுங்கட்சியை ஒடுக்கும் திட்டத்தை எதிர்ப்பதற்காக நாமும் சசிகலா, தினகரன் வஞ்சிக்கப்படுவதையும் குறிப்பிடச் செய்கின்றது.
 ஊழல் பெருச்சாளிகள், சுண்டெலிகளை  விரட்ட முயலுவதுபோல் நடிப்பதால், நாம் முதலில் பெருச்சாளிகளை விரட்ட வேண்டும். பின்னர் சுண்டெலிகளை விரட்டலாம். இந்த நோக்கில் எழுதப்படுவன சசிசலா., தினகரன் ஆதரவு குரல்போல் மாறிவிடுகின்றன.
 தமிழ்நாட்டில் பாசக வேரூன்றி கிளை பரப்பக்கூடாது என்றால்  நேர்மையைமட்டும் அளவுகோலாகக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் நலன்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆதலின் அதிமுகவும் திமுகவும் வலிமையாக இருக்க வேண்டும்.
 தமிழகக்கட்சிகள் யாவும், தமிழர் நலனையே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மை அளிக்கும் கட்சிகளையே மக்கள் ஆதரிக்கும் சூழலும் உருவாக வேண்டும்.
இன அழிப்பு, மொழி அழிப்பு கட்சிகளை வளரவிடாமல் தடுப்போமாக!
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
     உவகையும் ஏதம் இறைக்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 432)
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியன ஆட்சித்தலைமைக்குக் கேடு நல்குவன. அத்தகைய ஆட்சியை அகற்ற வேண்டியது மக்கள் கடமை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 209, ஐப்பசி 05-11,  2048 /  அட்டோபர் 22 – 28,  2017