அறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்!
மரபார்ந்த விழாக்களுக்கும் அறிவுக்குப் பொருந்தாதக் கதைகளைப் பரப்புவது ஆரியத்தின் வேலை. அறிவுக்கு வேலை கொடுக்காமல் அவற்றை நம்புவது தமிழர்களின் மூடநம்பிக்கை. பிற இனத்தார், இயற்கைக் கோள்களுக்கும் மூடநம்பிக்கைகக் கதைகளை உருவாக்கிய காலத்தில், அறிவியல் கண்ணோட்டத்தில் உண்மையைக் கண்டறிந்த தமிழர்கள் அறியாமைக்கு அடிமையானது இரங்கத்தக்கதே! ஆனால், இன்றும் அறியாமை இருளில் மூழ்கிக்கிடப்பது அத்தகையோர் இருந்தென்ன, இறந்தனெ்ன என எண்ணத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் கார்த்திகை ஒளிவிழாவாகக் கொண்டாடப்பட்ட நாள், வடக்கிலிருந்து தீபவரிசை விழாவாக, தீபாவளியாக மாறி இங்கே புகுந்தது. விழாவில் விருப்பம் கொண்ட நம்மவர்கள் அதனையும் பிடித்துக் கொண்டனர். ஆனால், மூடநம்பிக்கையில் ஊறித் திளைப்பதுதான் வேதனையாக உள்ளது.
மகாவீரர் வருத்தமானன் விடுநிலை(நிர்வாணம்) அடைந்த நாளே தீபாவளி நாள் எனச் சமணர்கள் கொண்டாடுகின்றனர். இது மெய்யோ பொய்யோ, ஆனால் இதனால் எத் தீமையும் இல்லை.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில்தான் தீபாவளி கொண்டாடும் பழக்கம்வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் முன்னதான சமண நூலில் விளக்கு வரிசை ஏற்றுவது பற்றிய குறிப்புகள் உள்ளன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கி.பி.1250 இல் எழுதப்பட்ட (இ)லீலாவதி என்னும் மராத்தி நூலில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இடம் பெற்றுள்ளது.
சீக்கியர்கள், 1577-இல் பொற்கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நாளைத் தீபாவளி என்கின்றனர். அதற்கு முன்பே இவ்விழா இருந்துள்ளதால், இச்சமய நம்பிக்கையால் எத்தீங்கும் இல்லை.
ஆரியக் கதைகள் பலவாறாக உள்ளன. இராமன் 14 ஆண்டு வனவாசம் முடிந்த பின்னர், அயோத்தி திரும்பிய நாளில் மக்கள் விளக்குகள் ஏற்றி வரவேற்றுள்ளனர். இந்நாள் தீபாவளி என்பது ஒரு கதை. இதனால்கூடத் தீமையில்லை.
கிருட்டிணன் தன் மனைவியருள் ஒருத்தியான நிலமகளுக்குப் பிறந்த அசுரனை ‘வராக’(பன்றி)ப்பிறப்பு எடுத்து நிலமகள் மூலம் அழித்த நாள்தான் தீபாவளி என்பதுதான் அறிவுக்குப் பொருந்தாக் கதை.
நிலத்திற்கும் கிருட்டிணனுக்கும் பிறந்ததாகக் கூறுவது எவ்வளவு பெரிய மூடத்தனம்! கிருட்டிணன் நாரதருடன் உறவு கொண்டு 60 குழந்தைகள் பிறக்கும் பொழுது, நிலமகளுடன் உறவு கொண்டு ஓர் அசுரன் பிறப்பதில் என்ன வியப்பு என்கிறீர்களா?
நரகாசுரன்பற்றிய கதை ஆரியர்களின் அறிவின்மையை நன்கு வெளிப்படுத்துகிறது.
சமயத்திற்கேற்ப -மதங்களுக்கேற்ற- கதைகள் இருக்கும் பொழுது சிவனிய நெறியினரும் ஒரு கதை சொல்லாமல் இருப்பார்களா? சிவன் மாதொரு பாகனாக – அருத்தநாரீசுவரராக உருவெடுத்த நாள்தான் தீபாவளியாம்.
உடல் சூட்டைத்தணிக்கும் போன்ற நல்ல காரணங்களைக் கூறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குச் சொல்லப்படும் கதையும் மிகவும் மட்டமானது. பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றியவள் இலக்குமியாம். அவள் கடலில் ஆமையாக மறைந்து இருந்த திருமாலை மணம் முடிக்க எண்ணினாராம். ஆனால், அசுரர்கள் இலக்குமியை மணம் முடிக்க விரும்பி அவளைத் துரத்தினராம். அவள் உடனே எள் தோட்டத்தில் மறைந்தாளாம். அப்படி ஓடியதால் எள் செடிகளில் இருந்து வெளிப்பட்ட எண்ணெயுடன் அவள் கலந்து விட்டாளாம். (இதனால் அசுரர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.) நாம் எணெ்ணெய் தேய்த்துக் குளித்தால் இலக்குமி நம்முடன் ஐக்கியமாகிவிடுவாளாம். இப்படி அடுக்கடுக்காக இழிவுகளைச்சுமக்கும் கதைகளைத்தான் பரப்பி வருகின்றனர்.
மீண்டும் இந்த அவலங்களை நாம் அரங்கேற்ற வேண்டா என்பதால் செய்திக்கு வருவோம்.
தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் மூட நம்பிக்கைக் கதைகள் அடிப்படையிலா கொண்டாடுகிறார்கள் எனச் சிலர் கேட்கின்றனர். இவற்றை எழுதுபவர்கள், வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், நம்பிக்கையில்லாமலா செய்கின்றனர்? மக்கள் இக்கதைகளை நம்பவில்லை என்றால் இவற்றை அச்சில் இருந்தும் இணையத்தளங்களில் இருந்தும் நீக்கலாமே! இக்கதைகளைப் பரப்புவோருக்குச் சாவுத்தண்டனை கொடுக்கலாமே! இக்கதைகள் மூலம் ஏதோ ஒருவகையில் மக்களை அடிமைத்தனத்தில் மூழ்க வைத்திருக்கும் கும்பல் ஒழிவதற்கு இதுதான் வழி.
“தீபாவளியைக் கொண்டாட வேண்டா எனக் கூறுவதைவிட, அதுதொடர்பான மூடநம்பிக்கை கதைகளைப் பரப்புவதைத் தடை செய்ய வேண்டும். எளிமையாகவும் சிக்கனமாகவும் கொண்டாடுமாறு மக்களுக்கு அளிவுறுத்த வேண்டும்.” என்பார் பேரா.முனைவர் சி.இலக்குவனார். இறை நம்பிக்கையும் இறை மறுப்பு நம்பிக்கையும் அவரவரைப் பொறுத்தது. ஆனால், அவை பகுத்தறிவிற்கு முரணாக இருக்கக் கூடாது. இந்நாளில் ஏற்றப்படும் ஒளி அறியாமை இருளைப் போக்கும் பகுத்தறிவு ஒளியின் குறியீடாக இருக்க வேண்டும்.
மூட நம்பிக்கை எவ்வடிவில் வந்தாலும் அதை விரட்டியடிக்கும் அறிவுடைமையுடன் வாழ வேண்டும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 423)
அறியாமை இருளைப்போக்கிப் பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 208, புரட்டாசி 29 –ஐப்பசி 04, 2048 / அட்டோபர் 15 – 21, 2017
No comments:
Post a Comment