சங்க இலக்கியங்கள் குறிப்பிடும்

நான் மறை நூல்களும்

நால் வேதங்களும் தமிழே!

2/3

குற்றமற்ற அறவழிப்பட்டட வேதம் எனக் கூறுவது ஏன்? ஆரிய வேதம் அறிமுகமான காலக்கட்டம் அது. தமிழ் வேதங்கள் அறநெறிகளை மட்டுமே உணர்த்துவன. ஆரிய வேதங்கள் அவ்வாறல்ல. சான்றாக அதர்வண வேதம் நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று கருதுவதைக் குறிக்கலாம்.  “அதர்வம், வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின்” என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை யியல், நூற்பா 20, உரை) கூறியுள்ளமை இதனை உறுதி செய்கிறது. ஆரிய வேதங்கள் குற்றமுடையன. அவ்வாறு தமிழ் மறைகளை எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் ‘புரைதீர் நற்பனுவல்’ என்கிறார் புலவர்.
இயற்கை நெறிப்பட்ட ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் உறவைமட்டுமே தமிழர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் குதிரையுடன் உடலுறவு கொள்வதும் அவ்வாறு அரசிகள் உறவு கொண்டு பிள்ளைகள் பெற்றதுமான செய்திகளை ஆரிய வேதங்கள் கூறுகின்றன. இராமன் முதலானோரும் இவ்வாறு பிறந்ததாகத்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆடுகளுடனும் காளைமாடுகளுடனும் உடல் உறவு கொள்வதை இரிக்கு வேதம் கூறுகிறது.
உடன் பிறந்தவர்களுக்குள் – அண்ணன் தங்கை அல்லது அக்கா தம்பியர்களுக்குள் – உடல் உறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை இரிக்கு வேதம் பரிந்துரைக்கிறது. தந்தை தன் மகளுடன் உறவு கொண்டதை அதர்வ வேதம் கூறுகிறது.
கிருட்டிணன் அர்ச்சுனனின் மனைவியாகிய தன் தங்கை சுபத்திராவுடன் உறவு கொண்டதையும் அவளின் மருமகள் – அபிமன்யுவின் மனைவி – இராதையுடன் குடும்பம் நடத்தியதையும் ஆரியப்புராணங்கள் கூறுகின்றன. மற்றோர் கதைப்படி கருணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன் மனைவியே இராதா. கிருட்டிணனுக்கு அத்தை முறை. இப்படிப் பார்த்தாலும் கிருட்டிணன், தன் அத்தை இராதாவுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்துள்ளான். எனவே, இத்தகைய தகாத உறவு முறைகளை ஏற்கும் ஆரிய வேதமாகத் தமிழ் மறைகளை எண்ணக் கூடாது என்பதற்காகத்தான் புலவர் நெட்டிமையார் “புரையில் நற்பனுவல நால் வேதம்” என்கிறார்.
 ஆரியர்களின் பழக்க வழக்கம், பண்பாட்டு முறைகளை அவர்கள்  அயலவர்கள் என்பதால் தமிழ்ப்புலவர்கள் குறை கூறவோ கண்டிக்கவோ இல்லை. ஆனால், அவைபோல் தமிழ்ப்பண்பாட்டை நினைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். எனவேதான் தமிழ் நால் வேதத்தைக் குற்றமற்ற நற்பனுவல் எனச் சிறப்பிக்கின்றனர்.
தமிழர் வேள்வி நடத்தியுள்ளனர். ஆனால், தமிழர் வேள்வி பூப்பலி. ஆரிய வேள்வி உயிர்ப்பலியை அடிப்படையாகக் கொண்டவை.
நெட்டிமையார் பாடலில்
யூபம் நட்ட   வியன்களம்  பலகொல்
என்னும் ஓர் அடி வருகிறது. பலரும் குறிப்பதுபோல் இது வேள்வித்தூண்களைக் குறிக்க வில்லை.
யூபம் அல்லது ஊபம் என்றால் படையணி என்றும் பொருள் உண்டு. நட்ட என்னும் சொல் நிலை நிறுத்திய என்னும் பொருளில் வரும். எனவே, படைணிகளை நிறுத்திய போரக்களங்கள் பல என்னும் குறிப்பை இவ்வடி உணர்த்துகிறது. இவற்றை ஆரிய வேள்வித் தூண்களாகத் தவறாகக் கருதிப் பொருள் விளக்குகின்றனர் சிலர்.
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், நான் மறை என்பதற்கு “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாருமுளர்,  இது – பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்” என்று எழுதும் உரை மிகவும் தெளிவாகத் தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடும் நான் மறை என்பது   ஆரிய மறைகள் அல்ல என உறுதிசெய்கிறது.
 “ ‘நான்மறை முனிவர்’, ‘நால்வேத நெறி’ என வரும் சொற்றொடர்கள், பழங்காலத்திய தமிழில் தமிழ் மறைக ளிருந்தன என்பதை அறிவிப்பன. … நமது திருமுறைகளில் மறை யென்று கூறப்படுவன தமிழ் மறைகளேயாம். இது “பண்பொலி நான்மறை” என்றும் “முத்தமிழ் நான்மறை” என்றும் வரும் தமிழ் வழக்கினை ஒட்டிக் குறிப்பிடும் வகையால் அறியக் கிடக்கிறது. மாதவச் சிவஞான முனிவரும் “கொழிதமிழ் மறைப்பாடல்” என்று தமிழ் மறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றார். இந்தத் தமிழ் மறைகள் ஆலமர் செல்வனால் அருளிச்செய்யப் பெற்றவை என்றுதான் திருமுறைகள் பேசுகின்றன. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய வேதங்கள் இறைவனால் அருளிச்செய்யப் பெற்றன அல்ல. பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களில் அருளிச் செய்யப் பெற்றவை.” எனக் குன்றக்குடி அடிகளார் விளக்கியுள்ளார்.
12 ஆம் நூற்றாண்டு ஔவையார்,
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். (நல்வழி 40)
எனத் தமிழ் நூல்களுடன் இணைத்துக் குறிப்பிடுவதால் புலவர்கள் போற்றுவன தமிழ் நான்மறைகளையே எனலாம்.
திருஞானசம்பந்தருக்குப் பூணூல் சடங்கு செய்த பொழுது பிராமணர்கள் நான்மறை ஓதியதாகவும் அதற்கு எதிராக சம்பந்தர் எண்ணிறந்த புனித வேதம் ஓதியதாகவும் சேக்கிழார் கூறுகிறார்(பெரியபுராணம் பாடல் 2167) .
    “வருதிறத்தன் மறைநான்கும் தந்தோம் என்று
      மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த
      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்
என்பதுதான் அப்பாடல்.
ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம்.
“வைதீகப் பிராமணர்கள் நால் வேதத்திற்கு எதிரானவர்கள். எனவேதான், யசூர் வேதிகள் ஆவணி அவிட்டத்திலும், இருக்கு வேதிகள் ஆவணி அவிட்டத்திற்கு முந்தைய நாளிலும், சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி நாளிலும் பூணூல் அணிகின்றனர். ஆயிரத்தில் ஒருவரே அதர்வண வேதத்தைப் பின்பற்றிப் பூணூல் அணிகின்றனர்.” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘தமிழ் மாமலை’ என்னும் தலைப்பில் மறைமலையடிகள் குறித்து உரையாற்றிய கோவை இளஞ்சேரனார், “நான்மறை என்பது தமிழில் உருவான மறைகள் நான்குதான்; வேதம் எனப்பெறும் வடமொழிநூல்கள் அன்று என்பதே அடிகளாரின் ஆழ்ந்த கருத்து. . இதற்குக் காட்டிய காரணங்கள் “வடமொழி வேதங்கள் நான்கும் வேறுபட்ட சில இடங்களில் மாறுபட்ட கருத்துகளைத் தருபவை; அவை தமிழினத்திற்கு ஒவ்வாதவை; தமிழினத்தைத் தாழ்த்துபவை என்பனவற்றைத் தம் நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.” என விளக்கியுள்ளார். மேலும், இருக்குமறை தோன்றுவதற்கு முன்னரே தமிழில் நான்கு மறைகள் இருந்தன என்றும், அவற்றையே சங்க இலக்கியங்களும், தேவார திருவாசகங்களும் நான்மறை, நால்வேதம் என்றெல்லாம் குறித்தன என்றும், பின்னரே இந்நான்கைப் போன்று வடவேதமொழியில் வேதங்கள் பலரால் கூறப்பட்டுப் பின்னர் வேதவியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டன என்பதே அடிகளாரின் முடிந்த முடிபு  என்றும் சொல்லியுள்ளார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 05.09.2019