அகரமுதல
திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக!
தமிழைப் போற்றாமல் திருக்குறளையோ பிற இலக்கியங்களையோ போற்றிப் பயனில்லை. இங்கே கூறப்படுவது அனைத்து விழா ஏற்பாட்டாளருக்கும் பொதுவானது. இருப்பினும் திருக்குறள் மாநாட்டை அளவீடாகக் கொண்டு பார்ப்போம்.
கருத்தரங்கத்தில் தமிழ் தொலைக்கப்படுவதைக் காணும் பொழுது இரத்தக் கொதிப்பு வருகிறதே! ஆகச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இவ்வமைப்பினர் நடத்தும் அழைப்பிதழ் பதாகைகள் முதலான எவற்றிலும் தமிழ் இல்லை. தமிழ் நூல் குறித்த தமிழர் நடத்தும் மாநாடுகளில் அல்லது கருத்தரங்கங்களில் தமிழ் இல்லை என்பது தலைக்குனிவு அல்லவா?
புது தில்லியில் அதே நிலைதான். எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்!தான். எம் மொழியில் அல்லது எந்நாட்டில் தமிழர்கள் நிகழ்ச்சி நடத்தினாலும் அழைப்பிதழ் முதலானவற்றில் தமிழ் இடம் பெற வேண்டும். தமிழை மறந்து விட்டு ஆற்றும் பணி தமிழ்த்தொண்டாகாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அடுத்தது. பொதுவாகப் பெரும்பான்மையர் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. இவ்வமைப்புகளின் மூலம் நடைபெறுவன திருவள்ளுவரின் திருக்குறள் நூலை உலகப் பொதுநூலாக அறிவிக்க வலியுறுத்தும் மாநாடு. இதில் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்காமல் புறக்கணிக்கலாமா? அழைப்பிதழ், பதாகை, விளம்பரம், புத்தகம், என எல்லாவற்றிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறித்தால்தானே உலகத்தவர்கள் திருவள்ளுவர் ஆண்டுச் சிறப்பையும் திருவள்ளுவர் காலத்தையும் அறிவார்கள். திருவள்ளுவர் காலம்தானே திருக்குறளின் சிறப்பை மிகுதியாக்குகிறது. உலகின் பல பகுதிகளில் மொழி தோன்றாதபொழுது – மொழி தோன்றியிருந்தாலும் இலக்கியங்கள் தோன்றாத பொழுது – இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் உலக ஒருமை உணர்வை வெளிப்படுத்தாத பொழுது – தமிழ் இலக்கியங்கள் உலக ஒருமையை உணர்த்தின. அவற்றுள் தலையாய நூல் திருக்குறள் என அப்பொழுது உணர முடியும். எனவே, நாளினைக் குறிக்க நேரும் எல்லா இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதை இயல்பான கடமையாகக் கொள்ள வேண்டும்.
பொதுவாகத் தமிழ் தொடர்பான அனைத்துக் கருததரங்கங்களிலும் ஆங்கிலம்தான் ஒலிக்கின்றது. தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்திலோ ஆங்கில (உரோமன்) எழுத்துகள் வழியோ படிப்பவர்களுக்கு முதன்மை அளித்துத் தமிழிலேயே படித்தவர்களைப் புறந்தள்ளுவதும் சரியல்ல. ஆங்கிலக் கட்டுரை அளித்தால் தமிழிலும் மொழி பெயர்பப்பு தர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். தவிர்க்க இயலா நேர்வுகளில் ஆங்கிலக் கட்டுரைகளுக்கெனத் தனியே ஓர் அமர்வை மட்டும் ஒதுக்கினால் போதுமானது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் குறித்த வெவ்வேறு மொழிக் கருத்தரங்க வரிசையில் ஆங்கிலத்தில் நடத்தினால் போதுமானது. தமிழில் நடைபெறுவது மட்டுமே தமிழ்க்கருத்தரங்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளர்களே! தமிழைப் புறக்கணிக்காதீர்கள்!
இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 29.09.2019
No comments:
Post a Comment