அகரமுதல
நவம்பர் 1 : இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!
இந்தியாவில் 1947இல் கட்டுண்டோம்! 1953இலும் 1956இலும் மொழிவாரி மாநிலமாக வெட்டுண்டோம்! இதுவே தமிழ் நாடு மாநிலத்தின் வரலாறு.
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி(1956)யும் இதில் மேற்கொண்ட திருத்தத்தின்படியும் ஃபசல் அலி(Fazal Ali) தலைமையில், இருதயநாத்து குஞ்சூரு(H. N. Kunzru) கா.மா.பணிக்கர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி மாநிலங்கள் மறுசீரமைப்பு நிகழ்ந்தது. இதனால் 6 ஒன்றியப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. சம்மு-காசுமீர், உத்தரப்பிரதேசம், ஒரிசா மாநில எல்லைகளில் எந்த மாற்றமும் இல்லை. பிற 11 மாநிலங்களில் நீக்கம், சேர்க்கை இருந்தன. ஆனால், சென்னை மாகாணமாக இருந்து, சென்னை மாநிலமாக மாற்றப்பட்ட தமிழ்நாட்டிற்குத்தான் பெரும் இழப்பு. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த நில உரிமைகளை இந்திய ஆட்சி பறித்து விட்டது.
ஆங்கில ஆட்சிக் காலத்தில் இருந்தே இந்திய நிலப்பகுதி அவ்வப்பொழுது மொழி வாரி மாநிலங்களாக அமைக்கப்பட்டு வந்தன.
இதன் தொடர்ச்சியாகச் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரிக்க வேண்டும் என 19.10.1952 இல் காலவரையறை அற்ற உண்ணாநோன்பு இருந்து பொட்டி சிரீராமுலு 15.12.1952 இல் மறைந்தார். இதனால், வன்முறை வெடித்தது. இதன் காரணமாக அப்போதைய தலைமையமைச்சர் சவகர்லால் நேரு 1.10.1953 இல் ஆந்திர மாநிலத்தைத் தனி மாநிலமாகப் பிரித்தார். அப்பொழுதே தமிழக வட எல்லையைப் பறிகொடுத்தோம்.
வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் என மூவாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொல்காப்பியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது.
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் (மாமூலனார், அகநானூறு, 61/13)
ஒலி வெள் அருவி வேங்கட நாடன் (நன்னாகனார், புறநானூறு, 381/22)
இவ்வாறு அகநானூற்றில் 10 பாடல்களிலும் புறநானூற்றில் 4 பாடல்களிலும் வேங்கடம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. தொன்றுதொட்டே தமிழ் மண்ணாக இருந்த தமிழ்மலை வேங்கடம் – திருப்பதி – தமிழர் உரிமையிலிருந்து பறிக்கப்பட்டு ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டது.
வடாற்காடு மாவட்டத்தின் பெரும்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்ட பகுதிகளில்தான் மிகுதியான எண்ணிக்கையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன; தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன.
பாலாறு உரிமை, கண்டலேறு நீர் உரிமை ஆகியன மறுக்கப்பட்டதுடன் குப்பம் – நகரி வாழ் தமிழர் உரிமைகளும் மறுக்கப்பட்டன.
1.11.1956 இல் தென்னக மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுக் கேரளம், கருநாடகம் பிரிக்கப்பட்டபொழுதும் ஆந்திராவிலும் ஐதாராபாத்து முதலான பகுதிகள் சேர்க்கப்பட்டன. எல்லைச் சீரமைப்பு என்ற ஏமாற்றம் தந்த நடவடிக்கையால் நாம் இழந்த முதன்மைப் பகுதிகள் வருமாறு:
ஆந்திராவிடம் இழந்தவை
|
கருநாடகாவிடம் இழந்தவை
|
கேரளாவிடம் இழந்தவை
|
சித்தூர் வட்டம்
|
கொள்ளேகலம் வட்டம்
|
தேவிகுளம் வட்டம்
|
சந்திரகிரி வட்டம்
|
கோலார் தங்க வயல்
|
பீர்மேடு வட்டம்
|
திருக்காளத்தி வட்டம்
|
பெங்களுரு தண்டுப் பகுதி
|
நெய்யாற்றங் கரை வட்டம்
|
பரமனேறு வட்டம்
|
கொல்லங்கோடு வனப்பகுதி
|
நெடுமாங்காடு கிழக்குப் பகுதி
|
குப்பம் சமீன் வட்டம்
|
மாண்டியா
|
செங்கோட்டை வனப்பகுதி
|
மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு என்ற பெயரில் தமிழக நிலப்பகுதிகளை இழந்தமையால், அப்பகுதிகளில் தோன்றிய ஆற்று வளங்களையும் அவற்றின் மீதான உரிமைகளையும் இழந்தோம்.
இலக்கியங்கள் போற்றிய காவிரியை இந்திய விடுதலைக்குப் பின் இழந்தோம். காவிரிபற்றிய குறிப்புகள் சங்க இலக்கியம் முதல் பல்வேறு கால இலக்கியங்களில் நூற்றுக்கணக்கில் உள்ளன.
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன்
ஆய்நலம் (நக்கீரர், அகநானூறு 115.-6)
என்னும் பாடலடிகள் எருமையூரன் ஆட்சியைக் குறிக்கிறது. அவனது எருமையூர் சுருக்கமாக மையூர் என அழைக்கப்பெற்றது. அதுவே மைசூர். வியாழக்கிழமை > விசாலக்கிழமை; உயிர் > உசிர் போல் மையூர் > மைசூரானது.
இவ்வாறு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மன்னனின் ஆட்சியில் இருந்த நிலமும் காவிரி யாறும் மொழிவாரிப் பிரிவினையில் தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டன.
காவிரியாற்று நீரில் பொன்தாது கலந்து வந்தமையால் பொன்னி என்று மறுபெயர் பெற்றது இது. பொன்தாது தோன்றும் இடம்தான் இன்றைய கோலார் தங்க வயல். எனவே, பொன் விளைவிக்கும் காவிரியாற்றுப் பகுதியை இழந்ததுபோல் பொன் சுரக்கும் பொன் வயலையும் இழந்தோம்.
பழந்தமிழ் நாட்டிலிருந்த இன்றைய கோலார் மாவட்டத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கருநாடகாவிற்கு உரியதாகிவிட்டது.
இன்றைய தமிழ் நாட்டிற்கு வரும் ஆற்று வழிகள் கருநாடகாவிற்கும் ஆந்திரத்திற்கும் உரிய நிலமாக மாற்றப்பட்டன. தமிழகத் தலைவர்கள் தமிழ்த்தேசியம் என்பதை உணராமல் இந்தியத் தேசியத்தை ஏற்றதால் அடைந்த இழப்பு இவைபோல் பலவாகும்.
இந்திய விடுதலைக்காகப் போரிட்டவர்களிலும் போராட்டங்களைச் சந்தித்தவர்களிலும் குரல் கொடுத்தவர்களிலும் யாருக்கும் தமிழர்கள் சளைத்தவர்கள் அல்லர். இந்தியாவில் தமிழ்நாடு அளிக்கும் பங்கு மிகுதியாகவும் அடையும் பயன் குறைவாகவும்தான் எப்பொழுதும் உள்ளது.
அதுபோல் உரிமைகள் இழப்பிலும் வளங்கள் பாதிக்கப்படுவதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. எனவேதான், மொழிவாரி மாநில வரையறுக்கான குழுவில் தமிழர் யாரும் சேர்க்கப்படவில்லை. ஆனால், காவாலம் மாதவன்(Kavalam Madhava Panikkar) என்னும் மலையாளி சேர்க்கப்பட்டிருந்தார்.
இவர், தன்னுடைய நூலில்( கேரள வரலாறு /History of kerala) தமிழர்களைக் “கீழ்ப் பிறவிகளான தமிழர்கள்” என்றவர். இத்தகைய இழி சொல்லர் எப்படி நடுவுநிலைமையுடன் நடந்து கொள்வார்? இவரது தோட்டங்கள் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் இருந்தமையாலேயே தமிழ்நாட்டுப் பகுதிகளைக் கேரளத்துடன் இணைக்கப் பரிந்துரைத்தார். அரசும் ஏற்றுக் கொண்டது.
நமக்குரிய நிலங்களைக் கேரளாவிடம் பறிகொடுத்ததால்தானே முல்லை-பெரியாறும் மூணாறும் பீர்மேடு-தேவிகுப்பமும் நமக்குச் சிக்கல்களாக்கப்பட்டன.
இந்திய விடுதலைக்கு முன்பு, தமிழ்பேசும் மக்கள் எண்ணிக்கையானது தென்னக மொழியினரில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், பின்னர் இந்த எண்ணிக்கை குறைந்தது. மாநில எல்லைகள் மாறிய பின்னர் கணக்கெடுப்பில் தமிழர்கள் பிற மொழியாளர்களாகக் காட்டப்பட்டனர் அல்லது காட்டிக் கொண்டனர். எனவே, தமிழ் பேசுவோர் எண்ணிக்கையும் குறைவாகக் காட்டப்படுகின்றது. பின்வரும் அட்டவணையைப் பார்த்தால் இது புரியும்.
மொழி விவரம்
|
1871 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி
|
1901 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி
|
2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி
|
தமிழ் பேசுவோர்
|
1,47,15,000
|
1,51,82,957
|
6,90,26,881
|
தெலுங்கு பேசுவோர்
|
1,16,10,000
|
1,42,76,509
|
8,11,27,740
|
மலையாளம் பேசுவோர்
|
23,24,000
|
28,61,297
|
3,48,38,819
|
கன்னடம் பேசுவோர்
|
16,99,000
|
15,18,579
|
4,37,06,512
|
இந்திய விடுதலைக்கு முன்பு, மலையாளம் பேசுநரைவிடக் கன்னடம் பேசுநர் குறைவாகத்தான் இருந்துள்ளனர். கருநாடகப் பகுதிகளான மைசூர், பெங்களூரு முதலான பலவற்றிலும் தமிழர்களே முக்கால் பகுதிக்கும் மேலாகவே இருந்தனர்.
பின்னர் இவை, கருநாடகாவில் இணைக்கப்பட்டதால், கன்னடம் பேசுநர் பகுதிகளாகக் காட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு காலம் காலமாக வாழ்ந்த தாய் மண்ணைப் பறிகொடுத்ததால் அப்பகுதித் தமிழர்கள் வாழ்வுரிமைகளை இழந்து அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டுப் பேராயக்(காங்.)கட்சியினர் இந்திய மாயையில் சிக்கியமையால் தமிழக மண்ணின் மைந்தர்களைப்பற்றி எண்ணிப் பார்க்கவில்லை. ‘பச்சைத்தமிழன்’ எனப் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராசரே “குளமாவது மேடாவது. எல்லாம் இந்தியாவிற்குள் தான் இருக்கிறது” என்று சொன்னார் எனில், பிறர் எப்படி இருந்திருப்பார்கள் எனப் புரிந்து கொள்ளலாம்.
மாநிலம் பிரிந்த நாளைத் தொடர்புடைய பிற மாநிலங்கள் தத்தம் மாநில நாளாகக் கொண்டாடி வருகின்றன. தமிழ்நாட்டிலும் அவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் எனக் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் அமைப்புகள் வேண்டுகோள்கள் விடுத்துத் தத்தம் அளவில் கொண்டாடியும் வருகின்றன.
ஆனால், “நம் நிலப்பகுதிகள் பறிக்கப்பட்ட நாளைக் கொண்டாடுவது எப்படிச் சரியாகும்? துயர நாளை மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடினால் பறிக்கப்பட்ட பகுதிகளின் மக்கள் உணர்வுகளை நாம் மதிப்பதாகப் பொருளா? மிதிப்பதாகப் பொருளா?” என்ற எண்ணம் மேலாங்குகிறது.
என்றாலும் தமிழக அரசு அரசாணை (நிலை) எண் 118 த.வ.செ.துறை நாள் 21.10.2019 இல் தமிழ்நாடு அரசு தமிழ்மாநிலம் 1.11.1956 இல் அமைந்ததை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் முதல்நாள் தமிழ்நாடு நாளாகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.
இதனை நாம் புறக்கணிப்பதைவிட ஏற்று, தமிழ்மண் காப்புப் போரில் களப்பலியானவர்களைப் போற்றி வணங்குவோம்! இருப்பதைக் காக்கவும் இழந்தவற்றை மீட்கவும் உறுதி கொள்ளும் நாளாக மாற்றுவோம்!
இருப்பதைக் காக்க வேண்டிய சூழல் என்ன எனச் சிலர் எண்ணலாம். கருநாடக எல்லையோரத் தமிழகப் பகுதிகளை அம்மாநிலத்துடன் இணைக்க அமைப்பு ஒன்று குரல் கொடுத்து வருகிறது. நாளை இந்தக் குரல் ஓங்கலாம்.
தமிழோடு பிற மொழி பேசுவோரும் வாழ்ந்து வருவதால், தமிழகம் பன்முகத்தன்மையோடு விளங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வாழ்ந்து பயன்பெற்றும் தங்களைத் தெலுங்கர்களாகவே எண்ணுவோர் தமிழ்நாட்டில் தெலுங்கை ஆட்சிமொழியாக்க முயன்று வருகின்றனர். இத்தகைய போக்கைத் தடுத்து இருக்கின்றவற்றைக் காக்க வேண்டும்.
அப்படியானால், இழந்ததை மீட்க என்ன செய்ய வேண்டும்?
தமிழர்களின் செல்வமும் செல்வாக்கும் உயர்ந்தால்தான் எண்ணிய ஆற்ற முடியும். அதிகாரப் பொறுப்புகளில் தமிழ் மக்கள் ஆட்சி செலுத்தினால்தான் உரிமையுடன் முன்னேற முடியும். எனவே, கல்வி, தொழில்களில் முதல் நிலையை அடைய வேண்டும்.
தமிழகத்தின் சிறப்பு, நிலப்பறிப்பு குறித்துப் பாடங்களில் இடம் பெற வேண்டும். உண்மை வரலாற்றைப் பிற மாநில மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
பிற மாநிலங்களில் இணைக்கப்பட்ட திருப்பதி முதலான எல்லாப் பகுதிகளையும் முதலில் தனித்தனி ஒன்றியப் பகுதிகளாகவாவது மாற்றச் செய்ய வேண்டும். எனவே, ‘தனித்துவமான தமிழ்நாடு நாள்’ எனக் கொண்டாடுவது வெற்றிக்களிப்பில் உரிமை இழப்புகளை மறப்பதற்கல்ல! அவற்றை மீட்பதற்கே என்னும் உணர்வைப் பெற வேண்டும். நவம்பர் முதல் நாளைத் தமிழ்ப்பகுதி மீட்பு உறுதியேற்பு நாளாக மாற்றுவோம்!
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!
உணர்ந்தால் உரிமையை மீட்பது சிக்கலான ஒன்றுமில்லை!
–இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, நவம்பர் 01, 2019
No comments:
Post a Comment