வெகுளி கணமேயும் காத்தல் அரிது – யாருக்கு?
– இலக்குவனார் திருவள்ளுவன்
0000000000000000000000000000000000000000000000000000000000000000
மூன்றாவது  அனைத்துலகத் திருக்குறள் மாநாடு,
புது தில்லி
புரட்டாசி  06-07, 2050 *** 23-24.09.2019
0000000000000000000000000000000000000000000000000000000000000000
மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாட்டின் மையப்பொருள் உலக அமைதியும் நல்லிணக்கமும் என உள்ளது. இவ்விலக்கை எட்டுவதற்கான அடிப்படையாக இருப்பது சினம் தவிர்த்தல் என்பதாகும். எனவே, சினத்துடன் தொடர்புடைய ஒரு தலைப்பில் கட்டுரை அளிக்கின்றேன்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலராவர். சிற்சில இடங்களில் அல்லது பல இடங்களில் திருவள்ளுவர்  கருத்திற்கு மாறான உரையை எழுதியுள்ளவர்கள், எழுதி வருபவர்கள் உள்ளனர். திருவள்ளுவர் கருத்தைத் திருக்குறளே விளக்கியிருக்கும் பொழுது அதற்கு முரணாகத் தங்கள் எண்ணத்தைத் திருக்கறள் கருத்தாக இவர்கள் சொல்லியுள்ளனர்.
“திருக்குறளுக்கு உரை திருக்குறளே” எனப் புலவர்மாமணி முதுமுனைவர் இளங்குமரனார், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், பேராசிரியர் பி.என்.(இ)டயசு முதலானோர் எழுதியுள்ளனர். இதுவே உண்மையாகும். அவ்வாறு பார்க்கும் பொழுது உரைகள் தவறுகள் நமக்குப் புரியும். இவ்வாறு பல உரைகள் இருப்பினும் இங்கே ஒன்றை மட்டும் நாம் பார்ப்போம்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
(அதிகாரம்: நீத்தார் பெருமை : குறள் எண் : 29)
“கணமேயும் காத்தல் அரிது” என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களைப் பிற தவறான உரைகள் பட்டியலில் சேர்க்க முடியாது. எனினும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட உரைகளே மிகுதி. இக்குறளுக்கான சில உரைகளைப் பார்ப்போம்.
பொதுவான பொழிப்புரை: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
மணக்குடவர், “குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது” என்கிறார்.
“கோபம் கணமேனுங் காக்கமாட்டார் என்றவாறு” என்று பரிதியும் “மற்று அவ்வெகுளியானது தன்மாட்டுச் சிறுதுபொழுது நிறுத்திக்கொண்டு நிற்கமாட்டாது என்றவாறு”  என்று காலிங்கரும் கூறுகின்றனர்.
பரிமேலழகர், “குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி – துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; ‘கணம் ஏயும்’ காத்தல் அரிது – தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.” என்கிறார்; “சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின், கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், ‘காத்தல் அரிது’ என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது” என விளக்கவும் செய்கிறார்.
மணக்குடவர், “சிறுபொழுதாயினும் வெகுளியால் உண்டாகும் தீமையை காத்தல் அரிது என்றார். இதை ஏற்ற பரிமேலழகர் கணமே ஆனாலும் வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது என்றார். பரிதியும் காலிங்கரும் கணப்போதும் நீத்தார் சினம் கொள்ளார் என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை நல்கினர்.” என்கிறார்.
குன்றக்குடி அடிகளார், “நற்குணம் என்னும் குன்றின் மீது ஏறி நின்றவர்கள் வெகுளியை ஒரு நொடியும் பேணிக் காக்க மாட்டார்கள். அதாவது வெகுளியை ஒரு பொருளாகக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வெகுளல் அரிது. ஒரொவழி, வெகுண்டாலும் உடன் மாறும் என்பதாம்” என உரை தருகிறார்.
திருக்குறளுக்கான 650 உரையாசிரியர் நூல்கள் தம்மிடம் இருப்பதாகத் திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகன்ராசு என்னிடம் தெரிவித்தார்.  திருக்குறள் உரைகளைத் தொகுத்தும் பல நூல்கள் வந்துள்ளன. எனினும் முழுமையாக அனைத்து உரைகளையும் தொகுத்து நூல்கள் வரவில்லை. விக்கிபீடியா தளத்திலும்  முனைவர் இர.குமரன் முயற்சியில் உருவான விக்கி குறள் முதலான பல தளங்கள் மூலமும் திருக்குறளுக்கான வெவ்வேறு உரைகளைக் காண இயலும்.
இக்குறளுக்கான அனைவர் உரைகளையும் படித்து வகைப்படுத்தி இக்கட்டுரையை எழுத முயன்றேன். வாய்ப்பு கிட்டாமையால் இயலவில்லை. எனினும் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார் முதலான ஐம்பதின்மரின் இக்குறளுக்கான உரையைப் படித்தே எழுதுகின்றேன்.
திருக்குறள் உரைகள் சிலவற்றையேனும் தொகுத்துத் தருவது குறள்.திறன் என்னும் இணையத் தளமாகும். கணிஞன் (மணி மு.மணிவண்ணன்) என்பாரின் அருமுயற்சியில் உருவாகியுள்ள தளம் இது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் கருத்துகளைப் பார்ப்போம்.
“இன்றைய ஆசிரியர்கள் ‘சினத்தைச் சிறுபொழுதும் யாரும் தாங்கமுடியாது’, ‘சினத்தை அச்சினத்திற் சிக்கியோரால் கணப்பொழுதும் தடுத்து நிறுத்துதல் இயலாது’, ‘சினமானது ஒரு கணப்பொழுதுதான் தோன்றும். அப்படித் தோன்றியபோது அதனைத் தடுத்தல் முடியாததே’, ‘சீற்றம் நிலைப்பது ஒரு நொடிதான் எனினும் அதன் ஆற்றலைத் தடுத்தல் இயலாது’ என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.”
“குணத்தில் சிறந்த நீத்தார்க்கு ஒருகணம் கூட சினம் தோன்றுவதில்லை என்கிறது குறள்.”
“ ‘கணமேயும் காத்தல் அரிது’ என்ற தொடருக்கு நீத்தார் சினத்தை ஒரு கணப்பொழுதேனும் தாங்கியிரார் என்றும் நீத்தாரால் வெகுளப்பட்டார் அச்சினத்தை ஒரு கணப்பொழுதேனும் தாங்கி நிற்கார் என்றும் இரு திறமாகப் பொருள் உரைக்கப்பட்டது.”
இக்குறளில் “குணமென்னும் குன்றேறி நின்றார்”  என்னும் அடிக்கான விளக்கத்தில் மாறுபாடு இல்லை. உரையாசிரியர்கள் தத்தம் உரைவளத் திறமைக்கேற்பச் சொல்லியிருப்பினும் அடிப்படையில் நற்குணம் என்னும் பண்பின் மலையில் நிற்பவர்கள் – குணக்குன்றர்கள் – என்ற ஒத்த கருத்துதான் உள்ளது.
ஆரியத்தில் முனிவர்கள் சாவம் இடுவதும் இதனால் சாவத்திற்கு உள்ளானோர் பாதிக்கப்படுவதுமான கதைகள் உள்ளன. இக்கதைகளின் பாதிப்பால், குணக்குன்றர் வெகுளியால் பாதிப்பு வரும் என்ற சிந்தனை சிலருக்கு எழுந்துள்ளது. எனவே, அதற்கேற்பவே, பண்பு மலையில் நின்றார் வெகுளியால் வரும் தீமையைக் கணப்பொழுதும் காக்க இயலாது என்ற வகையில் பொருள் தந்து விட்டனர்.
அதே நேரம், பொதுநல நோக்கிற்குத் தீங்கிழைக்கும் பொழுது அறவாணருக்கு ஏற்படும் அறச் சீற்றத்தைத் திருவள்ளுவர் குறிப்பிடுவதையும் நாம் கருதிப் பார்க்க வேண்டும்.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும் (திருக்குறள் 899)
என்கிறார் திருவள்ளுவர்.
ஆட்சியாளராக இருப்பினும் நற்கொள்கை உடையவர்கள் அறச்சீற்றம் கொண்டால் தன்னிலை இழந்து கேடுறுவர் என்கிறார் திருவள்ளுவர்.
இந்த நோக்கில் பார்த்தால் பண்புநலனில் குன்றென நிமிர்ந்து நிற்போர் சினம் கொண்டால், அச்சினத்திற்கு ஆளாகிறவர்களால் தங்களைக் காத்துக் கொள்வது அரிது என்றுதான் கொள்ளத் தோன்றும். ஆனால், ‘வெகுளாமை’யில் திருவள்ளுவர் வெகுளி கணமேயும் காத்தல் அரிது எனக் கூறவில்லை. ‘நீத்தார் பெருமை’யில் கூறுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இதனைப் பெருமையாகத் திருவள்ளுவர் கூறமாட்டாரே!
இந்த இடத்தில் தவவலிமை உடையார் தண்டிக்கவும் உயர்த்தவும் வல்லார் என வரும் பின்வரும் குறளையும் நோக்க வேண்டும்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.(திருக்குறள் 264)
என்கிறார் திருவள்ளுவர். இதற்கு ஒரு சாரார் பகைவரைத் தண்டித்தலும் நட்பு வட்டத்தில் உள்ளோரை உவக்கச் செய்தலும் தவத்தார் சிறப்பு எனக் கூறுகின்றனர். சிலர், “அறத்திற்குப் பகையானவர்கைளத் தண்டித்தலும் அறத்தை விரும்பிச் செய்வோரைப் போற்றலும்” என்ற வகையில் பொருள் தருகின்றனர். எப்படிப் பார்த்தாலும் நீத்தாருக்கு இத்திறமை பெருமை தருவதாக அமையாது. ஏனெனில் அவர்களுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடே இருக்காது; இருக்கவும் கூடாது. அவ்வாறிருக்க அதன் அடிப்படையில் எப்படித் தம் வலிமையை அவர்கள் வெளிப்படுத்துவர்.
                சினத்தைச் சட்டென்று வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொண்டு அதனைக் காட்ட வேண்டிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.(திருக்குறள் 487)
என்கிறார் அவர்.
இந்தச் சினம் நாட்டுப் பகைவர்களுக்கும் ஆட்சிப் பகைவர்களுக்கும்  அரசியல் பகைவர்களுக்கும்  தொழில் பகைவர்களுக்கும் வணிகப் பகைவர்களுக்கும் எதிராகக் காலம் அறிந்து மேற்கொள்ள வேண்டிய நடைமுறையைக் கூறுவது. ஆனால், தாம் பகையாகக் கருதாவிட்டாலும் தம்மைப் பகையாகக் கருதிச் செயல்படுவோரைப் பொறுத்தலே நீத்தாருக்குப் பெருமையாகும். எனவே, காத்திருந்து சினம் காட்டல் அவர் பண்பன்று.
திருவள்ளுவர் நம்மிடம் நெருப்புக் கொத்தில் தேய்த்தால் போன்ற துன்பத்தைச் செய்பவனிடமும் முடியுமெனில் சினம் கொள்ளாதிருத்தல் நன்று என்கிறார்.
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று (திருக்குறள் எண்:308)
என்பதுதான் அத்திருக்குறள்.
எளிய மக்களிடமே, சினம் கொள்ள வாய்ப்பு உள்ள சூழலிலும் சினம் கொள்ளாதே என அறிவுறுத்தும் திருவள்ளுவர் நீத்தார் பெருமையில் சேர்ந்தாரைக் கொல்லியாகிய சினத்தைப் பண்பாகக் கூறுவாரா? மாட்டார் அல்லவா?
எனவே திருவள்ளுவர், பண்புநிறை சான்றோர்கள் சினம்கொள்ள மாட்டார். ஒருவேளை வந்தாலும் கணப்பொழுதுகூட அச்சினம் அவர்களிடம் தங்கியிராமல் உடன் மறைந்து விடும் என்னும் சிறப்பை உணர்த்தவே “வெகுளி கணமேயும் காத்தல் அரிது” என்கிறார்.
பொதுவாக  இக்குறட்பாவிற்குப் பின்வரும் மூவகை விளக்கங்கள் உள்ளன.
  1. குணக்குன்றர்களிடம் தோன்றும் வெகுளியால் வரும் தீமைகளில் இருந்து கணப்பொழுதும் காத்தல் இயலாது.
  2. குணக்குன்றர்களிடம் வெகுளி கணப்பொழுதுதான் தோன்றும் என்றாலும் அதனால் வரும் தீமையிலிருந்து வெகுளப்பட்டோர் தம்மைக் காத்தல் இயலாது.
  3. குணக்குன்றர்களிடம் வெகுளி வராது. வந்தாலும் கணப்பொழுதேனும் அவர்களிடம் தங்காது.
தேவநேயப்பாவாணர் மட்டும், நற்குணமலையாகிய முனிவர் நொடிநேரமேனும் தம் உள்ளத்திற் சினத்தைப் பேணுதலில்லை யென்று பொருள் கூறுவாருமுளர் எனக் குறிப்பிட்டு அதனை மறுத்துள்ளார். மேற்குறித்தவாற்றால் அம்மறுப்பு பொருந்தாது எனத் தெளியலாம்.
நீத்தாரின் சினம் கணப்பொழுது வந்தாலும் தீமை விளைவிக்கும் எனப் பலர் கூறியிருக்கப் பெருங்கவிகோ வா.மு.சேதுராமன், நீத்தார் சினம் வலிமையானது என்றாலும் அவர்களிடம் தோன்றாது என்னும்படிப் பின்வருமாறு கூறியுள்ளார்.
“நீத்தார் .. .. சினம் நன்மையைச் சமைக்க வல்லது.தீமையைப் பொசுக்கவும் வல்லது. எனினும் குணவான் கோபம் ஒரு நொடிப்போதும் தங்காது” என்கிறார் அவர்(திருக்குறள் செம்மொழி உரை, பக்கம் 23)
“வெகுளியுடையவர் நீத்தார் அல்லர். வெகுளி சிறிதுடையாரும் ஒரோவழி எழுதலுடையாரும் கூட நீத்தாராகார். சினம் கொண்டு சாவம் வழங்குகின்ற முனிவர்கள் நீத்தாராகவே கருதப்படமாட்டர். வெகுளி முற்றிலும் அற்ற ஒருவரே நீத்தாராவர்; குறை கடந்தவராவர் வெகுளி தோன்ற வேண்டிய இடத்தும் தோன்றாமையே நீத்தார்க்குப் பெருமை தருவது. இக்கருத்துக்களைத் தெளிவாக்கவே இப்பாடல் படைக்கப்பட்டது.” எனக் ‘குறள்.திறன்’ தளத்தில் குறித்துள்ள கருத்துகளுக்கு நான் முழுதும் உடன்படுகின்றேன்.
குணக்குன்றர்கள் தங்களிடம் வெகுளியைச்  சிறுபொழுதுகூடத் தங்க விடமாட்டார்கள் என்பதே நீத்தார் பெருமையாகத் திருவள்ளுவர் சிறப்பிப்பது.
 இலக்குவனார் திருவள்ளுவன்