(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 தொடர்ச்சி)
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28
நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே!
”நன்றல் காலையும் நட்பிற் கோடார்”
கல்லாடனார், அகநானூறு 113. 1.
தலைவி கூற்று
திணை: பாலை
துறை: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பொருள் விளக்கம்:
நன்று அல் காலையும் நட்பின் கோடார்.
நன்றல்காலை – நன்றல்லாத பொழுது = கேடுவந்த பொழுது = துயருற்ற பொழுது; நட்பின் கோடார் = நட்பிலிருந்து கோணாதவர்கள் = நட்பை விட்டு விலகாதவர்கள் = நட்பைக் கை விடாதவர்கள்.
இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாமல் இருப்பதுதான் உண்மை நட்பு.
இன்பமாக இருக்கும் பொழுது இணைந்து மகிழ்ச்சி அடைந்து விட்டு நண்பர்க்குத் துன்பம் வந்தால் விலகி ஓடுவது உண்மை நட்பாகுமா?
நண்பர்க்குத் துன்பம் வந்தபொழுது துணையாக இருந்து ஆறுதலாகவும் உதவியாகவும் இருப்பதுதானே உண்மை நட்பிற்கு அடையாளம்.
அவ்வாறில்லாமல் நண்பருக்கு வரும் கேட்டினால் தனக்கும் கேடு வரும், துன்பம் சேரும் என்றெல்லாம் எண்ணிக் கவலைப்பட்டு நண்பரைப்பற்றிக் கவலைப்படாமல் அஞ்சி ஓடுபவன் உண்மையான நண்பனாக இருக்க முடியுமா?
நண்பனுக்குப் பதவியோ செல்வமோ கிடைக்கும் பொழுது அவனுடன் சேர்ந்து திளைத்து மகிழ்வது மட்டும்தான் நட்பா?
தோழனுக்கு அல்லது தோழிக்குக் கேடுவந்தால், ‘’உன் கேடு உன்னோடு’’ என்று பாரா முகமாக இருக்கலாமா?
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆடை அவிழும் நிலை ஏற்பட்டால் விரைந்து சென்று சரி செய்யும் கை போல் விரைந்து சென்று உதவி நண்பனின் அல்லது தோழியின் கேட்டைக் களைவதுதானே உண்மை நட்பின் இலக்கணம்.
திருவள்ளுவரும் நண்பர்க்குத் துன்பம் வரும்பொழுது அவரைக் கைவிடக் கூடாது என்பதைப் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். (திருக்குறள், ௭௱௯௰௯ – 799)
என, “நண்பருக்குக் கேடு வரும் காலத்தில் கைவிடுவோர் நட்பை இறப்பு வரும் காலத்தில் நினைத்தாலும் உள்ளத்தைச் சுடும்” என்கிறார்.
27 அடிகளைக் கொண்ட அகநானூற்றுப் பாடலின் முதல் அடி இது.
இம்முழுப்பாடலில் இடம் பெற்ற சில அடிகள் நமக்குச் சில சிறப்புகளைத் தெரிவிக்கின்றன.
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள்
ஆகிய அடிகள் (4 – 7) வரலாற்றுச் செய்திகளை உணர்த்துவன.
‘’அஃதை மன்னனைப் போற்றிக் காப்பாற்றிய கோசர் வாழும் நெய்தலஞ்செறு நன்னாடு போன்ற அழகு மிக்க என் தோள்’’ என்கிறார்.
‘நெய்தலஞ் செறு’ என்பதை ஆராய்ச்சி அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் (ஏப்பிரல் 2, 1884-மார்ச்சு 28, 1944), கரந்தைக் கவியரசு இரா. வேங்கடாசலம் (பிள்ளை) (1886-1953), ஆகியோர் ஒரு நாடாகக் குறிக்கின்றனர்.
ஆனால், பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் (5 செட்டம்பர்,1909 – 3 சனவரி,1972) ஓர் ஊர் எனக் குறிப்பிடுகிறார்.
இந்நிலப்பகுதி பாணன் ஒருவனால் ஆளப் பெற்றது. எனவே, குறுநில மன்னனாகக் கருதாமல் ஓர் ஊரை ஆட்சி செய்ததாக இவர் கருதியிருப்பார் போலும்.
வாய்மை தவறாத கோசர் போல் தலைவனும் வருவதாகச் சொன்ன சொல் தவறாமல் வருவான் எனத் தலைவி உரைப்பதாக உய்த்துணர்ந்து கோசரின் சிறப்பை உணரலாம் என்பர் அறிஞர்கள்.
பழந்தமிழ்ப் புலவர்கள் நாடு நகர், ஊரைப் போன்ற அழகு மிக்க பெண் எனக் குறிப்பர். அதுபோல் இங்கே குறிக்கப்பெற்றுள்ளது.
‘’மெலியாப் பாடு இன் நோன் அடியன்’’ என்னும் பத்தாம் அடி, செருப்பு அணிந்து பரலில் நடத்தலால் ஏற்படும் இனிய ஓசையைக் குறிக்கிறது.
அக்காலத்திலேயே செருப்பணிந்து நடக்கும் நாகரிக வாழ்க்கையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர் என அறியலாம்.
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
என்னும் அடி (11) மூலம் மூங்கில் குழாயில் சோற்று உணவை வைத்துக் கொணரும் பழக்கம் இருந்ததை அறியலாம்.
மூங்கில் குழாயில் உணவைச் சேமித்து வைக்கும் பழக்கம் நம் நாட்டில் இன்னும் சில பழங்குடி மக்களிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.
கம்போடியாவில் மூதாட்டி ஒருவர் மிதிவண்டியில் மூங்கில் குழாயில் சோற்று உணவைக் கொண்டு வந்து விற்றதைப் பார்த்துள்ளேன்.
தாய்லாந்தில் மூங்கில் குழாயில் புட்டுச்சமைக்ககும் பழக்கம் இருப்பதுபோல் இன்னும் பிற நாடுகளிலும் இப்பழக்கம் இருக்கிறது..
நன்மை அல்லாமற் போய்க், கேடே வந்துற்ற காலையினும், தம்முடைய நட்புத் தன்மையிலே நின்றும் கோணாத பண்பைக் குறிப்பதன் மூலம் நாம் ஒவ்வொ்ருவரும் நட்பை எக்காலத்திலும் எச்சூழலிலும் கைவிடக் கூடாது என வலியுறுத்துவதை உணரலாம்.
சங்கப்புலவர்கள் பொன்னுரையைப் பின்பற்றி நாமும் நண்பர்க்குக்கேடு வந்தபோதும் நட்பைக் கைவிடாதிருப்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தாய் மின்னிதழ் 01.01.2026
No comments:
Post a Comment