(தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-தொடர்ச்சி)

 தொல்காப்பியர் காலத்தில்தான் ஆரியம் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்க வேண்டும்.  தமிழகத்தில் முதன் முதலாகக் குடியேறிய வேற்று நாட்டார் வட ஆரியரே.  அவருள்ளும் மொழி நூற் புலமையும்ஒழுக்க மேம்பாடும் பிறர்க்கென வாழும் பெற்றிமையும் கொண்ட ஆரியரே தமிழகச் சான்றோருடனும் அரசர்களுடனும் தொடர்பு கொண்டனர்.  ஆரிய மொழிப் புலவரும் தமிழ் மொழிப்புலவரும் நட்புடன் அளவளாவி உறவாடினர். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்அன்றோ?” எவரையும் வரவேற்று இன்ப வாழ்வு நல்கும் பண்டைத் தமிழர் வட ஆரியப் புலவரை வரவேற்று வாழ்வளித்ததில் வியப்பின்று.  தமிழரை யடிமையாக்கித் தமிழ் மொழியை ஒழிக்கும் உள்ளத்துடன் அன்று வடவாரியர் இங்கு வந்திலர்.  ஆதலின் புகலிடம் தேடி வந்த ஆரிய மொழிச் சான்றோரிடம் பொல்லாங்கு காட்டாது முகமன் கூறி வரவேற்று அகமகிழ ஆகும் உதவிகளைச் செய்தனர்.  அதனால் இருசாராரும் நெருங்கிப் பழகி ஒருவர் மொழியை ஒருவர் பயின்றனர்.  ஓரினத்தார் மற்றோரினத்தாருடன் கலந்து உறவாடுங்கால் இரு சாராரின் மொழிகளும் பண்பாடுகளும் கலைகளும் ஒன்றினுள் ஓன்று கலப்புறுவது இயற்கையேதடுக்க முடியாததும் ஆகும்.  ஆதலின் ஆரியர்கள் தமிழர்களின் மொழிபண்பாடுகலை முதலியவற்றைத் தமதாக்கிக் கொண்டது போலவேதமிழர்களும் ஆரியர்களின் மொழி பண்பாடு கலை முதலியவற்றைத் தமதாக்கிக் கொண்டனர்.  ஒருவரை ஒருவர் அடிமை கொள்ளல் வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் பிற மொழி வெறுப்பும்பகைமை யுணர்ச்சியும் தோன்றவில்லைஆரியர்கள் தமிழகத்தில் செல்வாக்குத் தேட வேண்டிய நிலையில் இருந்ததால்தம் ஆரியநூல்களைத் தமிழர்கள் கற்கலாகாது என்று தடுக்கும் கொள்கையை அஞ்ஞான்று மேற் கொண்டிலர்.  தமது மொழியில் புலமை பெற்ற தமிழர்களும் வேற்றுப் புது மொழியாம்ஆரியத்தை விரைந்து கற்றனர்.  புதிய மொழியில் புலமை பெறுதலைப் பெருமையாகக் கருதுதல் என்றும் உள்ள இயல்பு.  ஆதலின் தொல்காப்பியரைச் சிறப்பித்துக் கூறப் புகுந்த பனம்பாரனார் தொல்காப்பியரின் வடமொழிப் புலமையை எடுத்துக்காட்டிச் சிறப்பித்துள்ளார். (பேராசிரியர் சி.இலக்குவனார்தொல்காப்பிய ஆராய்ச்சி :  பக்கம்: 26-27)

“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்றார் தொல்காப்பியர்.  ஆனால் உரையாசிரியர்களில் சிலர் உயர்ந்தோர் என்பதற்கு முதல் இரு வருணத்தார் (அந்தணர், அரசர்) என்றும், மூன்று வருணத்தார் (அந்தணர், அரசர், வணிகர்) என்றும் பொருள் கூறியுள்ளனர். “உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க’  என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.  முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் உரையாசிரியர்கள்.  உரையாசிரியர் காலத்தில் ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.  தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இடம் பெற்றிலது.  அன்றியும் தொல்காப்பியர் தமிழக மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றி, தமிழர்க்குத் தொடர்பிலாப் பிற நாட்டினர் வாழ்க்கை கூற நூல் செய்திலர்.  தொல்காப்பியர்க்குப் பிற்பட்டுத் தோன்றிய திருவள்ளுவர் உழவரை உயர்ந்தோரெனச் சிறப்பித்திருக்கவும், அவர்க்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர், உழவரை வேளாளரைஉயர்ந்தோரல்லர் என ஒதுக்கியிருத்தல் எங்ஙனம் சாலும்? ஆதலின் உரையாசிரியர்கள் நால்வகை வருணம் பற்றிக் கூறுவன வெல்லாம் தொல்காப்பியர் கொள்கைக்கும் காலத்துக்கும் முரண்பட்டன; பொருந்தாதன என்று அறிதல் வேண்டும். (பேராசிரியர் சி. இலக்குவனார்,தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 144-145 )

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் குன்னூரில் ஒரு நூலகம் ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று அமைத்தவர். அங்கே தொல்காப்பியருக்குச் சிலை நிறுவியவர். இத்தகைய அறிஞர் பெருமக்களாலும் ஆன்றோர்களாலும்தான் தொல்காப்பியர் புகழ் காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. நாம் அவர் புகழை மேலும் உலகெங்கும் பரப்புவோமாக!

  • தொல்காப்பிய ஆராய்ச்சி, பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார்
  • தொல்காப்பியர் வரலாறு, பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
  • Tholkappiyar: Tholkappiyam, MS. NISHA KUTTY
  • இலக்கண வரலாறு, சோம.இளவரசு
  • ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியக் கட்டுரைகள், ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப்புலவர் கழக வெளியீடு, நவம்ப் 2004
  • பழந்தமிழ், பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார்
  • INDIAN LITERARY CRITICISM AND THEORY, 7. Panini, Math Wiki
  • உலகத்தொல்காப்பிய மன்றம். இணையத் தளம்
  • வலைத்தளங்கள்
  • விக்கிபீடியா
  • உரையாசிரியர்கள், மு. வை. அரவிந்தன்
  • Tholkappiyam in English with critical studies, Dr.S.Ilakkuvanar 
  • வடமொழி ஒரு செம்மொழியா?, முனைவர் ப.மருதநாயகம்
  • ஆய்வுலக வழிகாட்டி பேராசிரியர் ப.மருதநாயகம், இலக்குவனார் திருவள்ளுவன்
  • தமிழ்ச்சிமிழ், தொல்காப்பியம், இலக்குவனார் திருவள்ளுவன்
  • தொல்காப்பியம் ஓர் அறிமுகம், உரை, பேராசிரியர் தெ. முருகசாமி
  • தொல்காப்பிய விழா மலர், தொல்காப்பிய மன்றம், கனடா, 2023
  • தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின சமூக நிலை, முனைவர ்செல்வநாயகி சிரீதாசு
  • முனைவர் இராசமாணிக்கனார்
  • https://tamilandvedas.com/
  • சான்லாக்குசு பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் (https://www.shanlaxjournals.in/)
  • Aindra School of Grammar 
  • ஆய்வுச்சுடர்: பன்னாட்டு பன்முகத்தமிழ் மி்ன்-ஆய்விதழ்
  • இணையத்தில் இடம் பெற்ற இன்னும் சில நூல்களும் பல கட்டுரைகளும்.

000

(தொடரும்)