Showing posts with label : கலைச்சொற்கள். Show all posts
Showing posts with label : கலைச்சொற்கள். Show all posts

Tuesday, September 24, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

801. Administrative Machinery              பணியாண்மை இயங்கமைவு  

Machinery என்றால் இயந்திரம் என நேர் பொருளில் சொல்வதை விட இயந்திரத்தின் இயக்கம் போன்று இயங்கு நிலையைக் குறிப்பதால் இயங்கமைவு எனலாம்.  

பணியாண்மைக்கான செயற்தொகுதியைக் குறிப்பதே பணியாண்மை இயங்கமைவு ஆகும்.
802. Administrative Office  பணியாண்மை அலுவலகம்  

ஒரு துறை அல்லது ஓர் இயக்ககம் அல்லது ஒரு செயலகம் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஓர் அமைப்பு போன்றவற்றின் அன்றாடப் பணிகளைப் பார்க்கும் அலுவல் அமைப்பே பணியாண்மை அலுவலக மாகும்.
803. Administrative Power     பணியாண்மை அதிகாரம்  

ஒரு துறை அல்லது ஓர் இயக்ககம் அல்லது ஒரு செயலகம் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஓர் அமைப்பு போன்றவற்றின் அன்றாடப் பணிகளின் ஆளுமைகளையும் பணியாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உடைய அதிகாரம் பணியாண்மை அதிகாரம் ஆகும்.

பணியாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் என்னும் பொழுது பணியாளர்களின் ஊதியம், விடுப்பு முதலிய பணியாளர் நலன்களை வழங்குதல், நிறுத்தி வைத்தல், நீக்குதல், பணியிடங்களை நீக்குதல்  அல்லது மாற்றியமைத்தல் ஆகியவற்றிற்கான அதிகாரம் அல்லது இவற்றிற்கான அதிகாரம் உடைய மேலலுவலர்க்குப் பரிந்துரைத்தல்,  தவறு அல்லது குற்றம் புரியும் பணியாளர்களை உசாவுதல் (விசாரித்தல்) தண்டித்தல், மன்னித்தல் அல்லது இவற்றிற்கான அதிகாரம் உடைய மேலலுவலர்க்குப் பரிந்துரைத்தல் ஆகியனவும் அடங்கும்.
804. Administrative Procedure     பணியாண்மை நடைமுறை  

அரசு அல்லது தனியார் நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரங்களைச் செயற்படுத்தும் பாங்கு அலுவலக நடைமுறையாகும்.  

பணியாளர் அல்லது அதிகாரி தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அல்லது அதிகாரத்திற்கு உட்பட்ட செயல்களை நடைமுறைப்படுத்துவதையும் குறிக்கிறது.
805. Administrative Reforms Commission        பணியாண்மைச் சீர்திருத்த ஆணையம்  

பணிகள், பணியாளர்களிடையே உள்ள குறைகளைக் களைதற்கும் செயற்பாடுகளைத் தரப்படுத்துதற்கும் உயர்த்துவதற்கும் அமைக்கப்படும் குழுவே பணியாண்மைச் சீர்திருத்த ஆணையம் ஆகும்.  

இந்தியப் பொதுப்பணியாண்மையை மதிப்பாய்வு செய்வதற்கு முதலில் 05.01.1966 இல் பணியாண்மைச் சீர்திருத்த ஆணையம்(ப.சீ.ஆ.) அமைக்கப்பட்டது. மொரார்சி தேசாய் இதன் தலைவராக முதலில் இருந்தார். அவர் துணைத் தலைமையமைச்சராக ஆன பின்பு அனுமந்தையா இதன் தலைவரானார். 37.08.2005இல் வீரப்ப மொய்லி தலைமையில் இரண்டாவது பணியாண்மைச் சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட்டது.  

மாநில அரசுகள், தேர்தல் ஆணையம், தேர்வாணையம் முதலான தன்னாட்சி அமைப்புகள் தத்தம் அதிகார வரம்பிற்குட்பட் பணிகளில் சீர்திருத்தம் காணவும் தனித்தனிச் சீர்திருத்த ஆணையம் அமைக்கலாம்.  

சிறைத்துறைச் சீர்திருத்த ஆணையம், காவல் துறைச் சீர்திருத்த ஆணையம் எனத் தனித்தனியே துறைகளின் பணிகளை மேம்படுத்துவதற்காகவும் பணியாண்மைச் சீர்திருத்த ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன.
806. Administrative Remedies      பணியாண்மைத் தீர்வுகள்  

நிறுவனம், வாரியம், முகவாண்மை, ஆணையம் முதலியவற்றால் வழங்கப்படும் நீதித்துறை சாராத பணியாண்மை முறையிலான தீர்வு பணியாண்மைத் தீர்வாகும்.
807. Administrative Tribunal        பணியாண்மைத் தீர்ப்பாயம்  

பணியாண்மைத் தீர்ப்பாயம் என்பது நீதித்துறை அதிகாரங்களை வழங்கிச் சட்டப்படி அமைக்கப்படும் பணியாளர்களுக்குத் தீர்வு வழங்கும் அமைப்பாகும்.  

எல்லாப் பொருண்மைகளிலும் நீதிமன்றத்திற்குப் பொது அதிகார வரம்பு உள்ளது.

தீர்ப்பாயம் பணித் தொகுதிச் சிக்கல்களைக் கையாளுகிறது.

பணியாண்மைத் தீர்ப்பாயம் குறிப்பிட்ட சிக்கலைத் தீர்ப்பதற்கு வரம்பிற்குட்பட்ட அதிகாரம் உடையது.
808. Administrator (Also Estate Trustee)    பணியாட்சி அலுவலர்  

நிருவாக அலுவலர் சட்ட உரித்தாளர் உரியர்   இறுதிமுறி இல்லாமல் இறந்த ஒருவரின் அல்லது இறுதிமுறியில் பெயர் குறிப்பிடப்பட்ட நிறைவேற்றுபவரின் சொத்துகளை பணியாட்சி /நிருவாகம் செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்படுபவர்.  

பணியாட்சி /நிருவாக அலுவலர் இப்போது (காலமானவரின்) உடைமைப் பொறுப்பாளர் / சட்ட உரித்தாளர் என அழைக்கப்படுகிறார்.  

இறப்பிற்குப் பின் முடிவெடுப்பதைத் தத்துவமாகக் கருதித் தத்துவகாரர் என்று அழைத்துள்ளனர்.
809. Admiralty Actionகடலாண்மை நடவடிக்கை

கடல் எல்லை,

பன்னாட்டு நீர்ப்பயன்பாடு,

கப்பல் பயணம், மீன்பிடித்தல் முதலியவற்றைக் கையாளும் பன்னாட்டுச் சட்டத்தின் கிளை கடற்சட்டமாகும். இது தொடர்பான நடவடிக்கைகள் கடலாண்மை நடவடிக்கை ஆகும்.
810. Admiralty Court      கடலாண்மை தீர்ப்பாயம்  

கடலாண்மை நீதிமன்றம் என்பது கடல்சார் தீர்ப்பாயம்/ நீதிமன்றம் (maritime court)என்றும் அழைக்கப்படுகிறது.  

கடற்சட்டம், கடல், கப்பல், கடற்சட்டம் தொடர்பான வழக்குகள் மீதான பணிவரம்பு கொண்ட தீர்ப்பாயம் ஆகும்.

முன்பு நீதிமன்ற அமைப்பின் தனிப்பகுதியாகவே கடல்சார் தீர்ப்பாயங்கள் இருந்தன.  அப்பொழுது நீதிமன்றம் எனக் குறிப்பது பொருத்தமாக இருந்தது. இப்போது, நீதிமன்றம் எனப் பெயரில் இருந்தாலும் பணியமைப்பு அடிப்படையில் தீர்ப்பாயம் என்பது சாலப் பொருத்தமாக அமையும்.

Sunday, March 24, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்

 





(சட்டச் சொற்கள் விளக்கம்  206-210 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  211-215

211.
absolute justice
முழுமை நீதி  

முழுமையான நீதி என்பதை ஒரு கோட்பாடாகக் கருதுகின்றனர். குறிப்பாகக் கடற்படையினர், கடல்சார் சோட்பாட்டின் மையக் கொள்கையாகக் கருதுகின்றனர்.  

முழுமை நீதி ஆதரவாளர்கள் அனைத்துத் தீய, சட்டஎதிர் செயல்களை ஒழிப்பதையும் அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர்கள் மீது வழக்கு தொடுப்பதையும் மிக உயர்ந்த முன்னுரிமையாகக் கருதுகிறார்கள்.  

“எந்த இடர்ப்பாடு குறைபாடு அல்லது ஊறுபாடுகளினால் ஏற்படும் தீங்கிலிருந்து காப்பாற்றும் முழுமை நீதி என்று எதுவும் இல்லை. முழுமையான அல்லது சரியான நீதியின் ஒரு வடிவம் இருக்க முடியாது என்பதால், முழுமையான நீதி இல்லை. மாறாக ஒவ்வொரு தனி சமூகத்திற்கும் நீதி என்பது பார்ப்பவர் கண்ணில் படும் அழகு போன்றது. “ எனப் பலர் கருதுகின்றனர்.
212.
absolute law
முழுமைச் சட்டம்  

முழுமைச் சட்டம் என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானதாக உலகளாவிக் கருதப்படும் அறநெறிகளிலிருந்து உருவான மனித நடத்தைக்கான ஒரு குறியீடாகும்.
213. absolute liability    முழுப்‌ பொறுப்பு  

முழுப்‌ பொறுப்புக்‌ கடன்‌; கடும்‌ பொறுப்புக்‌ கடன்‌, கடப்பாடு  

ஒருவர், குறித்த நடத்தையில் அல்லது செயலில் பங்கு பெற்றால் அதற்குரிய முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியவராகிறார். இதற்கு உள்நோக்கத்திற்கான அல்லது கவன ஈனத்துக்கான ஆதாரம் எதுவும் தேவைப்படுவதில்லை. எந்தவித எதிர்வாதத்தையும் இதற்கெதிராக முன் வைக்க முடியாது.
214. absolute majorityஅறுதிப் பெரும்பான்மை  

தனிப்பெரும்பான்மை

முழுப் பெரும்பான்மை  

கழகம், சங்கம், கட்சி போன்ற அமைப்பு அல்லது நாடாளுமன்றம், சட்டமன்றம் முதலான மக்கள் மன்றங்களில் தகுதியான உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்ட ஆதரவு இருப்பது பெரும்பான்மை. மூன்றில் இரு பங்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆதரவு இருப்பது அறுதிப்  பெரும்பான்மை.   நாடாளுமன்றத்தில் அல்லது சட்டப்பேரவையில் ஒரே கட்சிக்குக் கிடைக்கும் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத  ஆதரவு உள்ளது தனிப்பெரும்பான்மை.
215.absolute minimumமிகக் குறுமம்  

மிகக் குறைந்த மதிப்பு

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, December 31, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்




(சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95

91. Abetment of suicide of childகுழந்தைத் தற்கொலைக்கு உடந்தை  

குழந்தை அல்லது இளவர் தற்கொலை புரிந்துகொண்டால் அதற்கு உதவிய அல்லது உடந்தையாக இருந்து அல்லது தூண்டுதலாக இருந்தவர் தண்டிக்கப்படுவார்.  

18 அகவைக்குட்பட்ட / மனநலங் குன்றிய/பிற ழ் மனம் உடைய/மடமை மிகுந்த/போதையில் உள்ள/ எவரேனும் தற்கொலை புரிந்து கொண்டால், இதற்கு உடந்தையாக இருப்பவர் மரணத் தண்டனை அல்லது வாணாள் தண்டனை அல்லது பத்தாண்டுத் தண்டனையும் ஒறுப்புத்தொகையும் விதிப்பதற்குரியவர். (இ.த.ச.305/IPC 305)
92. Abetment of suicide  தற்கொலைக்கு உடந்தை  

ஒருவர் தன்னுயிரைப் போக்குவதற்கு உதவும் வகையில் அவருக்கு உயிர்போக்கும் நஞ்சு, தூக்குக்கயிறு உயிர்போக்குவதற்குரிய வேறு பொருள் முதலியவற்றை வாங்கித் தருதல் அல்லது வாங்குவதற்கான வழிமுறை கூறுதல் அல்லது உயிர்போக்கும் செயலுக்குத் துணையாக இருத்தல். ‌அத்தகையவர் உடந்தைக் குற்றவாளி அல்லது குற்ற உடந்தையர் எனப்படுவா
ர்.
93. Abettingதூண்டுதல்

குற்றம் புரியத் தூண்டுதல்   போதைப்பொருட்களை விற்பதற்கு அல்லது உட்கொள்வதற்குத் தூண்டுதல்   போதைப் பொருட்கள் – மனநோய் சார்ந்த பொருட்களில் சட்ட முரண் போக்குவரத்தைத் தடுக்கும் சட்டம், 1988 பிரிவு 2
94. Abetting of waging warபோர் நடத்த உடந்தை  

(இந்திய அரசிற்கு எதிராகப்) போரை நடத்துபவர், அல்லது அத்தகைய போரை நடத்த முயல்பவர் அல்லது அத்தகைய போர் நிகழ உடந்தையாக இருப்பவர், மரணத்தண்டனை அல்லது வாணாள் தண்டனையுடன்  ஒறுப்புத் தொகை விதிப்பதற்குஉரியவர்.   (இ.த.ச.பிரிவு 121)
95. Abettor



 
உடந்தைக் குற்றவாளி,
குற்ற உடந்தையர் குற்றவுடந்தையர்
  உடந்தையாளர்

தற்கொலைக்கு உடந்தை   குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர் ஒருவர் குற்றச்செயல் புரிவதற்குச் செயல் வகையிலோ பொருள்வகையிலோ அறிவுரை வகையிலோ உதவுநராகவோ தூண்டுநராகவோத்  துணைநிற்பவர்.  

தூண்டுதல்
(ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 3. 1. ஆ.. /S. 3(1)(b) PCA, 1988)

குற்ற உடந்தை
(கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம், 1976/S. 20 BLS(A)A, 1976)

உடந்தையாயிருத்தல் (போதை மருந்துகள் உளப்பாதிப்புப் பொருள்கள் தடுப்புச்சட்டம், 1985 பிரிவு 29 / S. 29 NDPSA,1985)

தற்கொலைக்கு உடந்தையாக இருத்தல்‌ (உடன்கட்டைத் தடுப்புச்சட்டம் 1987, பிரிவு  4 / S. 4 COS(P)A,1987) 

தூண்டுதல் (போதை மருந்துகள் உளப்பாதிப்புப் பொருள்கள் போக்குவரத்துத் தடுப்புச்சட்டம், 1988, பிரிவு 2./S. 2 PIT NDPS, 1988)
 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive