Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Saturday, October 26, 2019

திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி ! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி !
அறிவுக்குப் பொருந்தாக் கதையாக இருப்பினும் தீபாவளியைக் கொண்டாடுவோர் இருக்கின்றனர். அதே நேரம், தீபாவளியை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவோரும் தீபாவளியைக் கொண்டாடாதவர்களும் உள்ளனர். விசய நகரப் பேரரசான இந்துப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல்தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு பண்டிகைதான் தீபாவளி. நேரடியாகப் புகாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்துள்ளது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளது.
முதலில் நாம் தீபாவளிபற்றிய கதைகளைப் பார்ப்போம். நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் தீபாவளி என்பது ஒரு கதை. இவனது உண்மைப் பெயர் பவுமன். திருமால் பன்றித் தோற்றம் எடுத்துப் பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றாராம். அப்பொழுது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன்தான் நரகாசுரனாம். அசுரர்களை வதம் செய்தபொழுது பிறந்ததால் அசுரர்களின் குணம் வந்து விட்டதாம். எனவே, நரன்(மனிதன்)+அசுரன் நரகாசுரன் எனப்பட்டானாம். அசுரர்களை வதம் செய்த பொழுது பிறந்தவனுக்கு வதம் செய்த திருமாலின் குணம்தானே வந்து இருக்க வேண்டும்? இவன் தாயைத்தவிர வேறு யாராலும் கொல்லப்படமுடியாத வரம் பெற்றிருந்தானாம். ஆகவே, சத்தியபாமாவாக இருந்த பூமாதேவியால் கொல்லப்பட்டானாம்.
வால்மீகி இராமாயணத்தில் இராமன்  தனது வனவாசத்தை முடித்துச் சீதையுடனும் இலட்சுமணனுடனும் அயோத்திக்குத் திரும்பினான். அந்த நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றார்கள். இதுவே தீபாவளி என்பது ஒரு கதை.
கேதாரம் என்றால் பாலி மொழியில் விளைநிலம் எனப் பொருள். இமயலமலையில் இருந்த ஒரு விளைநிலம் சிவனின் தலமாகக் கருதப்பட்டதால் கேதாரம் என்றால் சிவதலம்/ சிவன் என்றானது. ஒரு நாட்டிய முடிவில் பிருங்கி முனிவர் பார்வதியை விட்டுவிட்டுச் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இதனால் பார்வதி 21 நாள் நோன்பு இருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் சிவன் பார்வதியை – கெளரியை –த் தன்னில் பாதியாக ஏற்று மங்கையொரு பாகன் ஆக மாறினார். இந்த நாள் இறைவனை வழிபடும் சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. நோன்பு இருந்து கேதார கெளரியாக (சிவன் பார்வதி இணைவாக) மாறிய இந்நாளே தீபாவளி என்பது மற்றுமொரு கதை.
சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்து எழுதப்பெற்ற பிற்காலத்தில் இறைவனும் இறைவியும் கலந்த உருவமாகக் கடவுளை உருவகப்படுத்தினர். இதை ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்து(அடி 1),
 “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்கிறது.
“பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்”
என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து (அடி 7-8) கூறுகிறது. இவற்றுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கதையே இக்கதை.
கிருட்டிணன், நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி  கொண்டாடப்படுவதாக ஒரு கதை. ஆரியக்கதைகளின்படி முறையற்ற முறையில் கொன்றவன் அருளால் கொல்லப்பட்டவன் இறந்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும்!  
புரட்டாசி மாதம்  எம உலகிலிருந்த வந்திருந்த முன்னோர் நினைவாக அவர்களுக்குப் படையிட்ட பின், ஐப்பசியில் அவர்கள் மீளவும் எம உலகம் செல்வர். அப்பொழுது, அப்பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டுமாம். வந்த பொழுது இருட்டிலேயே வந்தவர்களுக்குப் போகும்பொழுது வெளிச்சம் தேவைப்படுகிறது போலும். எனவே, வீட்டு வெளி வாசலில் தென்திசை நோக்கி முன்னோர் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கு என்ற முறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். இதுவே தீபாவளி என்பதும் ஒரு கதை.  
                பிராமணிய மதத்தின் எதிரியாகச் சமண மதம் உள்ளது. இம்மதத்தின் 24ஆவது அருகன் (தீர்த்தங்கரர்)வருத்தமான மகாவீரர் வீடு பேறடைந்த நாளில் வரிசையாக விளக்குகளை ஏற்றிக் கொண்டாடுகின்றனர். இதுவே தீபாவளி எனப்படுகிறது.
ஐப்பசி மாதம் தேய்பிறை 14ஆம் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் நரக சதுர்த்தசி என்கின்றனர். அஃதாவது காருவாவாகிய அமாவாசை அன்று கொண்டாடாமல் அதற்கு முதல்நாளே இக்கதையின்படித் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
நீத்தார் நினைவுநாள் இறுதிச்சடங்கில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தமிழர்களின் வழக்கம். தீபாவளியன்று தமிழ்நாட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இதனைப் பின்பற்றுகின்றனர். ஆனால், வடநாட்டில் இந்தப் பழக்கம் இல்லை. எனவே, முன்னோர்களுக்காகக் கடைப்பிடிக்கப்படும் நீத்தார் நினைவு நாள்தான் தீபாவளியாக மாற்றப்பட்டதோ என்ற ஐயமும் உள்ளது.
தீர்க்கதமசு என்னும் முனிவருக்கு, உடலை வருத்திக் கொண்டு துன்புற்று நோன்பு, தவம் இருந்துதான்  நல்வழியை அடைய வேண்டுமா என்ற ஐயம் வந்தது. சனாதன முனிவர் என்பவரிடம் இது குறித்துக் கேட்டார். அவர் புத்தாடை உடுத்தி, இனிப்புப்பண்டங்கள் சாப்பிட்டு ஏழை எளியோருக்கும் அவற்றைக் கொடுத்து, ஒளி எங்கும் பரவ விளக்குகள் ஏற்றி மனம் மகிழ்ந்து கொண்டாடியும் துன்பங்களிலிருந்து விடுபடலாம் என அறிவுறுத்தினாராம். அவர் கூறியதன்படி ஐப்பசியில் எமனை வழிபட்டு விளக்கேற்றிக் கொண்டாடப்படுவதே தீபாவளி என்றும் ஒரு கதை வழங்குகிறது.
1577-இல்  பொற்கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கியதையே  தீபாவளியாகக் கொண்டாடுவதாகச் சீக்கியர்கள் கூறுகின்றனர். சிலர் ஐப்பசிக் குளிருக்கு வெப்பம் தேவைப்பட்டதால் விளக்கேற்றியதாகக் கூறுவர். ஐப்பசி அடைமழைக்காலம் எனவே, இது பொருந்தாது. கார்த்திகை அல்லது மார்கழிக்குச் சொன்னால் பொருந்தி வரலாம்.
கி.பி.1117இல் சாளுக்கிய திரும்புவன மன்னன், சாத்துயாயர் என்னும் அறிஞருக்கு ஆண்டுதோறும் தீபாவளிப்பரிசு வழங்கியதாகக் கன்னடக் கல்வெட்டு ஒன்றுகூறுகிறது. கி.பி.1250இல் மராத்தியில் எழுதப்பெற்ற நூல் (இ)லீலாவதி. இதில்எண்ணெய் தேய்த்து நீராடுது பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.
தமிழர் திருநாள் நான்கு நாள் கொண்டாடப்படுவது. இதற்குப் போட்டியாக ஐந்து நாள் விழாவாகத் தீபாவளி உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.
வடநாட்டு ஆண்டுத் தொடக்கம் சைத்திர/சித்திரை மாதம் மார்ச்சு 21 அல்லது 22 வருகிறது. எனவே, அம்முறைப்படி கார்த்திகை மாதம் அட்டோபர் 23இல் தொடங்குகிறது. நமக்கு ஏப்பிரலில் சித்திரை தொடங்குவதால் அப்பொழுது ஐப்பசிதான். எனவே, வடவர்கள் வடநாட்டில் அவர்கள் கார்த்திகைப்படி கார்த்திகை நாளைக் கொண்டாடினர். நமது விழாதான் அது என்பதை உணராத நாம்  அயலவர்கள் விழா, பழக்கவழக்கம் போன்றவற்றில் பிடிப்பு உள்ள நாம், அக்கார்த்திகையைத் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
அயோத்திதாசப் பண்டிதர் பெளத்தர்கள் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளிலே தீபமேற்றி, ஈகை அளித்து இறைவழிபாடு செய்தனர் என்று ஒரு கதையின் அடிப்படையில் குறிப்பிடுகிறார்.
தமிழில் உள்ள விளக்கு வரிசையே மறு பெயரில் தீபம் ஆவளியாக – வரிசையாக-க் கூறப்பட்டுத் தீபாவளி என்றானது. எனவே, தீபாவளி என்பது கார்த்திகை விளக்கு வரிசைதான்.
கார்த்திகை விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறித்த ஒரு பாடலைப் பார்ப்போம்.
நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.
என்கிறார் புலவர் கண்ணங் கூத்தனார்(கார்நாற்பது, 26); இப்பாடலில் கார்த்திகையில் விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறிப்பிட்டு, அதுபோல் எங்கும் பூக்கள் வரிசையாகப் பூத்துள்ளன என்கிறார்.
கார்த்திகை ஒளிநாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தொன்மையான விழாவாகும். கார்த்திகை குறித்துத் தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியமான மலைபடுகடாம் தெரிவிக்கிறது. நற்றிணை, சீவகசிந்தாமணி, முதலான இலக்கியங்களும் கார்த்திகைபற்றிக் கூறுகின்றன. எனவேதான், ‘தொல் கார்த்திகை நாள்’ என்கிறார் திருஞானசம்பந்தர்.
 இலக்கியங்கள் கூறுவனவற்றில் இருந்து பருவநிலை மாற்றத்திற்கேற்பக் கொண்டாடிய இயற்கை விழாவாகத்தான் கார்த்திகை நாளைக் கொண்டாடினார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், பின்னர் இதற்கும் கதை கட்டிவிட்டார்கள். சிவனின் அடியையும் முடியையும் தேடித் தோற்ற நான்முகனும் திருமாலும் வேண்டியதற்கிணங்க  சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றியதாகக் கூறிக் கதை பரப்பிவிட்டனர். சிவன் ‘திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி ஆகிய மூவரைக் கொன்ற நாள்தான் கார்த்திகை என்றும் கதை கட்டினர்.
தமிழ் நூல்கள்போல்  கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக்கூறுகின்றன.  சான்றாக, முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சியில், கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்குப் பதினாறு நாழி நெய்க்காகப் பதினாறு ஆடுகளைத் திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர். இதனை அம்மன்னனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.1021) வெட்டப்பட்ட கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.
`குமரி முதல் இமயம் வரை முழுமையும் தமிழ்நிலமாக இருந்த பொழுது கார்த்திகையில் கொண்டாடப்பட்ட ஒளிவிழா பின்னர் வடக்கே இவ்வாறு தீபாவளியாயிற்று. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை / தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் வந்தது. வடக்கே வேறு வகை மாத முறையைப் பின்பற்றியதால் வடக்கே நடைமுறையில் உள்ள கார்த்திகை மாதத்தில் – நமது ஐப்பசியில் – இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது தெற்கே புதிய மற்றொரு விழாவாக மாறி ஏற்கப்பட்டுள்ளது.
தீபாவளி மீதூதியத்தைப்(Bonus) பொங்கலில் வழங்குவது போன்றவற்றின் மூலம் செலவிற்கான வழியை அடைத்தால் நாளடைவில் தீபாவளிச் செலவுகள் குறையும். நமது கார்த்திகைதான் தீபாவளியாக மாறித் திரும்பி வந்துள்ளது என்பதை உணரச்செய்து இரட்டை விழாவினைக் கொண்டாடுவதைத் தவிர்க்கச் செய்யலாம்.
கார்த்திகை நம் விழா! தீபாவளி இரவல் விழா!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 27.10.2019

Tuesday, October 17, 2017

அறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்!

  மரபார்ந்த விழாக்களுக்கும் அறிவுக்குப் பொருந்தாதக் கதைகளைப் பரப்புவது ஆரியத்தின் வேலை. அறிவுக்கு வேலை கொடுக்காமல் அவற்றை நம்புவது தமிழர்களின் மூடநம்பிக்கை.  பிற இனத்தார், இயற்கைக் கோள்களுக்கும் மூடநம்பிக்கைகக் கதைகளை உருவாக்கிய காலத்தில், அறிவியல் கண்ணோட்டத்தில் உண்மையைக் கண்டறிந்த தமிழர்கள் அறியாமைக்கு அடிமையானது இரங்கத்தக்கதே! ஆனால், இன்றும் அறியாமை இருளில் மூழ்கிக்கிடப்பது அத்தகையோர் இருந்தென்ன, இறந்தனெ்ன என எண்ணத் தோன்றுகிறது.
  தமிழ்நாட்டில் கார்த்திகை  ஒளிவிழாவாகக் கொண்டாடப்பட்ட நாள்,  வடக்கிலிருந்து தீபவரிசை விழாவாக,  தீபாவளியாக மாறி இங்கே புகுந்தது.  விழாவில் விருப்பம் கொண்ட நம்மவர்கள் அதனையும் பிடித்துக் கொண்டனர். ஆனால், மூடநம்பிக்கையில் ஊறித் திளைப்பதுதான் வேதனையாக உள்ளது.
  மகாவீரர்  வருத்தமானன் விடுநிலை(நிர்வாணம்) அடைந்த நாளே தீபாவளி நாள் எனச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.  இது மெய்யோ பொய்யோ, ஆனால் இதனால் எத் தீமையும் இல்லை.
  கி.பி. 12 ஆம் நூற்றாண்டில்தான் தீபாவளி கொண்டாடும் பழக்கம்வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.   ஆனால் முன்னதான சமண நூலில்  விளக்கு வரிசை ஏற்றுவது பற்றிய குறிப்புகள் உள்ளன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கி.பி.1250 இல் எழுதப்பட்ட (இ)லீலாவதி என்னும் மராத்தி நூலில்  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இடம் பெற்றுள்ளது.
  சீக்கியர்கள், 1577-இல் பொற்கோயில் கட்டுமானப் பணிகள்  தொடங்கிய நாளைத் தீபாவளி என்கின்றனர்.  அதற்கு முன்பே இவ்விழா இருந்துள்ளதால்,   இச்சமய நம்பிக்கையால் எத்தீங்கும் இல்லை.
 ஆரியக் கதைகள் பலவாறாக உள்ளன. இராமன் 14 ஆண்டு வனவாசம் முடிந்த பின்னர், அயோத்தி திரும்பிய நாளில் மக்கள்  விளக்குகள் ஏற்றி வரவேற்றுள்ளனர். இந்நாள்  தீபாவளி என்பது  ஒரு கதை. இதனால்கூடத் தீமையில்லை.
 கிருட்டிணன்  தன் மனைவியருள் ஒருத்தியான நிலமகளுக்குப் பிறந்த அசுரனை ‘வராக’(பன்றி)ப்பிறப்பு  எடுத்து நிலமகள் மூலம் அழித்த நாள்தான் தீபாவளி என்பதுதான் அறிவுக்குப் பொருந்தாக் கதை.
 நிலத்திற்கும் கிருட்டிணனுக்கும் பிறந்ததாகக் கூறுவது எவ்வளவு பெரிய மூடத்தனம்! கிருட்டிணன் நாரதருடன் உறவு கொண்டு 60 குழந்தைகள் பிறக்கும் பொழுது, நிலமகளுடன் உறவு கொண்டு ஓர் அசுரன் பிறப்பதில் என்ன வியப்பு என்கிறீர்களா?
  நரகாசுரன்பற்றிய  கதை ஆரியர்களின் அறிவின்மையை நன்கு வெளிப்படுத்துகிறது.
 சமயத்திற்கேற்ப -மதங்களுக்கேற்ற- கதைகள் இருக்கும் பொழுது சிவனிய நெறியினரும் ஒரு கதை சொல்லாமல் இருப்பார்களா? சிவன் மாதொரு பாகனாக – அருத்தநாரீசுவரராக உருவெடுத்த நாள்தான் தீபாவளியாம்.
  உடல் சூட்டைத்தணிக்கும்   போன்ற நல்ல காரணங்களைக் கூறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குச் சொல்லப்படும் கதையும் மிகவும் மட்டமானது. பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றியவள் இலக்குமியாம். அவள் கடலில்  ஆமையாக மறைந்து இருந்த திருமாலை மணம் முடிக்க எண்ணினாராம். ஆனால், அசுரர்கள் இலக்குமியை மணம் முடிக்க விரும்பி அவளைத் துரத்தினராம். அவள் உடனே எள் தோட்டத்தில் மறைந்தாளாம். அப்படி ஓடியதால் எள் செடிகளில் இருந்து வெளிப்பட்ட எண்ணெயுடன் அவள் கலந்து விட்டாளாம். (இதனால் அசுரர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.) நாம் எணெ்ணெய் தேய்த்துக் குளித்தால் இலக்குமி நம்முடன் ஐக்கியமாகிவிடுவாளாம். இப்படி அடுக்கடுக்காக இழிவுகளைச்சுமக்கும் கதைகளைத்தான் பரப்பி வருகின்றனர்.
  மீண்டும் இந்த அவலங்களை நாம்   அரங்கேற்ற வேண்டா என்பதால் செய்திக்கு வருவோம்.
 தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் மூட நம்பிக்கைக் கதைகள் அடிப்படையிலா கொண்டாடுகிறார்கள் எனச் சிலர் கேட்கின்றனர்.  இவற்றை எழுதுபவர்கள், வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், நம்பிக்கையில்லாமலா செய்கின்றனர்?  மக்கள் இக்கதைகளை நம்பவில்லை என்றால் இவற்றை அச்சில் இருந்தும்  இணையத்தளங்களில் இருந்தும் நீக்கலாமே! இக்கதைகளைப் பரப்புவோருக்குச் சாவுத்தண்டனை கொடுக்கலாமே! இக்கதைகள் மூலம் ஏதோ ஒருவகையில்  மக்களை அடிமைத்தனத்தில் மூழ்க  வைத்திருக்கும் கும்பல் ஒழிவதற்கு இதுதான் வழி.
 “தீபாவளியைக் கொண்டாட வேண்டா எனக் கூறுவதைவிட,  அதுதொடர்பான  மூடநம்பிக்கை கதைகளைப் பரப்புவதைத் தடை செய்ய வேண்டும்.  எளிமையாகவும் சிக்கனமாகவும் கொண்டாடுமாறு மக்களுக்கு அளிவுறுத்த வேண்டும்.” என்பார் பேரா.முனைவர் சி.இலக்குவனார். இறை நம்பிக்கையும் இறை மறுப்பு நம்பிக்கையும் அவரவரைப் பொறுத்தது. ஆனால், அவை  பகுத்தறிவிற்கு முரணாக இருக்கக் கூடாது.  இந்நாளில் ஏற்றப்படும் ஒளி அறியாமை இருளைப் போக்கும் பகுத்தறிவு ஒளியின் குறியீடாக இருக்க வேண்டும்.
  மூட நம்பிக்கை எவ்வடிவில் வந்தாலும் அதை விரட்டியடிக்கும் அறிவுடைமையுடன் வாழ வேண்டும்.
   எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 423)
 அறியாமை இருளைப்போக்கிப் பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 208,  புரட்டாசி 29 –ஐப்பசி 04,   2048 /  அட்டோபர் 15 – 21,  2017

Saturday, November 2, 2013

தீபாவளி தரும் மகிழ்ச்சி!



தீபாவளி தரும் மகிழ்ச்சி!

   தலைப்பைப் பார்த்ததும் தீபாவளியன்று உடுத்தும் புத்தாடையாலோ, உண்ணும் தின்பண்டங்களாலோ, வெடிவகைகளாலோ ஏற்படும் மகிழ்ச்சியோ என எண்ண வேண்டா! ஏனெனில் நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. கொண்டாடாமலே மகிழ்ச்சியா என்றால், ஆம்! தீபாவளி மூலம் வெளிவரும் பிள்ளைகளின், சொல்திறம்பாமையைப் பேணும் பண்பு,  கட்டுப்பாடு முதலியன தரும்  மகிழ்ச்சிதான். நம் மக்கள் மழலையராக இருந்தால்தான் மகிழ்ச்சி என்றில்லை. எவ்வளவுதான் வளர்ந்தாலும் நமக்கு அவர்கள் மக்கள்தாமே! ஆகவே, அவர்களின் செயல்கள் மகிழச்சி அளிப்பதில் வியப்பில்லை. நம் மக்களால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி பல வழிகளில் இருக்கும். இங்கே தீபாவளியுடன் தொடர்புடைய நிகழ்வால் ஏற்படும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

  அறிவியலுக்குப் பொருந்தா வகையிலும் நம்மை இழிவுபடுத்தும் வகையிலும் கதைகள் கூறப்படுவதால் தீபாவளி கொண்டாடுவதில்லை. ஆனால், அக்கம் பக்கத்தினர் வெடித்தும் கொளுத்தியும் மகிழும் பொழுது பிஞ்சு உள்ளங்கள் வாடிப்போகக்கூடாதே என வெடி, மத்தாப்பு வகைகள் வாங்கித் தரும் வழக்கம் இருந்தது. இவ்வாறு, புத்தாடையும் தின்பண்டங்களும் அற்ற தீபாவளியாக இருந்ததும் நன் மக்களின் நல்லுணர்வால் நின்றது. 

  எங்கள் மகள் தி.ஈழமலர் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, தீபாவளிக்கு முந்தைய ஒரு வாரத்தில் - நெடுநேரம் கழித்து அலுவலகத்திலிருந்து வரும் வழக்கத்திற்கு மாறாகச் - சற்று முன்னதாக மாலை 6.30 மணிக்கே  புறப்பட்டு வீட்டிற்கு வந்தேன். முன்னதாக வருவதால் சற்று நடந்து செல்லலாம் என எண்ணி நடந்தே வீட்டிற்கு வந்தேன். வரும் வழியில் அடுத்தடுத்து  வெடிக்கடைகள் இருப்பதைப் பார்த்துக் கொண்டு வந்தேன். மந்தைவெளியில் புதிய வெடிவகைகள், சற்றுக் குறைவான விலையில் இருப்பதைக் கண்ணுற்றேன். பிறகு வாங்க நேரம் கிடைக்காது என எண்ணியவாறு,  பிள்ளைகளை அழைத்துச் சென்றும் விருப்பத்தை அறிந்தும் வாங்காமல் வெடிவகைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றேன். பிள்ளைகளின் மகிழ்ச்சியை எதிர்நோக்கிய எனக்கு முதலில் ஏமாற்றம் வந்தது. 

மகள் தி.ஈழமலர், “அப்பா நான் வெடி வெடிக்க மாட்டேன்” என்றாள்.
“அஞ்சாது வெடி. நானும் அம்மாவும் பக்கத்தில் இருக்கிறோம். அல்லது வண்ண மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, பூவாணம், முதலான  பிற வகைகளைக் கொளுத்து” என்றேன்.
 “எந்த  வெடி வகையும் இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதும் எனக்கு  வேண்டா” என்றாள்.
 “சரி, காரணத்தையாவது சொல்” என்றேன்.
“சொல்லிய வண்ணம் செய்ய வேண்டும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.” - மகள்
“ஆம். அதற்கு என்ன?” - நான்
“குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகப் பேச்சுப் போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்று முதல் பரிசுகள்  வாங்கி வந்தேன் அல்லவா” - மகள்
“ஆமாம். அதற்கென்ன?” - நானும் மனைவி அன்புச்செல்வியும்
“சிறுவர் சிறுமிகளின் கல்வி உரிமையைப் பறித்து உழைக்கச் செய்து உற்பத்தி செய்யும் வெடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனப் பேசிக் கை  தட்டுகளும் வாங்கினேன்   அல்லவா?” - மீண்டும் மகள்.
“நீ சொல்வதெல்லாம் உண்மைதான். அதனால் என்ன சொல்ல வருகிறாய் ?” - நாங்கள்
“நானே நான் சொன்னதற்கு மாறாக நடக்கலாமா? அதனால்தான் வெடிகள் வேண்டா என்கிறேன்.” -மகள்.
“நீ  சொல்வது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால்,  இந்த முறை வாங்கி விட்டேனே! அடுத்த ஆண்டு முதல் இதை நிறுத்திக் கொள்ளலாம்” - நான்தான்.
“இப்பொழுது சொன்னால், பிறகு செய்து  கொள்ளலாம் என நீங்கள் சொல்லவில்லையே!” - மகள்.

இதுவரை தமக்கை கூறியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மகன் தி.ஈழக்கதிர்,  “அப்பா, அக்காவிற்கு வேண்டா என்றால் எனக்கும் வேண்டா” என்றான்.
“அக்கா, தான் தெரிவித்ததற்கு மாறாக நடக்கக்கூடாது என்கிறது. உனக்கு என்ன?” என்றேன்.
“நான் சொல்லாவிட்டால் என்ன? அக்காவிற்குச் சரி என்றால் அதுதானே எனக்கும் சரி. எனவே, எந்த வெடியும் வேண்டா!” - மகன்
“சரி! போகட்டும்!  நம் பகுதியில் யாரும் இப்பொழுதே வெடி வாங்கியதாகத் தெரியவில்லை.  அவர்களுடன் சேர்ந்து வெடிக்கும் வகையில் எல்லார்க்கும் பிரித்துக் கொடுத்து, இந்த முறை நீயும் வெடி” என்றேன்.

அரைகுறை மனத்துடன் சரி என்றவன் பிற சிறாருக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டுத்தானும் ஒப்புக்குச் சில வெடி வெடித்தான்.

பிள்ளைகளிடம் நேரடியாக எதுபற்றியும் அறிவுரை கூறுவதில்லை. பிறரிடமும் மேடையிலும் பேசுவதையும் எழுதுவதையும் வைத்துக் கொண்டு அவர்களாக வளர்த்துக்  கொண்டதுதான் தமிழ் உணர்வு, பகுத்தறிவு முதலான எல்லாமும். ஆனால், ஒன்றும் கூறாவிட்டாலும் வேறு பார்வையில் அவர்கள் தீபாவளியை நிறுத்தியதும் அதற்குச் சொன்ன காரணமும் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடியன. சொன்னவண்ணம் நடக்க வேண்டும் என்ற மன உறுதி சிறு அகவையில் இயல்பாக அமைந்திருந்தது உண்மையிலேயே உவகை அளிக்கக்கூடியதுதானே!
ஆரியப்புரட்டும் காசைக் கரியாக்கக்கூடாது என்ற நிலைப்பாடும் ஊட்டப்பட்டாலும் பத்தாம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் எனக்கு மண்டையில் உறைத்தது. நாம் சொல்லாமலே வேறு வகையில் பிள்ளைகள் நல்ல முடிவிற்குவந்தது,
“தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம், இனிது”
எனும் வள்ளுவத்தை உணர்த்தியது(திருக்குறள்: 68).

பிறர் வெடிப்பதைப்பார்த்து ஏக்கம் வருமோ என எண்ணிச் சில தீபாவளிகளின் பொழுது “வெடி வாங்கித் தரட்டுமா” என்று கேட்டால் வழக்கம்போல் மறுப்புதான் கிடைக்கும். “குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்டது என்ற சான்றிதழுடன் வந்துள்ள வெடி வகைகள் உள்ளன. வாங்கித் தரட்டா” என்றால் அதற்கும் மறுப்புதான்.

 இன்று மகள் தி. ஈழமலர் பாலாசி, முது பொறியியல் முடித்துவிட்டுக் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியர்.

 மகன் தி.ஈழக்கதிர் பொறியியல் முடித்து விட்டு இன்ஃபோசிசு நிறுவனத்தில் பொறியாளர்.

இருப்பினும் தங்கள் கொள்கையில் விடாப்பிடியுடன் இயல்பாகவே உள்ளனர்.

"தம் பொருள் என்ப தம் மக்கள்" எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுவதுபோல்,

       நம் மக்கள்தாமே நமக்குச் செல்வம்!


"பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை-அறிவு அறிந்த
மக்கட் பேறு அல்ல பிற" (திருக்குறள்: 61)
எனச் சரியாகத்தானே தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

நீங்களே சொல்லுங்கள்!  பிள்ளைகள் தீபாவளியைக் கொண்டாடுவதைப் பார்த்தால்தான் மகிழ்ச்சி வரவேண்டுமா? பொறுப்புணர்வுடனும் சொன்னதைச் செய்ய  வேண்டும் என்ற கடப்பாட்டுணர்வுடனும் கொண்டாடாமல் இருப்பதும் மகிழ்ச்சிதானே!
பிள்ளைகளின்  நற்செயல்கள் அவ்வப்பொழுது மகிழ்ச்சி தந்தாலும் தீபாவளியின் பொழுது அவர்களின்  பொறுப்புணர்வால் பெறும்  மகிழ்ச்சி தனிதான்.!

-  இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive