Showing posts with label நூலாய்வு. Show all posts
Showing posts with label நூலாய்வு. Show all posts

Saturday, May 23, 2026

குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் – நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்

      24 May 2026      



சொல்லாய்வுச் செம்மல் வை.மு.கும்பலிங்கன், குகன் எனச் சுருக்கப் பெயரையும் இறைவன் என்ற புனைபெயரையும் உடையவர். 13 ஆண்டுகள் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிக் கல்விப்பணி யாற்றியவர். தமிழ்நெறிக் காவலர், சேவைச் செம்மல், கண்ணியச் செம்மல், சொல்லாய்வுச் செம்மல், கொள்கைவேள், புலவர்மாமணி, கவிமாமணி, எழுத்துச் சிற்பி, பகுத்தறிவுப் பைந்தமிழ்ச் சுடர், செஞ்சொற் செல்வர, இலக்கணக் குரிசில் முதலிய பட்டங்கள் இவரின் பணிச்சிறப்பிற்காக வழங்கப்பட்டவை.

இறையன்பராக இருந்து நூறாயிரம் ‘சிவாயநம’ எழுதியவர் பெரியாரின் பாதையில் திரும்பிச் சென்றார். பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்டதுடன் ‘பெரியார் வாழ்க(தமிழ் வாழ்க, இந்தி ஒழிக)’ என்று தம் குறிப்பேட்டில் எழுதினார்.

இவரின் முதல் கவிதையே “பெரியார் வாழ்க” என்பதுதான். இஃது அப்போது தி.மு.க. தீவிர ஏடாக இருந்த நாத்திகம் இதழில் வந்தது. திராவிட இயக்க இதழான விடுதலை, பகுத்தறிவு, தமிழரசு, பெரியாரியம், மாணவமணி, தமிழ் சூரன், வெற்றி முரசு, முதலியவற்றிலும் எழுதி வந்தார். மேலும், தமிழிய-திராவிடப் பொதுநிலை இதழ்களான தமிழ் இலெமூரியா, அன்புப்பாலம், எழுகதிர், மீண்டும் கவிக்கொண்டல், கண்ணியம், கனிமொழி, குயில், ஏழைதாசன், தாழம்பூ, சமுதாயமுரசு, கிறித்துவர் குரல், மாந்தன், வாழ்வியல் முன்னேற்றம், ஆத்திமாலை, கதம்பம், தினமணி முதலியவற்றிலும் தொடர்ந்து எழுதியுள்ளார். இலங்கை இதழ்களான வீரகேசரி, சுதந்திரன், தீப்பொறி ஆகியவற்றிலும் இவரின் எழுத்தோவியங்கள் வந்துள்ளன. இப்போதும் இதழ்களில் எழுதி வருகிறார்.

இந்நூலுக்கான அணிந்துரையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“ஆசிரியர் தோழர் வை.மு.கும்பலிங்கன் அவர்கள், பகுத்தறிவாளர், விடுதலை உட்பட பல ஏடுகளிலும் கட்டுரைகள் எழுதி வரக்கூடியவர். அவரிடம் மொழி ஆய்வும் மொய்த்துள்ளது என்பதை இந்த நூலின் வழி அறிய முடிகிறது. … தோழர் வை.மு.கும்பலிங்கனின் இந்த நூல் முதலாவதாக ஏடுகள் இதழ்கள் நடத்துவதற்குப் பெரும் துணைவன் என்றே சொல்ல வேண்டும்.” என்கிறார்.

மதிப்புரையில் தமிழ்த்தேசியத் தலைவர் பழ.நெடுமாறன்,

“தமிழைப் பிழையில்லாமல் எப்படி எழுத வேண்டும் என்பதை நன்கு விளக்கும் இந்நூலை மாணவர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும் இதழாசிரியர்களும் படித்துப் புரிந்து கொண்டால், எழுத்தாக்கங்களும் இதழ்களும் பிழையற்ற தமிழில் வெளிவரும்.” என்கிறார்.

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அணிந்துரையில்,

“சொல்லின் மூலமான வேரின் வழி நின்றல்ல – சொல்லில் மறைந்துள்ள பொருளின் துணை கொண்டு தன் சொல்லாய்வினைக் கும்பலிங்கனார் நிகழ்த்துகிறார்….. இன்றமிழ்ச்சொல் காணல் மட்டுமின்றி – சொற்புணர்ச்சிப் பிழை களைதல், நேரிய சொற்பயன்பாடு கூறல் ஆகியனவும் இடம் பெற்றுள்ளமை இந்நூலின் சிறப்பாகும்.” என்கிறார்.

ச.மெ.மீனாட்சிசுந்தரம், பதிப்புரையில்,

“தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒரு புலவருக்கும் பேராசிரியருக்கும் மேம்பட்ட அளவில் சொல்லாய்வுச் செய்திகளைத் தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வருகிறார் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்; செயற்பாடும் ஆகும். நாம் நம் அன்றாடவாழ்வில் பல சொற்களைப் பேசியும் எழுதியும் பயன்படுத்தி வருகிறோம். நாம் அவற்றைப் பொருள் புரியாமலும் காரணம் தெரியாமலும் பேசி  வருகிறோம் என்பதுதான் பேருண்மை. எனினும் நூலாசிரியர் நாம் அன்றாடம் பேசிப் பயன்படுத்தி வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் காரண காரியத்தோடு தரும் விளக்கம் அருமையாகவும் எளிமையாகவும் இருக்கிறது.இதன் பொருள் அறிய அறிஞர் துணை தேவையில்லை. அவர் விளக்கும் பாங்கும் எழுதிச் சொல்லும்,எழுதிச் செல்லும் பாங்கும் மிக மிக எளிமையாக உள்ளது.” என்கிறார்.

மீண்டும் கவிக்கொண்டல், சமுதாய முரசு, விடுதலை-ஞாயிறு மலர், மூவேந்தர் முரசு, குயில், தாழம்பூ, வண்ணப்பூங்கா, ஆத்திமாலை, மார்த்தாண்டம் மாலை, எழுகதிர், கிறித்தவர் குரல், கனிமொழி, ஏழைதாசன், தமிழ் இலெமூரியா, தெய்வத்தமிழ்த்தேன், மாந்தன், வெற்றி முரசு முதலிய பல இதழ்களில் வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

Friday, May 22, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 5 : இலக்குவனார் திருவள்ளுவன்



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : தொடர்ச்சி)

21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்ட செய்தி குறித்து 17 ஆவது கட்டுரை தெரிவிக்கிறது.

21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்டது. அப்போதைய மாகாண ஆளுநர் சான் எருசுகின் பிரபு இதனை அறிவித்தார். இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் உள்ளூர்ச் சிக்கலில் மாட்டிக்காெள்ள வேண்டா என்ற எண்ணத்தில் இவ்வாணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் ஆசிரியர்.

அன்றே இது குறுஞ்செய்தியாக விடுதலை இதழில் வெளிவந்ததை எடுத்துரைத்துள்ளார். அத்துடன் மறுநாள் விடுதலையில் இது குறித்து வந்த செய்திக்கட்டுரையையும் அளித்துள்ளார். ஆச்சாரியார் அழைத்து வந்த ‘கட்டாய இந்தி கட்டி விட்டது மூட்டை’ என்னும் தலைப்பில் வந்திருந்தது. அதில், 

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

சத்தியாக்கிரக சூரர்கள் என்று சொல்லப்படும் காங்கிரசார் பலப்பல சத்தியாக்கிரகங்கள் செய்து தோல்விமேல் தோல்வியே கண்டனர்.

ஆனால், தமிழர் தொடுத்தபோராட்டம் வெற்றியைத் தந்தது.

ஏன்? தமிழரின் தனிச்சிறப்பு அதுதான்!தமிழர் எக்காரியத்திலும் துணிந்து இறங்கினால், கட்டுப்பாடாகக் கிளர்ச்சியை நடத்தினால், தலைவரின் ஆணையின்படி நடந்து தளராது உழைத்தால்,

வெற்றி கிடைப்பது நிச்சயம்! நிச்சயம்!

இவ்வாறு மேலும் வெற்றிப்பெருமிதமாக கட்டுரை அமைந்துள்ளது.

நாளிட்ட இதழில் வந்திருந்தது. அதனையும் வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையில் தீவிரக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கும் பொருளுதவி தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். போராட்டங்களைக் குறைத்தும் திரித்தும் மறைத்தும் வஞ்சக(விசம)த்தனமாகவும் நடந்து கொண்ட கூலிகளையும் இதழ்களையும் வென்றெடுத்த தமிழ் உணர்வைப் பாராட்டியிருந்தார். ஆரம்பம் முதல் பெரியதொரு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும்படி உதவி செய்து வந்ததாக மெயில் பத்திரிகையைப் பாராட்டியுமிருந்தார்.

மெயில் இதழ் பற்றிய குறிப்பையும் ஆசிரியர் தந்துள்ளார். அது வருமாறு:

மெயில்இதழ் சென்னையிலிருந்து வெளிவந்த மாலைப்பத்திரிகையாகும். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது அதன் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆல்பிரடு ஆர்தர் ஃகேயில்சு என்ற ஆங்கிலேயர். 1912 ஆம் ஆண்டு சென்னைக்குப் பிழைப்பு தேடி இங்கிலாந்திலிருந்து வந்த ஃகேயில்சு சென்னைவாசியாகி மாகாணத்தின் அரசியல் நன்கு தெரிந்தவராக இருந்துள்ளார். மெயிலில் வெளியான போராட்டப் புகைப்படங்கள் விடுதலையில் எடுத்தாளப்பட்டுள்ளன. நடந்து வந்த போராட்டங்களுக்கு உண்மைத் தன்மையையும் அதன் பயனாக மக்கள் நம்பிக்கையையும் இந்த புகைப்படங்கள் கட்டாயம் கொண்டு வந்தன எனலாம். 1978 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முத்துசாமி ஐயர் நியமிக்கப்பட்டதை ஒரு திராவிடச் செய்தியாளர் என்ற பெயரில் விமரித்த மெயில் இதழ், “தன்னைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதுபவனும் மற்றவர்களை மிலேச்சர்கள் எனவும் கருதும் பார்ப்பனன், மக்களைச் சரிசமமாக நடத்தி நீதியைப் பேணத் தகுதியற்றவன்” என எழுதியது.

1868ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை வெளிவந்த இச்செய்தித்தாள் குறித்து இன்றைய தலைமுறையினர் அறிய உதவும் செய்தியாகும் இது.

கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி குறித்த செய்தியையும் கட்டுரையையும் படிக்கும் பொழுது ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ், தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிரான போராட்டங்களில் போலி வெற்றிக்கே நம் தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். போலி வெற்றி என்பதும் தோல்விக்கு ஒப்பானதே என்பதை நாம் உணர்வது எப்பொழுதோ?

இந்தியைத் தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் இருந்து அகற்றினால் மகிழலாம். ஆனால், விருப்பப்பாடம் என்ற போர்வையில் இன்று வரை இந்தி கட்டாயமாகத்தான் உள்ளது. இந்தியை நுழைய விடமாட்டோம் என அறைகூவும் இன்றைய தி.மு.க.வின் தலைவரும் இதுவரை ஆட்சியில் இருந்தவருமான மு.க.தாலின் மகள் பள்ளியிலேயே இந்தி உள்ளது. மாநிலத் தன்னாட்சியை வலியுறுத்தும் கட்சியினர் நடத்தும் பள்ளிகளிலேயே ஒன்றிய அரசு சார் இந்திக்கல்விக்கு இடம் தருவானேன்? இந்தி எதிர்ப்பில் வெற்றி காண்பதாகக் கூறும் அவலத்தை நாம் புரிந்து கொண்டால்தான் விருப்பப்பாடம் என்று கட்டாயமாக இந்தியை நுழைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய , மாநில அரசுகளுக்கு எதிராக உண்மையாகப் போராடி வெற்றி காண்போம்.

Wednesday, May 20, 2026

கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்



(கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1 : தொடர்ச்சி)

தென்னிந்தியா – இலங்கை கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்ற இராமச்சந்திரனார் குறித்த ஆங்கிலக் கட்டுரையை அளித்துள்ளார். இதுபோல் இராமச்சந்திரனாரின் இளைய மகன் இராமச்சந்திரன் எழுதிய மற்றோர் ஆங்கிலக் கட்டுரையையும்  ‘சாதனையாளர் சரிதை’ என்னும் ஐந்தாவது கட்டுரையில் அளித்துள்ளார்.

இராமச்சந்திரனாரின் முதல் முழக்கம 1916 இல் எழுதப்பெற்றது. அது வருமாறு

ஏ தாழ்ந்ததமிழகமே!

என்று நீ சமூக நீதி பெறுவாய்?

ஏ வீழ்ச்சியுற்ற தமிழகமே!

என்று நீ சமநீதி பெறுவாய்?

ஏ ஒடுக்கப்பட்ட தமிழகமே!

என்று நீ  இனவுணர்வு கொள்வாய்?

திராவிட இயக்க மாநாடுகளில் இராமச்சந்திரனார் கொண்டு வந்த ஒவ்வொரு தீர்மானமும் சீத்திருத்த நோக்கம் கொணடவை. பள்ளிகளில் சாதி வேறுபாடற்ற கட்டாயக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பெற வேண்டும் பாடப்புத்தகங்களில் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பெற்றுப் பகுத்தறிவு  புகட்டப்பட வேண்டும் என்பவை முதன்மையானவை. இவை ‘திராவிடத் தீர்மானங்கள்’ என்னும் எட்டாவது கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

‘இராமச்சந்திரனார் பேசுகிறார்’ என்னும் ஒன்பதாவது கட்டுரையில் அவரதின் பேச்சகளைக் குறிப்பிட்டு அவற்றின் மூலம் அவரது கோட்பாடுகளை விளக்கியுள்ளார்.

‘எப்படித் தோன்றினார் இராமச்சந்திரனார்’ என்னும் பத்தாவது கட்டுரையில் 1913 இல் சட்டக் கல்லூரியல் பயின்ற பொழுதே சீர்திருத்தப்பாதையில்   பயணித்து தென்னிந்திய நல உரிமைச்சங்கப் பணிகளில் ஈடுபட்டுப் பல்வேறு மாநாடுகளில் பங்கேற்றமையைக் குறிப்பிட்டுள்ளார்.

‘மாவீரர் கண்ட மாநாடுகள்’ என்னும் பதினோராம் கட்டுரையில் மேலும் அவர் பங்கேற்ற மாநாடுகளின் சிறப்புகளை விளக்கியுள்ளார்.

‘கொள்கை அரசர் ஆண்டகுடியரசு’ என்னும் பன்னிரண்டாம் கட்டுரையில் இவரின் அரசியல சுவடுகளைக் குடியரசு இதழ் பதிந்துள்ளவற்றை விளக்கியுள்ளார்.

‘வகுப்புரிமை பற்றி வ.உ.சிதம்பரனார்’ பேசியதைப் பதின்மூன்றாம் கட்டுரையாக அளித்துள்ளார்.

‘சிவகங்கைச் சூரியனின் தொலைநோக்குப் பார்வை’யைப் பதினான்காம் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

‘தலைமுறைத் தலைவர்கள்’ எனப் பெரியார், இராமச்சந்தினார் அறிஞர் அண்ணாவைக் குறிப்பது பதினைந்தாம் கட்டுரை.

‘பெரியாரின் உறவினர்’ என்னும் பதினாறாம் கட்டுரையில் இராமச்சந்திரனாரைப் பெரியார் போற்றுவதைக் குறிப்பிடுகிறார்.

“தோழர் இராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும் மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய செளகரியமும் இருந்தும் அவற்றை இலட்சியம் செய்யாமல், இயக்கத்திலேயே கவலை கொண்டு மற்றவற்றை அலட்சியம் செய்து வந்த உண்மைச் சுயமரியாதை வீரரும் ஆவார்” என்று எழுதியுள்ளார்.

கடமை உருவாக்கிய உறவு நாகம்மையார் நட்பு

முதுமை உருவாக்கிய உறவு மணியம்மையார் நட்பு

காலம் உருவாக்கிய உறவு இரசாசி நட்பு

கொள்கை உருவாக்கிய உறவு இராமச்சந்திரனர் நட்பு

என இக்கட்டுரையை முடிக்கிறார்.

1929 ஆம் ஆண்டு நடைபெற்ற தன்மதிப்பு மாநாட்டிலும் தன்மதிப்பு மாநாட்டிலும் அதற்கு முன்னரே நடைபெற்ற பல பொதுக்கூட்டங்களிலும் தந்தை பெரியாரை இராமச்சந்தினார் பெளத்தர் என்று அடைமொழி இட்டு அழைத்து வந்தார்.

இருபதாம் நூற்றாண்டு பெளத்தர்

நமது பெளத்தர்

தீர்க்கதரிசி பெளத்தர்

பெளத்தர்

எனப் பலமுறை பல வகைகளிலும் அழைத்து வந்துள்ளார்.

இதனைப்  ‘புத்தரும் புனிதரும்’ என்னும் பதினேழாம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் வைரவிழுது‘ என்னும் பதினெட்டாம் கட்டுரையில் இராமச்சந்திரனார் மீது அண்ணா வைத்திருந்த மதிப்பைக் குறிப்பிட்டுள்ளார். 28.02.1984 இல் சிவகங்கையில் இராமச்சந்தினார் பெயரில் பூங்கா ஒன்றை அண்ணா திறந்து வைத்தார். அப்போது ஆற்றிய உரையில் முத்தாய்ப்பாக அண்ணா கூறியதை நிறைவு செய்து இக்கட்டுரையை முடித்துள்ளார். அவ்வுரை வருமாறு

‘சுயமரியாதைத் தீபம் ஏந்தும் படையின் தளபதி’  என்று தொண்டர்கள் சொன்னதாகவும் ‘இனமானக் காவலர்’ என்று திராவிட இனம் சொல்வதாகவும் ‘அறிவுப் பூகம்பம்’ என்று திராவிடன் நாளேட்டின் ஆசிரியர் செ.எசு.கண்ணப்பன் சொன்னதாகவும் ‘மூட நம்பிக்கையை அழிக்க வந்த பீரங்கி’ என்று பட்டுக்கோட்டை அழகிரி சொன்னதாகவும் ‘சுயமரியாதைக் களஞ்சியம்’ என்று பூவாலூர் பொன்னம்பலனார் சொன்னதாகவும் ‘எனக்கு ஊக்கமளித்த வழிகாட்டி’ என ஆர்.வி.சாமிநாதன் சொன்னதாகவும் ‘என்னை உயர்த்திய தலைவர்’  என்று வி.வி.இராமசாமி சொன்னதாகவும் ‘என்னைப் பொதுவுடைமை வாதியாக உருவாக்கிய செம்மல்’ எனத் தோழர் சீவா சொன்னதாகவும் ‘கருப்பு மெழுகுவர்த்தி’ என்று கைவல்ய சாமியார் சொன்னதாகவும் ‘சுயமரியாதைச் சிங்கம்’ என்று குத்தூசி குருசாமி சொன்னதாகவும் சமூகநீதிச் சிற்பி என்று ஈரோடு ஐயாமுத்து சொன்னதாகவும் ‘பெண்கள் விடுதலைக்காகக் கொட்டும் முரசு’ என்று மரு.முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் சொன்னதாகவும் ‘ஈரோட்டின் பகுத்தறிவுப் பதிப்பகம்’ என்று இலக்கியவாதிகள் சொன்னதாகவும் ‘சுயமரியாதையில் தீட்டப்பட்ட வைரம்’ என்று எழுத்தாளர்கள் சொன்னதாகவும் ‘என் பூணூலை விலைபேசிய பகுத்தறிவு வாதி’ என்று மதுரை காங்கிரசு தலைவர் வைத்தியநாத ஐயர் சொன்னதாகவும் அண்ணா சொல்லி முடித்தார்கள்.

Saturday, May 9, 2026

கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்



இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல்.

இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது கட்டுரை சாதனையாளர் சரிதை

ஆறாவது கட்டுரை ஆறு சிலேட்டுகள்  ஆறு சேலைகள்; ஏழாவது கட்டுரை மருமகளின் மறுபார்வையில்; எட்டாவது கட்டுரை திராவிடத் தீர்மானங்கள்; ஒன்பதாம் கட்டுரை இராமச்சந்திரனார் பேசுகிறார்; பத்தாவது கட்டுரை எப்படித் தோன்றினார் இராமச்சந்திரனார்;

பதினொன்றாவது கட்டுரை மாவீரர் கண்ட மாநாடுகள்; பன்னிரண்டாம் கட்டுரை கொள்கை அரசர் கணட குடியரசு; பதின்மூன்றாவது கட்டுரை வகுப்புரிமை பற்றி வ.உ.சியார்; பதினான்காவது கட்டுரை சிவகங்கைச் சூரியனின் தொலைநோக்கு; பதினைந்தாம் கட்டுரை தலைமுறைத் தலைவர்கள்;

பதினாறாம் கட்டுரை பெரியாரின் உறவினர்; பதினேழாம் கட்டுரை புத்தரும் புனிதரும்; பதினெட்டாம் கட்டுரை அண்ணாவின் வைர விழுது; பத்தொன்பதாம் கட்டுரை கலைஞர் போற்றிய இனக்காவலர்; இருபதாம் கட்டுரை இராமச்சந்திரன் முதல் இராமச்சந்திரன் வரை;

21 ஆவது  கட்டுரை புரட்சித்தலைவியின் புகழுரை; 22 ஆவது  கட்டுரை  பேராசிரியர் போற்றுகிறார்; 23 ஆவது  கட்டுரை  மதுரை முத்துவின் மனத்தலைவர்; 24 ஆவது  கட்டுரை  தளபதிகளின் தலைவர்; 25  ஆவது  கட்டுரை அன்பிலின் அன்பிற்குரியவர்; 26 ஆவது  கட்டுரை  நாவலர் போற்றிய நல்லவர்; 27 ஆவது  கட்டுரை  இலட்சியம் முழங்கியது; 28 ஆவது  கட்டுரை  புதையலில் பூத்தது; 29  ஆவது  கட்டுரை சீவாவின் சீவன்; 30  ஆவது  கட்டுரை அறிஞர்கள் பேசுகிறார்கள்

; 31  ஆவது  கட்டுரை  இராமச்சந்திரன் மகன் இராமச்சந்திரன்; 32 ஆவது  கட்டுரை   தாழ்த்தப்பட முடியாத தன்மான வீரர்; 33 ஆவது  கட்டுரை  பதவிகளா? போராட்டங்களா?; 34 ஆவது  கட்டுரை  தமிழும் இராமச்சந்தினாரும்; 35  ஆவது  கட்டுரை இராமச்சந்திரனார் இறந்திருக்க வேண்டுமா?;

36   குடிகளும் அழுதனர் குடியரசும் அழுதது; 37 ஆவது  கட்டுரை   ஒரு சிந்தனையாளரின் மாணவர்கள்; 38 ஆவது  கட்டுரை  ஒரு நூற்றாண்டை மட்டும் ஓரங்கட்டலாமா?; 39 ஆவது  கட்டுரை   நினைவு இல்லம் வேண்டும்; 40  ஆவது  கட்டுரை மனித நேய உயரம் தொட்டவர்;

41 ஆவது  கட்டுரை  இராமச்சந்திரனார் எனும் போராளி; 42 ஆவது  கட்டுரை   ஏன் எழுதினேன்?; 43 ஆவது  கட்டுரை  இராமச்சந்திரனார் மரபு;

2005 இல் முதற்பதிப்பாக வெளிந்துள்ள  இந்நூலில், கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, காவல்துறைத்தலைவர் தி.இராதாகிருடடிணன், வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன், வழக்குரைஞர் இந்திரசித்து ஆகியோரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் ஆங்காங்கே சிவகங்கை இராமச்சந்தினாரின் கருத்துகளையும் பிறர் அவரைப்பற்றிக் கூறிய கருத்துகளையும் தந்துள்ளார். முதல் கட்டுரையான சூரிய வனத்தில் பேரறிஞர் அண்ணா இவர்பற்றிக் கூறியதைப் பின்வருமாறு தந்துள்ளார்.

“தோழர் இராமச்சந்திரன் எனது வலது கரம். என்று தந்தை பெரியாரும் சுயமரியாதைத் தீபம் ஏந்தும் படையின் தளபதி எனத் தொண்டர்களும் இவரைப்போற்றி வந்தனர்.”

மாமன்னரின் வழி முறையினரான பெரிய கருப்பன் அவர்களின் புதல்வர் மானங்காத்த சுப்பிரமணியன். சிவகங்கை அரசில் காப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், ஒரு சமயம் அரசன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்த போது அரண்மனைக் காவலுக்கு யாருமில்லாத நிலை இருந்தது. அப்போது, பகைவர்கள் தாக்க வந்தனர். சுப்பிரமணியம் ஒற்றை ஆளாக இருந்து அனைவரையும விரட்டி அடித்தார் அதனால் மானங்காத்த சுப்பிரமணியம் என்ற அழைக்கப் பெற்றார்.  அரசரும் இவருக்கு ஆத்திக்காடு தெக்கூரைச் சுற்றியுள்ள நிலத்தில் நான்கில் ஒரு பகுதியைப் பரிசாக அளித்தார்.

ஒரு சமயம் இவர் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, புலி ஒன்று இவரைத் தா்கியது. அதனால் குடல் சரிந்து விழுந்தார்.இருந்தும் மனநிலை தளராமல்,ஒரு கையால் குடலை வயிற்றில் தள்ளிக் கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் வேலெடுத்துப் புல்யைக் குத்திக் கொன்றார். இப்பெரு வீரத்தால் இவரைப் புலி குத்திய சுப்பிரமணியம் என்று அனைவரும் அழைத்தனர். அவரின் வழித்தோன்றலே இராமச்சந்திரன்.

சிவகங்கைச் சூரியன், சிவகங்கைச் சிங்கம், சுயமரியாதைச் சிங்கம், சுயமரியாதைச் சுடரொளி, சேர்வையார் என்று பலவாறாக மக்களால் அழைக்கப்பெறுபவர் இராமச்சந்திரனார் என ‘வரலாற்றின் வரலாறு’ என்னும் மூன்றாவது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் இவர் ஆற்றிய தலைமையுரையை வழங்கியுள்ளார். ‘வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்’ என்னும் நான்காம் கட்டுரையில் இவரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரத் தேவத்தானக் குழுவின் தலைவராக இருந்த இவர் 08.08.1930 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,

அனைவருக்கும் ஆலய நுழைவுரிமை

தேவதாசிகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து ஊழியங்களையும் நிறுத்துதுல்

குளம், பள்ளி, சாலை ஆகியவற்றில் சாதியின் பெயரால்  தடை செய்யாமை

முதலிய தீர்மானங்களை நிறை வேற்றிச் செயற்படுத்தினார்.

அப்பொழுது. ஒதுக்கப்பட்ட நாடார் குலத்தைச் சேர்ந்த சு.ஆ.முத்துநாடார் என்பவரை உறுப்பினராக்கப் பரிந்துரைத்தார். ஆனால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இன்மையால் இயலாது போயிற்று. உடன் விருதுநர் பெ.சி.சிதம்பர நாடார் என்பவரை உறுப்பினராக்கினார். இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் கோயிலுக்குள் உரிமையுடன் நுழையச் செய்த செபருமைக்குரி்யவர் இராமச்சந்திரனார் என்பதை விளக்கியுள்ளார்.

Wednesday, April 29, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : இலக்குவனார் திருவள்ளுவன்



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி)

ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை.

இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது.

எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர்.

பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை நிரப்பிக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணமான பெரியார் மீது நடவடிக்கை என்பது குறித்தது 14 ஆம் கட்டுரை.

பெண்கள் கைதைஒட்டிய பிற போராட்டங்கள் கைதான பெண்கள் சிறுகச் சிறுக விடுதலை என்பன குறித்துப் பதினைந்தாம் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

 புதுவை சிவம் கைதான பெண்களுக்குப் பாராட்டு வழங்கிய பாடலுடன் கட்டுரை தொடங்குகிறது. தமிழர்  நலங்காக்கத் தன்மதிப்பு காக்க சிறை சென்றதாகப் பாராட்டியுள்ளார். சென்றது சிறைச்சாலைக்கு அல்ல தீமையெல்லாம் வீழ்த்த அறச்சாலைதான் ஏகியதாகக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

தமிழ்நாட்டின் முதல் ஒடுக்கப்பட்ட இனப் பெண் போராளி மேரி செளந்தரியம்மாள் வேண்டுகோளை முதலில் தந்துள்ளார். பெண்கள் கைதுகளை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் தகவல்களை நமக்கு அளித்துள்ளார். சிறைசென்ற தாய்மார்களின் படங்களையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பில் முதன்முதலில் கைதான பெண்கள் விடுதலையான செய்தியையும் தந்துள்ளார். திசம்பர் 23, ஞாயிற்றுக்கிழமையை இந்தி எதிர்ப்பு நாளாகக் கொண்டாட வேண்டிய அறிவிப்பு, அவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்திய நிகழ்வுகளையும் அளித்துள்ளார்.

அடுத்த பதினாறாவது கட்டுரையில் வேலூர் பெண்கள் முதலாவது சென்னை மாநிலத் தமிழ்ப்பெண்கள் மாநாடு குறித்த விவரங்களை விளக்கியுள்ளார்.   பண்டிதை நாராயணி அம்மாள் தலைமையுரையில்   இந்தித் திணிப்பு, இந்தியால் ஒற்றுமை உண்டாகுமா?, இனி செய்ய வேண்டுவன, நமக்கு முதலில், இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்காவதாக, ஐந்தாவதாக, ஆறாவதாக இருக்க வேண்டியன குறித்துத் தெரிவித்தனவற்றை எடுத்துரைத்துள்ளார். தோழர் பச்சம்மாள் வரவேற்புரையையும்    சிறைசென்ற பெண்களுக்கு வழங்கிய பாராட்டையும் தெரிவித்துள்ளார். மாநாட்டு நடவடிக்கையையும் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தாமரைக்கண்ணி அம்மையானர் உரையையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பு என்னும் பன்முறைப் போரின் ஒரு பகுதியான தாழ்த்தப்பட்டவர் மாநாடு குறித்தும் நமக்குத் தந்துள்ளார்.   

Wednesday, April 22, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் - நூலாய்வு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

      23 April 2026      கரமுதல



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு நிதிக்கு இசுலாமியப்பெண்களும் நிதி வழங்கியமை, மே்டையைச் சரிசமமாகப் பகிர்ந்த பெண்கள், பெண்கள் திரளாகப் பங்கேற்ற ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஊர்வலம், எல்லா வடிவத்திலும் எல்லா இடத்திலும் பெண்களின் இந்தி எதிர்ப்பு, முதலியவைபற்றியும் இக்கட்டுரையில் விவரித்துள்ளார்.

இக்காலத்தில் பெண்கள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அப்பொழுது பெண்களே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளனர் என்பதை நாம் இக்கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சிகள் தொடர்பான துண்டறிக்கைகள், செய்திகள், அறிவிப்புகள், பெண் தலைவர்கள் படங்கள், பெண் போராளிகள் படங்கள், தொடர்பான கருத்துப் படங்கள் எனப் பலவற்றையும் நூலாசிரியர் தொகுத்து அளித்துள்ளார்

தலைவர் நீலாம்பிகை அம்மையார் என்பது ஆறாவது கட்டுரை.

தம் தந்தையார் மறைமலையடிகளால் தனித்தமிழ்ப்பக்கம் ஈர்க்கப்பட்ட நீலாம்பிகை அம்மையார், வாணாள் முழுவதும் அதில் நிலையாக இருந்தார் எனவேதான் இந்தி எதிர்ப்புப்போராட்டங்களில் தனித்தமிழ் மணமும் கமழக் காணலாம். “முன்னமே நாம் பிற மொழிச்சேர்க்கைக்கு இடம் கொடுத்து விட்டோம்.இனிமேலாயினும் பிறமொழிச் சேர்க்கைக்கு இடம் கொடாமல் நம்மையும் நம் அருமைத் தமிழையும் பாதுகாத்துக் கொள்வோமாக” என மாநாட்டில் பேசிய நீலாம்பிகை அம்மையார் அதன் மூலம் தமிழ்ப்பெண்களுக்குத் தமிழுணர்வு ஊட்டினார் என்பதை விளக்குகிறார்.

ஏழாவது கட்டுரையில், பெரியாருக்குப் ‘பெரியார்’ பட்டம் சூட்டியது குறித்து விவரிக்கிறார். இந்தி எதிர்ப்பு என்பது பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, தனித்தமிழ் எழுச்சி முதலியவற்றையும் அடிப்படையாகக் கொண்டதே என்பதை இக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகிறார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை எட்டாவது கட்டுரை விளக்குகிறது. மாநாடு தொடர்பான தலைவர்கள் குதிரை வண்டியில் வைத்து அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க்கொடிகளை ஏந்தி, தமிழ் வாழ்க, தமிழ்நாடு தமிழருக்கே இந்தி வீழ்க, தமிழ்ப்பெண்கள் வாழ்க, தமிழர் வாழ்க என முழக்கமிட்டு வந்துள்ளனர். தமிழ்ப்பெண்கள் தமிழ் வாழ்த்துப்பாடி வந்துள்ளனர் என விளக்குகிறார். மாநாட்டில் 5000 பேருக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அன்றைக்குப் பெண்களிடம் இருந்த தமிழ் எழுச்சி எங்கே போய்விட்டது என்றுதான் தெரியவில்லை.

ஒன்பதாவது கட்டுரையில் அன்னை மீனாம்பாள், மரு.தருமாம்பாள், பண்டிதை நாராயணி, பார்தவி யம்மையார் உரைகள் ஆகியன தரப்பட்டுள்ளன. அத்தகைய தமிழுணர்வு மிக்க, தமிழ் எழுச்சி ஊட்டக்கூடிய பெண் தலைவர்களை இன்று காணவில்லை. 

வரவேற்புக்குழுத் தலைவர் வ.பா.தாமரைக்கண்ணியம்மையார் என்பது ஒன்பதாவது கட்டுரை. மிகச் சிறப்பான சொற்பொழிவாற்றியுள்ளார் தாமரைக் கண்ணி அம்மையார். இவ்வுரையில் கொச்சைப்பேச்சு நடையில் எழுத்தாளர்கள் எழுதுவது குறித்தும் பின்வருமாறு கண்டித்துள்ளார்:

‘’தமிழ்எழுத்தாளர் என்று தன்னை அழைத்துக் கொண்டு அரைகுறைத்தமிழில் எழுதுபவர்களைக் கடுமையாகத் தன் உரையில் தாமரைக்கண்ணி சாடுகிறார். குறிப்பாகப் பார்ப்பன மொழியைப் பயன்படுத்துபவர்களை விமரிசனம் செய்கிறார்.  என்ன சார்வாள், எங்கே போறையள், ரொம்ப, பஞ்சாமிர்தமாக, தொபுக்கடீரென்று, தூம்தடாகா, கப்சா, காதல் கச்சேரி, காலட்சேபம், லேடீச கிளப்,- போதுமா? இன்னும் வேண்டுமா? சிலர், சிவ சிவா போதும் போதும் என்கிறீர்கள். சரி. நிறுத்திவிட்டேன். இப்படித் தமிழன்னையைப் பையப் பையச் சாகடிக்கும் இந்த எழுத்தாளர்கள்தான் உயிருள்ள தமிழ்நடை எழுதுபவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இத்தமிழ்நடையைத் தமிழ்நாட்டில் மட்டும் நடத்தினால் போதாது என்று கருதி, உலகமெங்கும் பரப்புவதற்காக  இவர்களுக்கு அகில இந்திய வானொலியில் (ரேடியோவில்) பேசுவதற்கு அடிக்கடி இடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு மாறாக, வாழ்நாள் முழுவதும் தமிழ் பயின்று இலக்கண இலக்கிய வர்புகளுக்குட்பட்டுச் செந்தமிழ்நடை எழுதும் அறிஞர்கள் பத்தாம்பசலிக்காரர்கள் என்று பரிகசிக்கப்படுகிறார்கள். இவர்கள் தமிழ்க்கொலை செய்பவர்களாம். எப்படியிருக்கிறது சங்கதி? இதற்கு விமோசனம் இல்லையா? என்று நான் கேட்கிறேன். இந்த நிலைமையில் இந்த இந்திச் சனியன் வேறு வந்து புகுந்தது. …” என்று பேசியதை நமக்குத் தந்துள்ளார்.

Followers

Blog Archive