Saturday, January 25, 2025

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

 

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்



(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – தொடர்ச்சி)

ஆமாம். நீங்கள் மனப்பாடம் செய்வதுபோல் என் புதினத்தை நன்கு படித்துள்ளீர்கள். உங்களிடம் படமாக்கும் பொறுப்பை ஒப்படைப்பது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இப்பொழுது உணவுப் பொருள்களில் செய்யும் கலப்படத்தை உணராமலும் உணர்ந்தாலும் தட்டிக் கேட்காமலும்தான் மக்கள் இருக்கின்றனர். அப்புறம் எங்கே மொழிக்கலப்பைத் தடுப்பார்கள் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இளைஞர்கள் பலர் நாம் தமிழ்த்தேசியர்கள் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என்று சிறிது நம்பிக்கை வருகிறது.

இவற்றை உரையாடலில் கொண்டு வராமல் திரைக்கதைக் குறிப்பில் காட்சி வடிவில் கொண்டு வந்தால்தான் சரியாக இருக்கும்.

சரிதான். வேறு என்ன என்ன மாதிரியான உரையாடல்கள்? காட்சி அமைப்புகள்? தேவை என எதிர்பார்க்கிறீர்கள். தொடக்கத்தில் விறுவிறுப்பிற்காகச் சில உரையாடல்களையும் உங்கள் கதைப் போக்கிற்கேற்ற காட்சிகளையும் சேர்க்கவேண்டும் என்றீர்களே!

நாலைந்து முறையாவது சத்தியம் கேட்பதுபோலும் சத்தியம் வைப்பதுபோலும் காட்சிகள் இருக்க வேண்டும்.

அப்படி ஒன்றும்  என் கதையில் தேவைப்படவில்லையே!

ஏன், தேவைப்படவில்லை. மாறன் ஊருக்குப் போய்விட்டு ஒரு வாரத்தில் திரும்புவதாக மல்லிகையிடம் சொல்கிறான் அல்லவா? அப்பொழுது அவள் அவனிடம் சத்தியம் கேட்க வேண்டும். “சத்தியமாக வருவாயாடா” எனக் கேட்டு விட்டு அவன் தயங்கினான் என்றால் இவளாகவே அவனது கையை எடுத்துத் தன் தலையில் வைத்துச் “சத்தியம்” என்று சொல்ல வேண்டும்.

எதற்கு அப்படிச் சொல்ல வேண்டும். “சத்தியம்” என்று சொல்லாமல் சொல்லக் கூடாதா?

இதெல்லாம் தொடரின் மரபு. பெரும்பாலும் வஞ்சகர்களும் சதிகாரர்களும்தான் இப்படிச் சத்தியம் கேட்க வேண்டும்.  மற்றொன்றைக் குறிப்பிடுகிறோம். மல்லிகை வைக்கும் குழம்பில் உப்பு அதிகமாக உள்ளது என அவளை அனைவரும் குற்றம் சாட்ட வேண்டும். ஆனால், உப்பை வேண்டுமென்றே புனிதா கலந்திருக்க வேண்டும். இதனை மல்லிகையும் அறிவாள். ஆனால் புனிதா மல்லிகையிடம் நீ நான் உப்பு கலந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்க வேண்டும்.

இதனால் மல்லிகைக்குத்தானே பாதிப்பு. அவள் எப்படிச் சத்தியம் செய்வாள்?

அதெல்லாம் அப்படித்தான். அவள் மிகவும் நல்லவள். எனவே, தான் செய்யாக் குற்றத்திற்கான பழியை ஏற்றுக் கொள்வாள்.

மாறனும் மல்லிகையும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் அல்லவா? மல்லிகையின் சித்தியின் உறவினர் பெண் புனிதாவும் மாறனை விரும்புவதாகக் காட்சி அமைக்க வேண்டும். ஆனால், சித்தி மாறனிடம் “நீ முல்லையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” எனச் சத்தியம் வாங்க வேண்டும்.

அவன் எப்படிச் சத்தியம் செய்வான்?

முல்லையைத் திருமணம் செய்துகொள்வேன் என்று அவன் கையை எடுத்துத் தன் தலையில் வைத்து இவளே சொல்ல வேண்டும். இப்படிச் சில காட்சிகள் உள்ளன. கதைப் போக்கில் இடையிடையே சொல்கிறோம். மற்றபடி உங்கள் கதையில் நாங்கள் குறுக்கிட மாட்டோம்.

அது சரி, இடையில் மல்லிகை மாறனை “டா” போட்டுப் பேசுவதாக உள்ளதே!

ஆம். கதையில் காதலியும் மனைவியும் காதலனாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும் “டா” போட்டும் அவன், இவன் என்று சொல்லியும்தான் பேச வேண்டும்.

அப்படியென்றால் காதலனும் கணவனும் காதலியையும் மனைவியையும் “டி” போட்டுப் பேச வேண்டுமா?

அச்சச்சோ! மறந்தும் அப்படி எழுதி விடக் கூடாது. இவர்கள் அவர்களை மரியாதையாக, வாங்க, சரிங்க, சொல்லுங்க, மன்னித்துக்கோங்க என்றுதான் பேச வேண்டும். மரியாதைக் குறைவாகப் பேசக் கூடாது.

எல்லா இடத்திலும் அப்படித்தானா?

ஆமாம். எல்லா இடத்திலும் அப்படித்தான். மாதிரிக்குச் சில சொல்கிறேன். பாருங்கள்.

மாறன் நேரம் கழித்து வருகிறான். அப்பொழுது நடைபெறவேண்டிய உரையாடலைப் பாருங்கள். .

மல்லிகை: ஏன்’டா, இவ்வளவு நேரமாச்சுடா?

மாறன்: இல்லைங்க நேரமாயிருச்சுங்க

மல்லிகை: அதான்’டா. ஏன் நேரமாயிருச்சுடா?

மாறன்: அதாங்க நேரமாயிருச்சுங்க.

மல்லிகை: ஏன்’டா அறிவோடத்தான பேசுறயாடா? வேற எவளையாவது பார்த்து வரயாடா?

மாறன்: ஏம்மா இப்படிச் சொல்றீங்க. உங்களை விட்டு வேற யாருக்கிட்ட நான் போவேங்க.

மல்லிகை: அதானடா. உனக்கு வேற யாரடா வருவா.

இன்னொரு காட்சி பார்ப்போம்.

டேய்! டேய்! நாம எங்காவது வெளியே போயிட்டு வருவோம்டா

உத்தரவு போடுங்க அரசியாரே. நீங்க எங்கே சொல்றீங்களோ அங்கே போவோம்ங்க.

ஏண்டா நான் உன்னைச்சொல்லச் சொன்னா நீ என்ன சொல்றயாடா. உனக்குச் சுய அறிவே இல்லையாடா, ஏதாவது சொல்லுடா

சரிங்க. நாம வண்டியில் எங்காவது நீண்ட தூரம் போய் வருவோமாங்க.

ஆமாண்டா அதுதான் சரி. வாடா போகலாம்டா

மற்றொரு காட்சி

டேய் எனக்குப் பசிக்குதடா!

உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். இட்லி,தோசை, பூரி, சப்பாத்தி வேண்டுமா? அல்லது இறைச்சி மீன், கோழி வேண்டுமா? சொல்லுங்கள். இப்பொழுதே கொண்டுவந்து தரச் சொல்கிறேம்மா.

ஏண்டா பசிக்குதுங்கிறேன்’டா.

சரி. வாங்க. நாம் போய்ச்சாப்பிடுவோமாங்க.

ஏண்டா பசிக்குதுங்கிறேன்’டா. உனக்குப் புரியலையாடா?

ஏங்க நான் சமைத்தா தர முடியும்ங்க.

ஏன்’டா சமைச்சுத் தரக்கூடாதாடா? சொல்லுடா.

சரிங்க. நீங்க சொல்லச் சொல்லச் சமைச்சத் தரங்க. போதுமாங்க.

என் செல்லம்டா. இப்போதாண்டா எனக்கு மகிழ்ச்சியா இருக்குதுடா.

ஏங்க. இதெல்லாம் காதலன் காதலி பேசுற மாதிரி இல்லையேங்க.

இல்லைங்க. நீங்க அந்தக் காலம்மாதிரி நினைக்கிறீங்க. இப்ப இதுதாங்க, காதலி-காதலன் பேசும் முறை. பெண்கள் பையன்களை வாடா போடா என்று பேசுவதும் பையன்கள்  பெணகளை மரியாதை கொடுத்துப் பேசுவதுமே இன்றைய பெண்கள் விருப்பம். இதில் உங்கள் கதையில் எந்தச் சிதைவும் இருக்காது.

சரிங்க. இன்றைக்கு இதுவோடப் போதும். மீதியை நாளைக்குப் பார்ப்போம்.

(தொடரும்)

Tuesday, January 21, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : தொடர்ச்சி)

911. assistance international/International assistance    பன்னாட்டுதவி  

பன்னாட்டு உதவி  

ஒரு நாட்டிற்குப் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள்.  

பன்னாட்டு உறவுகள் மூலமும்  பன்னாட்டவை( UNO), பன்னாட்டுப் பண நிதியம் (International Monetary Fund) போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமும் கிடைக்கும் உதவிகள்.  

1923 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டுக் காவல் துறை(The International Criminal Police Organization – INTERPOL) 184  உலக நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் உதவியும் பன்னாட்டுதவியில் அடங்கும். 
912.  assistance, invaluable /Invaluable assistance  விலைமதிப்புள்ள

விலையுயர்ந்த  

அருமதிப்புள்ள உதவி / அருமதிப்பான உதவி

விலைமதிக்க முடியாத உதவி

விலைமதிக்கவியலாத உதவி

விலைமதிப்பற்ற உதவி  

Invaluable – வெகுமதிப்புள்ள என்பர். costly என்பதற்குத்தான் அது பொருந்தும்.  

குற்றஞ்சாட்டப்படுநருக்கு அல்லது குற்றஞ்சாட்டுநருக்கு, வாதிக்கு அல்லது எதிர்வாதிக்கு வழக்காடுதலில் விலைமதிப்பில்லா கருத்துதவி கிடைப்பது அவர்கள் வாகைசூட வாய்ப்பாக அமையும்.  

நீதிமன்றங்களில் வழக்கு ஆய்வில் அல்லது புலனாய்வில் அருமதிப்பான உதவி புரியும் ஊழியர்கள் அல்லது வழக்குரைஞர்கள் இருப்பது செவ்விய தீர்ப்பு வழங்க உதவியாக அமையும்.
913. assistance, legal / Legal assistance  சட்ட உதவி  

சட்ட உதவி என்பது இலவயச் சட்ட உதவியையே (Free Legal Aid) குறிக்கிறது.  

வழக்குரைஞரை அமர்த்திக் கொள்ள வசதியற்ற ஏழையருக்கு அரசே நிதியுதவி வழக்குரைஞரை அமர்த்திச் சட்ட உதவி கிடைக்க வழி செய்வது.  

சட்ட உதவி கிடைக்காமல் யாரும் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக நலிந்த பிரிவினருக்கு அரசு சட்ட உதவி கிடைக்க  வழி செய்கிறது.

இந்தியாவில் மாநிலங்கள்தோறும் இலவசச் சட்ட உதவி அறிவுரைக்கழகம் (free legal advisory board) அமைக்கப்பட்டு அவை மூலம் சட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.  

ஏறத்தாழ 47 நாடுகளில் சட்ட உதவி வழங்கப்படுவதில்லை.  
914.  assistance. medical / Medical assistanceமருத்துவ உதவி  

மருத்துவம் சார்ந்த முதலுதவிகளையும் பிற நிலை உதவிகளையும் குறிக்கிறது.

  மருத்துவ [உதவி] உதவி என்பது குமுகப் பாதுகாப்புச் சட்டத்தின் தலைப்பு 19 (Title XIX of the Social Security Act) இன் கீழ் மாநிலத்தால் செயலாக்கப்படும் திட்டமாகும்.

இது தகுதியானவர்களும் குறைந்த வருமானம் கொண்டவர்களுமான தனியர்களுக்குத் தேவைப்படும்  விரிவான மருத்துவ, உடல்நலம் தொடர்பான பிற நலக் கவனிப்புகளை வழங்குகிறது.
915.  assistance, mutual / mutual assistanceஇருநிலை உதவி  

பன்மாற்ற உதவி  

ஒருவர்க்கொருவர் உதவி என்பது பொதுவான பொருள். என்றாலும் அரசுகளுக்கிடையே உதவி அல்லது மாநிலங்களுக்கு இடையே உதவி என்பதையே குறிக்கிறது.  

பரசுபரம் என்பது அயற்சொல்.  

பல்வேறு அரசுகளுக்கு இடையே முறையான பிணைப்பு ஒப்பந்த அடிப்படையில்  பரிமாற்ற அடிப்படையில் செயல்முறை சேவை, சான்றுகளைப் பெறுதலும் பயன்படுத்துதலும் ஆகியவற்றையே குறிக்கிறது.  

(தொடரும்)

Sunday, January 19, 2025

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

 

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்



(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 இன் தொடர்ச்சி)

அடுத்த வாரமே  குமணன் நட்சத்திர விடுதியில் விருதாளருக்கு என ஒரு சிறப்பு அறையை ஒதுக்கி வைத்து விட்டனர். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம். எவ்வளவு நாட்களும் தங்கியிருக்கலாம் என்றனர். உணவு முதலிய எதற்கும் அவர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்றனர்.

ஐயா, நீங்கள் திரைக்கதை உரையாடலை எழுதியும் தரலாம். உங்களுக்கு ஓர் உதவியாளரை அமர்த்தியுள்ளோம். அவர் கணிணியில் தட்டச்சு செய்து தருவார் என்று ‘வி’ கதைக்குழுத் தலைவர் கூறினார்.

அப்படியா மகிழ்ச்சி. நான் எப்படி எழுத வேண்டும் என விரும்புகிறீர்கள்?

உங்கள் புதினமே திரைக்கதைபோல்தான் உள்ளது. ஆகவே, உங்கள் கதையை நீங்கள் உரையாடலாக மாற்றி எழுதுங்கள் போதும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

அப்படியா? நீங்கள் வேறு எதிலும் குறுக்கிட மாட்டீர்கள் அல்லவா?

ஆமாம் ஆமாம். ஆனால், தொலைக்காட்சித் தொடரின் விறுவிறுப்பிற்காகச் சில உரையாடல்களையும் உங்கள் கதைப் போக்கிற்கேற்ற காட்சிகளையும் சேர்க்கவேண்டும். அவ்வளவுதான்.

என் கதை இப்படித் தொடங்கியிருக்கும்.

ஒரு சிற்றூர். தென்னந்தோப்பும் வயல்வெளிகளும் நிறைந்த ஊர். பசுமையான வயல்களின் ஊடே நாயகி வந்து கொண்டுள்ளாள். அருகே தெளிந்த நீரோடை. சலசலத்து நீர் சென்று கொண்டுள்ளது. சல சல என்று ஒலித்துச் செல்வதால் நீருக்குச் சலம் என்ற பெயர் வந்ததை நினைத்துக் கொண்டே நாயகி நீரோடை அருகே வருகிறாள். ‘சலம்’, ‘ஜலம்’ ஆனது போல் ஊரில் சில மாற்றங்கள் நிகழ்வது குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அருகே உள்ள கோயிலில் இருந்து நாட்டுப்புறப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அதே நேரம் ஒரு பகுதியில் இருந்து “வாடா தம்பி. பள்ளி செல்லடா. தங்கையையும் அழைத்துச் செல்லடா” என்பது போன்ற நல்லறிவு புகட்டும் பாடல்களும ஒலித்துக் கொண்டிருந்தன. ஒரு புறம் “சின்னப் பயலே சின்னப்பயலே சேதி கேளடா” என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் அறிவுரை டி.எம்.செளந்தரராசன் குரலில் கேட்டுக்கொண்டிருந்தது. தொலைவில் மெல்லிய ஓசையில் திரைப்படக் காதல் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. முன்பெல்லாம் கோயில் திருவிழா என்றால் காதல் பாடல்களை ஒலி பரப்ப மாட்டார்கள்.  காதலுக்கு எதிரி என்று இல்லை. கோயில் திருவிழாவில் இதெல்லாம் தேவையில்லை என்ற மூத்தோர் நம்பிக்கை. இளந்தாரிகள் செல்வாக்கு வரத் தொடங்கியதும் இதில் எல்லாம் மாற்றம் வரத் தொடங்கியது. அப்பொழுது இளந்தென்றல் தன் மீது மோதியதை உணர்ந்தாள். உடன் நறுமணம் பரவியது. சாலையைப் பார்த்தாள். அங்கே நாயகன் வந்தான். “என்னம்மா? வலுத்த சிந்தனை. எதைப்பற்றி? அல்லது எந்தக் கோட்டையைப்பிடிப்பது பற்றி?” என்றான். “நீதான் சொல்லேன் பார்ப்போம்” என்றாள் அவள். “கண்டிப்பாக என்னைப் பற்றி இல்லை என்று தெரியும் எனக்கு. தமிழைப்பற்றித்தானே சிந்தித்துக் கொண்டிருந்தாய்.” “ஆமாம். அந்த அளவு என்னைப் புரிந்து கொண்டுள்ளாயே. மகிழ்ச்சி” என்றாள்.

ஆமாம். நல்ல தொடக்கம். இதே போன்றே புதினத்தை முடித்திருந்தீர்கள்.

ஆமாம். பின்வருமாறு முடித்திருந்தேன்.

நீரோடை அருகே நாயகனும் நாயகியும் அமர்ந்திருந்தனர். ஆனால் நீரோடையில் நீரைக் காணவில்லை. தென்னந்தோப்பும் வயலும் இருந்த பகுதியில் ஒரு பகுதி கட்டடங்களாகக் காட்சியளித்தன. அருகே உள்ள கோயில்களில் இருந்து நாட்டுப்புறப் பாடல்களும் ஒலிக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றையும் மீறி அதிரடி இசை கொண்ட திரைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. “வாடா வாடா. கட்டிப்பிடிடா” போன்ற பாடல்கள் முழங்கிக் கொண்டிருந்தன. குடும்ப மரபின் வேர்களை நாம் போற்றி வருகிறோம். தலைமுறை இடைவெளி இல்லா வண்ணம் மூத்தோர் எண்ணத்தைச் செயற்படுத்தி வருகிறோம். ஆனால் ஊரின் மரபு வேர்களில் வெந்நீர் ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேளாண்மை மறைந்து கொண்டே உள்ளது. ஊர் முன்னேறுவது மகிழ்ச்சிதான். ஆனால், பழமையை அழிக்கும் புதுமையாய் அல்லவா உள்ளது. இதிலிருந்து ஊரை மீட்கப்போவது யார்? ஏன், நாம் முன்னின்று இதில் ஈடுபடக்கூடாது என்று நாயகனும் நாயகியும் பேசிக் கொண்டனர்.

தொடக்கத்தில் பெயர் அறிமுகம் இல்லாததால் நாயகன், நாயகி என்று குறிப்பிட்டீர்கள். சரிதான். ஆனால், இறுதியிலும் அவ்வாறே குறிப்பிட்டது ஏனையா?

ஒரு குறியீடாக இருக்கட்டும் என்றுதான் முடிவிலும் பெயர்களைக் குறிப்பிடவில்லை.

ஆமாம். பல கதைப் பாத்திரங்களுக்கு நீங்கள் குறியீடாகத்தான், நல்லன், வஞ்சன், பொல்லன், பண்பன் என்பனபோல் பெயர்கள் சூட்டியிருப்பீர்கள். காதல் காட்சிகளைக்கூட மென்மையாகத்தான் உணர்த்தியிருந்தீர்கள்.

ஆமாம். மாறனும் மல்லிகையும் காதல் உணர்வு மேம்பட்டதும் அவர்கள் சந்திப்பைப் பின்வரும் வகையில் குறிப்பிட்டிருப்பேன்.

மாறனும் மல்லிகையும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் மனத்தால் கட்டுண்டிருந்தனர். பார்வைப் பரிமாற்றத்தில் காதல் தெரிந்தது. மாறன் மல்லிகையின் கையைப் பிடிக்கலாமா என எண்ணிக் கொண்டிருந்தான். மல்லிகையும் மாறன் தன் கையைப் பிடித்தால் நன்றாக இருக்குமே என எண்ணினாள். ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை. அருகருகே அமர்ந்திருந்தாலும் விலகியே இருந்தனர். “மலரினும் மெல்லிது காமம்” என்று திருவள்ளுவர் சொன்னதை உணர்ந்தவர்கள் போல் இருந்தனர். நாம் வாழ்க்கையில் இணைவோமா என்று கேட்க எண்ணினர். அதேபோல் இருவரும் ஒரே நேரம் “நாம் இணைந்து வாழ்வோமா” எனக் கேட்டனர்.

சினத்தில் சீறி எழுந்தபோது கூட வீட்டுப் பணியாளைக் குடும்ப உறுப்பினராகக் கருதும் பாசத்தைத்தான் காட்டியிருக்கிறீர்கள்.

நீங்கள் சுவைத்துப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது உண்மைதான். பெரியவர், “என் பையன் மீது கைவைக்க யாரடா நீ. அவனுக்காகக் கேட்பதற்கு யாருமில்லை என எண்ணினாயா? அவனிடம் மன்னிப்பைக் கேள்.” என்று சீறி எழுந்ததாகக் குறிப்பி்டிருப்பேன்.

வெறுப்புக் காட்சியில் கூட மென்மை கலந்த அழகு இருந்தது.

ஆமாம். குறுக்கு வழியில் வஞ்சன் செய்த செயல்கள் மீது சினத்தை விட வெறுப்பே மிகுதியாக இருக்கும். அப்போது அவனிடம், “நீ செய்தது குறித்து உன் குடும்பத்தினராவது உன்னை மதிப்பார்களா? நல்ல பாதை இருக்கும்போது பொல்லாப்பாதையில் செல்கிறாயே” என்று சொல்லி, வேறு ஒன்றும் சொல்லாமல் “சீ, போடா” என்ற சொல்லி விட்டு நகர்ந்து விடுவார். அவர் ஏதும் திட்டியிருந்தால்கூட இவனும் திட்டித் தீர்த்திருப்பான். ஆனால், ஒன்றும் சொல்லாமல் பார்வையில் வெறுப்பை உமிழ்ந்ததைப் பார்த்த இவன் மனம் கலங்கியது. அவரிடம் ஓடிச்சென்று “ஐயா, என்னைமன்னித்து விடுங்கள். இனி இவ்வாறு செய்ய மாட்டேன்” என்றான்.பெரியவரும் மன்னித்ததன் அடையாளமாக அவனை மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.

மொழிக்கலப்பிற்கு எதிரான உங்களின் அறச்சீற்றத்தைக் கூட நன்கு எழுப்பியிருப்பீர்கள்.

“பாலில் தண்ணீரைக் கலந்து விடடான் என்று சண்டை போடுகிறீர்கள். மிளகாய்த் தூளில் செங்கற் பொடியைக் கலந்து விட்டான் என்று சண்டை யிடுகிறீர்கள். காப்பித் தூளில் புளியங்கொட்டைத் தூளைக் கலக்கும் பொழுது சினம் வருகிறது. பாலில் சுண்ணாம்புத் தூளையும் சோப்புத் தூளையும் கலக்கும் பொழுது பொங்கி எழுகிறீர்கள். பழங்களைச் செயற்கை முறையில்  பழுக்க வைத்ததை அறிந்தால் வாங்க மறுக்கிறீர்கள். ஆனால், மொழியில் கலப்படம் செய்யும் பொழுது அமைதி காக்கிறீர்களே! நம் முன்னோர்கள் இப்படித் தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்ததால்தான் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதும் இருக்க வேண்டிய தமிழ் தன் பரப்பளவில் குறைந்து உள்ளது. நீங்கள் பேச்சிலும் எழுத்திலும் பிற மொழிக் கலப்பிற்கு இடம் தந்து தமிழை அழித்துக் கொண்டு வருகிறீர்களே  நாம் வைக்கும் பெயர்களில் தமிழைத் தொலைத்து விட்டோமே! தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தமிழைச் சிதைத்துக் கொண்டு வருகிறோமே மொழிக் கலப்பினால் இலங்கை முழுவதும் இருக்க வேண்டிய தமிழ், பெரும் பகுதியைச் சிங்களமாக்கி விட்டுவிட்டது. அதுவே இன அழிப்பிற்கும் காரணமாகி விட்டது. “மொழியை இழந்தால் இனத்தை இழப்போம்” எனத் தமிழ்ப்போராளி இலக்குவனார் உணர்த்தினார். இதை உணராமல் தமிழில் மொழிக்கலப்பிற்கு இடம் தந்து மேலும் அதை அழிக்கலாமா” என நன்கு கேட்டிருப்பீர்கள்.

(தொடரும்)

Tuesday, January 14, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910: இலக்குவனார் திருவள்ளுவன்

சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905-தொடர்ச்சி)

906. assistance,food./Food assistanceஉணவு உதவி  

அரசாங்கம், தன் நாட்டு மக்களுக்கான பசியைப் போக்க உதவுதல், நாட்டில் உள்ள சிறாரின் உணவுத்தேவையை நிறைவேற்ற உதவுதல், பள்ளி மாணவர்களின் பசியைப் போக்க உதவுதல், நண்பகல் உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், 60 அகவைக்கு மேற்பட்ட முதியோரின் பசியைப் போக்க உதவுதல், இலவச உணவு அளித்தல், சலுகை விலையில் உணவு அளித்தல்,அரசுடன் இணைந்தோ தனித்தோ தனிப்பட்ட அமைப்புகளோ தனியாரோ பசிப்பிணி போக்கல் என நாட்டிறகு நாடு உணவு உதவிகள் உள்ளன.

  ‘உறுபசி யில்லாத நாடே நாடு’ என்கிறார் திருவள்ளுவர். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்கிறது மணிமேகலை. இருக்கும் நலன்களை எல்லாம் அழிக்கும் பசிப்பிணி என்னும் பாவி  என மணிமேகலை வாயிலாகப் புலவர் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்,   பசியைப் போக்குவதை அறமாக இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழ் நாட்டில் கோயில்கள் இப்பணியை ஆற்றி வருகின்றன,  

  தமிழ்நாட்டில் சத்துணவுத்திட்டம், நண்பகல் உணவுத்திட்டம், காலை உணவுத்திட்டம் முதலியவை நடைமுறையில் உள்ளமை போல் பல நாடுகளிலும் பசிப்பிணி என்னும் பாவி தரும் துன்பத்தைத் தணிக்கும் திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன.  

இயல்பான இத்திட்டங்கள் தவிர, இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புற்றோர், தொற்றுநோய்ப் பரவுதலால் வாடுநர், நெருக்கடிக்காலங்கள், போர்க்காலங்களில் நலிவுறுவோர், உள்நாட்டுப்போர், போர் முதலிய காரணங்களால் பலம்பெயர்ந்து வந்து பசியால் நலிவோர் முதலானவருக்கும் அளிக்கப்படும் உணவு உதவி,   தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 – இன் மூலம் இந்திய அரசு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுப் பணிகள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது போன்ற சட்டங்கள் ஏற்கெனவே தமிழ்நாடு, பீகார், சத்தீசுகர் முதலான பல மாநிலங்களில் உள்ளன,

  பசித்தோருக்கு உணவு வழங்குதல் போல் பிறருக்குத் தரமான உணவுப்பொருள்கள் வழங்குதலையும் அரசுகளின் சட்டங்கள் உறுதி செய்கின்றன.  

உணவுத் திட்டங்களில் நேரும் முறைகேடுகளைக் களைய நீதிதுறை உதவுகிறது.  
907. assistance,foreign/Foreign assistanceஅயலக உதவி

வெளிநாட்டு உதவி  

வளர்ச்சியுறா நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் வளர்ச்சியுற்ற நாடுகளும் செல்வ நாடுகளும் உதவுதல். நிதியுதவியாவோ உணவு முதலிய பொருள் வழங்கலாவோ தொழில்நுட்ப உதவியாகவோ  ஆதார வள உதவியாகவோ அளித்தல்.   அயலக உதவிகளை வழங்குவதற்கேற்ற செயல் திட்டங்களும் உள்ளன.  

இவை தொடர்பில் சட்டச்சிக்கல்கள் ஏற்படின்  செயற் திட்ட விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள வழக்கு வரம்பிற்குரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதி காண வேண்டும்.  
908. assistance, government/Government assistanceஅரசு உதவி   

குறிப்பிட்ட அளவுகோல்களின்படித் தகுதியுடைய தனியருக்கோ பிரிவினருக்கோ அமைப்பிற்கோ அரசு செய்யும் உதவி.  

அரசு என்பது உள்ளாட்சி அமைப்பு, மாநில அரசு, தேசிய அரசு. பன்னாட்டு அமைப்பு முதலியவற்றை உள்ளடக்கியதே.

  அரசு உதவி என்பது முழு நிதியுதவி, பகுதி நிதியுதவி, பொருளுதவி, மூலப் பொருளுதவி,  தொழில் தொடங்க உதவி, வரிச்சலுகை உதவி. போன்று பலவகைப்படும்,  

அரசு உதவித் திட்டங்களில் முறைகேடுகள் நிகழ்வதைத் தடுப்பதற்கும் முறைகேடுகளைச் செய்வோர்களைத் தண்டிப்பதற்கும் சட்டங்களின்படி நீதி மன்றங்கள் உதவுகின்றன.
909, assistance, humanitarian/Humanitarian assistanceமனிதநேய உதவி

மாந்தநேய உதவி  

  மனிதாபிமான உதவி என்பர். அபிமானம் என்பது அயற்சொல்லின் தமிழ் வடிவம். நன்மானம் எனலாம். சில இடங்களில் தன்மானம் என்றும் பொருள்படும்.  

மாந்தநேய உதவி என்பது மாந்தரால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகள், இயற்கைப் பேரழிவுகளின் போதும் அவற்றுக்குப் பின்னரும் உயிர்களைக் காப்பாற்றவும் துன்பங்களைத் தணிக்கவும் மக்களிடையே பேணவும் நல்கப்படும் உதவியும் செயற்பாடுகளுமாகும். இவை உணவு, தண்ணீர், தங்குமிடம், மருத்துவ உதவி, பேணுகை, பாதுகாப்பு முதலிய பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியன. மாந்த நேய உதவி என்பது மனிதநேயம், பாகுபாடற்ற தன்மை, நடுநிலைமை தன்னுரிமை முதலிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.   மாந்த நேய உதவியில் பன்னாட்டு மாந்த நேயச் சட்டம் [International humanitarian law(IHL)] குறிக்கத்தக்க இடத்தை வகிக்கிறது. இஃது ஆயுத மோதலின் சட்டங்கள் (laws of armed conflict) என்றும் குறிப்பிடப்படுகிறது. இது போரின் நடத்தையை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும் (இலத்தீனில் jus in bello ;jus=சட்டம்;  bellō = போர்) இது பன்னாட்டுச் சட்டத்தின் பிரிவு ஆகும். இது போர்களில் பங்கேற்காதவர்களைப் பாதுகாப்பதன் மூலம் ஆயுத மோதலின் விளைவுகளைக் குறைக்க முயல்கிறது  மேலும், போராளிகளுக்குக் கிடைக்கும் போர்க்கருவிகளையும் வழிமுறைகளையும் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.
910. assistance, immediate/Immediate assistanceஉடனுதவி  

உடனடி உதவி  

உதவி தேவைப்படும் நேர்வில், எவ்வகைக் காலத்தாழ்ச்சியுமின்றி உடனடியாக அத்தகைய உதவியைச் செய்தல். இதனைத்தான் திருவள்ளுவர் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. ”  (திருக்குறள் ௱௨ – 102) எனக் குறிப்பிடுகிறார்.   உதவித் தேவைப்படுநரும் உதவுநரும் தனியராகவோ பலராகவோ குறிப்பிட்ட பிரிவை அல்லது ஊரை அல்லது நகரை அல்லது அமைப்பை அல்லது மாநிலத்தை அல்லது நாட்டை குறிப்பதாகவோ இருக்கலாம்.  

சட்டத்தில் குற்றச் செயலால் பாதிப்புறுநருக்கோ சில நேர்வுகளில் குற்றம் சாட்டப்படுநருக்கோ தேவைப்படும் உதவியையும் குறிக்கும்.

(தொடரும்)

Monday, January 13, 2025

தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 

தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா?  – இலக்குவனார் திருவள்ளுவன்



நலம், வளம், தளர்வின்மை, விடாமுயற்சி, நம்பிக்கை, ஆற்றல், வெற்றி, பெருமை, செல்வம், இன்பம், மகிழ்ச்சி, புகழ், உயர்வு, சிறப்பு, வாணாள், துணிவு, எல்லாமும் பெற்றுத் தமிழுடன் நூறாண்டு வாழ இத்தமிழர் திருநாளில் வாழ்த்துகிறேன்.

அதே நேரம் தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா என்ற சிந்தனையும் எழுகிறது.

தமிழர் திருநாளைத் தமிழர் திருநாள் என்றுகூடச் சொல்ல மனமின்றித் தமிழரே திராவிடர் திருநாள் என்கின்றனரே! தமிழ் நாடாக இருந்தாலும் பிற நாடாக இருந்தாலும் தமிழர் கொண்டாடும் பொழுது அது தமிழர் திருநாளே! தமிழ்க் குடும்பமொழியினர் கொண்டாடும் பொழுது தமிழ்க்குடும்பத் திருநாள். அவர்கள் அதனைத் திராவிடர் திருநாள் என்றால் பரவாயில்லை. ஆனால், தமிழரே தமிழர் திருநாளைத் திராவிடர் திருநாள் என்பது எப்படி ஏற்புடைத்தாகும்?

இன்னும் ஒரு சாரார் பொங்கல் திருநாளைச் சங்கராந்தி என எழுதியும் பேசியும் பரப்பியும் வருகின்றனர். நாமோ இவர்களுக்குப் புகழ்மாலை சூட்டி வருகிறோம். அப்படி என்றால் தமிழர் திருநாள் எனக் கொண்டாடும் தகுதியை நாம் இழந்துவிட்டோம் என்றுதானே பொருள்?

“நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” எனப் பதினொன்றாம் நூற்றாண்டிலேயே உரையாசிரியர்  இளம்பூரணர் நாம் யார் என்னும் உண்மையைக் கூறியுள்ளார். நாம் மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழே! ஆம். அரசியல் யாப்பின்படி இந்தியராக இருந்தாலும், நாம் தமிழ் மொழியர், தமிழ் இனத்தர், தமிழ் நாட்டர். ஆனால் திராவிட மொழியராக -திராவிட இனத்தவராக – திராவிட நாட்டவராகப் பறைசாற்றிக் கொள்கிறோம். இது குறித்து நாம் வெட்கப்படுவதில்லை. இவ்வாறிருக்க, தமிழர் திருநாளைக் கொண்டாடுவதற்கு என்ன தகுதி உள்ளது?

நாம் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் தமிழை மறந்து விடுகிறோம். தமிழைத் தமிழாகப் பேசுவதில்லை. தமிழைத் தமிழாக எழுதுவதில்லை. தமிழ்ச் சொற்களை மிக மிகக் குறைவாகவும் அயற்சொற்களை மிக மிக மிகுதியாகவும் கலந்தே பேசுகிறோம். அஃது என்ன மொழி என்று நமக்கே தெரியாது. என்ன மொழி என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒலிக்கோவையும் அயற் சொற்களும் கலந்த கலவையைப் பேசும் எழுதியும் வரும் நாம் தமிழர் திருநாள் கொண்டாடுவதற்குத் தகுதியுடையவர்தாமா?

இன்றைய கலைவடிவங்களில் ஒன்றே திரைக்கலை. வெள்ளித்திரையும் சின்னத்திரையும் திரைக்கலையில் அடங்கும். ஆனால் பெரும்பாலான படங்களின் பெயர்கள் தமிழாக இல்லை. இலக்கியம் என்று சொல்லும் அளவிற்குப் பல திரைப்பாடல்கள் வந்தன. இன்று பெரும்பாலான பாடல்களில் பிற மொழிச்சொற்கள் மேலோங்கி இருக்கும். அல்லது சொற்களே இல்லாத ஒலிக்கோவையாக இருக்கும். நாம் இரும்புக் காதினர்போல் கேட்டும் கேளாச் செவியராக இருப்போம். தமிழராகப் பிறந்தும் தமிழராக வாழா நாம் தமிழர் திருநாள் கொண்டாட என்ன தகுதியிருக்கிறது?

தமிழர்கள் கட்டும் தமிழ்க்கோயில்களில் தமிழ்க் கடவுளரின் படிமங்கள் இருக்கின்றன. சாதிகளற்ற தமிழ்க் கடவுளர்களின் படிமங்களில் பூணூல் எதற்கு? திருமுருகன் பெயரை மறந்து சுப்பிரமணியன் என்றும் பாலசுப்பிரமணியன் என்றும்  தீனரீசன், தீட்சிதன், மயூரவாகனன் மனோதீதன், செயபாலன், இசுகந்தகுரு, சுவாமிநாதன், சண்முகம்,  சரவணபவன், செளந்தரீகன், சுகிர்தன், சுசிகரன், சுதாகரன், சுப்ரமண்யன், கிரிசலன் என்பன போன்ற பல சமற்கிருதப் பெயர்களாலும் வெட்கமின்றிக் குறிப்பிடுகிறோமே!

அடியார்க்கு நல்லானைப் பக்தவத்சலன் என்றும் அம்மையப்பனைச் சாம்பசிவன் என்றும் உலகுடையானைச் சகதீசுவரன் என்றும் கேடிலியை அட்சயன் என்றும் சொக்கனைச் சுந்தரன் என்றும் தாயுமானவனை மாத்ருபூதம் என்றும் தான்தோன்றியைச் சுயம்பு என்றும் தூக்கிய திருவடியனைக் குஞ்சிதபாதன் என்றும், ஆலமரச் செல்வனைத் தட்சிணாமூர்த்தி என்றும் பெருவுடையானைப் பிரகதீசுவரன் என்றும் மாதொருபாகனை அர்த்தநாரி என்றும் வழித்துணையா னைமார்க்க சகாயன் என்றும் அண்ணாமலையானை அருணாசலேசுவரன் என்றும் பிறைசூடனைச் சந்திரசேகரன் என்றும் இன்னபிறவாக இறைவர்களின் பெயர்களைச் சமற்கிருதமாக்கியதை ஏற்றுப் பயன்படுத்தி உணர்வற்றப் பிண்டங்களாக வாழ்ந்து வருகிறோமே! தமிழ் உணர்வற்ற நாம், தமிழர் திருநாள் கொண்டாடத் தகுதி உள்ளதா?

கடவுளர் பெயர்களை மாற்றியது மட்டுமல்ல. வழிபாட்டிலும் தமிழ் இல்லை.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

என்றார் திருமூலர்.  (திருமந்திரம் 81). சமற்கிருதத்தால் நாம் கடவுளை அழைத்தால் அவர் எப்படி அருள்வார்? அரசின் அறிவிப்பின்படிச் சில கோயில்களில் மட்டும் அழைபேசியில் அழைத்தால் பூசாரி வந்து தமிழில் வழிபாடு செய்வாராம். ஆனால், நடைமுறையில் இஃது இல்லை. ஏன்? தமிழில் மட்டும்தான் வழிபாடு. அழைத்தால் வந்து சமற்கிருத வழிபாடு என்று சொல்ல வேண்டியதுதானே! இதற்குக்கூட மனமில்லா நாம், தமிழர் திருநாள் கொண்டாடத் தகுதி உள்ளவர்தாமா?

அக்சா, அட்சரா, அட்சிதா, அசுவிதா, கர்சிதா, கலிமா, கனிகா கனிசுமா, கசோல், கட்சிகா, கஃச்வி, உமாமாகேஃச்வரி, கிரிசா, சக்திப்ரியா, சடாட்சரி, சடாதாரி, கமலா வர்சினி, கரிட்சிணீ , கமலாசிரீ, அகேமியா, அக்சரா, அக்சிதா, அக்ம, அர்விகா, அக்சா,  அட்சரா, அட்சிதா, அஃச்விதா, கர்,ஷிதா கலிமா கனிகா கனிஃச்மா, கசோல், கட்சிகா, கஃச்வி என்றெல்லாம் பொருள்புரியா சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறோமே! உண்மையிலேயே நாம் தமிழர்கள்தாமா? தமிழர் திருநாள் கொண்டாடக் கிஞ்சித்தும் தகுதி உள்ளதா? “தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக!” எனத் தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் முழங்கியமை இவர்களின் செவிகளில் ஏறவில்லையா?

தமிழில் பயின்ற பழந்தமிழர்கள்தான் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள் முதலிய புகழ்மிகு இலக்கியங்களைப் படைத்தனர்; உலகம் புகழும் கல்லணை, கலைநுட்பம் மிக்க கோயில்கள் முதலியவற்றைக் கட்டினர்; பருவநிலைக்கு ஏற்ற அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டினர்; சிற்பக் கலைக்குக் கோயில்கள் மட்டுமல்லாமல் மாமல்லபுரமும் தலைநிமிர்ந்து நிற்கிறது; வானக்குடை(பாராசூட்டு) அமைப்பு, செயற்படும் வகை குறித்து போகர் சித்தர் குறிப்பிட்டுள்ளார்; தொடர்பான அறிவியல் நூல்கள் இல்லாவிட்டாலும் வானூர்திகள் குறித்து இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். நோய்நாடி அதன் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடும் சிறந்த தமிழ் மருத்துவங்கள் இன்றும் சிறந்து விளங்குகின்றன. ஆனால், கல்வியில் தமிழ் மெல்ல மெல்ல – அல்ல அல்ல விரைவாகவே மறைந்து அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியில் தமிழையே இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் திருநாள் எனக் கொண்டாடுவதற்கு என்ன தகுதி உள்ளது?

பொங்கல் வாழ்த்து என்றோ பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்றோ தைத்திருநாள் வாழ்த்து என்றோ தமிழர் திருநாள் வாழ்த்து என்றோ வேறுவகைகளில் தமிழில் கூறாமல் ஆங்கிலத்தில் அல்லவா வாழ்த்துகிறோம். தமிழர் திருநாளைக் கொண்டாட என்னதான் தகுதி நம்மிடம் உள்ளது?

இவ்வாறு எங்கும் எதிலும் தமிழைத் துறக்கும் நாம்

நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ?
 (மாக்கவி சுப்பிரமணிய பாரதியார்)

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (திருவள்ளுவர், 
திருக்குறள், ௬௱௫௰௨ – 652)

தை 01, 2056 /14.01.2025

Followers

Blog Archive