(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – தொடர்ச்சி)
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்
3
ஆமாம். நீங்கள் மனப்பாடம் செய்வதுபோல் என் புதினத்தை நன்கு படித்துள்ளீர்கள். உங்களிடம் படமாக்கும் பொறுப்பை ஒப்படைப்பது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இப்பொழுது உணவுப் பொருள்களில் செய்யும் கலப்படத்தை உணராமலும் உணர்ந்தாலும் தட்டிக் கேட்காமலும்தான் மக்கள் இருக்கின்றனர். அப்புறம் எங்கே மொழிக்கலப்பைத் தடுப்பார்கள் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இளைஞர்கள் பலர் நாம் தமிழ்த்தேசியர்கள் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என்று சிறிது நம்பிக்கை வருகிறது.
இவற்றை உரையாடலில் கொண்டு வராமல் திரைக்கதைக் குறிப்பில் காட்சி வடிவில் கொண்டு வந்தால்தான் சரியாக இருக்கும்.
சரிதான். வேறு என்ன என்ன மாதிரியான உரையாடல்கள்? காட்சி அமைப்புகள்? தேவை என எதிர்பார்க்கிறீர்கள். தொடக்கத்தில் விறுவிறுப்பிற்காகச் சில உரையாடல்களையும் உங்கள் கதைப் போக்கிற்கேற்ற காட்சிகளையும் சேர்க்கவேண்டும் என்றீர்களே!
நாலைந்து முறையாவது சத்தியம் கேட்பதுபோலும் சத்தியம் வைப்பதுபோலும் காட்சிகள் இருக்க வேண்டும்.
அப்படி ஒன்றும் என் கதையில் தேவைப்படவில்லையே!
ஏன், தேவைப்படவில்லை. மாறன் ஊருக்குப் போய்விட்டு ஒரு வாரத்தில் திரும்புவதாக மல்லிகையிடம் சொல்கிறான் அல்லவா? அப்பொழுது அவள் அவனிடம் சத்தியம் கேட்க வேண்டும். “சத்தியமாக வருவாயாடா” எனக் கேட்டு விட்டு அவன் தயங்கினான் என்றால் இவளாகவே அவனது கையை எடுத்துத் தன் தலையில் வைத்துச் “சத்தியம்” என்று சொல்ல வேண்டும்.
எதற்கு அப்படிச் சொல்ல வேண்டும். “சத்தியம்” என்று சொல்லாமல் சொல்லக் கூடாதா?
இதெல்லாம் தொடரின் மரபு. பெரும்பாலும் வஞ்சகர்களும் சதிகாரர்களும்தான் இப்படிச் சத்தியம் கேட்க வேண்டும். மற்றொன்றைக் குறிப்பிடுகிறோம். மல்லிகை வைக்கும் குழம்பில் உப்பு அதிகமாக உள்ளது என அவளை அனைவரும் குற்றம் சாட்ட வேண்டும். ஆனால், உப்பை வேண்டுமென்றே புனிதா கலந்திருக்க வேண்டும். இதனை மல்லிகையும் அறிவாள். ஆனால் புனிதா மல்லிகையிடம் நீ நான் உப்பு கலந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்க வேண்டும்.
இதனால் மல்லிகைக்குத்தானே பாதிப்பு. அவள் எப்படிச் சத்தியம் செய்வாள்?
அதெல்லாம் அப்படித்தான். அவள் மிகவும் நல்லவள். எனவே, தான் செய்யாக் குற்றத்திற்கான பழியை ஏற்றுக் கொள்வாள்.
மாறனும் மல்லிகையும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் அல்லவா? மல்லிகையின் சித்தியின் உறவினர் பெண் புனிதாவும் மாறனை விரும்புவதாகக் காட்சி அமைக்க வேண்டும். ஆனால், சித்தி மாறனிடம் “நீ முல்லையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” எனச் சத்தியம் வாங்க வேண்டும்.
அவன் எப்படிச் சத்தியம் செய்வான்?
முல்லையைத் திருமணம் செய்துகொள்வேன் என்று அவன் கையை எடுத்துத் தன் தலையில் வைத்து இவளே சொல்ல வேண்டும். இப்படிச் சில காட்சிகள் உள்ளன. கதைப் போக்கில் இடையிடையே சொல்கிறோம். மற்றபடி உங்கள் கதையில் நாங்கள் குறுக்கிட மாட்டோம்.
அது சரி, இடையில் மல்லிகை மாறனை “டா” போட்டுப் பேசுவதாக உள்ளதே!
ஆம். கதையில் காதலியும் மனைவியும் காதலனாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும் “டா” போட்டும் அவன், இவன் என்று சொல்லியும்தான் பேச வேண்டும்.
அப்படியென்றால் காதலனும் கணவனும் காதலியையும் மனைவியையும் “டி” போட்டுப் பேச வேண்டுமா?
அச்சச்சோ! மறந்தும் அப்படி எழுதி விடக் கூடாது. இவர்கள் அவர்களை மரியாதையாக, வாங்க, சரிங்க, சொல்லுங்க, மன்னித்துக்கோங்க என்றுதான் பேச வேண்டும். மரியாதைக் குறைவாகப் பேசக் கூடாது.
எல்லா இடத்திலும் அப்படித்தானா?
ஆமாம். எல்லா இடத்திலும் அப்படித்தான். மாதிரிக்குச் சில சொல்கிறேன். பாருங்கள்.
மாறன் நேரம் கழித்து வருகிறான். அப்பொழுது நடைபெறவேண்டிய உரையாடலைப் பாருங்கள். .
மல்லிகை: ஏன்’டா, இவ்வளவு நேரமாச்சுடா?
மாறன்: இல்லைங்க நேரமாயிருச்சுங்க
மல்லிகை: அதான்’டா. ஏன் நேரமாயிருச்சுடா?
மாறன்: அதாங்க நேரமாயிருச்சுங்க.
மல்லிகை: ஏன்’டா அறிவோடத்தான பேசுறயாடா? வேற எவளையாவது பார்த்து வரயாடா?
மாறன்: ஏம்மா இப்படிச் சொல்றீங்க. உங்களை விட்டு வேற யாருக்கிட்ட நான் போவேங்க.
மல்லிகை: அதானடா. உனக்கு வேற யாரடா வருவா.
இன்னொரு காட்சி பார்ப்போம்.
டேய்! டேய்! நாம எங்காவது வெளியே போயிட்டு வருவோம்டா
உத்தரவு போடுங்க அரசியாரே. நீங்க எங்கே சொல்றீங்களோ அங்கே போவோம்ங்க.
ஏண்டா நான் உன்னைச்சொல்லச் சொன்னா நீ என்ன சொல்றயாடா. உனக்குச் சுய அறிவே இல்லையாடா, ஏதாவது சொல்லுடா
சரிங்க. நாம வண்டியில் எங்காவது நீண்ட தூரம் போய் வருவோமாங்க.
ஆமாண்டா அதுதான் சரி. வாடா போகலாம்டா
மற்றொரு காட்சி
டேய் எனக்குப் பசிக்குதடா!
உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். இட்லி,தோசை, பூரி, சப்பாத்தி வேண்டுமா? அல்லது இறைச்சி மீன், கோழி வேண்டுமா? சொல்லுங்கள். இப்பொழுதே கொண்டுவந்து தரச் சொல்கிறேம்மா.
ஏண்டா பசிக்குதுங்கிறேன்’டா.
சரி. வாங்க. நாம் போய்ச்சாப்பிடுவோமாங்க.
ஏண்டா பசிக்குதுங்கிறேன்’டா. உனக்குப் புரியலையாடா?
ஏங்க நான் சமைத்தா தர முடியும்ங்க.
ஏன்’டா சமைச்சுத் தரக்கூடாதாடா? சொல்லுடா.
சரிங்க. நீங்க சொல்லச் சொல்லச் சமைச்சத் தரங்க. போதுமாங்க.
என் செல்லம்டா. இப்போதாண்டா எனக்கு மகிழ்ச்சியா இருக்குதுடா.
ஏங்க. இதெல்லாம் காதலன் காதலி பேசுற மாதிரி இல்லையேங்க.
இல்லைங்க. நீங்க அந்தக் காலம்மாதிரி நினைக்கிறீங்க. இப்ப இதுதாங்க, காதலி-காதலன் பேசும் முறை. பெண்கள் பையன்களை வாடா போடா என்று பேசுவதும் பையன்கள் பெணகளை மரியாதை கொடுத்துப் பேசுவதுமே இன்றைய பெண்கள் விருப்பம். இதில் உங்கள் கதையில் எந்தச் சிதைவும் இருக்காது.
சரிங்க. இன்றைக்கு இதுவோடப் போதும். மீதியை நாளைக்குப் பார்ப்போம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment