Saturday, September 20, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தொல்காப்பியமும் பாணினியமும் – 3 தொடர்ச்சி)

தொல்காப்பியம் தமிழர்க்குக் கிடைத்த முதலாவது நூலே தவிர, அதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் அல்ல. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி , பக்கம்: 10) பின் வருமாறு உரைக்கிறார்:

“தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது.  தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில.  ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது.  தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும்.  எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே  இலக்கணம் தோன்றும். இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று.  தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன.  தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமன்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது.  ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி, அதுதான் தமிழின் முதல் நூல் என்று கருதிவிடுதல் கூடாது.”

 “நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே முதல் நூலாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்றும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத் துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளா ரென்பதும் அவர்தம் நூலில் பற்பல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பனபோலக் கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும். தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்து கொள்ள உதவும் சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம் புறக்கணித்து விடக் கூடாது. அதற்குத் துணை செய்யும் வகையில் தொல்காப்பியக் கருத்துகள் நாட்டில் பரவவேண்டும்” என்றும்  பேராசிரியர் புலவர் மா.நன்னன் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம்.23) குறிப்பிடுகிறார்.

வேதவிற்பன்னர் சுந்தர் இராசு தமது இருக்குவேத ஆய்வுகள்(Rig Vedic Studies) என்னும் நூலில் தமிழ்-சமற்கிருத உறவு குறித்துக் கூறுகிறார். ஆரியர்களும் ஆரியச் சார்பினரும் ஐந்திரம் என்னும் தமிழ் நூலைச் சமற்கிருத நூலாகக் கற்பித்தும் ஐந்திரம், பாணினியம் முதலான சமற்கிருத நூல்களின் வழியேதான் தொல்காப்பியத்தை எழுதினார் எனவும். என்ப, என்மனார் முதலான முந்து நூலினரைக் குறிப்பிடுவது சமற்கிருத நூல்களைத்தான் என்றும் தவறாகத் திரித்துக் கூறுகின்றனர். “சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே; வேதங்களில் தமிழின் தாக்கம் பெரிது; இருக்கு வேதத்தில் கையாளப் பெற்றுள்ள சமற்கிருதம் தமிழர்களின் மொழியால்தான்  உருப்பெற்றது; வேதத்தின் மொழியைப் படைத்த பிருகற்பதி, பழந்தமிழிலிருந்து  எழுத்துகளை எடுத்துக் கொண்டு சில மாற்றங்களைச் செய்து சமற்கிருத எழுத்துகளை உருவாக்கினார்; கி.பி.முதல் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சமற்கிருத எழுத்துகள் உருவாக்கப்பட்டன; தமிழ் எழுத்துகளோ கிறித்துவிற்குப் பல நூற்றாண்டுகள் முன்னமேயே வழக்கில் இருந்தன”  இத்தகைய பிற்பட்ட வரலாறு உடைய சமற்கிருதத்தின் இலக்கண நூல்களைத் தொல்காப்பியர் உள்ளவாங்கியுள்ளார் எனக் கூறுவது எத்தகைய அறியாமை? தொல்காப்பியம் இப்பொருண்மையில் எழுதப்பெற்ற முதனூலே.

தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன

      இது குறித்து அறிஞர் கா.பொ. இரத்தினம், (அகநானூற்றுச் சொற்பொழிவுகள் : பக். 43-44) பின்வருமாறு விளக்குகிறார்.

“தொல்காப்பியத்துள்,

என்மனார் புலவர்”

என மொழிபஉணர்ந்திசி னோரே

பாடலுட் பயின்றவை நாடுங் காலை”

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

” மொழிபபுலன்நன் குணர்ந்த புலமையோரே

நல்லிசைப் புலவர், , , , வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே

நேரிதி னணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே

என்றிவ்வாறு காணப்படுகின்ற சொற்றொடர்கள், தொல்காப்பியர் காலத்தில் பல தமிழ் நூல்கள் பெருவழக்கிலிருந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன, தொல்காப்பியம் இயற்றப்படு முன் அந் நூல்கள் எவ்வளவு ஆண்டுகளாக விளங்கிவந்தன என்பதற்கு விடை காண முடியாதிருக்கிறது, தொல்காப்பியத்துக்குப் பின்னெழுந்த பல இலக்கண நூல்களுள் ஒன்றாகிய நன்னூலுக்கும் தொல்காப்பியத்திற்கு மிடையிலேயே ஆயிரத்திற்கு மேற்பட்ட வருடங்கள் கழிந்தனவெனில் தொல்காப்பியத்திற்கும் அதற்கு முன்னிருந்த இலக்கண நூல்களுக்குமிடையில் எவ்வளவாயிர வருடங்கள் கழிந்திருக்கும்? தொல்காப்பிய இலக்கணம் தோன்றிய காலத்திருந்த பல நூல்கள்கூட நமக்குக் கிடைக்கவில்லை, தொல்காப்பியம் கூறும் சில இலக்கணங்களுக்குரிய இலக்கியங்கள மறைந்து விட்டன. 

   “தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே”

எனுமித் தொல்காப்பியச் சூத்திரத்தில் வழிநூல்கள் செய்யும் முறை நான்காக வகுக்கப் பட்டிருக்கிறது. தொகுத்தும், விரித்தும், தொகுத்து விரித்தும், மொழி பெயர்த்தும் செய்யப்பட்ட நூல்கள் தொல்காப்பியர் காலத்திலிருந்தன. இந் நூல்களைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது. “

Friday, September 19, 2025

நாலடி நல்கும் நன்னெறி 14: நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – தொடர்ச்சி)

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்

எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக்

கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்

கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

(நாலடியார் பாடல் எண் 124)

பதவுரை: அழல் – நெருப்பு, தீக்கொழுந்து, வெப்பம்; நெய்போல்வ தூஉம் – நெய்போன்ற தன்மை கொண்ட பொருளும்; உயர்வு சிறப்பும்மை நெய்யின் தன்மையையும், புண்களை யாற்றும் இயல்பையும் காட்டுகிறது. போல்வது ஒப்பில் போலி ; எரிப்ப சுட்டு- உடம்பு வேகும்படி சுட்டு;  எவ்வ நோய்-துன்பந் தரும் நோய்; பரப்பக் கொடுவினைய ராகுவர்-மிகக் கொடிய தீ வினைகளைச் செய்பவராவர்; கோடாரும்- நடுவு நிலைமையுடையவரும்;  கோடி தவறி

  கடுவினைய ராகியார்ச் சார்ந்து – பாவச்செயல்களை யுடையவரைச் சேர்வராயின்; கோடிக் கடுவினைய- மிகப் பலவாகிய பாவச்செயல்களை யுடையவர் என்றும் பொருள் கொள்வர்.

பொருள்:

நெய் சுவையானது; ஊட்டம் தருவது; வலிமை தருவது. ஆனால் நெருப்பிலிட்டுக் காய்ச்சும் பொழுது நெய் தெறித்து உடலில் பட்டால் என்னாகும்? பெருந்துன்பம் உண்டாக்கும். அல்லது துன்பம் தரும் நோயை உண்டாக்கும். ஊட்டம் தரும் நெய்போன்ற எப்பொருளும் தீயின்பாற்பட்டால் துன்பமே விளைவிக்கும். அதுபோல் நெறிதவறாத நல்லோரும் தீவினையோர் பக்கம் சேர்ந்தால் தாமும் தீயராய் மாறிப் பிறருக்குத் துன்பம் விளைவிப்பர். ஆதலின் தீவினை புரிய – தீ வினையோர் உடன் சேர – அஞ்ச வேண்டும்.

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.   (௨௱௨ – 202) என்னும் குறள் மூலம்

தீயவை அவற்றைச் செய்யபவருக்கும் அதனால் பா்திப்புறும் பிறருக்கும் தீமைகளையே விளைவித்தலால் தீயவற்றைத் தீயினும் கொடியனவாக அஞ்சி விலக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

.நாலடியாருக்கு முன்னதாகவே திருவள்ளுவர் திருக்குறளில் தீ வினை யச்சம் குறித்துத் தனியதிகாரமமே வைத்துள்ளார். தீ நட்பு, கூடா நட்பு,கூடா ஒழுக்கம், பிறன் மனை விழையாமை முதலிய பலவும் தீ வினை அச்சத்தை வலியுறுத்துவனவே.

நல்லவர்களும் தீயோரின் பக்கம் சேர்ந்தால் தீவினைக்குத் துணைபுரிவோர் ஆவர். தீய செயல்கள் குறித்து அஞ்சி விலக எண்ணுபவர்கள் தீயோர் பக்கமும் சேரக்கூடாது.

எனவேதான் இடைக்கால ஒளவையாரும்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது.

என்றார்.

நாம் தீயோர் பக்கம் சேராமல்

தீயன விளைவிக்காமல் இருப்போம்!

Wednesday, September 17, 2025

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 




? ஐயா, வணக்கம். உங்களிடம்  தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது தொடர்பாகச் சில வினாக்களைத் தொடுத்து விடை கண்டறிந்து வாசகர்களுக்கு அளிக்கலாம் எனக் கருதுகிறோம்.

# வணக்கம். உங்கள் வாசகர்களுடன் செவ்வி வழித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி. பலரும் செம்மொழித் தகுதி தமிழுக்கு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது போல் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய முதல் மொழியான தமிழ் அறிவியல் முறையில் அமைந்து செம்மையான மொழியாகவே தோன்றியுள்ளது. செம்மொழித் தன்மை மிக்க தமிழுக்கு அதற்கான அறிந்தேற்பு அல்லது தகுதியேற்பு அல்லது  அங்கீகாரம் என்பதுதான் இப்பொழுது இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

?  அப்படியானால்  செம்மொழி என்று தமிழ் எப்பொழுது குறிக்கப்பட்டது.

# செம்மையான மொழி என்னும் பொருளில் செம்மைத் தமிழ்  செந்தமிழ்  என அழைக்கப்பட்டுள்ளது. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள தொன்மையான நூல் தொல்காப்பியம். உலக மொழிகளிலும் கிடைத்துள்ள நூல்களில் இதுவே  தொன்மையான நூல் ஆகும். தொல்காப்பிய நூற்பா 881 இல் செந்தமிழ் நிலத்து என்றும் நூற்பா 882 இல் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் என்றும் தொல்காப்பியர் செந்தமிழ் மொழி வழங்கிய நிலம் என நம் நாட்டைக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்திற்கு முன்னுரை போல் பாயிரம் எழுதிய பனம்பாரனார் “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்” என்கிறார். தொல்காப்பியர் கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.மு. 7 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச சேர்ந்தவர் என அறிஞர்கள் கூறுகின்றனர். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்தின் சார்பில் கூடிய தமிழறிஞர்கள் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என வரையறுத்துள்ளனர். எனவே, அப்பொழுதே செந்தமிழாக விளங்கிய தமிழின் நிலை குறிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பல ஆயிரம் இலக்கியங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவதே இலக்கணம் என்பதால் தொல்காப்பியருக்குப்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழாக நம் அருமைத் தமிழ் மொழி விளங்கியதைப் புரிந்து கொள்ளலாம். தொல்காப்பியருக்குப் பின்னரும், குற்றமில் செந்தமிழ், சீரின்மலி செந்தமிழ், பண்பட்ட செந்தமிழ், பழுத்த செந்தமிழ், என்றெல்லாம் காலம் தோறும் தமிழின் செம்மொழித் தன்மை குறிக்கப்பட்டுள்ளமையால்  அன்னைத் தமிழின் செம் மொழித் தன்மை காலம் தோறும் உணரப்பட்டுப் போற்றப்பட்டதை உணரலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் செம்மொழியாக உள்ளதெனில் ஏன் அது குறித்து இப்பொழுது வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்தது?

#  நல்ல கேள்வி.  ஆரியத்தின் தவறான செல்வாக்கால் தமிழின் தாய்மை, தொன்மை, முதன்மை, தூய்மை, முதலான பல சிறப்புகளும் மறைக்கப்பட்டன. சமற்கிருதம் தமிழுக்கு மிகவும் பிந்தைய கால மொழியாய் இருப்பினும் தமிழ்ச் சொற்கள் பலவற்றை அம்மொழி உள்வாங்கியிருப்பினும் தமிழ் எழுத்து அமைப்பைப் பார்த்தே அம் மொழி தனக்குரிய எழுத்து வடிவத்தை அமைத்திருப்பினும் அதைத் தேவ மொழி என்றும் பிற மொழிகளுக்குக் கடன் கொடுக்குமே அன்றிக் கடன் வாங்காது என்றும் தவறாகப் பரப்புரை மேற்கொண்டனர். எனவே, காலந்தோறும் தமிழ் அறிஞர்களும் நடுவுநிலைமையுடன் தமிழின் சிறப்பை வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

அண்மைக்காலங்களில் தமிழின் செம்மொழித் தன்மையை வலியுறுத்தவர்கள் என யார், யாரைக் கூறலாம்?

#  சீகன்பால்கு என்னும் ஐரோப்பிய அறிஞர் செருமானிய மன்னரிடம் தமிழ்தான் உலகில் மிக உயர்ந்த நிலையிலுள்ள மொழி என்றும் செம்மொழி என்றும் விளக்கித் தமிழின் அருமையை மன்னர் அவையில் விளக்கியுள்ளார். வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர் காலத்தில் இருந்த சங்கராச்சாரியாரிடம் தமிழின் செம்மொழித் தன்மையை விளக்கி  இந்திய நிலப்பகுதியில் உள்ள மொழிகளுக் கெல்லாம் தந்தையாகத் தமிழ் விளங்கியது என விளக்கியுள்ளார். தமிழ் மொழி தனித்து இயங்கக் கூடிய உயர்தனிச் செம்மொழி என அறிஞர் காலுடுவெல் அவர்கள் தம்முடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (Comparative Studies of Dravidian Languages) என்னும் நூலில் (1856) நன்கு ஆய்ந்து விளக்கியுள்ளார்.  சூரிய நாராயண சாத்திரியார் என்னும் தம் பெயரை மாற்றி வைத்துக் கொண்ட அறிஞர் பரிதிமாற்கலைஞர்  அவர்கள், தமிழ் வியாசங்கள் என்னும் தம் நூலில் (1897) எவ்வகையாக ஆராய்ச்சி செய்தாலும் தமிழே உயர்தனிச் செம்மொழி என உறுதிபட ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார். சங்கப் பாடல்கள் செம்மொழி இலக்கியங்கள் என அறிஞர் (இ)ரெனால், அறிஞர் மெட்டில் ஆகியோர் உலகிற்கு உணர்த்தியுள்ளனர். தமிழ் மிக மிக முற்பட்ட காலத்திலேயே  இத்தகைய வளர்ச்சியைப் பெற்றதாக அறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் விளக்கியுள்ளார்.  இவர்கள் போன்ற அறிஞர்களை நாம் என்றென்றும் போற்றிச் சிறப்பிக்க வேண்டும்.

? தமிழ் மட்டும்தான் செம்மொழியா?

#  உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருப்பினும் இலக்கிய இலக்கணச் சிறப்பு மிக்கவை 600 மொழிகள் மட்டும்தான். இவற்றுள்ளும் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வரலாறு உடையன தமிழ், சீனம், இலத்தீன், ஈபுரு, கிரேக்கம், அராமிக்கு ஆகிய 6 மொழிகள்தாம். இவையும் இவற்றிற்கு அடுத்த நிலையில் உள்ள சமற்கிருதம்,  பெருசியன், அரபி ஆகிய 3 மொழிகளும் செம்மொழிகள் எனப்படுகின்றன.

செம்மொழிக்கான அறிந்தேற்பு அல்லது அங்கீகாரம் என்பது ஏன் தேவைப்பட்டது?

# இந்த நிலப்பரப்பின் மண்ணின் மொழியாகத் திகழும் தமிழ் மொழிச் செம்மொழியாகத் திகழ்ந்தாலும் வந்தேறி மொழிகளான சமற்கிருதம், அரபி, பெருசியன் ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி என்னும் தகுதியின் அடிப்படையில் நிதியுதவிகள் வழங்கப்பட்டமையால், மக்கள் மொழியாகிய தமிழுக்கும் அத்தகுதிக்கான அறிந்தேற்பு வேண்டும் எனத் தமிழறிஞர்களும் தமிழ் அமைப்புகளும் வேண்டின. தமிழ் ஈழம் தனிக் குடியரசாகத் திகழ்ந்த போதும் பிற நாடுகளின் அறிந்தேற்பு அதற்குக் கிடைக்காமையால்தானே இனப்படுகொலை நடந்த பொழுது தட்டிக் கேட்க யாரும் வரவில்லை. தமிழ் மொழிக்குச் செம்மொழிக்கான அறிந்தேற்பு இல்லாமல் போனால் தாழ்த்தப்பட்டு அழிக்கப்படலாம் அல்லவா? அவ்வாறில்லாமல் அறிந்தேற்பு கிடைப்பின் உலகெங்கும் பரப்ப வாய்ப்பு கிட்டும் அல்லவா?

(தொடரும்)


Monday, September 15, 2025

பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 21

புன்கண் கொண்டு இனையவும் பொருள் வயின் அகறல்

அன்பு அன்று

பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை-பாலைக்கலி 1

“புன்கண் கொண்டு இனையவும்” என்பதன் பொருள் “துன்பமான கண் அல்லது துயரத்துடன் கூடிய கண்களுடன் வருந்துதல்  “

அகறல் = அகலுதல் = பிரிதல்

அத்தகைய சூழலில் பொருள் திரட்ட அன்புத் தலைவியை விட்டுப்பிரிதல் அன்பன்று.

தமிழர்களின் பொருள் தேடும் நோக்கம் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதல்ல. முன்னோர் பொருள் இருப்பினும் தன் முயற்சியில் ஈட்டும் பொருளையே பொருள் என்றனர். அப்பொருள் எதற்கு? தம்மிடம் வந்து இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதற்கு. இல்லை என்று நம்மை நாடி வந்து கேட்பவர்களிடம் நாமும் இல்லை என்று சொல்வது எங்ஙனம் சிறப்பாகும்? எனவே, இரப்போர்க்குக் கொடுக்க வேண்டும் என்றே பொருள் தேடினர். இதனைச் சங்கப்பாடல்கள் பலவும் கூறுகின்றன. கலித்தொகையில் இவ்வொரே பாடலிலேயே மூன்று முறை சுட்டிக் காட்டியுள்ளார்.

தலைவன் எதற்குப் பொருள் திரட்டச் செல்கிறான்? மாடு மனை தேர் ஆடம்பரப் பொருள் வாங்கவா? அல்ல! அல்ல!  ஈத்துவக்கும் இன்பத்தை அடைய. ஈதலே இன்பம் என்பது தமிழர் நெறியல்லவா? “ஈதல் இசைபட வாழ்தல்” எனத் திருவள்ளுவரே கூறுகிறாரே! ஆதலின் இல்லார்க்குப் பொருளை வழங்கி இன்பம் அடையப் புறப்படுகிறான். ஏன்? அவனிடம் செல்வம் இல்லையா? இருக்கிறது. ஆனால் அவன் முன்னோர் திரட்டிய செல்வம் அது. தன் சொந்த உழைப்பால் பிறருக்குக் கொடுப்பதுதான் உயர்வு. எனவே,

தன்னை நாடி வந்து இரக்கும் வறியோர்க்குக் கொடுத்து உதவ முடியாதிருப்பது இழிவாகும் என்று எண்ணி, மலை பல கடந்து சென்று செல்வம் தேடக் கருதிச் செல்கிறான்.

“வறுமையால் வாழ வழியில்லை” என வந்து இரப்பவரிடம் இல்லை என்று சொல்வது இழிவல்லவா? எனவே, அத்தகையோர்க்கு வழங்குவற்கான செல்வத்தைத் தேடிச் செல்கிறான்.

வாழ இடம் இல்லை என்று வந்து இரப்பவர்க்குச் சிறிதேனும் கொடுக்க முடியாமல் போனால் இழிவல்லவா? அந்த இழிநிலை வரக்கூடாது என்பதற்காகச் செல்வம் திரட்டச்செல்கிறான்.

இதில் ஒன்றும் தவறில்லையே! ஆனால் தோழி தடை சொல்கிறாளே! ஏன்? புதிதாகத் திருமணம் ஆனவன். தன் அன்பு மனைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். இதனால் அவள் வருந்துவாள் அல்லவா? வருந்துவாளா? இறந்தே விடுவாள்! எனவேதான் தலைவனிடம், “செல்வம் திரட்டச் செல்வது சிறப்புதான். ஆனால் உன் மனைவியை விட்டுப் பிரியலாமா? உடனிருந்தே செல்வம் திரட்டலாமே” என்கிறாள்.

அவள் முதலில் தடை சொன்னதை அவன் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவள் மார்பைத் தழுவி இன்பம் காணாமல் அவன் நீங்கியதும் அவள் இறந்து விடுவாள் என்றதும் பொருளைத் தேடும் முயற்சியில் வாழ்க்கையைத் தொலைக்கலாமா என எண்ணினான்; உடன் மனம் மாறிவிட்டான்.  அது குறித்துப் புலவர் என்ன தெரியுமா சொல்கிறார்?

காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல்

யாழ் வரைத் தங்கியாங்குத் தாழ்பு நின்

தொல்கவின் தொலைதல் அஞ்சி என்

சொல்வரைத் தங்கினர் காதலோரே.

என இது குறித்துத் தலைவியிடம் தோழி கூறுகிறாள்.

காழ் = கட்டுத்தறி; வரை = எல்லை; நில்லாக் = நிற்காத; கடும் களிற்று ஒருத்தல் = பெரும் மதயானை.

யாழ் = யாழிசை; வரை = எல்லை; தங்கியாங்கு = தங்கி நிற்கும் வண்ணம்.

யானை மதம் பிடித்துக் கட்டுத்தறியைக் கடந்து செல்கிறது.  குத்துக்கோல் – அங்குசம் – மூலம் பாகன் அடக்கியும் அடங்கவில்லை. ஆனால் அக்கொடுங்களிறு அடங்கியது. அடக்கியது யார்? அல்லது எதற்கு அடங்கியது? யாரும் அடக்கவில்லை. தமிழரின் யாழிசையைக் கேட்டதும் மயக்குண்டு மெய்ம்மறந்து அடங்கி நின்று விட்டது. அதைப்போல் தலைவனும் அடங்கி அயற்பயணத்தை நிறுத்தி விட்டான். அந்த யாழிசை எது? தலைவியன் அன்புதான் அது. நின்னைப் பிரிந்தால் தலைவி உயிர் துறப்பாள் எனத் தோழி கூறினாள் அல்லவா? அத்தகைய அன்புமிகு தலைவியைப் பிரிய எங்ஙனம் மனம் வரும்? எனவேதான் தலைவன் தலைவியுடன் இருந்தே செல்வம் திரட்டலாம் எனக் கருதிச் செல்வம் திரட்ட அயலகம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டான்.

இதில் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ யானை இசைக்கு வயப்படும் என்பதையும் அவ்வாறு வயப்படுத்தும் ஆற்றல் தமிழரின் யாழிசைக்கு உண்டு என்பதையும் ஒருசேர நமக்கு உணர்த்தி விட்டார்.

 முயன்று உழைத்து ஈட்டும் செல்வம் சிறந்த செல்வமே. ஆனால் அதனினும் சிறந்த செல்வம் உள்ளதே. அதுதான் மனையாளுடனான இன்ப அன்பு வாழ்க்கை. இல்லறம் அல்லவா நல்லறம்! எனவே, மனையாளைப் பிரியாமலேயே செல்வம் திரட்டும் முடிவிற்குத் தலைவன் வந்துள்ளான்.

எனவே, பொருளைத் தேடு. ஆனால் பொருளைத் தேடும் வாழ்க்கையில் நீ வாழ்கையைத் தொலைக்காதே எனப் புலவர் வலியுறுத்துகிறார்.

பொருளைத் தேடு. ஆனால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுத் தேடும் படி வைக்காதே” என்பதை நாமும் பின்பற்றுவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, September 14, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி)

தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார். 

“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும், தொல்காப்பியர் வடமொழியினும் தேர்ச்சியுடையவர் என்று கருதினும், வடமொழி இலக்கண நூல்கள் எனப்படும் ஐந்திரமோ, பாணினியமோ, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தோன்றியன அல்ல என்பதாலும், ஒரு வேளை இருந்தன எனினும் வேற்றுமொழி எழுத்திலக்கணம், முன்னரே பிறந்த ஒரு மொழி எழுத்துக்கு இலக்கணமாக முடியாமையானும், சொல்லும் அதன் புணர்ச்சிகளும், சொற்றொடர்களும் மக்கள் வழக்கில் மரபாக நிலைத்தவையாதலின் பிறமொழி இலக்கணம் பயன்படாமையானும்; பொருள்” என்னும் அறிவுசால் வாழ்க்கை இலக்கணம், வடமொழியில் என்றும் தோன்றாமையாலும், வடமொழி நூல் எதுவும் முதல்நூல் ஆக வழியில்லை. மேலும், பிறமொழி இலக்கண நூலார் எவரும் எழுத்துக்கும்- சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் காண்பர். பிற்காலத்தில்தான் செய்யுள் யாப்பும் (கட்டும்), கருத்துக்கு அழகு செய்யும் அணியும் குறித்து இலக்கணம் செய்வாராயினர். ஆனால், தொல்காப்பியனார் விவரித்த பொருள்” இலக்கணம் குறித்த சிந்தனையே வடமொழியாளரிடத்தில், என்றும் எழவில்லை. பொருள் என்றது சொல்லின் பொருள் விளக்கம் கருதியது அன்று. அது வாழ்க்கை விளக்கம். அதுவும் இலக்கியத்தில் இடம்பெறும் முறையையும் வகையையும் விளக்குவது. அகமும் புறமுமாய்ப் பகுக்கப் பெற்ற இலக்கிய உலகில் அகத்திணை, புறத்திணை எனவும், களவு-கற்பு எனவும், பிறவாறும் வகை செய்யப்பட்டு உலகியல் வாழ்வியல் இணையும் ஆடவரும் மகளிரும் ஆன இரு சாராரும் எய்தும் உணர்வுகளைப் புலப்படுத்தும் காட்சிகளைச் செய்யுளாக்குவதற்கு உரிய இலக்கணத்தை விவரிக்கும் தனிச் சிறப்புடையதாகும்.) 

தொல்காப்பியம் சிறப்பிக்கும் மரபு

‘தொல்லியல் மருங்கின் மரபு’ (எழுத்து.356), ‘தொல்நெறி மரபு’ (சொல்.106: பொருள். 491) ‘சிறப்புடை மரபு’ (சொல்.421) பொருள்.97) ‘மரபுநிலை திரியா மாட்சி’ (பொருள்.48), ‘தெறற்கரு மரபு (பொருள்.148), ‘அறத்தியல் மரபு’ (பொருள்.203), ‘ மரபு (பொருள்.148), ‘அறத்தியல் மரபு’ (பொருள்.203), ‘நிலைக்குரி மரபு’ (பொருள். 216. 368), ‘கெடலரு மரபு’ (பொருள்.238), ‘நாட்டியல் மரபு’ (பொருள்.243), ‘தொகுநிலை மரபு’ (பொருள்.462), ‘மன்பெறு மரபு’ (பொருள்.628) என்று மரபின் சிறப்பைப் பல அடைமொழிகளிட்டுத் தொல்காப்பியம் சிறப்பித்துப் பேசுகிறது. எனவே, தொல்காப்பியம் மூலம் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் தமிழுக்கும் தமிழருக்கும் தொன்மையான மரபு இருந்தமையை உணரலாம்.

தொல்காப்பியத்தை அறியாது வாழ்ந்த மேனாட்டு அறிஞர்கள் சமசுகிருத நூல்களை உயர்வாகவும் தொன்மையாகவும் தமிழ் நூல்களுக்கு முந்தையதாகவும் கருதியமை போல், பாணினியத்தை மட்டும் அறிந்து ஆனால் முழு ஆராய்ச்சி யின்றி அதனைப் புகழ்ந்து தள்ளினர். ஆனால் தொல்காப்பியம் குறித்து அறிந்த கடந்த நூற்றாண்டு மேலை நாட்டினர் தொல்காப்பியத்தின் சிறப்பையும் அட்டாத்தியாயி நூலின் குறைகளையும் உணர்ந்தனர்.

(தொடரும்)

Followers

Blog Archive