(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி)

தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை போன்ற அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக் கூறித் தொல்காப்பியம் சமற்கிருதத் தழுவலன்று எனத் தெரிவிக்கிறார்.(இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்)

ஒலியன்கள்

தமிழில் ஒலியன்கள் சரியாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துகளை உருவாக்கியவர்கள் ஒலியன்கள்பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். அறிவியல் கருவிகள் இல்லாத காலத்திலேயே தமிழ்ப் பேச்சொலிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டியிருப்பது வியப்புக்குரியது என ஒலியனியல் வல்லுநர் தானியல் இயோன்சு(Daniel Jones) வியந்து பாராட்டுகிறார். சமற்கிருத இலக்கணம்-மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்பணினி. இவர் அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவிய் அடிப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளா் என்று விக்கிபீடியா கூறுகிறது.மேலும் சில தளங்களிலும் இக்கருத்துகளைக் காணலாம். இதற்கெல்லாம் காரணம் தொல்காப்பியம் இன்றைய ஒலியனியல் கருத்துகளை அன்றே அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளார் என அறிஞர்கள் கூறுவதால் பாணினியத்திலும் இருப்பதாகப் பொய்யுரைப்பதே ஆகும்.

அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நடைமுறையில் இருந்த தமிழ்நெறி

மிக்குசிகன் மொழியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஏ.எல்.பெக்கர்(A.L.Becker), கீத்து தெயிலர்  (Keith Tailor) ஆகிய இருவரும் தொல்காப்பியர் அறிவுலகிற்குச் செய்த பணி பிளேட்டோவும் அரிட்டாட்டிலும் மேலை அறிவுலகிற்குச் செய்த பணியை ஒத்தது எனப் பாராட்டுகின்றனர். இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், “… ஆதலின், கிரேக்க நாட்டு அரிட்டாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் இலக்கிய நெறி முறைகள் வகுக்கப்படுப் பயிலப்பட்டுப் பாடப்பட்டு வந்தன என அறியலாம்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 149-150) என்கிறார்.

மொழியியலின் மீவுயர் பேராசன்

புலப்பாட்டுநெறி, யாப்பிலக்கணம், கவிதையியல் ஆகியவைபற்றிய முழு இலக்கணம் தந்தவரென்றும் மொழியின் அடித்தளப் பேச்சு வழக்கிலிருந்து கவிதை மொழி வரையிலான மொழியின் எல்லாக் கூறுகளையும் மொழியியல் ஆய்விற்கு உரிய பொருளாக எடுத்துக் கொண்டவரென்றும் மொழியியலின் மீவுயர் பேராசன் என்று அழைக்கப்பட வேண்டியவரென்றும் தொல்காப்பியரின் உயர்வை ஏ.கே.இராமானுசன் சிறப்பிக்கிறார்.(முனைவர் மருதநாயகம், வடமொழி ஒரு செம்மொழியா?, பக்கம் 606)

இடைச்செருகல்கள்

தமிழ் நூல்களிலான இடைச்செருகல்கள் அதன் அழகையும் மதிப்பையும் குறைக்கவும் ஆரியததைத் திணிக்கவும் உண்டாக்கப்பட்டவை. என்று ஆய்வறிஞர்கள் நிலை நாட்டியுள்ளனர். சமற்கிருத நூல்களில் உள்ள இடைச்செருகல்கள் அவற்றுக்கு இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகத் திணிக்கப்பட்டவைஏ.சி.பருனல்(The Ainthira school of sanskrit grammarians , பக்.102)

முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப் பாகுபடுத்தியுள்ளார்.

மக்களில் பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85); செய்யுளியலில் கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்; ஆக  24 நூற்பாக்கள். மேலும், அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது. இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு.

இவை இடைச்செருகல்களே என்பதை உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம். சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான மேற்கோள் பாடல்கள் இல்லாமல் பண்டைய உரையாசிரியர்களே புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி முதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத் தருகின்றனர்

இடைச்செருகல்கள் குறித்து அப்போது நிதியமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன், சென்னை புத்தகக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில்(2.01.2010) நடைபெற்ற நிகழ்ச்சியில், “தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், கலாசாரங்கள், மேல்சாதி – கீழ்சாதி முறைகள், 4 வகை சாதி அமைப்புகள், மனு வருணாசிரம முறைகள் குறித்த கருத்துகள் உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன.

இந்த இடைச்செருகல்கள் களையப்பட்ட உரையைத் தொல்காப்பியத்துக்கு எழுத ச.வே.சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வர வேண்டும்”. எனப் பேசியுள்ளார்.

இவ்வுரையை ஒருவர் மின்மடலாடல் குழு ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழே தெரியாமல் ஆனால்  தங்களைத் தமிழறிஞர்களாகக் காட்டிக்கொண்டு தமிழுக்கு எதிராக எழுதியும் பேசியும்  வரும் கும்பல் எப்பொழுதும் இயங்கிக் கொண்டுள்ளது. அத்தகைய கும்பல் அறிஞர்கள் எவற்றை ஏன் இடைச்செருகல்களாகக் குறிப்பிடுகிறார்கள் என்றெல்லாம் ஆராயாமல், அவற்றிற்கு எதிரான மறு கருத்து இருப்பின் அவற்றைத் தெரிவிக்காமல் பொதுவாக மறுத்து எழுதியுள்ளனர். “நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இடைச்செருகல் என்பதா? ஏன், பிற இடைச்செருகல்களாக இருக்கக் கூடாது? தொல்காப்பியர் காலத்திலேயே சாதிப்பாகுபாடு இருந்தது. தொல்காப்பியம் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது” என்பனபோன்று  எழுதியுள்ளனர். இவை போன்ற கருத்துகளைத் தம் கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழ்ப்பகைவர்கள் உண்மைக்கு மாறாக எழுதியுள்ளனர்; எழுதி வருகின்றனர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்த கருத்துகளே வலிமை வாய்ந்தனவாக உள்ளன (தமிழ்த்துளி வலைத்தளம்). 

(தொடரும்)