(தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – தொடர்ச்சி)

இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்

தொல்காப்பிய இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்  பின்வருமாறு தெரிவிக்கிறார்:- ”தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க  தமிழின் இலக்கணச் சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.  தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப் படலம், சொற்படலம் ஆகிய இருபடலங்களின் அமைப்புமுறையேயாகும்.  இந்தச் சங்கிலித்தொடர்ச் செய்தித்தொகுப்பின் கட்டுக்கோப்பால்தான் இடைச்செருகல் விளையாட்டுகளை இவ்விரு படலங்களிலும் தொல்காப்பியத்தின் பின்வந்தோர் நிகழ்த்தமுடியவில்லை.(நன்றி : செம்மொழிச்சுடர் இணையத்தளம்)

நூல்களில் பிராமணியத்தைத் திணித்து ஆரியத் தழுவல்களாகக் காட்டுவதை விட, நூலாசிரியர்களைப் பிராமணர்களாகக் காட்டினால் பணி எளிதாகும் எனக் கருதிய ஆரியர்கள் தமிழ்ப்புலவர்களுக்குச் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டினர். திரணதூமாக்கினிதான் தொல்காப்பியர் என்றும் (சிரீவல்லபர்தான் திருவள்ளுவர் என்றும்) ஆரியர்கள் கதை கட்டுகின்றனர். இது குறித்து ஏ.சி.பருனால், மெனாண்டர்(Menander) என்ற பெயரை மிலிண்டா என்றும் தெமீட்டுரியசு(Demeterius) என்பதைத் தத்தமித்திரா(Dattamitra) என்றும் மாற்றுவதுபோல் கிரேக்கப்பெயர்களைச் சமற்கிருதப் பெயர்களாக மாற்றும் மன்னிக்க முடியாத ஏமாற்றுவேலைகளில் சமற்கிருதவாணர்கள் ஈடுபட்டதைக் குறிப்பிடுகிறார். (Arthur Coke Burnell 11 சூலை 1840 – 12 அட்டோபர் 1882  தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியாக இருந்த பொழுது 01.11.1875 அன்று இந்நூலை வெளியிட்டார்.) இருப்பினும் அன்று முதல் இன்று வரை இடைச்செருகல்கள் ஒரு புறமும் சாதியக் கட்டுக்கதைத் திணிப்புகள் மறுபுறமுமாக நடந்துகொண்டுதான் உள்ளன.

தொல்காப்பியம் – ஒரு கவிதை இலக்கண நூல்

தொல்காப்பியம் எழுத்து, சொல் எனத் தமிழ்மொழி இலக்கணம் மட்டுமல்லாமல் கவிதைக்குரிய இலக்கணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது வேறு எந்தமொழியிலும் காணக்கிடைக்காத ஒரு நிலையாகும். (முனைவர் ச. அகத்தியலிங்கம் : மொழியியல் நோக்கில் தமிழ்ச் செம்மொழி, உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக்.29)

தொல்காப்பியர் திருவள்ளுவருககுக் காலத்தால் முற்பட்டவர்

  தமிழக ஆராய்ச்சியாளருட் சிலர் திருவள்ளுவரைத் தொல்காப்பியர்க்கு முற்பட்டவர் என்று கூறுகின்றனர்.  அங்ஙனம் கூறுவது  உலகப் பெரும் புலவர் வள்ளுவர்பாற் கொண்டுள்ள பற்றுதலால்தான் என்று கருதவேண்டியுளது.  உயர் அறங்களை உலகுக்கு அறிவிப்பதில் முதற்பாவலராய் இருப்பவர் காலத்தானும் முற்பட்டவராகத்தான் இருத்தல் வேண்டும் என்று எண்ணி விட்டனர்போலும்.  காலத்தால் முற்பட்டவர் என்பதால் பெருமையும் பிற்பட்டவர் என்பதால் சிறுமையும் உண்டு என்று கருதுவது மிக மிகத் தவறேயாகும்.  இருபெரும் புலவர்களும் இருவேறு துறைகளில் இணையற்றவர்கள் என்பதில் எட்டுணையும் ஐயமின்று.  முற்பட்ட காலத்தின் துணைகொண்டு முற்பட்டவராக விளங்க வேண்டிய நிலையில் இருவரும் இலர். ஆதலின் காய்தல் உவதல் இன்றி இருவருள்  எவர் காலத்தால் முற்பட்டவர் என்று ஆராய்தல் நமது கடனாகும்.

 தொல்காப்பியர், திருவள்ளுவருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பதனை இருவர் நூல்களுமே எடுத்துக் காட்டுகின்றன. (பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி : பக்கம்:11)

தொல்காப்பியர் வரலாறு சரியாக அறியப்படாமையால் அவரது காலமும் சரியாக உணரப்படவில்லை. அறிஞர்களே மாறுபட்ட கருத்துகளைக் கூறுகின்றனர். தமிழின் சிறப்புகளைக் குறைத்துக் கூறுவதையே தொழிலாகக் கொண்டோரும் தொல்காப்பியம் குறித்துத் தவறான கருத்துகளைத் திணித்து அவையே உண்மை என்பதுபோல் பரப்பி வருகின்றனர்.

தொல்காப்பியத்தின் காலம் பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கி.பிக்கு முந்தையது என்று பல அறிஞர்களும் பிந்தையது என்று சிலரும் குறிப்பிடுகின்றார்கள். காலக் கணக்கில் வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் தோராயமாகத் தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் காலந்தோறும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாய்மொழி மரபாகவும் சுவடிகள் வழியாகவும் பாதுகாக்கப்பட்டிருக் கின்றது. உரைகள் தோன்றிய பிறகு தொல்காப்பியத்தின் பெருமை மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது. அச்சுக்கலை வளர்ந்தபிறகு தமிழறிஞர்கள் உரையோடு கூடிய தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கிய, இலக்கணங்களையும் ஆர்வத்தோடு பதிப் பித்துள்ளனர். இவ்வகையான ஆன்றோர்களின் அரும் பணியாலேயே தமிழ் இன்று உலகோர் அறிந்து போற்றப்படும் நிலையைப் பெற்றுள்ளது.

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி இன்பம் காண்போர் உள்ளனர். ஆரியத்தைப்பற்றிய தவறான கற்பிதத்தை நம்புவோர் இருப்பினும் அதன் உண்மையை வெளிப்படுத்துவோரும் பெருகி வருகின்றனர்

தொல்காப்பியம் பற்றிய ஆய்வுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் மேன்மேலும் வளரும். இவ்வகையான ஆய்வு வளர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படையான முந்தைய நிலையை ஆய்வாளர் இரா. வெங்கடேசன் அரிதின் முயன்று தொல்காப்பியம் தொடர்பான கருத்துகளைத் தொகுத்துத் ‘தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்’ என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். இந்த அரிய நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (2014) வெளியிட்டுள்ளது. தொல்காப்பிய உரைகள், பதிப்புகள், ஆய்வாளர்களின் கருத்துகள் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து தொல்காப்பியத்தை ஆய்வு செய்வோருக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் மேலும் உதவும் வகையில் உள்ளது என உறுதியாகக் கூறலாம்.

(தொடரும்)