Tuesday, January 11, 2011

andre' sonnaargal 4:அன்றே சொன்னார்கள் 4

அன்றே சொன்னார்கள் 4

உயிரறிவியலின் முன்னோடி

                                                                                                           

1902ஆம் ஆண்டு உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார் அறிஞர் சகதீசு சந்திரபோசு. அவர் வெளியிட்ட உயிரினங்கள்-உயிற்றவற்றின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்னும் நூலில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றதால் குழப்பமும்  வியப்பும் ஏற்பட்டு இறுதியில் உலகம் அவரைப் போற்றியது. நம்மிடம் உள்ள அறிவியல் புதையலை அறியாத நாமும் அறியாமையால் இன்று வரையும் அவ்வாறுதான் படித்து வருகிறோம். பாடல் வடிவில் உள்ள தமிழ் இலக்கிய உண்மைகள் யாவும் கற்பனையே என்னும் மாயையில் உள்ளதால் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர் தொல்காப்பியர் தமக்கும் முன்னரே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வெளிப்படுத்தியதை உரியவாறு உலக அறிவியல் அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லத் தவறியுள்ளோம்.

தொல்காப்பியர்,
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
(தொல்காப்பியம்: மரபியல் 27)

ஓரறிறவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை வகைப்படுத்தி நெறிப்படுத்தியுள்ளனர் அவருக்கும் முன்னோர். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.

புல்லும் மரமும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளை பிறப்பே
(தொல்காப்பியம்: மரபியல் 28)

என வரிசையாக ஓரறிவு- ஆறறிவு உயிர்களை விளக்குகிறார்.
தமிழ்வழிக் கல்வியை நாம் இழந்ததால் நம் அறிவியல் வளத்தையும் இழந்தோம்! உலகினர்க்குத் தமிழ் அறிவியல் சிறப்பை எடுத்துரைக்கவும் தவறி விட்டோம்! அறிவியல் மேதைகளாகும் வாய்ப்புகளையும் தவற விட்டோம்! அறிவியலில் இப்பொழுதும் சிறந்திருந்தால் உலக நாடுகள் நம்மை மதித்து நம் குரல்களுக்குச் செவிமடுத்து நம் இனமக்களைக் காப்பாற்ற முன் வந்திருப்பார்கள் அல்லவா?
  • இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive