Thursday, January 13, 2011

andre' sonnaargal: அன்றே சொன்னார்கள்7 : புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள்

அன்றே சொன்னார்கள்7


புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள்

                                                                                                                

natpu பழந்தமிழ் மக்கள் அறிவியல் நோக்கிலேயே எதனையும் சிந்தித்தனர். ஆனால், பிற நாடுகளில் அறிவியல் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டபொழுது    அறிவியலாளர்கள்  சமயவாதிகளால் தண்டிக்கப்பட்டனர்; உயிர்பறிக்கப்பட்டனர்.
1548 இல் பிறந்த இத்தாலிய அறிவியலாளர் கியார்டனோ புருனோ (Giordano Bruno) எனப்பெறும் பிலிப்போ புருனோ (Filippo Bruno) அண்டங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியவர். 1584இல், முடிவற்ற அண்டமும் உலகங்களும் (Infinite Universe and Worlds) முதலான இரு நூல்களை வெளியிட்டார். சமய நம்பிக்கைக்கு எதிரான செய்திகள் என 1592இல் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டு 17.2.1600இல் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
போலந்து அறிவியலாளர் நிக்கோலசு கோபர்னிகசு (Copernicus, Nicolaus;1473-1543)  செருமானிய அறிவியலாளர் யோன்னசு கெப்ளர் (Kepler,   Johannes; 1571-1630) உடன் இணைந்து பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். எனினும், சமயவாதிகளின் தொல்லைகளால் உண்மைகளை வெளியிட முடியாமல் நண்பர்களின் துணையால் அவர் மறைவிற்குப் பின்பே 6 நூல்கள் வந்தன. இவர்களின் வழியில் இத்தாலிய அறிவியலாளர் கலிலியோ (1564-1642),  கோபர்னிகசு கருத்தான பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பதை மேலும் ஆராய்ச்சி செய்து  நிலைநாட்டிப் பரப்பி வந்தார். 1632இல் இவற்றை விளக்கி இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய சொற்போர் (Dialogue of The Two Chief World Systems) என்னும் நூலை வெளியிட்டார். இதனால் வீட்டுச் சிறை வைக்கப்பெற்றார்; 1637இல் கண்பார்வையை இழந்தார்; 1642இல் வீட்டுச்  சிறையிலேயே உயிரிழந்தார்.
ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி சுற்றுவதை அறிந்து அதன் கால அளவை நாள் என்றும் பூமியைத் திங்கள் (நிலா) சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவைத் திங்கள் (மாதம்) என்றும் பூமி சூரியனைச் சுற்ற ஆகும் கால அளவை ஆண்டு என்றும் குறிப்பிட்டுப் பயன்படுத்தினர் நம் முன்னோர்.
சுற்றிக் கொண்டிருக்கும் உலகத்தில் உள்ள மக்கள் வாழ்வு, உழவர்களைச் சுற்றி உள்ளதாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை                               (திருக்குறள் 1031)
என்கிறார். உலவும் பூமியை உலகம் என்று எவ்வளவு பொருத்தமாக அறிவியல் நோக்கில் பெயரிடுள்ளனர்!
அறிவியல் வளத்தில் சிறந்திருந்த முன்னோர் வழியில்  (தாய் மொழியாம் தமிழில் கற்று) அறிவியல் வளங்களைக் கண்டறிய இப் பொங்கல் நாளில் உறுதி கொள்வோம்! பொங்கல் சிறக்கட்டும்! அறிவியல் பெருகட்டும்!

No comments:

Post a Comment

Followers

Blog Archive