Wednesday, January 19, 2011

andre' sonnaargal 8:அன்றே சொன்னார்கள் 8

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன   (புறநானூறு 102)

                                                                                                                

natpu அன்றே சொன்னார்கள்
மாற்றுச் சக்கரம்
ஆங்கிலத்தில் இஃச்டெப்னி (stepney) என்றால் வழக்கத்தில் கூடுதலாகச் சேர்த்துக் கொண்ட துணையைக் குறிப்பதாக மாறிவிட்டது. என்றாலும் ஊர்திகளில் மாற்றுச் சக்கரத்தைக் குறிப்பதே உண்மை.
வால்டர் தேவீசு (Walter Davies) என்பவர் தாம் (Tom) என்பவருடன் சேர்ந்து இங்கிலாந்திலுள்ள வேல்சு நகரின்  இலாநெல்லி (Llanelli) பகுதியில் இஃச்டெப்னி (stepney) தெருவில் 1895இல் இரும்புப் பொருள்கள்  கடை தொடங்கி 1902இல் வாடகை ஊர்திப் பிரிவையும் தொடங்கினர். 1904இல் நீதிபதி ஒருவர் வாடகைக்கு எடுத்த ஊர்தியின் (சக்கரத்தின்) புறவட்டில் (tyre) துளை ஏற்பட்டுக் காற்றுப் போனதால் மாற்றுச் சக்கரம்  பொருத்த அல்லல்பட்டார். அப்பொழுது அவர்களுக்கு நாம் ஏன் உதிரியாக ஒரு மாற்றுச் சக்கரத்தை முன்னரே ஊர்தியில் இணைத்து வைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவே மாற்றுச்சக்கர முறை கண்டுபிடிப்பு. என்றாலும் மாற்றுச் சக்கரத்தின் பெயராக இந்நிறுவனம் இருந்த தெருவின் பெயர் நிலைத்து விட்டது. எனவே, இஃச்டெப்னி (stepney) என்பது தெருவின் பெயராக இருந்தாலும் மாற்றுச் சக்கரத்தைக் குறிப்பதாக அமைந்தது.
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மக்கள் மாற்றுச் சக்கரத்தின் தேவையை உணர்ந்து கண்டுபிடித்துப் பயன்படுத்தி உள்ளனர். அதன் பெயர் சேம அச்சு அல்லது சேமச் சக்கரம் என்பதாகும்.
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன   (புறநானூறு 102)
                                      
என்கிறார் ஔவைப் பிராட்டியார்
வணிகர்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு வண்டியை ஓட்டிச் செல்லும்பொழுது மேட்டிலும் பள்ளத்திலும் ஏறி இறங்கி வண்டிச் சக்கரம் உடைந்து விட்டால் மாற்றுப் பயன்பாட்டிற்காகப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும் சேம அச்சு போன்றவரே என மன்னரைப் புகழும்பொழுது நமக்கு இந்த அறிவியல் சொல் கிடைத்து விட்டது.
இடர்ப்பாடு இல்லாத பயணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டு அவசரத் தேவையின் பாதுகாப்பை முன்னிட்டு மாற்றுச் சக்கரம் கண்டறிந்த தமிழர்கள்தாம் இன்றைக்கு வாழ்க்கைப் பயணத்தைத் தொலைத்து இனத்தைப் பாதுகாக்க வழியின்றி இருக்கின்றார்கள்!

- இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive