அகரமுதல
166, மார்கழி10, 2047 / திசம்பர்25, 2016
வணக்கம் யாருக்கு?
ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு
அவரது கட்சித் தொண்டர்களும் பிறரும் வணக்கம் செலுத்துவதுபோலும் அவர்
வெறுமனே நிற்பதுபோலும இதழ்களில் சில படங்கள் வருகின்றன. அதைப்பார்த்த
நண்பர்கள், “வணக்கம் செலுத்தினால் மறு வணக்கம் தெரிவிக்காமல்
இருக்கிறாரே! ‘சின்னம்மா’ என்று பணிவன்புடன் அழைப்பவர்களிடம் மறு வணக்கம்
தெரிவிப்பதுதானே முறை” என்றனர். அதற்கு நான், “இவர் வணக்கம் செலுத்தாமல்
இருந்தால் தவறுதான். ஆனால், இவர் வணக்கம் தெரிவித்த படம் வெளி
வந்திருக்காது. ஏனெனில் வந்துள்ள படங்களில் சிலர் மட்டும் வணக்கம்
செலுத்துவதுபோல் காட்சிகள் உள்ளன. அப்படியானால் அவர் வணக்கம்
செலுத்தியபின்னரும் கட்சிகளுக்கே உள்ள கொத்தடிமைத் தனத்தில் இவர்கள்
வணக்கம் போட்டுக்கொண்டே நின்றகின்றனர்” என்றேன். உண்மையிலேயே
அதற்கேற்றார்போல் இவர் வணக்கம் செலுத்திய படங்களும் வந்தன. எனவே,
அவசரப்பட்டுத் தவறான முடிவிற்கு வந்ததை ஒத்துக் கொண்டனர்.
இப்பொழுது செய்தி இதுபற்றியல்ல! இந்தப் படம்பற்றிய செய்தி பள்ளி நினைவைக் கொணர்ந்தது. அதுபற்றிக் கூறவே விரும்புகின்றேன்.
நான் மதுரையில் உள்ள (திருப்பரங்குன்றம்)
திருநகரில் மு.மு.உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துக்
கொண்டிருந்தேன். அப்பொழுது எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு குழந்தைசாமி,
(என்னையும் நண்பர்களையும் பார்த்து) “நீங்கள் உடற்பயிற்சி ஆசிரியருக்கு
வணக்கம் செலுத்துவதில்லையாமே! எங்களைக் காணும்பொழுதெல்லாம் வணக்கம்
செலுத்துகிறீர்கள். முதல்முறை சந்திக்கும் பொழுதுமட்டும் வணக்கம் சொன்னால்
போதும் என்றால் கேட்பதில்லை. அவருக்கு மட்டும் ஏன் வணக்கம்
செலுத்துவதில்லை” என்றார்.
அதற்கு நான், “நாங்கள் வணக்கம் தெரிவித்தால் அவர் எங்களுக்கு மறு வணக்கம் தெரிவிக்க மாட்டேன் என்கிறார். எனவேதான், அவருக்கு வணக்கத்தை வீணாக்க விரும்பவில்லை” என்றேன்.
“ஓகோ, நீங்கள் வணக்கம் சொன்னால்
ஆசிரியரும் வணக்கம் சொன்னால்தான் அடுத்து வணக்கம் தெரிவிப்பீர்களா?
ஆசிரியரை மதிப்பதில்லையா?” என்றார்.
“அப்படியில்லை ஐயா! நீங்கள் எல்லாரும்
நாங்கள் வணக்கம் தெரிவிக்கும் பொழுது எல்லாம் வணக்கம் தெரிவிக்கிறீர்கள்.
தலைமைஆசிரியரும் வணக்கம் தெரிவிக்கின்றார். சிலர், மீண்டும் மீண்டும்
வணக்கம் சொல்லும் பொழுது ‘வணக்கம்’ என்று சொல்லவாவது செய்வர். ஆனால்,
கையை அசைக்கவும் மாட்டார்; தலையையும் அசைக்கமாட்டார்; புன்னகை மூலம்
வணக்கத்தை ஏற்றுக்கொண்டதுபோல்கூடக் காட்ட மாட்டார். அவரே விரும்பாத பொழுது அவருக்கு ஏன் வணக்கம் தெரிவிக்க வேண்டும்
என்று வணக்கம் தெரிவிப்பதில்லை. ஆனால் அவரை அவமதிப்பு செய்வதுபோல்
நடந்துகொள்வதில்லை. அவர்சொல்படிதான் நடக்கின்றோம்” என்றேன். உடனிருந்த
நண்பர்களும் “ஆமாம், ஐயா, நாங்கள் வணக்கத்தை வீணாக்க விரும்பவில்லை”
என்றனர்.
அதற்கு ஆசிரியர் குழந்தைசாமி, “நீங்கள்
சொல்வதும் சரியாகத்தான் படுகின்றது. நீங்கள் வணக்கம் சொல்வதில்லை என்றவர்,
அதற்கான காரணம்பற்றி அறியாமல் இருக்கிறார். ஆனால், இப்படியே தொடருவது
நல்லதல்ல. எனவே நான் ஒரு மந்திர வித்தை சொல்லுகிறேன். அதன்படி நடந்துகொண்டால் அவரும் உங்களுக்கு வணக்கம் தெரிவிப்பார்” என்றார். “சொல்லுங்கள் ஐயா, செய்கின்றோம்” என்றேன்.
பள்ளி எதிரில்தான் எங்களது இரவல்
விளையாட்டுத் திடல் இருக்கும். அது மிகப்பெரியது. வகுப்பாசிரியர், “ அவர்
விளையாட்டுத் திடலுக்கு வரும்பொழுது நீங்கள் பத்தடி இடை வெளியில்
ஒவ்வொருவராக நின்று கொள்ளுங்கள்; ஒவ்வொருவராக வணக்கம் தெரிவியுங்கள்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் நீங்கள் உடற்பயிற்சிஆசிரியர் விளையாட்டுத்
திடலுக்கு வரும்பொழுது ஒன்றுபோல் வணக்கம் சொல்லாமல் தனித்தனியாகச்
சொல்லுங்கள். அவர் வணக்கம் தெரிவிக்கும் வரை இவ்வாறு ஒவ்வொரு நாளும் நடந்து
கொண்டால் அவர் புரிந்து கொண்டு இனிமேல் வணக்கம் சொல்வார்” என்றார்.
நாங்களும் அதனைப் பின்பற்றினோம். அவர்
ஆசிரியர் அறையில் இதுபற்றிப் பேசியிருப்பார்போலும். காரணத்தைப் புரிந்து
கொண்டார். மூன்றாம் நாள், நாங்கள் சொல்வதற்கு முன்னரே ‘அனைவருக்கும்
வணக்கம்’ என்று கைகூப்பிச்சொன்னார். வகுப்பாசிரியர் திரு குழந்தைசாமி
சொன்ன மந்திர வித்தை பயனளித்துவிட்டது என்பதை நாங்களும் புரிந்துகொண்டோம்.
அது முதல் நாங்கள் வணக்கம் சொல்லத் தவறுவதில்லை. அவரும் திருப்பி வணக்கம்
சொல்ல மறந்ததில்லை.
வகுப்பாசிரியர் திரு குழந்தைசாமியைச்
சந்தித்து, “ ஐயா, உங்கள் மந்திர வித்தை பலித்து விட்டது” என்றோம் “ஆமாம்,
நானும் அறிந்தேன். ஆனால், அவர் இதை அறிந்ததுபோல் காட்டிக்கொள்ளமாட்டார்.
நீங்களும் அவரிடம் இதுபற்றி ஒன்றும் சொல்ல வேண்டா” என்றார் அவர். நாங்களும்
அவ்வாறே நடந்துகொண்டோம்.
அதன்பின்னர், இதற்கு முன்னர்
அரைகுறையாகப் பெயருக்கு வணக்கம் சொன்ன ஆசிரியர்கள்கூட, நன்றாக வணக்கம்
சொன்னார்கள். அடுத்த வகுப்பு மாணவர்கள், “உங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள்
முந்திக்கொண்டுகூட வணக்கம் சொல்லுகிறார்களே! ஏன்?” என்றனர். “ஒன்றுமில்லை.
நாங்கள் நல்ல பையன்கள். எனவேதான், இப்படி” என்றேன்.
படிக்கும் பொழுதுமட்டுமல்ல.
அதன்பின்னரும் யாராவது வணக்கம் சொல்லும் பொழுது அமைதியாக இருந்தால் அடுத்த
சந்திப்பில் நேரடியாகப் பேச்சக்குச்சென்று விடுவேன். ஆனால் கட்சியினர் தன்மதிப்பைக் காப்பாற்ற விரும்புவார்கள் என எதிர்பார்க்க முடியாதல்லவா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment