Wednesday, December 28, 2016

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்






ஈழத்தமிழர் வாழ்வு குறித்து

இரட்டை நிலைப்பாடு வேண்டா!

   ஒருவர் தன் கொள்கையை அல்லது கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் முன்னர்  அவர் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. சான்றாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இறை மறுப்பாளர் என்ற முறையில்தான் உலகறியப்பட்டவர். ஆனால், தொடக்கத்தில் அவர் சாமியாராகத் திரிந்ததை வைத்துக்கொண்டு அவரை இறைஏற்பாளர் என்ற அளவில் மதிப்பிடலாமா? கூடாதல்லவா? அதுபோல்தான் மேனாள் முதல்வர் செயலலிதா தமிழ்ஈழம் குறித்தும் விடுதலைப்புலிகள் குறித்தும் தமிழ்க்கேடர்களின் கருத்தாக்கத்தால் முதலில் தவறான நிலைப்பாடு எடுத்திருந்தார்.  சட்ட மன்றத்திலும் மேதகு பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் இயற்றச் செய்துள்ளார்.  போரென்றால் சாவு நேர்வது இயற்கை என்றுகூட உளறிக் கொட்டியுள்ளார். ஆனால், அவர், தமிழ் ஈழத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துத் தமிழ் ஈழம் மலரச் செய்ய வேண்டும் என்பதையே கொள்கையாக அறிவித்தபின்னர் முந்தைய நிலைப்பாடுகளைக் கொண்டு அவரைக் குறை கூறுவது  பொருந்தாது.
   இரவிசங்கர் குழுவினர் அளித்த காணுரைகளைக்கண்ட பின்  உண்மை உணர்ந்ததாகத் திருந்தி கூறும் செயலலிதாவின் பேச்சுகளில் ஒரு பகுதி வருமாறு:
 வாழ்வதை விடச் சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாகக், கொடூரமாக நடத்தி வருகிறது இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன். ….. இவற்றை யெல்லாம் பார்க்கின்ற போதுசெருமனியில் நடந்த இட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் தடுப்பு வதை முகாம்களை நடத்தி, ()யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த –  இட்லர் ஆட்சிதான், நினைவிற்கு வருகிறது. …….  தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது; சிங்கள மக்களைக் குடும்பம் குடும்பமாகக் குடி அமர்த்துகிறது. இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிகக் கொடுமையான திட்டம் இது ….. உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சனநாயக  முறையிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது.  ……. இலங்கைத் தமிழர்களுக்குச் சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்குக் கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள்  இயல்பு வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.
இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான்.
  இவ்வளவு ஆணித்தரமாக உண்மைகளை உணர்ந்து தமிழ் ஈழம்தான் தீர்வு எனக் கூறிய பின்பும் இதற்கு எதிரான கருத்துகளைக் கூறுபவர்கள் தங்களின் இரண்டகங்களை மறைப்பவர்களாகவே இருப்பார்கள்.
  இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் வைகாசி 25, 2042 /  2011  சூன்  8 ஆம் நாளன்று  முதலமைச்சராக இருந்த  செயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்;
 இலங்கையில் போர்குற்றங்கள் நடத்திய அனைவர் மீதும்   நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்துப் பன்னாட்டு உசாவல் நடத்த வேண்டும். என்றும் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் பங்குனி 14, 2043 / 2012, மார்ச்சு 27 ஆம்  நாளன்று  தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.
  இவற்றின் பின்னரும் தமிழ்ப்பகைவர்கள் கருத்திற்கு  இரையாகித் தவறாகப் பேசிய முந்தைய பேச்சுகளையே திரும்பத் திரும்பக் கூறுவது தமிழ்   ஈழத்திற்கும் பின்னடைவையே ஏற்படுத்தும்.
  தி.மு.க. உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், தலைவர்களின் பெரும்பான்மை உணர்விற்கு முரணாகக் கலைஞர் கருணாநிதி பேராயக்கட்சியாகிய காங்.உடன் கை கோத்து எடுத்த இரண்டக நிலைப்பாடு ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்குத் துணை நின்றது என்பது  மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதனை மறைப்பதற்காக, அவரின் முந்தைய ஈழ ஆதரவுநிலையைப் பாராட்டிக்கொண்டு செயலலிதாவின் முந்தைய தவறான கொள்கை அடிப்படையில் அவரைக் குறைகூறிக் கொண்டுள்ளனர். தாம் செய்த குற்றங்களை மறைப்பதற்காக, அடுத்தவர்மீது ஏற்படும் நல்லெண்ணத்தைச் சிதைக்கும் முயற்சியே இது.
 “உன் முதுகில் உள்ள உத்தரத்தை எடுத்து விட்டு அடுத்தவன் கண்ணில் உள்ள தூசியைப் பார்க்க வேண்டும்” என்பதை உணராதவர்கள் அவர்கள்.
 செயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றவதாகக் கூறும் அக்கட்சித் தலைவர்கள், அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றாகத் தமிழ்ஈழமலர்ச்சிக்கான உறுதுணையைச் சேர்க்க வேண்டும்..
 தமிழ்நாட்டினருக்கும் தமிழகச் சட்டமன்றத்திற்கும் களங்கம் ஏற்படும் வகையில் 2002 இல் தமிழக சட்டமன்றத்தில் பிரபாகரனைக் கைது செய்து கொண்டு வர வேண்டும் என்று போட்ட தீர்மானத்தை நீக்கம் செய்து புதிய தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும்.
 தனி ஈழம் அமைந்திட, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்குச் செயலலிதா எடுத்திருந்த மன உறுதி நிறைவேண்டும். எனவே,  தமிழ்ஈழ ஏற்புத் தூதுக் குழுக்களை அமைத்துப் பிற மாநிலச் சட்டமன்றங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி.  அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களில் தீர்மானம் இயற்ற வழிவகை செய்ய வேண்டும். அயல்நாடுகளுக்கும் இக்குழுக்களை அனுப்பி ஈழ வாக்கெடுப்பு  அல்லது உரிமைத் தமிழ்ஈழ ஆதரவு பெற வேண்டும். இத்தூதுக்குழுக்களில்  கட்சி அடிப்படையில் அல்லாமல் ஈழஆதரவு நிலைப்பாட்டிலுள்ளவர்களை உறுப்பினராக அமர்த்த  வேண்டும்.
  தமிழ் ஈழத்திற்கு ஆதரவான நிலை என்றால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை என்றுதான் பொருள். ஈழத்தமிழர்கள் என்றால் இப்பொழுது ஈழத்தில் வசிப்பவர்களை மட்டும் குறிக்காது. புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களையும் குறிக்கும். அப்படியாயின், தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர்களையும் குறிக்கும் அல்லவா? ஆனால், ஈழத்திலுள்ள தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு இங்குள்ள ஈழத்தமிழர்களை முகாம் என்ற பெயரிலான கூட்டுச் சி்றையில்  அடைத்துத் துன்புறுத்தலாமா? போதிய மருத்துவவசதி, கல்வி வசதி, வாழ்நிலை வசதி ஆகியன இல்லாமல் அவர்கள், துன்புற விடலாமா? தங்கள் குறைகள் நீங்க அறவழியில் உண்ணாநோன்பு இருப்பவர்கள் உடல்நலன் குறித்துச் சிறிதும் கவலைப்படாமல் சாகும் நிலைக்குக் கொண்டுவரலாமா? பிற நாட்டுப் புலம்பெயர்ந்தோர்கள் உரிமையுடன் வாழ வகைசெய்துவிட்டு ஈழத்தமிழர்களைமட்டும் கொத்தடிமையாக நடத்தச் சொல்லும் இந்திய அரசிற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் அமைதி காக்கலாமா? அதற்குத் தமிழக அரசுதுணைபுரிவது இரண்டக வேலையல்லவா?
  எனவே, திபேத்தியர் முதலான பிற ஏதிலிகள் வாழ அளிக்கும் உரிமைகளை ஈழத்தமிழர்களுக்கும் தமிழக அரசு அளிக்க வேண்டும்.
  அயகலத்தமிழர் நலனுக்கான தனித்துறை அமைத்தோ தனி வாரியம் அமைத்தோ உலகத்தமிழர் நலனுக்குப் பாடுபட்டுத் தமிழ்மொழியும் தமிழினமும் தழைத்தோங்கத் தவறாது பணியாற்ற வேண்டும்.
   எனவே, தமிழக அரசு ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் இரட்டை  நிலைப்பாட்டைக் கொள்ளாமல் தமிழ் ஈழத்தில் தமிழர்கள் உரிமை ஆட்சி மலர்ந்திடவும் தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் உரிமையுடன் வாழவும் உண்மையாகவும் உறுதியாகவும் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டு வெற்றி காண வாழ்த்துகிறோம்.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
. (திருவள்ளுவர், திருக்குறள் 612)
  • அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை,  அகரமுதல 166,  மார்கழி 10, 2047 /  திசம்பர் 25, 2016

No comments:

Post a Comment

Followers

Blog Archive